கீதோபதேசம் கர்மயோகத்தை, தான் முதலில் சூரியனுக்குச் சொன்னதாகவும், சூரியன் மனுவிற்குச் சொன்னதாகவும், மனு, அதனைத் தன் புதல்வனும் சூரிய குலத்தின் முதல் அரசனுமாகிய இகஷ்வாகுவுக்குச் சொன்னதாகவும், இப்படியாக ராஜரிஷிகள் பரம்பரை பரம்பரையாய் கர்மயோகத்தை அறிந்ததாகவும் கண்ணன் சொல்கிறான்.

உடனே அர்ச்சுனன் குறுக்கிட்டு, “சூரியன், சிருஷ்டியின் துவக்கத்திலிருந்து இருப்பவர். நீங்களோ இப்போது பிறந்தவர். நீங்கள் எப்படி கர்மயோகத்தை சூரியனுக்கு சொல்லியிருக்க முடியும்?” என்று கேட்கிறான்.

அதற்குப் பிறகுதான், கண்ணன், தான் பிறப்பும் இறப்பும் அற்ற ஈசுவரன் என்றும், நல்லவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் தான் யுகந்தோறும் யுகந்தோறும் அவதரிப்பதாகவும் தன்னைத் தானே அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் வருகிறது. (ஞானகர்ம ஸந்யாஸயோகம்-1-8-சுலோகங்கள்)

கண்ணனுடன் தனக்கிருந்த நெருக்கமே கண்ணனை, முழுவதும் அறிந்து கொள்ள முடியாமல் அர்ச்சுனனைத் தடுத்தது. கீதையின் பத்து அத்தியாயங்கள் வரையிலும் இந்த நிலை மாறவில்லை. பிறகு தான் அர்ச்சுனனுக்கு விசுவரூப தரிசனம் கொடுத்து, அதைக் காண்பதற்கான ஞானக் கண்ணையும் கண்ணன் தருகிறான்.

விசுவரூப தரிசனத்தைக் கண்டபிறகுதான் அர்ச்சுனன் தன் அறியாமைக்காக வருந்துகிறான். தானும் தன் சகோதரர்களும் கண்ணனை ஒரு தோழனென்று மட்டும் கருதி, ஒருமையில் அழைத்து வந்ததற்காகவும் கேலிச் சொற்கள் கூறியமைக்காகவும் வருந்தி வருந்தி மன்னிப்புக் கேட்கிறான். (விசுவரூப தரிசன யோகம் 41-42 சுலோகங்கள்)

இதற்குப் பிறகுதான் முக்கியமானதொரு பிரார்த்தனையையும் அவன் சமர்ப்பிக்கிறான்.

மிகச் சாதாரணமான நண்பன் போல் தோற்றமளித்து, தன்னிடம் இறைவன் அன்பு பாராட்டிய நன்றியுணர்வில் கரைந்து போகிறான் அர்ச்சுனன். தனக்கு எல்லாமாக இருந்து, தன்னைப் பொறுத்தருள் வேண்டும் என்று பிரார்த்திக்கிறான்.

“தேவா! நான் விழுந்து வணங்கத்தக்க ஈசனாகிய தங்களின் அருளை வேண்டுகிறேன். மைந்தனுக்குத் தந்தை போன்றும், காதலிக்குக் காதலன் போன்றும் பொறுத்தருளக் கடவீர்”. (விசுவரூப தரிசனயோகம் – 44வது சுலோகம்).

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரஸாதயே தவாமறஹமீ சமீட்யம்
பிதேவ புத்ரஸ்ய, ஸகேவ ஸக்யு;
ப்ரிய; ப்ரியாயார்ஹஸி, தேவஸோடும்”

பகவத்கீதையில், அர்ச்சுனனின் குரலாக ஒலிக்கிற இந்த சுலோகம் தான், பாரதியின் மனதில் கண்ணன் பாட்டுக்கான விதையாக விழுந்திருக்க வேண்டும். பாட்டுக்கான விதையாக விழுந்திருக்க வேண்டும். தன்னையே உணர்ந்து கொள்ளத் தனக்கு உதவியதோடு விசுவரூப தரிசனமும் வழங்கிய கண்ணன் மீது அர்ச்சுனனுக்குத் தோன்றிய அதீதமான நன்றியுணர்வு, கண்ணன்பாட்டு முழுவதிலும் எதிரொலிப்பதைக் காணமுடிகிறது.

தந்தையாக&தாயாக-சேவனாக-சத்குருவாக-அரசனாக-காதலனாக-காதலியாக கண்ணனை வரித்துப் பாடுகிற பாரதிக்கு இந்த ‘அர்ச்சுன அனுபவம்’ பெரியதொரு தாக்கமாய் அமைந்திருக்க வேண்டும். பகவத்கீதைக்கு உரையெழுதியவனாயிற்றே பாரதி.

“அர்ச்சுனனுக்கும் கண்ணனுக்குமான உறவு குறித்து ஓஷோ சொல்வதையும் இங்கே நாம் சேர்த்துச் சிந்திக்க வேண்டும். கண்ணன் அர்ச்சுனனுக்கு வெறும் நண்பனாக மட்டும் இருந்தால் அந்த உறவில் பயனில்லை. கடவுளாகக் காட்சி தந்தால் அர்ச்சுனன் அஞ்சி ஓடிவிடக் கூடும். அர்ச்சுனனுக்கு நண்பனாய் இருந்து கொண்டே கண்ணன் தன் கடவுட் தன்மையை வெளிப்படுத்தினான்” என்கிறார் ஓஷோ.

Krishna will be of no use to Arjuna if he remains only his friend, but if he reveals his godliness indiscriminately, Arjuna may be so frightened that he runs away. Which he continues to be Arjuna’s friend, he also declares his godliness from time to time. (639)

கண்ணனின் இந்தப் பரிவு காரணமாய் அர்ச்சுனன் மனதில் எழுந்த நன்றியுணர்வு, கண்ணன் தன் தோழன் என்கிற பெருமிதத்தையும், அவனது அளப்பரிய கருணை தந்த பரவசத்தையும் ஒருசேர எழுப்புகிறது. கண்ணன் பாட்டு முழுவதிலும் ஒரு விதமான நன்றியுணர்வு அடிநாதமாய் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. பகவத்கீதையின் விசுவரூப தரிசன யோகத்தின் 44வது சுலோகத்தின் விரிவு என்று கண்ணன் பாட்டைக் கருத இடமிருக்கிறது.

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *