அபிராமி பட்டர் -நாட்டிய நாடகம் -பாகம் 2

அருளே வடிவாம் அபிராமிக்கு
அர்ச்சனை செய்யும் மரபினிலே
அமிர்தலிங்கரின் மகனாய் உதித்தார்
சுப்ரமணியனும் உலகினிலே
மருளைத் துடைக்கும் மாதவச் செல்வி
மலரடி தனிலே மனதுவைத்தார்
இரவும் பகலும் அம்பிகை வடிவை
இதயத்தில் பதித்தே தவமிருந்தார்…

“ஒருகுரல் கொடுத்தால் மறுகுரல் கொடுக்கும்
உண்மை அபிராமி
ஒருவரும் அறியாத் திசையிலும் உடன்வரும்
அண்மை அபிராமி
வரும்பகை எதையும் வற்றிடச் செய்யும்
வன்மை அபிராமி
நெருநலும் இன்றும் நாளையும் நிகழும்
நன்மை அபிராமி

காலனை உதைத்த கால்களும் சிவக்கும்
நடனம் அபிராமி
காலங்கள் உருட்டும் கைகளின் அழகிய
நளினம் அபிராமி
நீலம் உணர்த்தும் தியான நிறைவில்
சலனம் அபிராமி
தூலமும் துச்சம் என்கிற தெளிவின்
தருணம் அபிராமி…சரணம் அபிராமி!

கண்கள் கிறங்க கால்கள் பின்ன
கருணை மாந்திய லஹரியிலே
பெண்கள் யாவரும் அம்பிகை என்றே
பக்தியில் விழுந்து வணங்கிடுவார்
மண்ணில் ஒருசில மனிதர்கள் அவரின்
மகிமை எதுவும் அறியவில்லை
விண்ணுல காளும் அம்பிகை இவரது
விழிகளில் நிறைந்ததை உணரவில்லை

“பாவம் ஓய் நம் சுப்ரமணியன்!
பித்துப் பிடித்து திரிகின்றான்”

“பித்துமில்லை கித்துமில்லை ஓய்..
கள்ளைக் குடித்து திரிகின்றான்”

“போங்காணும் நீர் ! விஷயம் தெரியுமா?
வாமாச்சாரம் செய்கின்றான்”

“ஆக மொத்தம் சுப்பிரமணியன்
அபச்சாரம்னா செய்கின்றான்”

மூட மனிதர்கள் முணுமுணுத்தார்
கூடிக் கூடி கிசுகிசுத்தார்
பார்த்தால் அவர்முன் பரபரத்தார்
போனபின்னாலே பரிகசித்தார்

மாதவப் பிள்ளையை உலகம் பழித்தால்
மனம்பொறுப்பாளா அபிராமி?
சாதகன் இவனென சத்தியம் உணர்த்த
திருவுளம் வைத்தாள் அபிராமி
பொய்மனத்தார்கள் பாடம் படித்திட
நாளொன்று குறித்தாள் அபிராமி
தைமாதத்தின் அமாவாசையில்
நாடகம் செய்தாள் அபிராமி

தஞ்சையை ஆண்ட சரபோஜி
திருக்கடவூருக்கு வந்திருந்தான்
மஞ்சள் மாவிலைத் தோரணங்கள்
மேளமுடன் கும்ப பூரணங்கள்
வஞ்சியர் ஆரத்தி எடுத்திருக்க
வாழிய வாழிய என்றுரைக்க
நெஞ்சம் நிமிர்த்தி அரசனுமே
நுழைந்தான் கடவூர் கோவிலிலே

அம்பிகை சந்நிதி அவன்நுழைய
அங்கிருந்தாராம் தவக்கொழுந்து
வந்தவர் யாரென்ரு அறியவில்லை
விழிகளை சிறித்கும் திறக்கவில்லை
வம்புகள் செய்பவர் விழித்துக் கொண்டார்
விதம்விதமாகக் கோளுரைத்தார்
கண்கள் சிவந்தான் அரசனுமே
கலீரென்று சிரித்தாள் அபிராமி!

தியானத்தில் லயித்த பக்தரவர்
தோள்களைப் பற்றி உலுக்கிவிட்டான்
“ஞானம் உண்டோ அந்தணரே
நாளிதன் திதி என்ன?” எனக்கேட்டான்
வானம் நிறைக்கும் அபிராமி
வண்ணத் திருமுகம் ஒளிபார்த்து
மோனக் குரலில் பதிலளித்தார்
“இன்று பவுர்ணமி” எனவுடைத்தார்

அமாவாசையை பவுர்ணமி என்றதும்
அரசன் கொதித்தான் கோபத்திலே
அரைகுறை மனிதர்கள் நெஞ்சம் மகிழ்ந்தார்
நினைத்ததை முடித்தசந் தோஷத்திலே
“யமபயம் போக்கிய கடவூரில் அட
இன்று நிலவு தோன்றிடுமோ”?
அரசன் கேட்டதும் அம்பிகை மைந்தர்
“ஆம்”என்று சொன்னார் ஞானத்திலே!

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *