கதவைத் திறந்து கோடை நுழைந்து

கனலால் கோலம் போடும் நேரம்
மதகைத் திறந்து பெருகும் வியர்வை
முதுகில் பாடும் கவிதை ஈரம்

கண்னை உறுத்தும் காலை வெய்யில்
மண்ணைக் கொளுத்தும் மதிய வெய்யில்
சாலை தகிக்கும் மாலை வெய்யில்
காலம் சுருளும் இரவின் கையில்!

தாகம் எடுத்த தாவர வகைகள்
ஈழத் தமிழராய் எரிந்து கருகும்!
விரித்த பாயை சுருட்டியதைப் போல்
வறண்ட நீர்நிலை வாடிச் சுருங்கும்

தேகம் வற்றிய கணிகையின் மீது
மோகம் வற்றிய வாடிக்கையாளனாய்
ஜன்னல் -கதவு-திறந்தே இருந்தும்
தென்றலுக்கு திசைகள் மறக்கும்

தேர்வு நேரப் பாரம் சுமக்கும்
பிள்ளைகள் மனதில் பாடம் கனக்கும்
எல்லாம் இழந்த அகதிகள் போல் -இலை
இல்லா மரங்கள் இறுகிக் கிடக்கும்

சுருதி குறைந்த குரலில் முனகும்
பறவைகள் சில பாட முயலும்
காரடங்கிய வானப் பரப்பில்
ஊரடங்கு உத்தரவைப் போல்
சிறகுச் சத்தம் ஓய்ந்து கிடக்கும்
விறகாய் தெருக்கள் காய்ந்து கிடக்கும்

வதம்செய்யும் கோடையின் வெய்யிற்கோபமே

இதம்செய்யும் மழைக்கு ஏற்பாடென்பதால்
தவம்செய்யும் மரங்களின் தேடலுக்கிரங்கி
நிகழ்வதாகுக மழைஅவதாரம்

Comments

  1. கவிஞரின் கானமழை,வானமழையின் செவிகளில் விழுந்திட்டது.பூமி குளிர்ந்திட்டது.

  2. விஷயம் தெரியுமா
    மழை வரும் என்று வவனிலை அறிக்கை வாசித்த பிறகே இந்தக் கவிதை எழுதப்பட்டது :-)))
    உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
    ரகசியம் சொன்னேன் -இந்த
    ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *