8. தாண்டி வாருங்கள் தாழ்வு மனப்பான்மையை!

உங்களைப் பற்றிய அவநம்பிக்கை உங்களுக்குள்ளேயே தலைதூக்குமென்றால், அதற்குப் பெயர் தாழ்வு மனப்பான்மை. வாழ்வின் ஆரம்பப் பொழுதுகளில் வரும் தாழ்வு மனப் பான்மையை, அடுத்தடுத்து வருகிற வெற்றிகள் சரி செய்துவிடும். ஆனால், வளர்ந்து கொண்டே வருகிறபோது, சில தோல்விகள் காரணமாக வரும் அவநம்பிக்கையும், அந்த அவநம்பிக்கை மெல்ல உருவாக்கும் தாழ்வு மனப்பான்மையையும் கவனமாகக் கையாள்வது அவசியம்.

இந்த இரண்டாவது வகை தாழ்வு மனப்பான்மைக்கு மருந்து, உங்களை நீங்களே மதிப்பது. சுய மதிப்பு தாழும்போதுதான் தாழ்வு மனப்பான்மை வருகிறது. உங்கள் நேற்றைய சாதனைகளையெல்லாம் அடித்துவிட்டு, தன் பெயரைத் தாழ்வு மனப்பான்மை கொட்டை எழுத்தில் எழுத முற்படுகிறது.

இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. தொழிலில் தோல்வி – ஒரு வேலையை விட்டுவிட்டு அடுத்த வேலையைத் தேடிக்கொள்வதில் விழுந்த இடைவெளி – திருமண வாழ்வில் தோல்வி – என்று சில காரணங்களை அடித்தளமாக்கிக் கொண்டுதான் இந்தத் தாழ்வு மனப்பான்மை உருவாகிறது.

அமெரிக்காவில் புகழ்பெற்ற சுயமுன்னேற்றச் சிந்தனையாளர் ராபர்ட் ஆன்ஜியர். அவருக்கு, ஒரு காலகட்டத்தில் இப்படியரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. “என் தனிப்பட்ட வாழ்விலும், நிதி நிலையிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்ட வேளை அது. நான் ஒரு செத்த எலி போல உணர்ந்தேன்” என்கிறார் ராபர்ட். பிறகு எப்படி மீண்டு வந்தார்?

இதோ, அவரே தரும் பட்டியல்:
1. எல்லா மாற்றமும் என்னிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். முதலில், பல அதிரடி மாற்றங்களுக்கு மனரீதியாக என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்.

2. என்னையும் என் வீழ்ச்சியையும் அளவுக்கதிகமாக விமர்சித்தவர்களிடம் இருந்து விலகிவந்தேன். அவர்கள் என்னைப் பற்றிப் பேசியது அக்கறையால் அல்ல. அக்கப் போருக்காக! என் தோல்வியை அளவுக்கு அதிகமாய்ப் பெரிதுபடுத்தியவர்களின் சகவாசத்தை விட்டொழித்தேன்.

3. என்மேல் எனக்கு நம்பிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது. என்னை ஊக்கப்படுத்தும் நல்ல புத்தகங்களைத் தொடர்ந்துபடித்தேன். பிரார்த்தனையிலும், புத்துணர்ச்சி தரும் உடற் பயிற்சியிலும் ஈடுபட்டேன்.

4. ஒரு நல்ல சுய முன்னேற்றப் பயிற்சியாளரை அணுகினேன். என் பிரச்சினைகளை என்னிலிருந்து தள்ளிநின்று பார்த்ததால் அவருடைய ஆலோசனைகள் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் இருந்தன. அவற்றைக் கடைப்பிடித்தேன்.

5. என் சிறப்பம்சங்கள், என் அனுபவம், என் திறமைகள் ஆகியவற்றின் மீது அதிகக் கவனம் செலுத்தினேன். எதிர்மறை எண்ணங்கள் எழாமல் பார்த்துக்கொண்டேன்.

6. தன்னிரக்கம், குற்றவுணர்வு ஆகியவற்றிலிருந்து விடுபட்டேன்.

7. உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்பளித்தேன். எதைச் செய்வது அவசியமென்று தோன்றியதோ, அதைச் செய்தேன்.

8. கடவுள் என்னைக் குப்பையாக உற்பத்தி செய்யவில்லை. ஒரு காரணத்துடன்தான் படைத்தார் என்று உறுதியாக நம்பினேன். என்னால் இந்த உலகிற்குப் பயன்படமுடியும் என்கிற எண்ணமே எனக்குள் ஒரு கம்பீரத்தை ஏற்படுத்தியது.

9. என் உணர்ச்சிகள்தான் நான் என்கிற அடையாளத்தை அழித்தேன். என்னில் சில உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. தேவையான உணர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்கிறேன் என்ற தெளிவை ஏற்படுத்திக் கொண்டேன்.

10. இந்தக் குணங்களை நிதானமாக – ஆனால் உறுதியாக வளர்த்துக் கொண்டேன். படிப்படியாய் வெற்றிகளைக் கண்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டும் சுயமுன்னேற்றச் சிந்தனையாளன் ஆனேன் என்கிறார் ராபர்ட் ஆன்ஜியர்.

நம்மில் எப்போதாவது தாழ்வு மனப்பான்மை தோன்றினால், இந்த நடைமுறைப் பயிற்சிகளைக் கொண்டு தாழ்வு மனப்பான்மையைத் தாண்டிவிட முடியும்தானே!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *