இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

கண்ணா என்றழைக்கின்ற நாவும்-அதில்
களிகொண்டு விளைகின்ற பாவும்
எண்ணாத விந்தையென யாரும்-தினம்
எண்ணியெண்ணிக் கொண்டாடும் சீரும் கொண்டு

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

குழந்தைக்கு நிகரான உள்ளம் -அதில்
குமுறிவரும் தமிழ்க்கவிதை வெள்ளம்
எழுந்தாலும் இருந்தாலும் அழகன்-என
எல்லோரும் கொண்டாடும் இணையில்லாக் கவிஞன்

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

திரையோடு தீராத அலைகள்-அவன்
மழைபோல பொழிகின்ற வரிகள்
முறையோடு தமிழ்கற்றதில்லை-ஒரு
முறைகூட அவன்தந்த தமிழ்தோற்றதில்லை

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

பிட்டுக்கு மண்சுமந்த சிவனும்-மழைக்

கொட்டுக்கு மலைசுமந்த ஹரியும்
மெட்டுக்கு இவன்தந்த வரியில்-மிக
மயக்கங்கள் உருவாகி வருவார்கள் புவியில்

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

ஐம்பத்து நான்கேதான் அகவை-அவன்
அழியாத புகழ்கொண்ட கவிதை
உம்பர்க்கும் கிட்டாத அமுதை-தன்
உயர்வான தமிழாக்கி பறந்திட்ட பறவை

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *