இருபதாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் செஞ்சேரிமலை போயிருந்தேன். காரை நிறுத்தச் சொல்லி விட்டு “தேவசேனாபதி அய்யா பழக்கடை” என்று விசாரித்து நின்ற போது, நடுத்தர வயதுக்காரர் ஒருவர்,”நீங்க…”என்றபடியே கடையிலிருந்து வந்தார்.”முத்தையா” என்று சொன்ன மாத்திரத்தில் “அய்யா!வாங்க வங்க! அப்பா உங்களைப் பத்தி பேசாத நாளே இல்லீங்க’ என்றார். முதன்முதலாக இதே கடை  வாசலில் நான் வந்து நின்ற நாள் என் நினைவுக்கு வந்தது.

“நகர வீதியில் திரிதரு மாந்தர்” என்ற சொற்றொடர், தமிழிலக்கிய ஆர்வலர்களுக்குப் பரிச்சயமாகியிருக்கும். கல்லூரியில் சேர்ந்த முதலிரண்டு ஆண்டுகள். அநேகமாக 1987 அல்லது 1988 ஆம் ஆண்டாக இருக்கும். வீட்டுக்கு வெளியே எங்கள் தெருவில் நான் வெறுமனே திரிந்து கொண்டிருந்த ஒரு முன்மாலைப்பொழுதில் வீட்டுக்கு சற்று தொலைவில் இருவர் வருவது தெரிந்தது.ஒருவர், புலவர். கோ.ஜானகி அம்மையார். இன்னொருவர் புதியவர். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை. கிராமத்து மனிதர் என்பதைப் பறைசாற்றும் வெள்ளந்தி முகம். ஓங்குதாங்கான உடல்வாகு. இரண்டு காதுகளிலிருந்தும் பூனை மீசை போல் நீண்டிருந்த ரோமம்.நெற்றி நிறைய திருநீறு.குங்குமம்.

வீட்டுக்குள் வந்தமர்ந்தனர் இருவரும்.மாப்பிள்ளை பார்ப்பதுபோல் என்னையே கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவரை ஜானகி அம்மையார் அறிமுகம் செய்து வைத்தார். “முத்தையா! இந்த அய்யா பேரு வெங்கிடாஜலக் கவுண்டர். செஞ்சேரிமலை மணியகாரரு”. அவருடைய கம்பீரமான தோற்றத்துக்கும், என் வயதுக்கும் சற்றும் பொருந்தாத பணிவுடன் “சட்”டென எழுந்து,”வணக்கமுங்க அய்யா” என்றார்.

தென்சேரிமலை என்பதுதான் செஞ்சேரிமலை என்று மருவியது.மந்திராசலம் என்றழைக்கப்படும் இந்த மலைக்கோயிலில் வேலாயுதசாமி என்ற பெயரில் முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ளார்.

அதே மலையின் அடிவாரத்தில் குகைக்கோயில் ஒன்று உள்ளதாகவும், குகை பாலதண்டாயுதபாணி என்ற பெயரில் அங்கு முருகன் கோயில் கொண்டுள்ளதாகவும் விவரித்தார் புலவர் ஜானகி அம்மையார். கிருத்திகை தோறும் அங்கே அபிஷேக ஆராதனைகளும்அன்னதானமும் சமயச் சொற்பொழிவுகளும் நடைபெறும். மாதந்தோறும் அங்கே சொற்பொழிவு நிகழ்த்தி வந்த ஜானகி அம்மையார், அங்கே எல்லா மாதங்களும் செல்ல முடியாததால் நான் அவருக்கு பதிலாக செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

செஞ்சேரிமலை  நிறுத்தத்தில் பஸ் குலுங்கி நின்றது.கோவையிலிருந்து கிழக்கே சூலூர் வந்து அங்கிருந்து தெற்கே செலக்கரிச்சல், சுல்தான்பேட்டை வழியாக செஞ்சேரிமலை. அதிகம்போனால் இரண்டு மணிநேரப்பயணம். பஸ் நிலையம் வந்ததும் பக்கத்திலேயே ராமச்சந்திரன் செட்டியார் பாத்திரக்க்கடை என்று விசாரிக்கச் சொல்லியிருந்தார் வெங்கிடாஜலக் கவுண்டர். பிரியமாக வரவேற்றார் செட்டியார். சிறிது நேரத்தில் கோயில் முக்கியஸ்தர்கள் வந்து சேர்ந்தனர். மணியகாரர் , சேர்மன் இருவர் பெயருமே வெங்கிடாஜலக் கவுண்டர்தான். அப்புறம் மலைக்கோவில் வாசலில் தேங்காய் பழக்கடை வைத்திருந்தவரும், ஓதுவாருமான பெரியவர் தேவசேனாபதி. அவருடைய தமிழறிவும், மனனமாகியிருந்த பாடல்களும் அபாரம்

காபி வாங்கிக் கொடுத்து மலைக்கோயிலை சுற்றிக் கொண்டு அழைத்துப் போனார்கள். அடிவாரத்திலுள்ள குகை பாலதண்டாயுதபாணி கோயில். இன்னும் சில நூறாண்டுகள் பின்னே நம்மை அழைத்துப் போகும் புராதன அமைப்பு. குகையில் ஆண்டிக்கோலத்தில் அழகன் முருகன். தொட்டு விடும் தூரத்தில் அமர்ந்து கரிய திருமேனிக்கு நிகழும் அபிஷேகங்களைக் கண்குளிரக் காணும் வாய்ப்பு அமைந்தது. குகைக்கு வெளியே சற்றே உயர்த்திக் கட்டப்பட்ட திண்ணை. எதிரே நூறு பேர்கள் வரை அமரக்கூடிய வசதி. அபிஷேகம் முடிந்து திரை போட்டு அலங்காரம் தொடங்கியதும் சொற்பொழிவு தொடங்கும். அநேக ஆன்மீகத் தலைப்புகளில் நான் பேசிப்பழகியது அங்கேதான்.

சொற்பொழிவு முடிந்ததும் திரைவிலக, அதற்குமுன் ஆண்டிக்கோலத்தில் நின்றிருக்கும் குகைப்பெருமான் (அவரை பெரியவர் தேவசேனாபதி அப்படித்தான் அழைப்பார்) ராஜ அலங்காரத்தில் காட்சி கொடுப்பார். அதன்பின், இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட சித்ரான்னங்கள் பரிமாறப்படும். சொற்ப்பொழிவுக்கு சன்மானம் 30 ரூபாய்.

இரவு 8.00 மணிக்குமேல் அப்போதெல்லாம் கோவைக்கு பேருந்து வசதி கிடையாது.எனவே, “கதர்க்கடைக்காரர்” என்றழைக்கப்பட்ட நடராஜன் என்பவர் வீட்டில் இரவு தங்க வேண்டி வரும்.

அவரின் துணைவியார் சுடுதண்ணீரில் கலந்து தரும் ஹார்லிக்ஸ் குடித்துவிட்டு படுத்தால், கோழி கூப்பிட எழுப்புவார்கள். புலர்ந்தும் புலராத
பொழுதில் உடன்வந்து முதல் பஸ்ஸில் ஏற்றிவிடுவார் நடராஜன்.

அதன்பின் வந்த பெரும்பாலான கிருத்திகைகளிலும் சொற்பொழிவுக்கு நானே தொடர்ந்து போய்க் கொண்டிருந்தேன். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் பள்ளிப் படிப்பை முடித்த கையோடு என் தமிழாசிரியர் திரு.க.மீ.வெங்கடேசன் தூண்டுதல் காரணமாக, அருணகிரிநாதர் மீது பருவத்துக்கொரு பாடலாக பிள்ளைத்தமிழ் எழுதியிருந்தேன். நியாயமாக பருவத்துக்கு பத்துப் பாடல்கள் எழுதினால்தான் பிள்ளைத்தமிழ். அருணகிரிநாதர் விழா நெருங்கியிருந்ததால் இதற்கு “ஒரு பா பிள்ளைத்தமிழ்” என்று பெயர் கொடுத்தார் ஆசிரியர். அப்படியோர் இலக்கணம் உண்டா என்பது இன்றளவும் எனக்குத் தெரியாது.

இடையில், குகை பாலதண்டாயுதபாணி மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக அவர் மீதும் துதி மலர்கள் எழுதினேன். அருணகிரி ஒரு பா பிள்ளைத்தமிழ், குகை பாலதண்டாயுதபாணி துதி மலர்கள், இரண்டையும் இணைத்து, “வேலின் வெளிச்சத்தில்”என்ற தலைப்பில் என் முதல் புத்தகம் 1989ல் வெளியானது. பதிப்பாளரும் நானே!!

அறநிலையத்துறை துணை ஆணையராக இருந்து ஒய்வு பெற்ற அமரர். த.நாகராசன்எங்கள் குடும்ப நண்பர்.அவரின் புதல்வர். திரு.த.நா.மதிவாணன், 2750/ ரூபாய்களுக்கு சுந்தரம் பிரிண்டர்ஸில் அச்சிட்டுத் தந்தார். திரு.சுகி சிவம் அற்புதமான அணிந்துரை ஒன்றைத் தந்திருந்தார். என் கல்லூரித்தோழன் தங்கவேல் தந்த 2000 ரூபாய் கடனில் அந்த நூல் வெளியானது. ஒரு பிரதியின் விலை மூன்று ரூபாய்.

உருண்டோடின இருபது வருடங்கள்.இப்போது மறுபடியும் செஞ்சேரிமலைக்கு செல்லத் தோன்றியது. அந்த கிராமம் மாறியிருந்தது . பிரசாதக் கடைகள் அனைத்திலும் வோடாஃபோன், ஏர்செல் பலகைகள். மணியகாரர் வெங்கிடாஜலக் கவுண்டர் மறைந்திருந்தார். சேர்மன் வெங்கிடாஜலக் கவுண்டருக்கு நடமாட்டம் குறைந்துவிட்டது. கதர்க்கடைக்காரர் நடராஜன் அருகில் எதோவொரு நகருக்குக் குடிபெயர்ந்து விட்டார். வேலின் வெளிச்சத்தில் நூல் வெளிவர கடன் கொடுத்து மிகத்தாமதமாகவே திரும்பப் பெற்றுக் கொண்ட என் கல்லூரி நண்பன் தங்கவேலும் அதற்கு முந்தைய வாரம்தான் (15.08.10) மாரடைப்பால் இறந்திருந்தான்.குகை பால தண்டாயுதபாணி கோவில் பூட்டிக் கிடந்தது. பூசாரி ஊரில் இல்லையாம்

பெரியவர் தேவசேனாபதிக்கு 83 வயது.சில கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்த பெரியகளந்தை என்னும் தலத்தில்  ஆதீஸ்வரர்
திருக்கோவிலில் சனிப்பிரதோஷத்திற்காக சென்றிருந்த பெரியவரை அவருடைய மகன் செல்லில் அழைக்க அடுத்த சில நிமிடங்களில்
எங்கள் கார் ஆதீஸ்வரர் திருக்கோயிலை சென்றடைந்தது.

நாங்கள் நுழையக் காத்திருந்தது போல் சனிப்பிரதோஷ தீபாராதனை. பெரியவர் தேவசேனாபதி பஞ்ச புராணம் பாடினார்.அங்கும் சித்திரான்ன விநியோகம்.எங்கள் காரிலேயே செஞ்சேரிமலை வர ஆயத்தமானார் பெரியவர்.

இவ்வளவு தூரம் வந்தும், குகை பாலதண்டாயுதபாணியை தரிசிக்க முடியவில்லை என்னும் மனக்குறையோடு காருக்கருகே சென்றபோது, பெரியவர் சொன்னார்: “குகைப்பெருமான் யாரையும் கைவிடலீங்க! அவரு சந்நிதியிலேதொடர்ந்து   பேசின ஜானகியம்மா, நீங்க எல்லோரும் நல்ல நிலையிலே இருக்கீங்க! நானும் நல்லா இருக்கேன்.என் பேரன் ஒருத்தன சின்னதிலிருந்தே குகைப் பெருமானை தரிசிக்கச் சொல்லுவேன். அவனும் இப்போ நல்லா இருக்கான். போட்ட்டோ காமிக்கறேன் பாருங்க.”பேரனின் படமென்று நினைத்து வாங்கினேன்..

அபிஷேகம் முடிந்து ராஜ அலங்கார ரம்மியனாய் கனகம்பீரமாய் படத்தில் குகைப்பெருமான்.பூசனை நடைபெறாத நாளில் தேடிவந்த எனக்கு அந்தப் புகைப்படங்களில்அலங்கார தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். “கிருத்திகைக்கு அவசியம் வா” என்று கூப்பிடும் விதமாய் குமிழ்சிரிப்பு..

1988-89ல்குகை பாலதண்டாயுதபாணிக்கு எழுதிய துதி மலர்களை உங்களுடன் இனி தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன்:கூடவே (1986ல்) எழுதிய அருணகிரி ஒருபா பிள்ளைத்தமிழையும்……

                                விநாயகர் காப்பு

அம்பலத்தில் ஆடுகின்ற அண்ணலவர் மேனிநின்ற
அன்பினுரு வானமங்கை சிவகாமி
அஞ்செழுத்தை ஓதுகின்ற அந்தகயிலாய மிசை
அங்குமிங்கும் தேடநின்ற புதல்வோனே
தம்பலத்தையே நினைந்து உன்பதத்தையே நினைந்து
தண்ணருளை நாடுகின்ற அடியார்கள்
தம்பயத்தையே களைந்து அன்புளத்திலே நிறைந்து
இன்பமுறும் ஞானநிலை அருள்வோனே
செம்பருத்தி மேனிதனில் மின்னலென நூலணிந்த
சுந்தரநல் வேழமுக முதல்வோனே
சிந்தைதனில் ஊறுகின்ற செந்தமிழின் ஞானசந்தம்
செய்யுளினில் கூட வரம் தருவோனே
உம்பர் மகிழ்ந்தாட அந்த வெஞ்சமரில் சூரனங்கம்
துண்டுபட வேலெறிந்த குமரேசர்
தன்கழலைப் பாடுகின்ற இன்கவிதை நூலில்வந்து
என்றுமொரு காவல்புரிந் தருள்வாயே!!

(தொடரும்)

Comments

  1. அருமையான கட்டுரை. அதைவிட அருமையான பாடல். தொடர்க கவிமழை.

    அன்புடன்

    ரமணன்

  2. ஐயா நான் இந்த கட்டுரையை படித்தேன் மிகவும் என்னை ஆச்சிரிய பட வைத்தது ஏனென்றால் தேவசேனாதிபதி ஐயா எனது தாத்தா….கருனையே வடிவே குகை கந்தா போற்றி …

  3. "வேலின் வெளிச்சத்தில்" முக்கனியின் கூட்டாக வந்தது.அச்சிட்ட பெருமை அச்சகத்திற்கு.அவர்குடும்பத்தார் எங்களுக்கு நண்பர் எனச் சொல்வது அன்பின் பரிசு.முதல் கவிதையா அது? சந்தம் விளையாடும்.பக்தியோ பிழியும். அது வெறும் புத்தகமல்ல. ஒரு அழகிய பக்தி பனுவல்.அன்பு முத்தையா நலமுடன் வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாயினிக்க வாழ்த்துகிறேன்.
    த.நா.மதிவாணன்

  4. ஐயா கட்டுரை அருமை , நான் தென்சேரிமலையில் உள்ள திருமடத்தில் பயின்ற மாணவன் . எங்கள் திருமடத்துப் பள்ளி மாணவர்களுக்கு ஐயா அவர்கள் பாடும் தென்சேரிமலைத் திருப்புகழ் மிகவும் பிடிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *