கண்டு செய்வது சரியா? தவறா?

தெய்வ மார்க்கத்திலே ஈடுபடுகிறபோது சிலருக்கு உயர்ந்த ஞானநிலை சித்திக்கும். அந்தப் பிறவி எடுக்கும்போது அந்த விழிப்பு தானாகவே உள்ளே தோன்றும். தோன்கிற போது அவர்கள் தன்போக்கிலே திரிந்து கொண்டிருப்பார்கள். சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள். இன்றைக்கு வகை தொகையில்லாமல் திரிபவர்களுக்கெல்லாம் அந்த வார்த்தையைச் சொல்கிறோம்.

ஒரு சித்தன் எந்தப் போக்கிலே போகிறானோ அதுதான் சிவனுடைய போக்கு. அவனுக்கு நியமங்கள் கிடையாது. வழிமுறைகள் கிடையாது. தவங்கள் கிடையாது. சேஷாத்ரி சுவாமிகள் திருவண்ணாமலையில் இருந்தார். அவர் பாட்டுக்கு திண்ணையில் அமர்ந்திருப்பார் யாராவது சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுவார். திடீரென்று ஒரு கடைக்குள் போவார். கல்லாவிலிருந்து காசை எடுத்து வீசுவார். அன்று அந்தக் கடையில் நன்றாக வியாபாரம் நடக்கும்.

சிவனுடைய போக்குதான் சித்தன் போக்கை நிர்ணயிக்கிறது. ஒரு சித்தன் எப்படிப் போகிறானோ அதைப் பார்த்து சிவன் அப்படித்தான் போவான் என்பது நமக்குப்புரியும். அதுதான் சித்தன் போக்கு சிவன் போக்கு.

சில ஆண்டுகளுக்கு முன்பாக லாட சந்நியாசி பௌர்ணமி சுவாமிகள் என்று ஒருவரை நான் பார்த்தேன். அவர் கைகளில் லாடத்தை வைத்துக்கொண்டு கோர்த்துக் கொண்டே இருப்பார். அவர்களுக்கு அது ஒரு தவமுறை. அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்தில் இருப்பார். பௌர்ணமி வந்துவிட்டால் மிகச் சரியாக மதுரைக்கு அவர் வந்துவிடுவார். கோவிலுக்கு உள்ளே சென்று அம்பிகையை வணங்கமாட்டார். நிலைவாசல் படியில் நின்று கொண்டிருப்பார். பல மணி நேரங்கள் அம்பிகையை வெறித்துப் பார்ப்பார். கண்களை அங்கே இங்கே அசைக்கவே மாட்டார். அவர் செய்த தொண்டு, அவர் செய்த பக்தி எல்லாமே அவ்வளவுதான்.

கூட்டம் கூட்டமாக வருபவர்கள் யாருக்கும் அவர் நிற்கிற தோரணையைப் பார்த்தால், ‘அய்யா தள்ளிக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல மனமே வராது. பல பேர் அவரை வணங்கிவிட்டு அதன்பிறகு மீனாட்சியை வணங்குவார்கள்.

நாய்போல் திரிந்து சேய்போல் இருப்பார்
கண்டீர் உண்மைஞானம் தெளிந்தவரே

என்பார் பட்டினத்தார்.

அம்பிகையை இந்தப் பாடலில் இரண்டு கேள்விகள் கேட்கிறார். நான் தொண்டு செய்து வரட்டுமா? இல்லையென்றால் எதுவுமே செய்யாமல் அவர்களைப் போல இருக்கட்டுமா? என்று கேட்கிறார்.

ஒன்றைப் பார்த்துச் செய்வது நமக்கு நல்லதில்லை. அந்த ஆன்மாக்களின் பரிபக்குவம் எந்த நிஷ்ட நியமங்களும் இல்லாமல் அருள் கிடைக்கும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு நானும் செய்கிறேன் என்று நாமும் தொடங்கினால் அது நமக்குப் பொருந்தாமலும் போகலாம். எனவே ஒன்று தொண்டு செய்ய வேண்டும். அல்லது பக்தி செய்ய வேண்டும். ஏனெனில் விதிவிலக்குகள் உதாரணங்கள் இல்லை. ஆனால் தான் தவறு செய்து அதனால் அம்பிகை தன்னை வெறுத்து விட்டால் என்ன செய்வதென்று அம்பிகையிடமே கேட்கிறார்.

மற்றவர்களுடைய குற்றத்தை முதல் முறை மன்னிப்பது மனித இயல்பு. தொடர்ந்து தவறு நடந்தால் வெறுப்பு வந்துவிடும்.

மனிதனுடைய இயல்பு ஓர் இடத்தில் அன்பு செலுத்தத் தொடங்கும். ஆனால் அந்த அன்பை நிரந்தரமாக நிலைநிறுத்தக்கூடிய பக்குவம் மனித உயிருக்குக் கிடையாது. இறைவன்பால் நாம் செலுத்தும் அன்பும், இறைவன் நம்பால் செலுத்தும் அன்பும் மட்டுமே நிரந்தரம். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலர், அன்பே சிவமாய் ஆவதும் அறிகிலார் என்பார் திருமூலர். இறைவனுக்கு யாரையும் வெறுக்கத் தெரியாது.

தொண்டுசெய் யாதுநின் பாதம் தொழாது துணிந்திச்சையே
பண்டுசெய் தார்உள ரோஇலரோஅப் பரிசடியேன்
கண்டுசெய் தால்அது கைதவமோஅன்றிச் செய்தவமோ
மிண்டுசெய் தாலும் பொறுக்கைநன்றேபின் வெறுக்கையன்றே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *