இந்தக் கேள்வி திருவில்லிப்புதூரில் கூடியிருந்த எல்லோருக்கும் ஒருநாள்
எழுந்தது. அப்போது வைகோ சிவகாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.
திருவில்லிப்புதூர் திருமால் திருக்கோவில் குடமுழுக்கு (சம்ப்ரோக்ஷணம்)
விழாவுக்காக,வருகை தந்திருந்தார் வைகோ. அவருடைய தோள்களைத் தழுவிக் கொண்டு முழங்கால் தொட நீளும் கறுப்புத் துண்டைக்
காணவில்லை . அனைவரும் அவரை வரவேற்று உள்ளே அழைத்துப்
போயினர்.

பிறகு நண்பர்கள் கேட்டபோது வைகோ விளக்கமளித்திருக்கிறார்.
“ஆலயங்களுக்குள் நுழையும்போது ஆன்மீகவாதிகள் தோளில் இருக்கும்
அங்கவஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டுதான் உள்ளே செல்வார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் அவர்கள் நம்பிக்கையை நான் புண்படுத்தக் கூடாது.
நான் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு போகவும் முடியாது. எனவே துண்டு போடாமலே வந்தேன் ” என்றாராம் வைகோ.

“நாடாளுமன்றத்தில் வைகோ”என்னுந் தலைப்பில் திரு.மு.செந்திலதிபன்
தொகுத்துள்ள  புத்தகத்தில் இந்தத் தகவலைப் படித்தேன். அப்போது
குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமனின் நினைவு வந்தது, அவர்
பழுத்த ஆத்திகர். தில்லைத் திருக்கோவிலுக்கு தரிசனத்துக்கு வந்தார். அப்போது அவர் குடியரசுத் தலைவர். பொன்னம்பலப் படிக்கட்டுகளில் ஏறி
தரிசனம் செய்ய வேண்டுமென்றால் சட்டை அணியக் கூடாது என்பது விதி.
அதை சட்டை செய்யாமல் ஆர்.வெங்கட்ராமன் படிகளில் ஏற முற்பட்டபோது தீட்சிதர்கள் பணிவோடு நினைவுபடுத்தியிருக்கிறார்கள்,

சற்றே தயங்கிய வெங்கட்ராமன் மேல்சட்டை கழற்ற மனமின்றி கீழே
இறங்கிப் போய்விட்டாராம்.இரண்டு பேர்களில் யார் பக்கம் இறைவன்
இருப்பான் என்ற யோசனையுடன்  சற்றே கண்ணயர்ந்தேன். கனவில்
கடவுளின் குரல்கேட்டதுபோல் இருந்தது…..”இறங்கிப் போன ஆத்திகனை
விட இங்கிதம் தெரிந்த நாத்திகனே மேலானவன்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *