இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-16

அடிப்படையில் அதற்கு உளவியல் ரீதியாக ஒரு காரணம் உள்ளது. திருவாமூர் என்ற திருத்தலத்தில் அவதரித்தவர் திருநாவுக்கரசர். அப்போது அவருடைய பெயர் மருள்நீக்கியார். தமக்கை திலகவதியாருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கலிப்பகையார் போரில் இறந்து விடுகிறார். அந்த அதிர்ச்சியில் பெற்றோரும் இறந்து போகின்றனர். தமக்கையாரும் நெருப்பில் இறங்கி உயிர்விட நினைத்தார்.

தன் தம்பியாகிய மருள்நீக்கியார் அழுவது பொறாமல் அவர் வாழவேண்டும் என்பதற்காக தான் வாழ வேண்டும் என்று முடிவு செய்து திருமணம், இல்லறம் என்ற சிந்தை இல்லாமல் ஒரு துறவி போல் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார்.

“தம்பியார் உளர்ஆக வேண்டும்
என வைத்த தயா
உம்பர் உலகு உடையவரும் நிலைவிளக்க
உயர் தாங்கி அம்பொன் மணிநூல் தாங்காது.
அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி
இப்பெருமானை தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்”
என்று சேக்கிழார் சொல்கிறார். இந்நிலையில் இளைஞராய் இருந்த மருள்நீக்கியார் தன்னுடைய ஊருக்குள் அறப்பணிகளை நிறையச் செய்கிறார்.

“கா வளர்த்தும் குளம் தொட்டும்
கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு
வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்
நாவலர்க்கு வளம் பெருக நல்கியும்
நானிலத்து உள்ளோர் யாவருக்கும்
தவிராத ஈகைவினைத் துறை நின்றார்”

இந்த அறப்பணிகளை எல்லாம் தன் மனத்துயர் நீங்குவதற்காகத்தான் மருள்நீக்கியார் செய்யத் தொடங்கினார். அவரும் தண்ணீர்ப்பந்தல் அமைத்தார், உணவுச் சாலைகள் அமைத்தார். நந்தவனங்கள் அமைத்தார். குளம் ஏற்படுத்தினார். ஆனால் அவற்றை எப்படிச் செய்தார் என்பதை இதற்கு முந்தைய பாடல் சேக்கிழார்,
“காசினிமேல் புகழ்விளங்க நிதி அளித்து”
என்று சொல்கிறார்.

மனத்துயர் நீங்குவதற்காக மருள்நீக்கியார் இந்தப் பணிகளைச் செய்தாலும், இவற்றை யெல்லாம் செய்தவர் அவர்தான் என்று அவருடைய புகழ் விளங்குமாறு அந்தப் பணிகள் நடைமுறையில் இருந்தன. அப்படியானால் அங்கே வருபவர்கள் அதைச் செய்தது யார் என்று அறிந்து கொண்டு ஈருந்தார்கள்.

உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமல்ல. அதில் பயன் பெறுகிறவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். இதை மருள் நீக்கியார் வைத்திருக்கிறாரே? அவர் யார் என்று அவர்கள் கேட்டிருக்கக் கூடும்.

அப்படிக் கேட்ட மாத்திரத்தில் ஊரில் இருப்பவர்கள் மருள் நீக்கியார் என்பவர் ஓர் இளைஞர். அவர் பெற்றோர்கள் இறந்து விட்டார்கள். அவருடைய தமக்கையார் திலகவதி என்று பெயர். அவர் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு வாழ்க்கை வாழ்கிறார். தன் மனக்கவலைகள் நீக்குவதற்காக மருள்நீக்கியார் இதெல்லாம் செய்கிறார் என்று விளக்கம் கொடுத்திருப்பார்கள்.

வந்தவர்கள் சும்மா போவார்களா, “ஐயோ! பாவம் இவ்வளவு நல்ல மனிதருக்கு இப்படி ஒரு நிலைமையா” என்று தங்கள் கழிவிரக்கத்தையும் கொட்டிவிட்டுப் போவார்கள். “இறைவன் இப்படியெல்லாம் இவரை சோதித்திருக்க வேண்டாம்” என்று அனுதாப வாசகங்களை அரங்கேற்றி இருப்பார்கள்.

மனத்துயர் நீங்குவதற்காக ஒரு காரியம் செய்யப்போய் அந்தக் காரியத்தில் பயன்பெற்றவர்கள் ஆற்றுகிற எதிர்வினைதான் மனச்சுமையை குறைக்காமல் கூட்டுவதைக் கண்டு மருள்நீக்கியார் மனம் மருண்டிருக்க வேண்டும்.

அந்தச் சூழலில்தான் சமண சமயம் குறித்த செய்திகள் பரப்புரைகள் போன்றவை உலகின் நிலையாமையை அதிகம் பேசக்கூடிய சூழல் இருந்தபோது அவர் சமண சமயத்தில் சென்று சேர்கிறார்.

சமண சமயத்தில் இருந்து நீண்ட காலம் அதிலேயே நிலைபெற்று அதில் மிக உயர்ந்த இடத்திற்கு வந்து திரும்பவும் தாய்ச் சமயமாகிய சைவ சமயத்துக்குத் திரும்பி தலங்கள் தோறும் சென்று உழவாரப்பணி செய்து இறைவனை வழிபட்டு வருகிற திருநாவுக்கரசருக்கு திங்களூரில் ஒரு திருப்புமுனை ஏற்படுகின்றது.

எல்லா இடங்களிலும் அறப்பணிகள் திருநாவுக்கரசர் பெயரில் நடைபெறுவதைப் பார்த்து அவர் வியக்கிறாரே தவிர அது தன் பெயரால் செய்யப்படுகின்றது என்ற பெருமை அவரை எள்ளளவும் தீண்டவில்லை. அப்படியானால் அப்பூதியடிகளை அவர் ஏன் தேடிச் செல்கிறார்?

அறப்பணிகளைச் செய்யும் போது அதை நம்முடைய பெயரில் செய்யாமல் இறைவனுடைய பெயரிலோ தன் குருநாதர் பெயரிலோ, மறைந்த குடும்பப் பெரியவர்கள் பெயரிலோ அந்தப் பணிகளைச் செய்த புகழோ இகழோ தம்மைத் தீண்டாது. மாறாக ஒரு பணிசெய்த மனநிறைவு மட்டுமே மிஞ்சும் என்பதை அப்பூதியடிகள் அறிந்திருக்கிறார் என்பது திருநாவுக்கரசருக்கு புரிகிறது.

இளமைப்பருவத்தில் இந்தப் புரிதல் இருந்திருந்தால் தான் செய்த அறப்பணிகள் காரணமாகவே மன ஊளைச்சலுக்கு ஆளாகி சமண சமயம் புகுந்திருக்க நேர்ந்திருக்காதே என்று திருநாவுக்கரசருக்குத் தோன்றி இருக்க வேண்டும். இந்தப் புரிதலை ஏற்படுத்திக் கொண்டு இந்த ஊரில் ஒருவர் இருக்கிறாரே! அவர் யார் என்று பார்க்கலாம் என்ற எண்ணத்தில்தான் திருநாவுக்கரசர் அப்பூதியடிகளைத் தேடிப் போகிறார் என்பது நாம் யூகித்துக் கொள்கிற ஒரு செய்தி. இந்த ஊளவியல் நுட்பம் அப்பூதியடிகள் புராணத்தையும் திருநாவுக்கரசர் புராணத்தையும் வாசிக்கிறபோது நமக்கு விளங்குகிறது.

இன்றைய சமூகத்தில் நிறுவனங்களுக்கென்று சமூகப் பொறுப்பு இருப்பதை சுட்டிக்காட்டி ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்திலேயும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுகின்றன. —பள்ளிகளை, நீர்நிலைகளை மேம்படுத்துவது, மரக்கன்றுகள் நடுவது என்று நிறுவனங்கள் எல்லாம் சமூக நலம் சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்றன.

தொழில் இருப்பவர்களின் இந்தப் பொறுப்புணர்வுக்கு அப்பூதியடிகள் மிகச்சிறந்த முன்னோடியாக விளங்குகிறார். ஈட்டுகிற செல்வத்தின் கணிசமான பகுதியை சமூக நலனுக்கு செலவிடுவது என்பதை அப்பூதியடிகள் மூலமாக நாம் அறிந்து கொள்கிறோம்.

மரபின் மைந்தன் ம.முத்தையா

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *