2. புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை
பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அபிராமி அந்தாதி விளக்கயுரையின் சுட்டி

2009 ஆம் ஆண்டு. அக்டோபர் மாதம் 15ஆம் நாள். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் மயிலாடுதுறையிலிருந்து திருக்கடவூர் சென்று கொண்டிருந்தேன். என் நினைவுகள் இருபத்தோராண்டுகள் பின்னோக்கிப் பறந்தன. தொழிலதிபர் திரு.ஏ.சி. முத்தையா அவர்களின் துணைவியார் திருமதி தேவகி முத்தையா அவர்கள் அதிதீவிரமான அபிராமி பக்தை. அபிராமி அந்தாதி குறித்து அவர் மேற்கொண்டிருந்த ஆய்வுநூல் 1988ல் திருக்கடவூர் அபிராமியம்மை சந்நிதியில் வெளியிடுவதாகத் திட்டம். என் நினைவு சரியாக இருக்குமே யானால் தை அமாவாசையில் அநத விழா திட்டமிடப்பட்டிருந்தது.

அந்த மாவட்டங்களில் நிகழ்ந்த சிலவகை இனக்கலவரங்கள் காரணமாக விழா 15 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. நூலை வெளியிட்டவர் தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானம். அவருடைய அருளுரையில் மிக இயல்பாய் ஒரு சிந்தனை வந்து விழுந்தது.

“15 நாட்கள் முன்னர் தை அமாவாசையில் இந்நூல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். விழா தள்ளிப்போனது. இன்று பவுர்ணமி. அபிராமிபட்டருக்காக தை அமாவாசையைப் பவுர்ணமியாக்கியவள் அல்லவா அபிராமி!அந்த வகையில் இந்நூல் இன்று வெளியாவதும் பொருத்தமே”என்றார் அவர். விழா ஏன் தள்ளிப்போனது என்று மனதில் ஏதேனும் கேள்விகள் இருந்திருப்பின் இந்த விளக்கமே பவுர்ணமி. அந்த நினைவுகளுடன் கிழக்கு வானைப் பார்த்தேன். இளங்காலைப் பொழுதின் செங்கதிர் அபிராமியின் அருள்ள்வடிவை நினைவுபடுத்தும் விதமாய் செந்நிலவு போல் ஒளிவீசிக் கொண்டிருந்தது.

“புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலைப்
பொழுதை நிலவாக்கினாள்
அதிரும் மனம் ஓய அருளும் அபிராமி
அகிலம் எனதாக்கினாள்”
என்றொரு கவிதை மனதில் எழுந்தது.

மனதில் எழுகிற ஆயிரம் கேள்விகளுக்கு விடைவருவதுபோல் இருண்ட வானத்தில் எழுகிறது செங்கதிர். அந்த வண்ணம் அம்பிகையின் திருவுருவை அபிராமி பட்டருக்கு நினைவூட்டுகிறது. உடனே அம்பிகையின் திருவுருவை நினைவு படுத்தும் பல விஷயங்கள் அவருக்கு நினைவு வருகின்றன.

“உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது”

அம்பிகையின் திருமேனி உதிக்கின்ற செங்கதிராய்த் தோன்றுகிறது. மாதர்கள் உச்சியில் தீட்டிக் கொள்கிற திலகம்போல் தகதகக்கிறாள் அவள். தம்முடைய சிரசின் மீது அம்பிகையின் பாதங்கள் பதிந்திருக்கும் பாவனை பெண்களுக்கிருந்தால் அவர்கள் தீட்டிக் கொள்ளும் உச்சித் திலகம், அவள் பாதங்களுக்குப் பூசும் செம்பஞ்சுக் குழம்பல்லவா!!

நல்லுணர்வு மிக்கவர்களால் மதிக்கப்படுகிற மாணிக்கமாகவும் அவளுடைய திருமேனி ஒளிர்கிறது. மாதுளம்போதுடன் ஒப்பிடத்தக்க கருஞ்செம்மை நிறம் அம்பிகையின் நிறம். மாதுளம் மலரை நேராக நிறுத்திப் பார்த்தால் நின்ற கோலத்தில் தவம் செய்யும் அம்பிகையின் திருத்தோற்றம் போலவே இருக்கும்.

அம்பிகையின் திருமேனி வண்ணத்தை நான்கு அம்சங்களுடன் அபிராமி பட்டர் ஒப்பிடுவதுபோல் இந்தப்பாடலின் ஒன்றரை அடிகள் தோன்றுகின்றன. இந்த வரிகளுக்கு விசேஷமாக வேறொரு நயமும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

குண்டலினி ஆற்றல் மேலெழும்ப,தங்களுக்குள் ஒளிவெள்ளம் நகர்ந்து சஹஸ்ரஹாரமாகிய உச்சிக்கு வரப்பெற்ற தவ உணர்வுடையோரால் மதிக்கப்படுகிற மாணிக்கம் போன்றவள் என்பதே அந்த விளக்கம்.

“உதிக்கின்ற செங்கதிர்,உச்சித்து இலகும் உணர்வுடையோர்” என்பார்கள். அத்தகைய தன்மையில் இருப்பவர்களால் மதிக்கப்படுகிற மாணிக்கம், அபிராமி. நாகம் குண்டலினி ஆற்றலின் குறியீடாக விளங்குகிறது. நாகத்தின் நஞ்சு பற்றிய நம்பிக்கை ஒன்றுண்டு. அந்த நஞ்சு கெட்டிப்பட்டு முதிர்ந்த நிலையே மாணிக்கம் என்பார்கள். இன்றைய அறிவியல் உலகம் இதற்கு ஆதாரம் இல்லையென்று கைவிரிக்கிறது. ஆனால் இந்த உருவகத்தை நாம் உள்வாங்கிக் கொள்ளலாம்.

தங்களுக்குள் இருக்கும் குண்டலினி ஆற்றல் முதிர்ந்த நிலையில் ஞானிகள்
மாணிக்கப் பேரொளியாய் அபிராமி தங்களுக்குள் உதிக்கக் காண்பார்கள்.

“உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது- மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி”

மலர்க்கமலை என்ற சொல் கலைமகளுக்கும் அலைமகளுக்கும் பொதுவெனிலும் இங்கு விசேஷமாக அலைமகளாம் மகாலட்சுமியைக் குறிக்கிறது. ஒரு மின்னல் வெட்டி மறையும் சிறுபொழுதில் அம்பிகையின் தரிசனம் வாய்க்கப்பெற்ற மகாலட்சுமி அந்தத் தரிசனத்தை மீண்டும் பெற வேண்டித் துதிக்கிறாளாம்.

யோகநெறியில் அம்பிகையைத் துதிப்பவர்களுக்கு ஒரு மின்னல்கொடிபோல் அவள் காட்சி தோன்றி மறையுமாம். மனித உடலிலுள்ள சக்கரங்கள் ஒவ்வொன்றும் தாமரை என்று உருவகப்படுத்துவது வழக்கம். சக்ர தேவதைகளாகிய மலர்க்கமலைகள் துதிக்கின்ற மின்னல்கொடி போன்றவள் என்று சொல்வதும் எத்தனை பொருத்தமாய் இருக்கிறது!!

“உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது- மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி”

அடுத்தவரி இன்னும் அழகு.

“மென்கடி குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே”

அம்பிகை தன்னிருப்பை உணர்த்த எத்தனையோ சூட்சுமமான வழிகளைக் கொண்டிருக்கிறாள். தியானத்தில் இருக்கையில் சலங்கை ஒலி, சிரிப்பொலி என்று பலவற்றைக் கேட்டு “அம்மா! வந்துவிட்டாயா!” என்று மெய்சிலிர்க்கும் சாதகர்கள் ஏராளம்.

அவளுடைய இருப்பை உணர்த்தும் அடையாளங்களில் குங்கும நறுமணமும்
ஒன்று. மிக மெல்லிதாய் வீசும் குங்கும வாசம் அபிராமியின் பிரசன்னப் பிரசாதம்.

ஏனெனில் குங்குமத்தில் குளித்தெழுந்த திருக்கோலம் அவள்கோலம். உதிக்கும் செங்கதிராய் உச்சித் திலகமாய் மாணிக்கமாய் மாதுளம் மலராய் குங்கும நறுமணம் வீசும் மின்னல் கொடிபோன்ற அபிராமவல்லியே நிலையான துணை என்பதை உணர்த்துகிறார் அபிராமி பட்டர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *