ஐயா
வணக்கம் என்னை நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.அடியேன் கோகுல்.ஶ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர். திருமந்திரத்தில் தாந்திரிகம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்.ஓர் ஐயம் எனக்கு.

திருத்தொண்டர் புராணத்தில் குலச்சிறையாரை அறிமுகப்படுத்தும் போது சேக்கிழார் பெருமான்,” நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும் அறிவு சங்கரற்கு அன்பர் எனப்பெறில் செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையர்” என்று கூறுகிறார். அப்படியென்றால் சிவன் மீது மனதைச் செலுத்திய அடியார்களும் குணநலன் குன்றி நடக்க வாய்ப்புண்டு என்ற பொருண்மை தொனிப்பதாகப் படுகின்றது. விளக்கம் தேவை.

அன்பிற்கினிய திரு.கோகுல்
வணக்கம். உங்களை மறக்க முடியுமா? காவ்யா நூலாக வெளியிட்ட உங்கள் ஆய்வேட்டைப் படித்துவிட்டு நான்தானே உங்களைத் தேடிப் பிடித்து தொடர்பு கொண்டேன்.

குலச்சிறையார் குறித்த உங்கள் கேள்வி நல்ல கேள்வி.சேக்கிழார் சொல்வது குணநலன் சார்ந்ததென்று நான் கருதவில்லை. அவரவர் பிறந்த குலத்தின் நெறிகளை நீங்கி நடப்பது அன்றும் இன்றும் விசித்திரமாகப் பார்க்கப் படுகிறது. ஆனால் பக்தியின் பித்தேறிப் போனவர்கள் நிஷ்டை நியமங்களைப் பின்பற்றாது போனால் அது பக்தியினால் விளைந்ததென்று கண்டுணரும் புரிதல் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுவதில்லை. குலச்சிறையார் அந்தப் புரிதலுடன் சிவனடியார்களைப் போற்றியிருக்கிறார்.

அதேபோல குல வேறுபாடு பார்க்கப்பட்ட காலத்தில் தாழ்ந்த குலத்தினராக இருந்தாலும் சிவனடியார்களாக இருந்தால் அவர்கள் வணங்கத் தக்கவர்கள் என்பதில் நாயன்மார்கள் உறுதி
கொண்டவர்கள்.

“அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயாராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பர் ஆகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே”

என்னும் திருநாவுக்கரசர் பாடும் மனநிலையே குலச்சிறையாரின் மனநிலையும் ஆகும்.

குலச்சிறையார் பற்றி திருஞானசம்பந்தர் தன் தேவாரத்திலேயே குறிப்பிடுகிறார்.எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி,தான் அமைச்சர் என்னும் தன்முனைப்பு சிறிதுமின்றி,சிவனடியார்களைக் கண்டால் விழுந்து வணங்குகிற பண்புடையவர் குலச்சிறையார் என்கிறார்.

” வெற்றென அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளை நீறணியும் கொற்றவன் தனக்கு மந்திரியாய குலச்சிறை”

என்று பாடுகிறார். எனவே சிவனடியார்கள் என்றால் அவர்களைப் பணிபவராக அமைச்சராகிய குலச்சிறையார் இருந்திருக்கிறார் என்பதுதான் திருஞானசம்பந்தரும் சேக்கிழாரும் சொல்கிற செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *