திருஞானசம்பந்தர் குறித்து 700 பக்கங்களுக்கொரு நாவல் வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த  நாவலை  திரு.சோலை  சுந்தரப்பெருமாள்  எழுதியுள்ளார். தாண்டவபுரம் நாவலைப் படித்தபின்னர் இந்த மின்மடலை எழுதுகிறேன். திருஞானசம்பந்தரை இதைவிடக் கேவலமாக சித்தரித்து எழுத முடியாது. ஒன்றிரண்டு பகுதிகளை சுட்டிக் காட்டுகிறேன்.

சேக்கிழார் காட்டும் திருஞானசம்பந்தர் 3/4 வயதுக்குள்ளாக திருநனிபள்ளி செல்கிறார். திரு.சோலை சுந்தரப் பெருமாள் எழுத்திலோ பதினாறு வயது கட்டிளங்காளையாகச் செல்கிறார். திருநனிபள்ளியில் தாய்மாமன் மகளின் அழகு அவரை சலனப்படுத்துகிறது.உமா திரிபுரசுந்தரி என்று நாவலாசிரியர் உருவாக்கி உலவ விட்டிருக்கும் அந்த மாமன் மகள் முகமும் அழகும்  திருஞானசம்பந்தர் நினைவில் அடிக்கடி வந்து போகிறதாம்.யாத்திரையில் இரவு தனித்துப் படுத்திருக்கும் வேளைகளில் அந்த நினைவில் அவதியுறுகிறாராம்

“அவர் மனசும் உடம்பும் ஒரே திக்கில் நெளுநெளுப்பைத் தூண்டிக் கொண்டிருந்தன.அதில் இருந்து விடுபட தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டு இருந்தார்”

“எப்போது அசந்து உறங்கிப் போனாரோ அவருக்கே நினைவில்லை. அவர்  உடம்பிலும் மனசிலும் ஏறி முறுகிக் கிடந்த நெளுநெளுப்பு முற்றிலும் வடிந்து போய் சாசுவதமாய் உணர்ந்தார்.”
(பக்கம் 320)

“இடுப்பில் இருந்த உத்தரியத்தில் திட்டுதிட்டாய் படிந்திருந்த கொழகொழப்பு இப்போது காய்ந்து முடமுடப்பாக ஆகியிருந்தது. அதிலிருந்து வெளிப்படும் மெல்லிதான இனம் புரிந்து கொள்ளக் கூடிய அம்மணத்தை தன்னோடு நிழலாக இருக்கும் சரணாலயரோ யாழ்ப்பாணரோ உணர்ந்துவிடக் கூடாது என்ற  பரபரப்பில் எழுந்தார்”
(பக்கம்-321)

இவை திரு.சோலை சுந்தரப் பெருமாளின் பேனா சிந்திய துளிகள்.

திருஞானசம்பந்தரின் பாடல்களைப் படியெடுக்கும் சம்பந்தச் சரணாலயரும் இளம் கணிகையுடன் சுகித்துக் கிடந்தவராகவே சித்தரிக்கப்படுகிறார்.

திருஞானசம்பந்தரை,தன்னை வழிபட வரும் பெண்களின் வாளிப்பானஉடலை நோட்டமிடுபவராகவும் சித்தரிக்கும் திரு.சோலை சுந்தரப் பெருமாள் அவருக்கும் மனோன்மணிக்கும் இருந்த உறவின் விளைவாய் ஒரு குழந்தையும் பிறந்ததாய் மனம் போன போக்கில் எழுதுகிறார்.

திருஞானசம்பந்தரின் திருமணத்தில் தீவைத்தவர்கள் சமணர்கள் என்ற குறிப்புடன் இந்நாவல் முடிகிறது.இதே போன்ற முடிவை திரு.அருணனும் தன்னுடைய நிழல்தரா மரங்கள் நாவலில் எழுதியிருக்கிறார்.

ஆனால் திருஞானசம்பந்தரை மிகக் கேவலமாக சித்தரிக்கும் திரு. சோலை சுந்தரப்பெருமாள் நம் கடும் கண்டனத்திற்குரியவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *