கடைக்கோடி மனிதனின்மனசு வரைக்கும் கண்ணதாசன் ஊடுருவியிருப்பதுபோல் இன்னொரு கவிஞர்
ஊடுருவியிருப்பாராஎன்பது சந்தேகமே.கண்ணதாசனின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.
மனித சமூகத்திற்கு எப்போதுமே இரண்டுபேர் தேவை.ஓர் உல்லாசி.ஓர் உபதேசி.தமிழ்ச்சூழலில் இந்த இரண்டுமாக இருந்தவர் கண்ணதாசன்.மிதமிஞ்சிய உல்லாசங்களே உபதேசங்களை உருவாக்குமல்லவா?
இன்றும் சமூகம் வாழ்வைத் துய்ப்பவனை வியப்போடு பார்க்கிறது.வாழ்க்கை என்றால் என்னவென்று விளக்குபவனை மதிப்போடு பார்க்கிறது.

வியப்போடும் மதிப்போடும் கண்ணதாசனை ஆராதித்த பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை நண்பர்கள் கண்ணதாசனைப் போலவே வெள்ளந்தி மனிதர்கள்.கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள காமராஜ் சாலையில் கண்ணதாசன் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவருடைய படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும்.கண்ணதாசன் விழாக்களின் போது அடிப்படை ஏற்பாடுகளில் அந்தப் பகுதி பொதுமக்களும் தாங்களாக வந்து பங்கேற்பார்கள்.

கண்ணதாசனை நான் ரசித்து ரசித்துப் பேசப் பழகியது கூட அவர்கள் மத்தியில்தான்.கண்ணதாசனின் கவிதைகளில் திளைத்திருந்த நான் அவருடைய திரைப்பாடல்களின் ஆழ அகலங்களை அறிந்ததும் பகிர்ந்ததும் அங்கேதான்.ஒரு பாடலை,பகுதி பகுதியாகப் பிரித்துக்கொண்டு அவற்றின் இடையே
கண்ணுக்குப் புலப்படாத கவித்துவச் சங்கிலியால் கண்ணதாசன் இணைத்திருக்கும் நுட்பங்களை நான்
இனங்கண்டதும் அங்கேதான்

தம்பதிகள் மத்தியிலான நெருக்கத்தை கவிஞர் சொன்ன பாணி பற்றி அவர்களிடையே ஒருமுறை சொன்னேன்.
“வண்டு வருகின்றது-மலரில் அமர்கின்றது-உண்டு சுவைக்கின்றது-உறங்கி விழுகின்றது”.
பெண்ணை மலரென்றும் ஆணை வண்டென்றும் சொல்கிற வழக்கம் காலங்காலமாய் உள்ளதுதான்.ஆனால்
அந்தப்பெண் மனைவியா அல்லது விலைமகளா என்பதை கண்ணதாசன் இங்கே நுட்பமாக உணர்த்துகிறார்.
“உண்டு சுவைக்கின்றது-உறங்கி விழுகின்றது” என்ற வரி ,அது காமத்தையும் தாண்டிய உறவையும் காதலையும் உணர்த்துகிறது.இது காதல் உறவிலும் தாம்பத்யத்திலும்தான் சாத்தியம்.
தனக்கு விருப்பமான பெண்ணுடன் மகிழ்ந்திருந்துவிட்டு அவளது மெல்லிய தோள்களில் உறங்கி விழுவதை ஒப்பிட்டால் சொர்க்கம் மிகவும் சாதாரணமான விஷயம்தான் என்கிறார் திருவள்ளுவர்.
“தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு”என்பது திருக்குறள்.

“வண்டு வருகின்றது-மலரில் அமர்கின்றது-உண்டு சுவைக்கின்றது-உறங்கி விழுகின்றது”.என்பது தாம்பத்ய சங்கீதம்.இதுவே ஒரு விலைமகளுடனான உறவாக இருந்திருந்தால்
“வண்டு வருகின்றது-மலரில் அமர்கின்றது-உண்டு சுவைக்கின்றது-சென்று விடுகின்றது’என்று கவிஞர் எழுதியிருக்கக் கூடும்.

அந்தரங்கமான அந்த சொந்தத்தை நாகரீகம் குறையாமல் கவிஞர் வர்ணிக்கும் பாங்கு அத்துடன் நிற்கவில்லை.அடுத்த வரிகளைப் பாருங்கள்.
“வானம் பொழிகின்றது-பூமி நனைகின்றது-மேனி குளிர்கின்றது-வெள்ளம் வடிகின்றது”.
அடுத்த சரணத்தில் வைகறைப் பொழுதைக் காட்டுகிறார் கவிஞர்.

“இரவு விடிகின்றது-இளமை எழுகின்றது,குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது.
அருகில் அமர்கின்றது-அத்தான் என்கின்றது,ஆண்மை விழிக்கின்றது,அள்ளி அணைக்கின்றது”

இங்கே ஒரு நிமிஷம் நிறுத்துவேன்.”அப்புறமென்ன? அதன்பின் மீண்டும் வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது என்று முதல் சரணத்தையே ஆரம்பிக்க வேண்டியதுதான்.அது அவரவர் வசதி’என்றதும் அவை ஆரவாரிக்கும்.

கண்ணதாசனின் பாடல்களுக்கான வாழும் உதாரணங்களையும் பேரவையில் பார்க்க முடிந்தது.
குணசேகரன் அப்படிப்பட்டவர்.ஆலை ஒன்றில் பணிபுரிகிற போது ஏற்பட்ட விபத்தில் தன்னுடைய
இடதுகையை இழந்தவர்.கண்ணதாசனின் அதிதீவிர ரசிகர்.நயமான இடங்கள் சொல்லப்படும்போது
கையால் தொடையைத் தட்டிக்கொண்டு கலகலவென்று சிரிப்பார்.அது ஆயிரம் கரவொலிகளுக்குச் சமம்.
அவருக்கு நிகழ்ந்தது காதல்திருமணம்.அவர் ஊனமடைந்த பின்னர்தான் காதல் அரும்பியது.கரத்தை அவர் இழந்தது1988ல்.திருமணம் நடந்தது 1990ல்.

“தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?உங்கள்
அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ”
என்ற கவிஞரின் வரிகளுக்கு ஒரு நாயகி வாயசைத்துக் காட்டியுள்ளார்.குணசேகரனின் நாயகி வாழ்ந்து காட்டுகிறார்.

தன் கணவரின் குறை தன் கணவருக்குக்கூட தெரியக்கூடாது என்பதில் கவனமாயிருப்பவர் திருமதி சாவித்திரி குணசேகரன்.அதற்கொரு சம்பவம் சாட்சி சொன்னது.
மதுரையில் தமிழருவி மணியனின் நூல்வெளியீட்டு விழா ஒன்றிற்காக கண்ணதாசன் பேரவை நண்பர்கள் குடும்பத்துடன் படைதிரண்டு வந்திருந்தார்கள்.எல்லோருமாக கோவிலுக்குப்போனார்கள்.மீனாட்சியம்மன் சந்நிதியில் ஆண்கள் ஒருபக்கமும் பெண்கள் மறுபக்கமும் நின்றனர்.கையில் குங்குமம் வாங்கிய மறுவிநாடி ஆண்கள் பக்கத்திற்கு விரைந்த சாவித்திரி கணவனின் நெற்றியில் குங்குமத்தை இட்டுவிட்டு
பிறகே தான் இட்டுக் கொண்டார்.கனநேரமும் கூட தன் குறை குணசேகரனுக்குத் தெரியக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம் அவருக்கு.

திமுக அனுதாபியாக இருந்த குணசேகரன் தங்கள் மகளுக்கு உதயா என்று பெயர் சூட்டினார்.பிறகு மதிமுகவில் இணைந்தார்.இன்று அரசியல் சார்பில்லாமல்.கட்டிடப்பொருள் விற்பனையகம் ஒன்றை நிறுவி கணவனும் மனைவியுமாய் நடத்தி வருகிறார்கள்.

காளிதாசும் ஆலைப்பணியை விட்டுவிட்டு இருகூரில் தன் பரம்பரைத் தொழிலாகிய ஜோதிடத்தொழிலில்
கொடிகட்டிப் பறக்கிறார்.மகளிர் அணித்தலைவி விஜயசாந்தியை மணந்து கொண்டார் அவர்.பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் அவருடைய அலுவலகத்திற்குப் போனபோது கம்பீரமாக சிரித்துக் கொண்டிருந்தது,
கவிஞரின் புகைப்படம்.
கண்ணதாசன் பேரவையில் தங்கள் பெற்றோரின் துணையுடன் முழுமையாக ஈடுபட்டு பேரவையையே ஒரு குடும்பமாகக் கருதிவந்த கணேசன் என்கிற குலசேகரன்,மற்றும் அவருடைய சகோதரர் ஆனந்தன் ஆகியோர் அதே பாச உணர்வுடன் பேரவை நண்பர்களுடன் தொடர்பிலிருந்து கொண்டு தங்கள் அச்சகத்தை விரிவுபடுத்தி நடத்தி வருகிறார்கள்.

பள்ளிப்படிப்பு முடித்த கையுடன் என்னிடம் உதவியாளராக சேர்ந்த தேவ.சீனிவாசன்,வெவ்வேறு துறைகளில் பரிசோதனை முயற்சிகள் செய்துவிட்டு இன்று வரைகலை வடிவமைப்பாளரான தன் மனைவியின் துணையுடன் சுயதொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இப்படி கண்ணதாசன் பேரவை நண்பர்கள் வாழ்வின் நிர்ப்பந்தங்களால் தனித்தனி பிரயத்தனங்களில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் கூப்பிடு தூரத்திலேயே இருப்பதும் அவ்வப்போது பசுமைநிறைந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதும் ஆறுதலான விஷயங்கள்.

கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப்பேரவை நண்பர்களை மையப்படுத்தி கண்ணதாசன் இயக்கத்தை
மாநிலந் தழுவிய இயக்கமாய் உருவாக்க மதுரையில் ஒரு கூட்டம் நடந்தது.அந்த நள்ளிரவுகூட்டம்,ஒரு
சுவாரசியமான அனுபவம்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *