ஸ்ரீராம் மெஸ்ஸின் மூன்றாம் மேசை

Vannadhasanமதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி தெருவிலிருந்து பிரியும் குறுந்தெருவில் ஆண்டாண்டு காலமாய் ஸ்ரீராம் மெஸ், சைவ உணவுக்கு புகழ் பெற்ற இடமாய் விளங்குகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு உள்ளே நுழையவே ஏகக் கெடுபிடி நடக்கும். இப்போது மேல்தளம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு விரிவாக்கம் கண்டிருக்கிறது.

வாசலில் இருக்கும் அறிவிப்புப் பலகைகள் பள்ளிக்கூடங்களில் ஒட்டப்படும் அறிவுறுத்தல் போல் கறாரான வாசகங்கள் இருக்கும்.தலைமையாசிரியரின் கையெழுத்து ஒன்றுதான் பாக்கி. உணவுக்கு கூப்பன் வாங்கிய கையோடு, “மினரல் வாட்டருக்கு இங்கே பணம் செலுத்தவும்” என்னும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து,தண்ணீர் வாங்கிக்கொண்டு மாடிக்குச் சென்றேன்.

குளிர்சாதன அறையில் இரண்டாம் மேசையில் அமர்ந்தேன். சற்று முன் மதுரை நியூ செஞ்சுரி விற்பனை நிலையத்தில் வாங்கிய புத்தகங்களில் இருந்து உயிரெழுத்து இதழைப் பிரித்தேன்.

மூன்றாம் மேசையில் இருவரின் பேச்சு காதில் விழுந்தது. கொடுமுடி கோகிலம் கே.பி.எஸ்.சைப் பற்றியது அது. கே.பி..எஸ் சின் பாடல்களைப் பற்றியோ முருக பக்தியைப் பற்றியோ அல்ல அந்த உரையாடல்.”பவுன் 13 ரூபாய் வித்த போது நடிக்க ஒரு இலட்சம் ரூபாய் வாங்கினாங்க” என்பதைச் சுற்றியே பேச்சு இருந்தது.

அந்த இருவரும் எழுந்து போன பிறகும் கூட கேபி.எஸ்.அந்த மேசையிலேயே அமர்ந்திருந்தார்.கவுந்தியடிகளாக வந்த கே.பி.எஸ். அவ்வையாக வந்த கே.பி.எஸ்.காரைக்காலம்மையாக வந்த கே.பி.எஸ், பூம்புகார் படத்தில் “அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது,நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது” என்ற வரியைப் பார்த்துவிட்டு “தெய்வமெங்கே சென்று விட்டது”என்று பாடமாட்டேன்” என்ற கே.பி.எஸ்.,அந்தப் பாடலை எழுதிய கலைஞர்.மு.கருணாநிதி ” நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது” என்று மாற்றிக் கொடுத்தபின் பாடிய கே.பி.எஸ்,.என நினைவுகள் நிழலாடின.

KPSநடிகர் திரு.எஸ்.எஸ். ஆருடனான சந்திப்பின் போது அவர் ஒரு சம்பவம் சொன்னார்.”நாங்கள் சின்னஞ் சிறுவர்களாக இருந்தபோது,கொடுமுடியில் நாடகம் நடிக்கப் போவோம். கே.பி.எஸ் எங்களை ஐத்து தன் கைகளாலேயே எண்ணெய் தேய்த்து விடுவார். நல்ல உணவு தருவார்”>

அந்த கே.பி.எஸ் அமர்ந்திருந்த மேசையை காலி மேசையென்று கருதி ஒரு குடும்பம் அங்கே வந்தமர்ந்தது. அதில் ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன், “நாம எதுக்கு இப்போ சாப்பிடணும்” என்ற ஆதாரமான கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தான்.அவன் தலையில் கே.பி.எஸ். ஒரு கைஎண்ணெய் வைத்தபோது உயிரெழுத்து இதழில் ஒரு கதையைக் கண்டடைந்திருந்தேன். வண்ணதாசன் எழுதிய மகமாயிக் கிழவி பற்றிய கதை அது.

கிராமத்திலேயே நெடுநாள் கிடந்த கிழவி-சின்னவயதிலேயே கணவனைப் பறிகொடுத்து,அவ்வப்போது தன்மேல் ஆவேசிக்க வடக்குவாய் செல்விக்கு இடம் கொடுக்கும் கிழவி,தன் அண்ணன் மகனுடன் நகரம் வந்து சேர்கிறாள். மருமகனின் மகளையும் மகனையும் கொஞ்சுகிற கிழவியின் வருகை வேற்றுசாதிப் பையனை மணக்க அடம்பிடித்திருக்கும் அந்த வீட்டுப் பெண்ணின் இறுக்கம் தளர்த்தும் தென்றலாகிறது

வண்ணதாசனுக்கே உரிய அடவுகளில் கதை அபிநயம் பிடிக்க வாசித்த வண்ணமே சாப்பிட்டு முடித்திருந்தேன். மெஸ்காரர்கள் வாழைப்பழம் கொண்டுவந்து வைத்தார்கள்.

நிமிர்ந்து பார்த்தபோது மூன்றாம் மேசையில் அந்தக் குடும்பத்துக்கு இடம் விட்டு கே.பி.எஸ்சும் மகமாயிக் கிழவியும் ஒருவரையொருவர் உரசிக் கொண்டே உட்கார்ந்திருந்தார்கள். நான் கைகழுவிவிட்டு வந்து பார்க்கும் போது மகமாயிக் கிழவி தன் பெயர்த்திக்குத் தந்தது போக மீதியிருந்த கறிவேப்பிலைப் பழங்களை கே.பி.எஸ் கைகளில் தந்து கொண்டிருந்தார். படியிறங்கி வந்தபிறகுதான் தோன்றியது..அவை சுட்ட பழங்களா சுடாத பழங்களா என்று கேட்டிருக்கலாமோ என்று

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *