ஜெயகாந்தன் எழுதாத நேரங்களிலும் ஓர் எழுத்தாளராய் ஒளிர்ந்தவர்.தொழில் சார்ந்த முழுநேர எழுத்தாளர்கள் பலருண்டு. ஆனால் அவர் நுண்ணுணர்வின் ஓயாச் சுடரால் ஒளிவீசிக் கொண்டேயிருந்தவர்.

இரவுப் பொழுதுகளில் கதிரவன் நம் கண்ணுக்குத் தெரியாமல் வேறெங்கோ ஒளிவீசியதைப் போல் எழுதாத நேரங்களிலும் உள்ளொளி கனல நின்ற காம்பீர்யன் அவர்.

தன்னைத் தானே சிகரமாய் உயர்த்தி அந்தசி சிகரத்தின் முகட்டில்

தன்னையே ஒளியாய் தகதகக்கச் செய்த ஜோதியாய் சுடராய் சூழொளி விளக்காய் நீடு துலங்கும் நிலை வெளிச்சம் அவர்.

அவருடைய பாத்திரங்களில் அவர் ஊற்றி வைத்த வாழ்க்கை,  உயிர்ப்பு மிக்கது.அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரிலும்

விசுவரூபத்திற்கான வாமனக் காத்திருப்பை தரிசிக்க முடியும்.

அவருடைய “நான்” வெகு பிரசித்தம்.ஆனால் அது அகந்தையின் பாற்பட்ட நானல்ல.பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கும் பேருணர்வின் துளிகளால் தூண்டப்பட்ட அகத்திய வேட்கை அது.

அலைகளுக்கு மத்தியில் கம்பீரமாய் நகர்கிற கப்பல் கரைசேர்ந்த பிறகும்  காணத்தகு பிரம்மாண்டமாய் நிலைகொண்டிருப்பது போல

எழுதாமல் வாளாவிருந்த போதும்,மேடைகளை ஆண்டுநின்ற போதும்,தனி உரையாடல்களின் போதும் சஹிருதயர்களுடனான சபைக்களத்திலும்,நோய்மையால் மௌனித்த போதும் ஆளுமையின் அடர்திடமாய் நங்கூரம் பாய்ச்சி நினறிருந்தார்.

இன்று சில எழுத்தாளர்கள் தங்கள் எழுதுகளப் பொருண்மைகளால்  தாங்களோ அல்லது தங்கள் சகாக்களோஜெயகாந்தனைத்  தாண்டி தசமங்களாயிற்று என பெருமையடித்துக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன். எழுத்து மட்டுமல்ல எழுத்தாளன் என்பதை பாரதிக்குப் பின்னர் உணரச் செய்தவர் ஜெயகாந்தனே. அவரின் ஆளுமை முழுமையானது. அதிர்வுகள் மிக்கது. ஒருபோதும் நகல்செய்ய இயலாத நவயுக ஜோதி ஜெயகாந்தன்

 அவர் வெற்றியைத் தேடி நடந்தவரல்ல. ஆனால் “ஜெயகாந்தன்”என்னும் பெயருக்கேற்ப  ஜெயம் இடையறாமல் அவர்பால் ஈர்க்கப்பட்டுக் கொண்டேயிருந்தது.ஜெயம் என்பது பொருது வெல்லும் வல்லமை மட்டுமல்ல.போரிடவும் தேவையில்லா பெருநிலை.
எழுத்துக் களத்தின் நீளம் தாண்டும்-உயரம் தாண்டும்சூரர்களால்
நெருங்க முடியாத சீனச்சுவராய் நீண்டு கிடக்கிறது அவரின் நெடும்புகழ்.
தன் பொதுவாழ்வில்  இடைநடந்த மனிதர்களில் உச்சங்களை உச்சங்களாகவும் துச்சங்களை துச்சங்களாகவும்  உணர மட்டுமின்றி சுட்டிக் காட்டவும் கீழ்மைகளை தட்டிக் கேட்கவும் அவரால் முடிந்தது.  அந்த ரௌத்திரம் சிலரால் தலைக்கனமென்றும் சண்டித்தனம் என்றும்
பிழைபெயர்க்கப்பட்டது.ஆனால் அவரை இயக்கியது,
அனலடிக்கும் மனிதநேயம்.
எந்த விதத்திலும் ஈடுரைக்க முடியாத ஆளுமையாய் எல்லா விதங்களிலும் தாக்கங்கள் ஏற்படுத்திய மேதைமையாய் நின்றொளிரும் நந்தா விளக்கு ஜெயகாந்தன். ஒரு கவியரங்கில் ,அடுத்து உரை நிகழ்த்த இருந்த அவர் அவைநுழைந்து அமர்ந்ததும் நான் வாசித்த வரிகள் சிலவற்றை இப்போதும் அவருக்கான அஞ்சலியாய் சமர்ப்பிக்கிறேன்.
“பாரதியை கண்கொண்டு பாராத தலைமுறைக்கு
 நீயேதான் பாரதியாய் நிதர்சனத்தில் திகழுகிறாய்..நீ
தரைநடக்கும்  இடிமுழக்கம்..திசைகளுக்கு புதுவெளிச்சம்
உரைநடையின் சூரியனே! உன்றனுக்கு என் வணக்கம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *