எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…

அன்று இரவே பாஸ்போர்ட் விஷயமாக சென்னைக்குப் புறப்பட்டேன்.

எனக்கு அமெரிக்க விசா அங்கீகரிக்கப்பட்டு, தூதரகத்தில் இருப்பதையும் புதிய பாஸ்போர்ட் கிடைத்தால் மறுபடி எழுதிப் போட்டு வாங்க வேண்டும் என்றும் பாஸ்போர்ட் அலுவலர்களுக்கு விளக்கினேன். அரைமனதோடு புன்னகைத்து விட்டு “மூன்று மாதங்களில் கிடைத்துவிடும்” என்றார்கள்.

அப்புறம் “தத்கால்” உள்ளிட்ட குட்டிக் காரணங்களையெல்லாம் அடித்துப் பத்து நாட்களில் பாஸ்போர்ட் வந்துவிட்டது. “உறியில் இருக்கு வெண்ணை எடுத்துக் கொடுங்க அண்ணே” என்று காலில்லாதவன் கேட்ட கதையாக தூதரகத்திற்கும் பாஸ்போர்ட்டை அனுப்பி, விசா வருமென்று காத்திருந்தோம். 26ம் தேதி வரை பதுங்கு குழியில் இருந்த சதாம் உசேன் மாதிரி சத்தத்தையே காணவில்லை.

இதற்கிடையே அமெரிக்காவுக்கு என்னுடன் வருவதாயிருந்த இன்னும் சிலருக்கு விசா நிராகரிக்கப்பட்ட தகவல் வந்தது. எங்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த நிறுவனத்தின் சென்னை மேலாளர் கிருபாகரன் பதறிப் போய் விட்டார்.

யார் மூலம் விசாவை விரைவாக வாங்கலாம் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோது “கிருபாகரன்! ஒரு யோசனை” என்றேன். “என்ன? என்ன?” என்று பரபரப்பானார் அவர். “இங்கே பாருங்க! விசா வரும்ங்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. பேசாம உங்க கெஸ்ட் ஹவுஸ்லேயே நான் ஒரு வாரம் இருக்கேன். அட்லஸ் வாங்கிக் குடுத்துடுங்க. “நான் கண்ட அமெரிக்கா”ன்னு ஒரு புஸ்தகம் எழுதீட்டு கோயமுத்தூர் போயிடறேன்” என்றேன்.

சிரிக்கவும் முடியாமல் முறைக்கவும் முடியாமல் விலகிப் போய்விட்டார் அவர். இதையெல்லாம் நினைத்துப் பார்த்து நான் சிரித்துக் கொண்டது எப்போது தெரியுமா? இருபத்தொன்பதாம் தேதி நள்ளிரவு பேராசிரியர் ஞானசம்பந்தனும் நானும் அமெரிக்காவுக்கு விமானம் ஏறிய போது.

ஆமாம்! 27ம் தேதி விசா வந்தே விட்டது. அநேகமாகப் பேராசிரியர் ஞானசம்பந்தனை வழியனுப்பத்தான் போக வேண்டியிருக்கும் என்று நினைத்தால் பலருக்கும் என் பயணம் குறித்துத் தெரிவிக்கவேயில்லை. சொல்லாமல் போவது தானே நல்ல பிள்ளைக்கு அடையாளம்.

லுஃப்த்தான்ஸா விமானத்தில் நள்ளிரவு நேரத்தில் ஆய்த எழுத்து படம் பார்த்துக் கொண்டே பறக்கத் தொடங்கினோம். “தூங்காதீங்க! தூங்கீட்டா சாப்பாடு தரமாட்டாங்க!” என்று எச்சரித்துக் கொண்டே வந்தார் பேராசிரியர். பொதுவாகவே பேச்சாளர்களுக்கு இரவு நேரத்தில் சரியாகத் தூக்கம் வராது. ஊர் ஊராகப் போய் நள்ளிரவு வரை போய் ஆயிரக்கணக்கானவர்களின் தூக்கத்தைக் கெடுப்பதன் பயன் அது.

சர்வதேச விமானம் என்பதால் மது பரிமாறிக் கொண்டிருந்தார்கள். பேராசிரியர், நான், அப்புறம் விமானத்தில் வந்த சில கைக்குழந்தைகள் மட்டும் தான் மது அருந்தவில்லை.

ஃபிராங்க்ஃபர்ட்டில் விமானம் மாற வேண்டும். அந்த விமான நிலையமே தனியான ஊர் மாதிரி இருக்கிறது. என் கைப்பையில் வாக்மென் வைத்திருந்தேன். அமெரிக்க விமானம் ஏற நான்கு மணி நேரம் இருந்தது. கண்ணதாசன் பாடல்களையும், சுதாரகுநாதன் பாடல்களையும் ஆற அமரக் கேட்கலாம் என்று பார்த்தால், கைப் பையைப் பரிசோதித்த அலுவலர் பதறிப் போய்விட்டார். “Sir! You have a radio!” என்று ஏதோ கஞ்சா வைத்திருப்பது போல் கேட்டார். “O.K. Come! Let us go for another check” என்று தனியாகத் தள்ளிக் கொண்டு போனார்.

அமெரிக்க விமான நிலையத்தில் ஜார்ஜ் பெர்ணாண்டஸ், கமலஹாசன் போன்றவர்களுக்கு நேர்ந்த “சோதனைகள்” பற்றிய கேள்வி ஞானம் ஏற்கெனவே இருந்தது. அவர்களை விடவும் பிரபலமாயிற்றே நான். எனவே சோதனை” ஃபிராங்ஃபர்ட்டிலேயே ஆரம்பம்.

அடுத்த தளத்திற்கு அழைத்துப் போனால் அங்கே ஓர் அம்மணி இருந்தார். என்னை அம்மணியா “சோதிக்கப்” போகிறார் என்று குழம்பிய போதே என் வாக்மென்னை விதம்விதமான கருவிகளால் பரிசோதித்து விட்டு அதையும் கொஞ்சம் புன்னகையையும் கொடுத்து அனுப்பிவிட்டார்.

விமான நிலையத்திலும் விமானத்திலும் அயல்நாட்டுப் பெண்கள் அணிந்திருந்த பனியன்களில் இருந்த வாசகங்களை இங்கே எழுதினால், அப்புறம் என்மேல் மாவட்டம் மாவட்டமாக வழக்குப் போடுவார்கள். எனவே, யாருக்காவது தெரிந்து கொள்ள ஆசை இருந்தால், முழு விலாசம், புகைப்படம், ஜாதகம் ஆகியவற்றை ரசனை மாத இதழுக்கு ஐந்து வருட சந்தாவுடன் அனுப்பி வைத்தால் தனியான கடிதத்தில் விபரம் தரப்படும்.

ஃபிராங்க்ஃபர்ட்டில் விமானம் மாறிக் கொண்டோம். கிளம்ப எத்தனித்த விமானம் திடீரென்று தயங்கியது. சில அலுவலர்கள் வந்தார்கள். ஒரு ஜெர்மனியப் பயணியை அழைத்துச் சென்றார்கள். அவர் சற்றுநேரம் கழித்து வந்தார்.

நடு விமானத்தில் நின்று கொண்டு “எல்லோரும் போய் வாருங்கள்! நான் உங்களோடு வர முடியாது. என் விசா காலாவதியாகி விட்டதாம்” என்று சொல்லிக் கொண்டே பெட்டியை எடுத்துக் கொண்டு இறங்கிவிட்டார். விமானம் கிளம்பியதும். ஒரு குழந்தை மட்டும் விடாமல் அழுது கொண்டே வந்தது. இரண்டு மூன்று முறை திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் பேராசிரியர் சந்தேகத்தோடு கேட்டார். “குழந்தைக்கு காது குத்தறாங்களா?”

டல்லாஸ் விமான நிலையத்தில் இறங்கினோம். எங்களுடையது மட்டுமின்றி, கலை விழாவுக்காக நிறைய லக்கேஜ் எங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. “கவலைப்படாதீங்க! அமெரிக்காவில் விமான நிலையத்திலேயே வந்து எடுத்துக்குவாங்க!” என்று கிருபாகரன் சொல்லியிருந்தார். விசா விசாரணை முடிந்தது. கன்வேயர் பெல்ட்டில் பெட்டிகள் வரத் தொடங்கின. எங்களுடையது என்று நினைத்துக் கொண்டு குத்துமதிப்பாக எந்த எந்த லக்கேஜ்களையோ இறக்கி வைக்கத் தொடங்கினோம்.

அருகில் காத்திருந்த அமெரிக்கர்கள் எங்கள் சேவையில் மகிழ்ந்து போய் நன்றி சொல்லி, அவரவர் லக்கேஜை எடுத்துச் சென்றார்கள்.

திடீரென்று ஓர் ஆப்பிரிக்கர் என்னை அழைத்தார். “ஹீ இஸ் சம்மீந்தன்” (சம்மீந்தன் யார்?) என்றார். ஞானசம்பந்தன் என்ற பெயரைத்தான் கேட்கிறார் என்று புரிந்தது. பேராசிரியரைக் காட்டினேன்.

ஆஜானுபாகுவான அந்த ஆப்பரிக்கர் பெயர் பூவே. நான்கு கைகளால் நாங்கள் தூக்கிய பெட்டிகளை ஒரே கையில் தூக்கி ஒழுங்கு செய்து “லெட்ஸ் கோ” என்று அழைத்து வந்துவிட்டார். அவரைப் பின் தொடர்ந்தேன். “சம்மீந்தனும் தான்”!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *