ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள்.எ ழுதிய கையும் அப்படித்தான். விளம்பர எழுத்தாளராய் வாழ்வை நடத்துவது ஒருவகையில் சுகமானது. ஒற்றைப்பொறி தட்டி ஒரு கருத்துரு தோன்றிவிட்டால் நல்ல பணம். சிரமமில்லாத வேலை. பிடி கிடைக்கும் வரை பிடிவாதமாக இருந்துவிட்டால் நிலைகொண்டுவிடலாம். இந்த நம்பிக்கை ஆழமாக இருந்தது. உள்ளூர் விளம்பர நிறுவனங்களில் நல்ல தொடர்பும் இருந்ததால் சமாளித்துவிடலாம் என்று தோன்றியது.

அந்தப் பருவத்தில் சம்பாதித்து வீட்டுக்குப் பணம் தர வேண்டிய அவசியமில்லை.எனவே சுதந்திரமாய் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள முடிந்தது.செய்து கொண்டிருக்கும் ஃப்ரீலான்ஸ் வேலைகளை தீவிரப்படுத்த முடிவெடுத்தேன். இதற்கிடையில் சென்னை சென்றபோது மா போஸேல் நிறுவனத்துக்கு எழுதிக் கொடுத்த விளம்பரம் அங்கீகரிக்கப்பட்டு பணம் வந்தது. “ஏதேனும் கேம்பெய்ன் ஒப்பந்தங்கள் வந்தால் அழைக்கிறோம். ஃப்ரீலான்ஸ் முறையில் வந்து எழுதிக் கொடுங்கள்” என்றார் பிரசாத். ஆனால் நான் பெரிதும் கேள்விப்பட்டிருந்த விளம்பர நிபுணரான திரு.கணேஷ் பாலிகாவை சந்திக்க முடியாத ஏக்கம் என் மனதில் இருந்தது. சென்னை மா போஸேலின் ஆளுமை மிக்க தலைவராய் அவர் அப்போது இருந்தார்.

கோவையில் மா போஸேல் மேலாளரான ராமகிருஷ்ணன்,ப்ரோஃப் அட்ஸ் மேலாளரான சீனிவாசன் ஆகியோர் தங்கள் ரீடெய்னர் ஒப்பந்தங்களை மீண்டும் உறுதி செய்திருந்தார்கள். எப்போதும் இருந்த வாசிப்பு, இந்தக் கால கட்டத்தில் உறுதிப்பட்டது.

பெரும்பாலான கேம்பெய்ன்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு தமிழ்ப்படுத்தப்படும். தேசிய அளவிலான கேம்பெய்ன்கள் என்பதால் இந்த அணுகுமுறை.அப்போதுதான் கோவையில் ஷோபிகா என்ற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம் ஒன்று துவக்கப்பட்டது. ஆடைகள் மட்டுமின்றி, பெண்களின் பயன்பாட்டுக்கான அனைத்துப் பொருட்களும் அங்கே இருந்தன. அதற்கு ஆங்கிலத்தில் Shobika-Exclusive women`s store என்னும் வாக்கியத்தை உறுதி செய்திருந்தார்கள். இதற்கு positioning statement என்று சொல்வார்கள்.அதேபோல, Everything her heart desires என்பது ஆங்கிலத்தில் தரப்பட்டிருந்த பேஸ்லைன். இரண்டுக்கும் தமிழில் நான் தந்த வாசகங்கள் நேரடி மொழிபெயர்ப்பாக இல்லாமல் டிரான்ஸ் கிரியேஷன் ஆக அமைந்தன.

Exclusive women`s store என்ற வாசகத்துக்கு, “இது பெண்களின் தனி உலகம்”என்றும்  Everything her heart desires என்ற வாசகத்துக்கு,”வஞ்சியரின் நெஞ்சம்போல்”என்றும் தந்திருந்தேன். இந்த இரண்டு வாசகங்களுமே ஷோபிகா உரிமையாளர் திரு.சௌகத் அலியின் பெரும் வரவேற்பைப் பெற்றன. பெண்கள்-மகளிர் என்ற வழக்கமான சொற்களுக்கு மாற்றாக வேறு சொற்களை விளம்பரங்களில் பயன்படுத்த நான் கொஞ்சம் யோசிப்பதுண்டு. சசியில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட அனுபவம் ஒன்றுதான் அதற்குக் காரணம்.

சக்தி குழு நிறுவனங்களின் அங்கமான சக்தி சோயாஸ் லிமிடெட் சார்பாக சக்தி விகர் என்ற சோயா மாவு அறிமுகப்படுத்தப்பட்டது. யார் யாருக்கெல்லாம் அது பயன்படும் என்று தனித்தனி விளம்பரங்களில் விவரிப்பது என்று முடிவானது. கொட்டை எழுத்துக்களில் மேலிருந்து கீழாக ஒரே வரியும் தயாரிப்பின் படமும் இடம்பெறும் விதமாக விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதற்கு Strip ad என்று பெயர். இதில்,கர்ப்பிணிப்பெண்களுக்கு ஊட்டம் கொடுப்பது சக்தி விகர் என்பதால்,”தாய்மை நிலையிலுள்ள பாவையருக்கு உடல்நலம் தரும் ஓர் உன்னத வரம்” என்றொரு வரி இடம் பெற்றிருந்தது.

அந்த விளம்பரம் வெளிவந்து சிலநாட்களில் சக்தி சோயாஸ் அலுவலகத்துக்கு வந்த கடிதம் ஒன்றை சசி விளம்பர நிறுவனத்துக்கு அனுப்பியிருந்தார்கள். “தமிழிலக்கியத்தில் பாவை என்பது பொம்மைகளையும் குறிக்கும். பெண்மையை பொம்மைபோல் வைத்திருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை இந்த விளம்பரம் ஏற்படுத்திவிடக்கூடும்.எனவே மகப்பேறு நிலையிலுள்ள மகளிர் என்று விளம்பரம் செய்தால் தங்கள் தயாரிப்பை பெண்டிர் உகப்பர்” என்று  செந்தமிழில் ஒரு பெண்மணி எழுதியிருந்தார்.அந்தக் கடிதத்தில் இருந்த கையொப்பம் கிறுக்கலாக இருந்தது. எனினும் அதைவைத்து இன்னாராகத்தான் இருக்குமென்று யூகித்தேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு சக்தி சோயாஸில் இருந்து அழைப்பு.மார்க்கெட்டிங் மேலாளர் திரு.கிருஷ்ண மேனன் அழைத்தார். கடிதம் எழுதியஅந்தப் பெண்மணி அலுவலகம் வந்திருப்பதாகவும், மேலும் சில ஆலோசனைகள் சொல்ல விரும்புவதால் சில நிமிடங்கள் வந்து போக முடியுமா என்று கேட்டார்கள். சசியிலிருந்து சில நிமிடங்கள் தொலைவில்தான் பந்தயச் சாலையில் உள்ள சக்தி அலுவலகம்.(அந்த இடத்தை 1972ல் 2 இலட்சம் ரூபாய்களுக்கு இலட்சுமி மில்ஸ் அதிபர் திரு.ஜி.கே.சுந்தரம் அவர்களிடம் வாங்கியதாக சமீபத்தில் அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்கள் என்னிடம் சொன்னார்)

சென்று பார்த்தபின் என் யூகம் சரிதான் என்று தெரிந்தது. அந்தக் கடிதத்தை எழுதியவர் கவிஞர் ரோகிணி.”தேன்முள்ளுகள்” என்னும் தொகுப்பின் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டவர். கவிஞர் சேவற்கொடியோனுடன் இணைந்து ,”பர்ணசாலை மான்கள்”என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டவர்.முற்போக்குச் சிந்தனையாளராக அறியப்பட்டவர்.ஒரு கவியரங்கிற்கு கவிஞர் ரோகிணி தலைமை தாங்கினார்.காதல் என்ற தலைப்பில் பாடிய அன்பு என்ற கவிஞர்,  அரங்கத் தலைவர் வணக்கம் பாடிய போது “என்னால் உன்னைக் காதலிக்க முடியவில்லை” என்று குறும்பாகக் குறிப்பிட்டார். அதற்கு கவிஞர் ரோகிணி, “நீ என்னைக் காதலிக்க வேண்டாம்-கிழவியைக் காதலி- தமிழ்க் கிழவியைக் காதலி” என்றார்.

கவிஞர் ரோகிணியை சக்தி சோயாஸில் பார்த்தபோது இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் அப்போது அவர் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தார்.ஆன்மீகத் தேடலில் காவியணிந்து கழுத்தில் ருத்திராட்ச மாலையுடன் காட்சியளித்தார். என்னை அவருக்கு அடையாளம் தெரிந்தது. “பெண்ணை பாவை என்று சொல்வதில்  பொம்மை என்ற பொருளும் இருப்பது உங்களுக்கு தெரியுமே தம்பி”  என்றார்.

அவருடன் விவாதிக்க விருப்பமில்லாமல் பிரியமாகப் பழைய கதைகளைப் பேசிக்கொண்டு விடைபெற்று வந்தேன். ஷோபிகா விளம்பரத்தில் “வஞ்சியரின் நெஞ்சம்போல் “என்றெழுதியதற்கு யாராவது கண்டனம் தெரிவித்துக் கடிதம் எழுதுவார்களோ என்று எண்ணினேன். நான் எதிர்பார்த்த அந்தக் கடிதத்தை யாருமே எழுதவில்லை. ஆனால்,நான் சற்றும் எதிர்பாராத ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தவர்….. கணேஷ் பாலிகா!!

(தொடரும்)

Comments

  1. நுனிய‌ம‌ர்வே இப்ப‌திவின் இறுதியிலும்… சுவை குன்றாம‌ல் செல்லும் எழுத்தோட்ட‌ம் அழ‌கு.

  2. உடன் எழுதத் தூண்டும் உற்சாகமான
    பின்னூட்டங்களுக்கு நன்றி நிலாமகள்

  3. ஏக்தம்மில் 4 பாகங்களையும் படித்து முடித்தேன். வாசிக்க உற்சாகமாக இருந்தது. வளரும் காப்பி ரைட்டராக பலவற்றை உள்வாங்கிக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *