எட்டயபுரமும் ஓஷோபுரமும்

“குரு எனப்படுபவர் ஒரு கிரியா ஊக்கிதான். அவர்களுடைய இருப்பில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த அனுபவமே உள்நிலை வளர்ச்சியை ஏற்படுத்தும். எனவே ஞானக் கண்ணை கண்ணன் கொடுத்தான் என்று அர்ச்சுனன் கருதுவது இயற்கை. ஒரு குருவின் முன்னிலையில் உங்கள் விழிப்பு நிலை உச்சத்தை அடைகிறபோது விசுவரூப தரிசனம் சித்திக்கிறது (279) என்கிறார் ஓஷோ.

There are no masters in the world. They are all ctalysts. In the presence of someone, your conciosness canattain to a height, which may not be possible with out that presence.

பாரதியும் ‘கண்ணன் என் சற்குரு’ என்று பாடும் போது, இந்தச் செய்தியைக் கண்ணனின் உபதேசமாகவே பதிவு செய்கிறான்.

“ – நெஞ்சில்
ஒன்றும் கவலை இல்லாமலே – சிந்தை
ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே – தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் – அங்கு
விண்ணை அளக்கும் அறிவுதான்”
என்கிறானாம் கண்ணன்.

தன்னை வென்று மறந்த நிலையில், சிற்றறிவு, பேரறிவாகிறது. அது விண்ணை அளக்கும் அறிவாக வளர்ந்து நிற்கிறது. அதுவே விசுவரூப தரிசனமாக மலர்கிறது.

இந்த அனுபவத்தை நாம் பெறுகிறபோது ஒரு மணல் துகளில் உலகம் அடங்கும். ஒரு மலரில் விண்ணகம் தெரியும். எல்லையின்மை கைப்பிடிக்குள் வரும். நிலைபேறு அங்கே நிகழும் என்கிறார் வில்லியம்பிளேக்.

To see a world in a grain of sand
And heaven in a wild flower
Hold infity in the palm of your hand
And eternity in an hour

வில்லியம்பிளேக்கின் இந்த வரிகளை பாரதியும் ஓஷோவும் புலப்படுத்துகிற விசுவரூப சித்தரிப்போடு பொருத்திப் பார்க்க முடிகிறது.

அந்த விசுவரூப தரிசனம் எப்படியிருக்கும் என்பது கண்ணன் பாட்டில் விரிந்து கொண்டே போகிறது.

“ஆதித் தனிப்பொருள் ஆகுமோர் – கடல்
ஆரும் குமிழி உயிர்களாம் – அந்தச்
சோதி அறிவென்னும் ஞாயிறு – தன்னைச்
சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் – இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே -அதன்
மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்”

பாரதி-ஓஷோ என்ற இரண்டு கண்கள் கொண்டு கண்ணனின் விசுவரூபத்தை நம்மால் காண முடிகிறது.

கண்ணனின் வகையைச் சேர்ந்த ஞானிகள், வாழ்க்கையைக் கொண்டாடுபவர்கள்,

“நீதி முறை வழுவாமலே – எந்த
நேரமும் பூமித் தொழில் செய்து – கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் – பிறர்
உற்றிடும் தொல்லைகள் மாற்றியே – இன்பம்
மோதி விழிக்கும் விழியினார்”
என்கிறார் பாரதி.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *