கெண்டைக் கால்கள் குறக்களி இழுக்கையில்
எந்தக் கடவுளும் என்னுடன் இல்லை.
ஒரே நேரத்தில் இரண்டு கால்களிலும்
பரவிய வேதனை… பெரிய கொடுமை.
பகல்நேரத்து ரயில் பயணத்தில்
காலிப் பலகையில் கால்கள் நீட்டிய
சயன எத்தனத்தில் & அது சட்டென நேர்ந்தது.
“கடவுளே கடவுளே” கதறிய படியே
நிலைகொள்ளாமல் நெளிந்து தவித்தேன்.
கால்களிரண்டையும் மெதுவாய் நீவி
சாய்ந்துகொள்ளச் செய்தார் ஒருவர்.
“செத்த நேரந்தான் சரியாய் போயிடும்;
பல்லைக் கடிச்சுப் பொறுத்துக் கிடுங்க”
ஆதரவாக ஒலித்தது ஒரு குரல்.
வேதனை உருகி விழிகளில் வழிந்தது.
திலகம் தரியா இளம்பெண்ணொருத்தி
சிலுவைக் குறியிட்டு ஸ்தோத்திரம் சொன்னாள்.
தண்ணீர்க் குடுவையைத் திறந்து ஊற்றிய
கைகள் எவரது? கவனத்திலில்லை.
ஜன்னல் வழியாய்த் தென்றல் வீசக்
கண்களில் மெதுவாய்க் கவிழந்தது உறக்கம்.
வலியுடன் கலந்த கனவுகள் சிலச்சில
அதிரும் ஓட்டத்தில் அடிக்கடிக் கலைந்தன.
முற்றிலும் விழிப்பு நேர்ந்த வேளையில்
சிற்றூரென்று கடந்துபோயிருந்தது.
தடவிக் கொடுத்தவர், தண்ணீர் கொடுத்தவர்
எவருமில்லை எதிர் இருக்கைகளில்.
இறுக்கம் தளர்ந்த என் கால்களில் மட்டும்
கடவுளின் சுவடு கொஞ்சமிருந்தது.

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *