“அடிக்கடி கட்சி மாறுகிறீர்களே” என்று கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் கேட்டபோது, “நான் மாறவில்லை! என் தலைவர்கள் மாறுகிறார்கள்!” என்று சொன்னார். அவருடைய மற்ற அரசியல் அறிவிப்புகளைப்போலவே தமிழகம் இதையும் வேடிக்கையாக எடுத்துக் கொண்டதுதான் வருத்தமான விஷயம்.

தாங்கள் வகுத்த கொள்கைகளிலிருந்து தலைவர்களே முரண்படுகையில் அந்தத் தலைவர்களுடன் கவிஞர் முரண்பட்டார் என்பதுதான் அந்த வாக்குமூலத்தின் பொருள். கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட அரசியல் மதிப்பீடுகளும், மாற்றிக்கொண்ட நிலைப்பாடுகளும் அவசரப்பட்டு எடுத்த முடிவுகள்போல் தோன்றக் கூடும். உணர்ச்சி வேகம் உந்தித் தள்ளி ஒவ்வொரு முடிவையும் அவர் எடுத்தார் என்று கருதுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் தீர யோசித்தால் அறஞ்சார்ந்த ஆவேசமும், மிகக் கூர்மையான உள்ளுணர்வுகளுமே அவரை அத்தகைய அதிரடி முடிவுகளுக்கு ஆற்றுப்படுத்தின என்று தோன்றுகிறது.

இயக்கங்களின் கோட்பாடுகளுடன் அவர்கொண்ட மோதல் தத்துவ அடிப்படையில் மட்டுமின்றி தனிமனித அடிப்படையிலும் நிகழ்ந்தவை. தாங்கள் பேசிய தத்துவங்களுக்கு, தலைவர்களே உண்மையாக இல்லாதபோது அவர் அவர்களை நேர்படச் சாடினார்.  கவிஞரின் அரசியல் வாழ்க்கை  பற்றிய  வெள்ளைப்பதிவுகள் அவரது  கட்டுரைகளில்  பெருமளவு காணக்கிடைக்கின்றன. மனவாசம், வனவாசம், நான்கண்ட அரசியல்  தலைவர்கள் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

அவை ஓரளவு சமநிலையோடும் தர்க்கரீதியான பார்வையோடும் உருவானவை. ஆனால் அலைவீசும் உணர்ச்சி வேகத்தில் அவரது பொதுவாழ்க்கைப்பயணம் சுடச்சுடப் பதிவானதென்னவோ அவருடைய தனிக்கவிதைகளில்தான். அவரது கவிதைத் தொகுதிகளின் அடிப்படையில் பார்ப்பவர்களுக்கு, தத்துவங்களுக்கும் தலைவர்களுக்கும் நடுவே இருந்த முரண்பாடுகளே  கவிஞர்  கால்மாறி ஆடக்காரணம் என்பது தெரியும்.ஆம்.. அரசியல் அம்பலத்தில் கவிஞர் கால்மாறியவரே தவிர பால்மாறியவர் அல்லர்.

கவிஞரின் வாயில் விழுந்து புறப்பட்ட தலைவர்களை நாம் இவ்வாறு வகைப்படுத்திக் கொள்ளலாம். கவிஞரால் முதலில் இகழப்பட்டு, பிறகு புகழப்பட்டவர்கள் ஒருவகை. புகழப்பட்டு பின்னால் இகழப்பட்டவர்கள் இன்னொருவகை. வாழுங்காலம் முழுதும் இகழப்பட்டு மரணத்தின்போதுமட்டும் புகழப்பட்டவர் ஒருவர். கவிதைகளில் புகழ்மொழிகளுக்கு மட்டுமே ஆளானவர் ஒருவர். இதுதவிர  மாறிமாறி சிலரைச் சாடியும் பாராட்டியும் இருக்கிறார். அவர்கள் கவிஞருக்குத் தலைவர்களில்லை. சமகாலத் தோழர்கள்.

முதலில் இகழப்பட்டு பின்னால் புகழப்பட்டவர்,நேரு. தொடக்கத்தில் புகழப்பட்டு பிற்காலத்தில் இகழப்பட்டவர் அண்ணா.வாழும்போது மிகக் கடுமையாய் சாடப்பட்டு, அஞ்சலிக்  கவிதையில்  மட்டுமே  பாராட்டப்பட்டவர்   ராஜாஜி.  கவிதைகளைப் பொறுத்தவரை காமராஜர் பற்றிய புகழ்மொழிகளே பொங்கிப் பிரவகிக்கின்றன. ஆனால்பிற்காலத்தில் சில கட்டுரைகளில் கமராஜரை கவிஞர் விமர்சித்திருக்கிறார். அப்படி  விமர்சித்த இடங்களில் அண்ணாவுடன் ஒப்பிட்டு அண்ணாவின் உயர்குணங்களை  விவரித்திருக்கிறார்.தோழராக விளங்கிய ஈ.வெ.கி.சம்பத் சில கவியரங்கக கவிதைகளில் பாராட்டப்பட்டிருக்கிறார்.ஆனால் எந்த சம்பத்துக்காக அண்ணாவை விட்டு விலகினாரோ,அதே சம்பத்தின் பிற்கால நடவடிக்கைகளை மனவாசத்தில் குறிப்பிட்டு,” ஒருவகையில் சம்பத்தை விட அண்ணா உயர்ந்தவர்” என்று எழுதினார் கவிஞர்.

கலைஞர் அவரது சமகாலத்தோழர். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பாராட்டும் விமர்சனமும் கதம்பம் போலக் கலந்தே வருகின்றன. எம்.ஜி.ஆர்.பற்றிய விமர்சனங்கள் கட்டுரைகளிலும்,புனைகதைகளிலும் காணப்பட்டாலும் வாழ்வின் இறுதிக்காலங்களில் எம்.ஜி.ஆரைத் தனது கவிதைகளில் பலவாறு புகழ்கிறார். அதற்கான காரணத்தைத் தமிழகம் அறியும் இந்தப் பின்னணியில் கவிஞரின் கவிதைகளையும்,அவற்றில் ஏற்றியும் இறக்கியும் வைக்கப்படுகிற தலைவர்களையும் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.

தன்னுடைய அரசியல் வாழ்வை திராவிட இயக்கச்சார்போடு தொடங்கிய கவிஞர்,இந்தி எதிர்ப்புக்கவிதைகளில் சன்னதம் கொண்டு சுழன்றாடுகிறார்.  அப்போது அவர் சுழற்றுகிற சாட்டையில் நேருவும் தப்பவில்லை.
“லம்பாடி லம்பாடி லம்பாடிப்பேய்
 தொங்குமொழி ஓசையிலே பிறந்த பாடை(பாஷை)” என்று இந்தியைச் சொல்கிறார் கவிஞர். மேலே போடப்பட்ட கோட்டில் எழுதுகிற எழுத்துக்கள் காரணமாய் இந்தியைத் தொங்குமொழி என்றார் கவிஞர். கோட்டைப்பிடித்துத் தொங்குவதால் இந்தி அவர்   கண்களில்  குரங்காகவும்  தெரிகிறது
“பொன்வீட்டில் குரங்குமொழி-பிறந்த காலம்
புரியாத தமிழ்மொழியோ கொல்லைமேட்டில்
 கண்மூடு தமிழ்மகனே உறங்கு நன்றாய்
கழுத்தறுந்து சாகும்வரை திறக்க வேண்டாம்” என்று  எழுதிய கவிஞர்
பிற்காலத்தில் இந்தப் பார்வையை மாற்றிக் கொள்கிறார். நேரு  இந்தித் திணிப்பை முன்னெடுக்கிறார் என்றதும்“பாதக்குறடெடுத்து பண்டித நேருவை பன்னூறு அடி அடிப்போம்” என்று பாடினார் கவிஞர்.

அப்போது சென்னை வந்த நேருவுக்கு திராவிட இயக்கத்தினர் கறுப்புக்கொடி காட்டினார்கள். அந்த நேரத்தில் நேருவின் முகம் எப்படியிருந்தது என்று கவிஞர் எழுதுகிறார்.

“கருங்குதிரை முகமென்பேனா -சுட்ட
கத்திரிக்காய் முகமென்பேனா” என்று கேலி செய்கிறார்.நேரு என்னதான் ஆணழகனென்றாலும் வந்த இடத்தில் வராதே என்று சொலும்போது முகம் வாடும். கறுத்தும் போகும்.இதைத்தான் சொல்கிறார் கவிஞர்.

ஆனால் 1963 ல் நேரு சென்னை வரும்போது கவிஞர் தேசீய நிரோட்டத்தில் கலக்கிறார்.நேருவை வரவேற்று கவிதை எழுதி அதன்ஆங்கில மொழிபெயர்ப்பை நேருவின் கைகளிலேயே தரும்விதமாய் காட்சிகளை மாற்றுகிறது காலம்.
“எங்கள் தலைவனே!இதயமே வருக!
 இனிய புன்னகைக் கலைஞனே வருக!
 சங்கத் தமிழின் சாரமே வருக!
  தர்ம தேவனின் தூதனே வருக!
கங்கை வெள்ளமே கருணையே வருக!
காந்தி நாயகன் செல்வமே வருக!
சுட்ட போதிலும் மாற்று விடாததோர்
தூய தங்கமே!தாய்மையே வருக!
பூமி முற்றிலும் போர் மறுத்திடும்
புத்த தேவனின் தத்துவம் வருக!
கண்ணில் மணியெனக் காத்த கொள்கையை
மண்ணில் ஊன்றிய மன்னனே வருக!
நாக்கு நீண்டவர் தாக்கும் வேளையும்
போக்கு மாறிடாப் பொறுமையே வருக!”

என்ரெல்லாம் அந்தக் கவிதை நேருவின் பெருமையை நீட்டி முழக்கும் .அதன் மொழிபெயர்ப்பை நேருவிடம் தந்த போது நேரு அதைத்தன்  ஷெர்வானியில்  பத்திரப்படுத்திக் கொண்டார். அவர் கால்களைத் தொட்டு வணங்கினார் கவிஞர்.நேரு மறைந்தபின் அந்த அனுபவத்தை ஒரு கவியரங்கில் கவிஞர் குறிப்பிட்டார்:

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடிபோல் பாட்டுப்
 பாடிக் கொடுத்தேன்; பண்டிதனின் கால்தொட்டேன்-கன்னியரின்
தோள்தொட்ட போதும் தோன்றாத சுகம்,அன்னான்
கால்தொட்ட போது கண்டேன் களிகூர்ந்தேன்” என்று பரவசப்படுகிறார் இந்த ஆண் ஆண்டாள். நேருவுக்கு அவர் எழுதிய அஞ்சலிக் கவிதைகள், அமரத்துவம் வாய்ந்தவை.அவறைப் பின்னால் காண இருக்கிறோம்.

அண்ணா அவர்களின் உரைகளால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் ஈடுபட்டவர் கவிஞர். இன்னா நாற்பது ,இனியவை நாற்பது போல
“அண்ணா நாற்பது”பாடியவர் கவிஞர்.

 (அண்ணா, காமராஜர், கண்ணாதாசன்)

“முகம்பார்த்தே அகங்காணும் மூடாத விழிகள்

  முதலாளி கண்டஞ்சும் நிறங்கண்ட இதழ்கள்
 செகங்கண்டு சிலிர்ப்பேறும் சீரான கைகள்
 தென்னாட்டின் அன்பெல்லாம் துயில்கொள்ளும் நெற்றி
அகம்பற்றி உரைத்தற்கோர் அழகான வார்த்தை
அய்யய்யோ உலகத்தில் இனுந்தோன்றவில்லை
யுகந்தேய்ந்து போனாலும் பெயர்நிற்குமென்றால்
ஒருவர்க்கே அண்ணாவென் றுரைநாற்பதென்ப” என்று பாடினார்.இராமனின் அழகைப்பாட வார்த்தை கிடைக்காத கம்பன் “அய்யோ” என்றான்.கவிஞர் “அய்யய்யோ’என்கிறார்.
 “செம்பொன் மணியாரத்தொடு செல்வம் பலதரலாம்
 தம்பிப்படை யாவும்பல தங்கத் திரள்தரலாம்
 நம்பித்தமிழ் முறைபாடிடும் நலமேநிறை அண்ணன்
 தெம்புக்கது குறைவே அவர் திறனுக்கது சிறிதே” என்றும் பாடினார் கவிஞர்.
அண்ணாவின் சொல்வன்மை,மாற்றுக் கருத்துடையவரையும் பிணிக்க வல்லது. இதைச் சொல்ல ஓர் அருமையான உத்தியைக் கைக்கொள்கிறார் கவிஞர்.பகுத்தரிவு இயக்கத்தால் கடும் சாடலுக்குள்ளான இரண்டு
பிராமணர்கள் அண்ணாவின் பேச்சு பற்றிப் பேசிக்கொள்கிறார்களாம்:

“சாஸ்திரிவாள்!தெரியுமோ?சூத்திரன்தான்
  தமிழினிலே அழகாகப் பேசுகிறான் ஓய்
 நாஸ்திகந்தான் பேசுகிறான் என்றாலும் ஓய்
 நன்னாவே பேசுகிறான்!என்னங்காணும்..
 ஆஸ்திகத்தை அவன்தாக்கும்முறையைப்பார்த்தால்
ஆபத்து தான்காணும் எதிர்காலத்தில்
  வாஸ்தவத்தில் அவன்நல்ல மூளைக்காரன்
  மகதேவன் அவதாரம் என்பார் ஐயர்!”

 (கண்ணதாசன் ஈ.வெ.கி.சம்பத்துடன்)

இப்படி ஆராதிக்கப்பட்ட அண்ணாவை, கடுமையாக  சாடி  பின்னாளில்  கவிதை  படைக்கிறார் கவிஞர்.ஈ.வெ.கி.சம்பத்துடன் இணைந்து  தி.மு.க.விலிருந்து  வெளியேறுகிறார் கவிஞர்.திராவிட நாடு கொள்கையை அண்ணா  கைவிட்டதும் அதைக் கிண்டல் செய்து ஊரூராய்  கவியரங்கம்  நடத்தினார். இதைத்தான் நாங்கள் முன்பே சொன்னோம் என்று ஏகடியம் பேசினார்.”திண்ணையிலே படுத்தாவது திராவிடம் காண்பேனே தாவிர கண்ணதாசன்,சம்பத்தைப்போல் விலகிச்செல்ல மாட்டேன் என்று அண்ணா முன்பு சொன்னார்.அதை நினைவுபடுத்தி..

“சொன்னோம் ஒருநாள்!தூயவரே;அண்ணாவே:
எந்நாள் பிறந்தாலும் இன்பத் திராவிடத்தின்
பொன்னாள் பிறக்காது!பொழுதென்றும் விடியாது!
செத்த பிணத்தைச் சிரந்தூக்கி வலம்வருதல்
 புத்தியுள்ளார் செய்கையல்ல;புதைத்துக் குடமுடைப்போம்
சக்தியுளமட்டும் ஜனநாயக வழியில்
பக்தியுடன் செல்வோம் பாராளும் நிலைபெறுவோம்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
செந்தமிழும் சேர்ந்து திராவிட நாடாவதென்றால்
பட்டப் பகலில் படுத்துறங்குவோன் காணும்
வெட்டிக் கனவு!விட்டுவிட்டு வாருமென்றோம்
முக்கண்ணன் போல முகத்திலொரு கண்திறந்து
அக்கண்ணன் தம்பியரின் அறிவுக்கோர் அண்ணனவன்
திக்கெட்டும் நடுநடுங்க தீயோய் சிறுமதியோய்
திண்ணையிலே காண்பேன் திராவிடநாடென்றானே!
திண்ணையிலே காண்பதற்கு திராவிட நாடென்பதென்ன
தொன்னையிலே நெய்யா?சோற்றுப்புளிக்குழம்பா?
போட்டுப் புரட்டிப் பொழுதை செலவழிக்கும் 
சீட்டு விளையாட்டா சிறுபிள்ளைத் தனமில்லையா.. “

இது, பானை பானையாய் கவிஞர் வடித்த பகடிச்சோற்றின் சில பருக்கைகள் மட்டுமே!! ஆனால் அண்ணா மீது அவருக்கு அந்தரங்கத்தில் தனியான பாசமும், அவரது மேடைத்தமிழில் ஒரு மயக்கமும் கடைசிவரை இருந்தது. காங்கிரஸில் சேர்ந்த பிறகு, 1964ல் அழகப்பா கல்லூரியில் “மறுமலர்ச்சி’ என்றொரு கவியரங்கில் தலைமையேற்றுப் பாடினார் கவிஞர். எவையெல்லாம் மறுமலர்ச்சி என்று பட்டியலிட்டுவிட்டு

“தண்ணார்ந்த பூந்தமிழை மேடைக்கே தந்தவர்யார்?
 அண்ணாதுரை என்றால் அணுவளவும் குற்றமில்லை!
 தட்டுகிறான் தம்பி,அவர் தலைவரென நான்நம்பி
வளர்ந்திருந்த காலத்தை மறக்கவில்லை பாடிவிட்டேன்”  என்று குறிப்பிட்டார்

தமிழ்த்தேசியக்கட்சியை ஈ.வெ.கி.சம்பத்துடன் இணைந்து உருவாக்கியவர்களில்  கவிஞரும் ஒருவர்.திராவிட முன்னேற்றக் கழகத்தைப்
பார்த்து, “தடை எங்கே படை இங்கே இன்று கேட்ட
               தானையிளந் தலைவர்களே நானுரைப்பேன்
                தடை இங்கே படை எங்கே தலைவரெங்கே
                தமிழ்ச்சேனை வெள்ளத்தின் தன்மை எங்கே?
                தொடையின்று நடுங்குவதேன்”        

என்றெல்லாம் எக்காளமிட்டார்.தமிழ்த்தேசியக் கட்சி செம்மையும் நீலமும் கலந்த கொடியொன்றினைக் கொண்டிருந்தது. நிலம் சிவப்பு, கடல்நீலம் என்று அதற்கும் ஒரு விளக்கக் கவிதை எழுதினார் கவிஞர்.தமிழன் மண்ணை செம்மையாக்கினான்.நாவாயேறிக் கடலில் நான்கு திசைகளும் போனான் என்பது கவிஞர் தந்த விளக்கம்.கட்சியின் விளக்கமும் அதுதானா என்று தெரியவில்லை. காலப்போக்கில் கட்சி தடுமாறியது.காங்கிரஸில் இணைந்தது.அங்கே போய்ச் சேர்ந்தபோது கவிஞரின் கவிதைகளுக்குக் கிடைத்த காவிய நாயகனே…காமராஜர்!!

(தொடரும்)

Comments

  1. If it is not too much to ask, can you also provide the name of the books (non-cinema poems) in the footnote, you refer for your articles?

    Thank you very much.
    Rajesh

  2. அன்புள்ள திரு.ராஜேஷ்
    கண்ணதாசன் கவிதைகள் என்னும் பெயரில் ஏழு தொகுதிகள் உள்ளன.வானதி பதிப்பகம் வெலியிட்டுள்ளது.
    பிற நூல்கள் பற்றி எழுதுகையில் தலைப்புகளையும் தருவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *