21. உங்கள் விதிகளை உருவாக்குங்கள்!

வாழ்க்கைக்கென்று முன்னோர் வகுத்த விதிகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நியாயமான – நிறைவான – நிம்மதியான வாழ்க்கைக்கு என்னென்ன வேண்டும் என்கிற முடிவை நீங்கள் முதலில் எடுங்கள்.

உங்கள் வாழ்வுக்கான விதிகளை மற்றவர்களுக்கு இடையூறில்லாமல் நீங்கள் உருவாக்குங்கள். உங்கள் கட்டுக்குள் உங்கள் வாழ்க்கை இருக்கும்போது இன்னும் தெளிவான முடிவுகளை எடுக்க உங்களால் முடியும்.

சில பேருக்கு அவர்களைப் பற்றிய செய்திகளை மற்றவர்களிடமிருந்து கேட்கும்போது வியப்பாய் இருக்கும். சுயமதிப்பீடு இல்லாத போது இத்தகைய சிரமங்கள் ஏற்படக் கூடும், உங்களை நீங்களே உணர்ந்து கொள்வது மிக முக்கியம். அப்போதுதான் புகழையும் விமர்சனங்களையும் சரியாக எடைபோட்டுத் தேவையானதை மட்டுமே கரத்தில் கொள்ள முடியும். அடுத்தவர்கள் உங்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்குப் பெயர் அடக்கமல்ல அபத்தம்.

எதிர்காலம் பற்றிய களவுகளும் திட்டங்களும் தேவைதான். ஆனால் எதிர்காலம் எங்கே தொடங்குகிறது தெரியுமா? இதோ இந்த நிமிடத்தில் தொடங்குகிறது. இப்போது நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதன் பயனைத்தான் எதிர் காலத்தில் அனுபவிக்கப் போகிறீர்கள். நிகழ்காலத்தில் நீங்கள் நிகழ்த்துவதுதான் எதிர்காலமாய் முதிர்கிறது. “செய்யலாம் என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன் – முடியவில்லை” இதுதான் தங்கள் இலட்சியங்களை விட்டுத் தள்ளி வந்தவர்கள் வருந்திச் சொல்கிற வாக்குமூலம். எனவே நிகழ்காலத்திலிருந்து தொடங்கட்டும் உங்கள் எதிர்காலம்.

சிரமங்களுக்கும் சிக்கல்களுக்கும் நடுவே வாழ்வை ரசிப்பதற்கான காரணங்களை யாரெல்லாம் கண்டுணர்கிறார்களோ, அவர்களின் உறவும் உற்ற துணையும் வாழ்வெல்லாம் உடன் வருமாறு உறுதி செய்து கொள்ளுங்கள். வாழ்க்கை பற்றிய வருத்தமும் விரக்தியும் எங்கும் பரவச் செய்வதால் எந்தப் பயனும் கிடையாது. அதை உங்கள் வாழ்வின் முக்கியமான அம்சமாகக் கைக் கொள்ளுங்கள்.

உங்கள் சக்தியும் நேரமும் பெருமளவில் பறிபோவது, வேண்டாத விவாதங்களில்தான். ஒபாமாவின் வெற்றியில் தொடங்கி, உள்ளூர் வெட்டுகுத்து வரை எல்லாவற்றிலும் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல் சிலர் தப்புத்தப்பான தகவல்களைத் தந்து கொண்டிருக்கக்கூடும். அவர்களை மறுத்துப் பேசி உங்களுக்கு யாரும் மகடம் சூட்டப் போவதில்லலை. அத்தகைய விவாதங்களையும் விவாதம் செய்பவர்களையும் தவிர்த்து விடுங்கள்.

முன்முடிவுகள், உறவின் பாதையில் முட்களாகக் குத்தும். அவை பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும். மற்றவர்களின் உண்மையான இயல்புகளைக் காணவும் விடாமல் கண்களைக் கட்டுபவை முன்முடிவுகள். அவற்றைத் தவிர்த்துவிடுங்கள். சகமனிதர்களை எடைபோட்டு, இவர்கள் இப்படித்தான் என்று தீர்மானங்கள் செய்யும் முன்னே நடுநிலையோடு பாருங்கள். யாரிடமும் நல்லதைத் தேடுங்கள். உறவுகள் மிக விரைவாய் தேடுங்கள். உறவுகள் மிக விரைவாய் மேம்படுவதை நீங்களே உணர்வீர்கள்.

ஏற்கனவே என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்களோ, அவற்றிலிருந்து மேலும் தெரிந்துகொள்ள முயலுங்கள். நீங்கள் எதிர் பார்த்ததைவிட வேகமாய் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உங்களால் முடியும் என்பதை உணர்வீர்கள். வளர்வதற்குப் பெயர்தான் வாழ்க்கை. புதிதுபுதிதாய் கற்றுக் கொள்ள உங்கள் தயக்கமோ உங்களைப் பற்றிய தவறான உங்கள் ம,திப்பீடுகளோ தடையாய் இருக்க அனுமதிக்காதீர்கள்.

வாழ்க்கை மனிதர்களால் ஆனது. கடமைகள், அலுவல்கள் அனைத்துமே சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தோஷத்துக்கான பாதைகள். அதை வாழ்வின் எல்லா நேரங்களிலும் நினைவில் வைத்திருங்கள். உயர்ந்த விதிகளை உருவாக்கும் சுதந்திரம் உங்களுக்கு உள்ளது. அது உயர்ந்ததாகவும் உபயோகமானதாகவும் இருந்தால் உலகமே உங்களை உற்சாத்தோடு பின்பற்றும்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *