அற்புதரின் முதன்மை விருந்தினர் உருவமற்றவர். அவரை அருவமானவர் என்றும் சொல்லிவிடமுடியாது. அருவமுமாகி உருவமுமான அந்த நபரின் வருகைக்காகவே தான் வந்திருப்பதாய் அற்புதர் சொன்னபோது பலருக்கும் புரியவில்லை. ஆனால் அந்த முதன்மை விருந்தினருக்கான கூடாரத்தை அமைக்கத் தொடங்கியதுமே அற்புதரின் தீவிரத்தைக் கண்டு அருகிலிருந்த அத்தனைபேரும் அதிசயித்தனர். வரப்போகிறவர் எல்லா வகையிலும் முழுமையானவர் என்றும் அவரின் வருகை நிகழ தன்னையே அர்ப்பணிக்கவும் தயாரென்றும் அற்புதர் சொல்லச் சொல்ல அச்சம் கலந்த பரவசத்தில் அனைவரும் அமிழ்ந்தனர்.

ஒரு விண்கலம் தரையிறங்கும்போது செய்யப்படும் ஏற்பாடுகளைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு நுட்பமான ஏற்பாடுகளில் இறங்கினார் அற்புதர்.வரப்போகும் விருந்தினர் தங்கப் போகும் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமென்பதால் அதிசூட்சுமமான முறையில் அற்புதர் இயங்கினார்.விரியத் திறந்த வாசல்வழி அந்த விருந்தினர் வரவில்லை. உண்மையில் அவர் வெளியிலிருந்து உள்ளே வந்த விருந்தினரல்ல.உள்ளிருந்து வெளிப்பட்ட விந்தை விருந்தினர்.அவர் வெளிப்பட்ட வாசல்கள் ஒவ்வொன்றையும் பூட்டுவதே அவர் வருகையை உறுதி செய்கிற வரவேற்பு என்றார் அற்புதர்.அந்த வாசல்களுக்கான திறவுகோலாகவும் பூட்டாகவும் அற்புதரின் சக்திநிலையே செயல்பட்டது.

எழுநிலை மாடங்களில் ஏற்றிவைத்த உயிர்ச்சுடராய் வந்த விருந்தினர் நிலைகொண்டபோது விரைந்தோடிச் சென்று கட்டியணைத்து வரவேற்ற அற்புதர் செயலற்று விழுந்தார். விருந்தினருக்காக அற்புதர் முன்னரே வரையறுத்த உபசாரங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன.எழுபத்தியிரண்டு மணிநேரங்களில் முழு நலனுடன் மீண்டெழுந்தார் அற்புதர். பலர் சேர்ந்து தூக்கிச் சென்ற அற்புதர் பாதம் பதித்து நடந்து வந்து கொண்டிருந்தார்.

ஆனந்தக் கண்ணீருடன் தன்னைப் பணிந்தவர்களிடம் சொன்னார் அற்புதர்.”நான் நலமுடன் மீண்டது ஓரற்புதமென்றால் இங்கே நிகழ்ந்திருப்பது பேரற்புதம். சக்திநிலையின் உச்சமாய் இந்த சந்நிதிவடிவம் கொண்டுவிட்டது. எந்த உயிரிங்கே வந்து நின்றாலும் ஆன்மீகத்தின் விதையை விதைக்கும் கற்பக விருட்சம் இங்கே கோவில் கொண்டுள்ளது.

இங்கே நம்முடன் இருக்கும் விருந்தினரின் வடிவமே அகன்றாலும் அவரின் வீரியம் அகலாது.கோலம் மறைந்தாலும் காரியம் மறையாது.இந்த விருந்தினரின் விருந்தினர்கள் உலகம் முழுவதிலும்
இருந்து ஓடோடி வருவார்கள். இந்த விருந்தினருக்கு சடங்குகள் தேவையில்லை. சங்கீதம் தேவை.

நாளொன்றுக்கு இரண்டுமுறை நாமிங்கேஉணவுகொள்வோம். நாளுக்கு இரண்டுமுறை இவர் நாதத்தை உட்கொள்வார்.எப்போதும் ஈரமாய் இவர்பரப்பும் அதிர்வுகள் எல்லோருக்குள்ளும் தியானம் மலர்த்தும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் அதிர்வுகள் இவரிடம் புறப்படும்.

எல்லா நாட்களும் இவர்முன் அமர்ந்தால் தியானத்தின் ஆழம் புலப்படும்.இவர் இங்கே வந்திருக்கும் விருந்தினரல்ல. இந்தப் பிரபஞ்சத்தின் உரிமையாளர். நாம் வந்து வகுத்த இடம் இவருக்குப் பிடித்த இடம்.”

அற்புதர் சொன்னதன் அர்த்தமும் அடர்த்தியும் ஆண்டுகள் செல்லச் செல்ல அனைவருக்கும் புரிந்தது.புராதன் முறையில் உருவான வளாகத்தில் திடமான மௌனமாய் திசைகளை உலுக்கும்.
அமைதியாய் எழுநிலை மாடங்களிலும் எழுகின்ற ஒளியலைகளை வாரி இறைத்தவண்ணம் வீற்றிருந்தார் அவர்.உலகின் எந்த மூலைக்குச் செல்ல நேர்ந்தாலும் இருந்த இடங்களில் இருந்து இவரையே பார்த்திருந்தார் அற்புதர்.

உலகெங்கும் அற்புதர் உலாவந்தாலும் அற்புதரின் உலகமாய் அமைந்தது
அந்தக் கூடாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *