ஓர் உணர்வு நமக்குள் பிரத்யட்சமாக உருவாகிவிட்டால் அதையே திரும்பத் திரும்பச் சொல்வதுதான் நம் இயல்பு. காய்ச்சல் கண்டவர்கூட, ‘குளிருதே! குளிருதே!’ என்றே ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார். தன்னுடைய சிரசின் மேல் அம்பிகையின் பாதங்கள் பதிந்த அனுபவம் அபிராமிபட்டரின் உச்ச அனுபவம். அதையே மகிழ்ந்து மகிழ்ந்து சொல்கிறார். தன் சிரசின் மீது அம்பிகையின் மலரனைய திருவடிகள் பதிந்திருப்பதையும் அது பொன்போல் ஒளிர்வதையும் சதாசர்வ காலம் மனக்கண்ணால் காணும் பேறு பெற்றவரல்லவா அவர்.

“சென்னியது உன்பொன் திருவடித்தாமரை”
என்கிறார். திருவடி தீட்சையே கிடைத்தபிறகு மந்திரதீட்சை தானாகவே அமையுமல்லவா!

“சிந்தையுள்ளே மன்னியது உன்திருமந்திரம்” என்கிறார்.

திருவடி தீட்சையும் மந்திர தீட்சையும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அடியார்களுடனான சத்சங்கம். அதுவும் மூத்த அடியவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். “பழ அடியீர்! புத்தடியோம்! புன்மை தீர்ந்து ஆட்கொண்டால் பொல்லாதோ” என்ற மணிவாசகரை அடியொற்றி அபிராமிபட்டரும் அபிராமியம்மை பதிகத்தில், “முன்னி உன் ஆலயத்தின் முன்போதுவார் தங்கள் பின்போதே நினைக்கிலேன் மோசமே போய் உழன்றேன்” என்று பாடுவார்.

இங்கே, அவர்களுடன் கூடி அம்பிகையின் பெருமைகளைப் பேசும்விதமாய் ஒழுங்குபடுத்தப்பட்ட பர ஆகம பத்ததிகளை பலமுறை பாடிப்பரவும் பேறு கிடைத்ததில் அபிராமிபட்டர் ஆனந்திக்கிறார். “பன்னுதல்” என்றால் பலமுறை சொல்லுதல் என்று பொருள். வசிட்டர் பரதனுக்குப் பெயர் வைக்கும்போது அந்தப் பெயரை பலமுறை சொல்லி சொல்லிப் பார்த்து பிறகு வைத்தாராம், “பரதன் எனும்பெயர் பன்னினன்” என்பார் கம்பர்.

“முறை முறையே” என்ற சொல் இன்னும் அழகு. ஒரு வழிபாட்டு நெறியில் நீண்ட காலமாய் இருப்பவர்களின் வழிகாட்டுதல் நமக்குக் கிடைக்கும்போது அவர்கள் பின்பற்றும் முறையே முறை எனும் தெளிவும் துணிவும் ஏற்பட்டு விடுகிறது. முன்னோர் சொல்லைப் பொன்னேபோல் போற்றுதல் என்பார்கள். முறையை அறிந்தவர்களின் முறையையே பின்பற்றி அம்பிகை வணக்கத்திற்கான ஒழுகலாறுகளில் ஈடுபட அதேநேரம் சிரசின் உச்சியில் அவள் திருவடிகளும் மனதுக்குள் அம்பிகையின் திருமந்திரங்களும் நிலைபெற்று நிற்குமென்றால் இன்னும் வேறென்ன வேண்டும்!!

“சென்னியது உன்பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன்திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின்னடியாருடன் கூறி முறைமுறையே
பன்னியது என்றும் உன் றன்பர ஆகம பத்ததியே.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *