வானம் வைக்கும் வண்ண வண்ண வரவேற்பு வளைவுகளும்
மேகங்கள் தெளிக்கும் பன்னீர்த் துளிகளும் அற்புதரின் குடிலுக்கு
கடவுள் வருவதை உலகுக்கு உணர்த்தின.அற்புதரின் செயல்கள்
அனைத்திலும் அறிவிக்கப்படாத பங்குதாரராகிய கடவுள்,அற்புதரின்
குடிலில் நுழையும்முன் வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த காலணிகளின்
வரிசையில் தன் காலணிகளையும் கழற்றி வைத்தார்.

அப்புறம் அற்புதரின் குடிலில் வரவேற்பறையிலிருந்த விருந்தினர்
பதிவேட்டில் மின்னல் கொண்டு வெளிச்சக் கிறுக்கல் கிறுக்கினார்

எழுத்தேதும் அறியாமல் எல்லாம் அறிந்த பல ஞானியரின் பெருவிரல் ரேகைப்பதிவுகளும் அந்த வருகைப்பதிவேட்டில் இருப்பதைக் கண்ட கடவுள்அந்த ரேகைகளை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார்.

கடவுள் வருகிற தேதியறிந்து கூட்டம் கூட்டமாய் திரண்டிருந்த பல்லாயிரம் மனிதர்கள் வெள்ளாடையணிந்து வரிசையாய் வந்த விதம்
வனம்நடுவே வெள்ளைநதியொன்று புகுந்ததுபோல் இருந்தது.அற்புதரின்
அருகே ஆசனமிட்டமர்ந்திருந்த கடவுள் முன்னர் தலைவணங்கிய
மனிதர்களை அற்புதர் வணங்கினார்.

“நம் குடிலுக்கு கடவுளை வெற்றிகரமாய் அழைத்துவந்த உங்களுக்கென்
பாராட்டுக்கள்”என்று அற்புதர் அறிவித்ததும் கடவுள் வாய்விட்டுச் சிரித்தார்.
அவருடைய சிரிப்பு முடிய அரைக்கணம் இடைவெளிவிட்ட அற்புதர்
தொடர்ந்தார்….

“இந்தக் கடவுளை நான்தான் அழைத்து வந்தேனென்று இந்தக் கடவுள்
உட்பட எல்லோரும் கருதிக் கொண்டிருக்கிறீர்கள், உண்மையில் என்ன
நடந்தது தெரியுமா?ஒளிந்திருந்த கடவுளின் கால்களைப் பிடித்தும், வராத போது அவர்
காதுகளைப் பிடித்தும் இழுத்து வந்திருக்கிறேன். தானிருப்பதே தெரியாமல்
இருப்பதுதான் கடவுளுக்குப் பிடிக்கும். எனவே அவர் ஓடி ஓடி ஒளிந்து
கொள்கிறார்” என்றார் அற்புதர்.

“எங்கே ஒளிகிறார்? எங்கே ஒளிகிறார்”என்றனர் மனிதர்கள். இப்போது
அற்புதர் வாய்விட்டுச் சிரித்தார். “யாரும் அணுக முயலாத அளவு
முடைநாற்றம் வீசுகிற இடங்களில் கடவுள் ஒளிகிறார். அந்த இடம்
எங்கே இருக்கிறது என்கிறீர்களா?மனிதர்களின் உயிர்தான் கடவுளின்
உறைவிடமும் மறைவிடமும்.அங்கேதன் பிறவிகள் பலவாய் நீங்கள்
சேர்த்த வினைகளின் மூட்டைகள் முடைநாற்ரம் வீசுகின்றன. நான்
உங்கள் மூச்சுக் காற்றுவழி உள்ளே நுழைந்து, உயிரைத் தூய்மை செய்து
உள்ளே ஒளிந்திருக்கும் கடவுளைக் கண்டுபிடிக்கிறேன். உங்களுக்குள்
இருக்கும் அதே கடவுளின் நீட்சியைத்தான் கோயிலில் இருத்துகிறேன்”
என்றார் அற்புதர்.

கேட்டுக் கொண்டிருந்த மனிதர்களின் கண்களில் இருந்து அலையலையாய் வழிந்த ஆனந்தக் கண்ணீரைக் கண்ட அற்புதர் சொன்னார்.”முந்திவருகிற ஆனந்தக் கண்ணீர்தான் உள்ளே உள்ள
கடவுளின் அடையாள அட்டை.உங்களுக்குள் இருக்கும் கடவுளை உணர்ந்த உங்களை வணங்குகிறேன்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *