மாய்மாலக் கண்ணன்

கண்ணனின் குணங்களாக அறியப்பட்டவற்றில் முக்கியமானது, அவன் கைக்கொண்ட வழிமுறைகள். பாரத யுத்தத்தில் ஆயுதமெடுக்க மாட்டேனென்று சத்தியம் செய்தவன், ஒரு காலகட்டத்தில் சக்கரத்தை ஏந்துகிறான்.

நேரிய வழியில் கண்ணன் பகைவர்களை வென்றிருக்கலாமே என்கிற கேள்வியும் ஓஷோவிடம் கேட்கப்படுகிறது. ஆன்மீகத் தெளிவின் உச்சமாகிய கண்ணன், அரசியல் சூழ்ச்சிகளுக்குத் துணைபோனது குறித்து சீடர் எழுப்புகிற சந்தேகத்துக்கு ஓஷோ விடையளிக்கிறார்.

“ஆன்மீகம் வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் பிரதிபலிக்கக் கூடிய தன்மை. மதம் அப்படியல்ல. அரசியல், பொருளாதாரம் போல் அதுவும் ஒரு துறை மட்டும்தான். அரசியலில் பங்கெடுப்பது பற்றி ஒரு மதவாதிக்குத் தடையிருக்கலாம். ஓர் ஆன்மீகவாதி அது குறித்து அஞ்சுவதில்லை. வாழ்வை எந்த நிபந்தனையுமின்றி ஏற்கிறவனால் அரசியலை அதன் அத்தனை இயல்புகளோடும் ஏற்க முடியும்.

கண்ணன் கைக்கொண்ட சூழ்ச்சிகள் நியாயப்படுத்தப்படக் கூடியவை அல்ல. ஆனால் அவையெல்லாம் வாழ்வியல் யதார்த்தங்கள். நன்மைக்கும் தீமைக்கும் தேர்வு என்பது வெறும் சித்தாந்தம்தான். நடைமுறையிலோ அது பெரிய தீமைக்கும் சிறிய தீமைக்கும் நடுவிலான தேர்வுதான்.

கண்ணன் செய்தது சரியா தவறா என்பதல்ல வாதம். அவன் செய்ததை செய்யாமல் விட்டிருந்தால் நன்மை விளைந்திருக்குமா தீமை விளைந்திருக்குமா என்று பார்த்தாலே போதும். நிச்சயமாகத் தீமைதான் விளைந்திருக்கும்.

விநாடிக்கு விநாடி வாழ்கிற ஒருவன், முன்பு செய்து தந்த சத்தியத்தை எப்போதும் பற்றிக் கொண்டிருக்க முடியாதென்று உணர்கிறான். எனவே அவனைப் பொறுத்தவரை அது உறுதிமொழி மீறல் இல்லை. அதற்காக அவன் வருந்துவதில்லை. சொல்லப்போனால் ஒவ்வொரு விநாடிக்கும் அவன் உண்மையாக இருக்கிறான்” என்கிறார் ஓஷோ.

“Krishna does not apologise for the so called breach of promise, nor does he regret it. He is so true to the existing moment”

இதை பாரதியும் ஒப்புக் கொள்கிறான்.

“உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடுவான் – அருள்
வண்மையினால், அவன் மாத்திரம், பொய்கள்
மலை மலையாய் உரைப்பான்”.

இதில் கண்ணன் பொய்களுக்குக் காரணம், அவனுடைய அருள் வள்ளன்மை என்கிறான் பாரதி.

“பொய்யை உருவமெனக் கொண்டவன் என்றே – கிழப்
பொன்னி உரைத்ததுண்டு தங்கமே தங்கம் என்று பாடுகிற காதலி, கண்ணனை விடுதலறியர் விருப்பினளாகத்தான் இருக்கிறாள்.

கண்ணனின் இந்தப் பன்முகத்தன்மையைப் புரிந்து கொள்கிற போது, அந்தப் பொய்யும் போக்கும் உலகின் பகுதி என்பது புலனாகிறது. அது மட்டுமா? உலகில் நிகழும் அது போன்ற நிகழ்வுகள்கூட கண்ணன் என்கிற கடவுளின் உருவாக்கம்தான் என்கிறார் பாரதி.

கோத்த பொய் வேதங்களும் – மதக்
கொலைகளும், அரசர்தம் கூத்துக்களும்
மூத்தவர் பொய்ந்நடையும் – இள
மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்”
என்கிறான் பாரதி. (கண்ணன் என் தாய்)

கண்ணன் இத்தனை தீமைகளையும் இங்கே படைத்தது, பயன்படுத்துவதற்கா என்றால் இல்லை. “பார்த்துச் சிரிப்பதற்கு” என்கிறான் பாரதி.

“மீத்திடும் பொழுதினிலே – நான்
வேடிக்கை உறக்கண்டு நகைப்பதற்கே” என்று தெளிவுபடுத்துகிறான்.

வருகிற காலங்களில், எண்ணங்களுக்குத் திரைபோடுவதும், மன ஓட்டங்களைத் தடை செய்வதுமே வாழ்க்கை என்று கருதப்படுகிற சூழலில் கண்ணனின் இன்றியமையாமை பெரிதும் உணரப்படும் என்கிறார் ஓஷோ. கண்ணனை எதிர் காலத்துக்கான கடவுள் என்று இதனால்தான் அவர் குறிப்பிடுகிறார்.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *