முரணிலாக் கவிதை

முடிவிலாப் பாதையில் முகமிலா மனிதர்கள்
இதழிலாப் புன்னகை சிந்திய பொழுது
இரவிலா நிலவினை மழையிலா முகில்களும்
நிறமிலா வெண்மையில் மூடிய பொழுது
விடிவிலாச் சூரியன் வழியிலாப் பாதையில்
தடையிலா சுவரினைத் தாண்டிய பொழுது
கடலிலாச் சமுத்திரம் கரையிலா மணலினில்
பதிலிலாக் கேள்வியாய் மோதிடும் அழுது

யுகமிலாத் தேதியை நகமிலா விரல்களால்
கரமிலாக் காலமும் கிழிக்கிற நொடியில்
ஜெகமிலா பூமியின் நகர்விலா சுழற்சியை
வடிவிலாக் கோள்களும் மறிக்கிற பொழுதில்
சுகமிலாச் சுகங்களை நிலையிலா நிரந்தரம்
வலியிலா வலியென உணர்த்திடும் நிலையில்
அகமிலா அகந்தனில் விரிவுறா வெளியினில்
குணமிலா இறைநிலை குலவும்நம் உயிரில்

அரணிலாக் காவலின் அசைவிலா விசையினில்
திரையிலா மறைப்புகள் மறைகிற காட்சி
உரனிலா வலிமையின் ஒழுங்கிலா ஒழுங்கினில்
சரியிலா நீதிகள் சரிகிற மாட்சி
தருவிலாக் கனிகளும் திருவிலாச் செல்வமும்
வரைவிலா வரைமுறை வகுக்கிற சூழ்ச்சி
முரணிலாக் கவிதைகள் முள்ளிலா நெருஞ்சியாய்
முன்வரா முதல்வனின் மறைமுக ஆட்சி
.

நாதரூபம்

(02.01.2012  கோவை மாஸ்திக்கவுண்டன்பதி பாலா பீடம் ஸ்ரீ விஸ்வசிராசினி தரிசன அனுபவம்)

ருத்ர வீணையின் ஒற்றை நரம்பினில்
ருசிதரும் ராகங்கள்
முத்திரை பிடிக்கும் மோன விரல்களில்
தாண்டவக் கோலங்கள்
ரத்தினத் தெறிப்பாய் விழுகிற வார்த்தையில்
ரூபக தாளங்கள்
எத்தனை பெரிய அற்புதம் இங்கே
எதிர்வரும் நேரங்கள்!!

பாவை விளக்கின் புன்னகைச் சுடரொளி
பொலியும் பார்வையிலே
கூவிய தெய்வக் குயிலின்  சாயல்
மந்திரக் கோர்வையிலே
தேவியின் வாயிலில் தென்றலின் சாமரம்
வெய்யில் வேளையிலே
ஏவல்கள் தாங்கவும் காவல்கள் செய்யவும்
கந்தர்வர் சேவையிலே

காற்றின் விசையாய் கடவுளின் இசையாய்
காட்சி கொடுப்பதுயார்
ஏற்றிய சுடராய் எழுதா மறையாய்
எல்லாம் தருவதும் யார்
நேற்றின் நிழலாய் நாளையின் விடிவாய்
நின்று சிரிப்பதும் யார்
ஆற்றின் அலையாய் அலைமேல் மலராய்
ஆர்த்திடும் அமைதியும் யார்

ஞானியர் வழிவரும் வாணியின்  மந்திர
நாதங்கள் அதிர்ந்துவரும்
வானிலும் மண்ணிலும் வளர்பிறை நிலவிலும்
வாத்சல்யம் நிறைந்துவிடும்
தானெனும் ஒன்றினைத் தேடவே யாவரும்
தரைமிசை வருகின்றோம்
தேனெனும் மந்திரம் திசைகளில் ஒலிக்கையில்
தீர்ந்து விடுகின்றோம்

மவுனத்தின் கருவில் நாதத்தின் ரூபம்
மலர்வதைக் காட்டுகிறாய்
தவமெனும் கனலில் கங்கையின் வேகத்
திமிறலைக் கூட்டுகிறாய்
சிவமெனும் அருளை சுடர்தரும் இருளை
சிந்தையில் நாட்டுகிறாய்
குவலயம் முழுதும் கருணையில் மலரும்
கணமொன்றை ஆக்குகிறாய்

இவரைப் பற்றி இன்னும் அறிந்திட………..
http://www.balarishi.org/

கடவுளின் சுவடுகள்

 புன்னை வனத்தொரு பூ மலர்ந்தால் -அதை
பிரபஞ்சம் எங்கோ பதிவுசெய்யும்
தன்னை உணர்ந்தோர் உயிர்மலர்ந்தால்-அதை
தெய்வங்கள் தேடி வணக்கம்செய்யும்
முன்னை வினைகளைக் கரைப்பதற்கும்-இனி
மேலும் மூளாதிருப்பதற்கும்
உன்னும் உயிரினில் அருள்சுடரும்-அதன்
உந்துதலால் தினம் நலம் நிகழும்
காலத்தின் கறைகள் கழுவவந்தோம்-செய்யும்
காரியம் துணைகொண்டு மலரவந்தோம்
மூலத்தின் மூலம் உணரவந்தோம்-நமை
மூடும் இருளினைத் தாண்டவந்தோம்
தூலத்தின் கூட்டினில் ஒளிப்பறவை-அதன்
தூக்கத்தைக் கலைத்திடும் கனவுகொண்டோம்
நீலத்தின் சுடரினில் நின்றுகொண்டு-வரும்
நேரக் கணக்குகள் கடக்கவந்தோம்
 தோணிகள் உலவிடும் நதியின்மிசை-சில
துடுப்புகள் கிடைக்கும் தொலைந்துவிடும்
பூணும் விருதுகள் பெருமைகளும்-சில
பொம்மைகள் போல்கையில் வந்துவிழும்
காணும் உயிர்கள் அனைத்திலுமே-அந்தக்
கடவுளின் சுவடுகள் காத்திருக்கும்
வீணாய் வளர்க்கும் பகைமையிலும்-இந்த
வாழ்வின் விசித்திரம் விளங்கிவிடும்
பெயரில் இருக்கும் பரவசமும்-அந்தப்
பெயரை வளர்க்கும் பெருவிருப்பும்
பெயரும் நாளொன்று வரும்பொழுதில்-மனம்
பெய்கிற மழைபோல் கரைந்துவிடும்
துயரும் மகிழ்வும் கற்பனையே-எனும்
துல்லிய உண்மை தெரிந்துவிடும்
மயங்கும் மதியின் வித்தையெல்லாம்-ஒளி
மலரடி பற்றிடத் தெளிந்துவிடும்

கண்ணகி குறித்தொரு கலகல சர்ச்சை

டிசம்பர் 2011 ஓம் சக்தி இதழில் கண்ணகி மானுடப்பெண் அல்ல என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அதனை எழுதியவர் பேராசிரியர் இராம.இராமநாதன் அவர்கள். அந்தக் கட்டுரையில் பேராசிரியர், கண்ணகி மானுடப்பெண் அல்லள் என்பதால் திருமணம் நடந்தாலும் கண்ணகியும் கோவலனும் இல்லற இன்பம் துய்க்கவில்லை என்பதாக ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

அவருடைய வாதங்களை ஓரோவழி தொகுத்து நோக்கலாம்.

1) மாநகர்க்கீந்தார் மணம் என்று கோவலன் கண்ணகி திருமணத்தை இளங்கோவடிகள் சொல்கிறார். எனவே அது ஊர்மெச்ச நடந்த திருமணமே தவிர உள்ளங்கள் கலந்த திருமணம் அல்ல.

2) கோவலனும் கண்ணகியும் சேர்ந்திருந்த காட்சியை கதிர் ஒருங்கிருந்த காட்சி போல என்கிறார் இளங்கோவடிகள். கதிரும் நிலவும் சேராது என்பதைத்தான் இளங்கோ உணர்த்துகிறார்.

3) பள்ளியறையில் கோவலன் அணிந்திருந்த தாரும் கண்ணகி அணிந்திருந்த மாலையும் கசங்கின என்கிறார் இளங்கோ. அப்படியானால் இருவரும் கூடுவதற்கான முயற்சி நடந்து
தோற்றிருக்க வேண்டும்.

4) கூடியிருந்தால் இருவரும் களைத்துப்போய் உறங்கியிருப்பார்கள்.கூடாததால்தான் கோவலன் மாசறு பொன்னே வலம்புரி முத்தே என்று பேசிக்கொண்டேயிருக்கிறான்.

5) சாலினித் தெய்வம் ஆவேசித்து இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி என்பதால் ஊரார் கண்களுக்கு கண்ணகி தெய்வமாகவே தெரிந்தாள்இது போன்ற “கருத்துக்கள்” அடங்கிய இந்தக் கட்டுரைக்கு நான் எழுதிய மறுப்பு 2012 ஜனவரி மாத ஓம்சக்தி இதழில் வெளியானது.

அன்புள்ள ஆசிரியருக்கு
வணக்கம்.

பேராசிரியர் திரு.இராம.இராமநாதன் அவர்கள் எழுதிய “கண்ணகி மானுடப்பெண் அல்ல” என்னும் கட்டுரை,பொறுப்பாசிரியரின் பலத்த பீடிகையுடன் டிசம்பர் 2011 இதழில் வெளியாகியுள்ளது.

முன்முடிவுகளுடன் சிலப்பதிகாரத்தை அணுகி, காவிய ஆசிரியரின் இயல்பான வெளிப்பாடுகளுக்கும் கட்டுரையாசிரியர் வலிந்து பொருள் கொண்டிருக்கிறார் “மாநகர்க்கீந்தார் மணம்” என்பது ஊர்மெச்ச நடந்த திருமணம் தானே தவிர ஊருக்காக நடந்த திருமணம் அல்ல.

காரைக்காலம்மையார் வரலாற்றைப் பாடுங்கால் தெய்வச் சேக்கிழார் “தளிரடிமென் நகைமயிலைத் தாதவிழ்தார் காளைக்குக் களிமகிழ் சுற்றம் கூரக் கல்யாணம் செய்தார்கள்” என்று குறிப்பால் உணர்தியிருப்பார். அது பொருந்தாத் திருமணம். கண்ணகி-கோவலன் திருமணம் அப்படியல்ல. அவர்கள் இருவரும் தீவலம் செய்வதைக் காண்பார் கண்கள் தவம் செய்திருக்க வேண்டும் என்கிறார் இளங்கோவடிகள்.

கண்ணகியின் விருப்பத்திற்குரிய கணவனாகவே கோவலன் இருந்ததை, “கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்” என்னும் சொற்றொடரால் அறியலாம்.

“கையற்று”என்ற சொல்லை கட்டுரையாசிரியர் பொருள்கொள்ளும் விதம் பொருந்தாது என்பதை அப்பாடலின் அடுத்த வரியே புலப்படுத்தும். “தீராக் காதலின் திருமுகம் நோக்கி” என்கிறார் இளங்கோவடிகள்.

“கதிர் ஒருங்கிருந்த காட்சி போல”என்பதோ ஒருபுடை உவமை. கதிரும் நிலவும் சேருமா என்ற கேள்வி இங்கே எழ வாய்ப்பில்லை. அவ்வாறாயின் கண்ணனை,”கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்”என ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் பாடுகிறாரே இது தவறா?

குறியாக்கட்டுரை என்பது துறவியாகிய இளங்கோவடிகளின் கவிக்கூற்றேயன்றி வேறல்ல.

கோவலன் கண்ணகி மாலைகள் கசங்கியது “கூடும் இன்பத்திற்கான முயற்சி”என்று பொருள் கொள்வது விசித்திரத்திலும் விசித்திரம். “மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு?கட்டில் மேலே நசுங்கத்தான்” என்றொரு திரைப்பாடல் கூட உண்டு.

கண்ணகியும் கோவலனும் பேசிக்கொள்ளவில்லையெனில்

” அளிய தாமே சிறு பசுங்கிளியே
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ”

என்று கோவலன் கூற்றாக இளங்கோவடிகள் பாட வேண்டிய அவசியமென்ன?

இருவரும் இணைந்து இன்பம் துய்த்ததை –

“தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி
வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள் ”

என்ற வரிகளால் இளங்கோ தெளிவுபடுத்துகிறார். கணவனை சற்றும் மறவாத அன்புடன் இல்லறக் கடமைகளைக் கண்ணகி ஆற்றி சில ஆண்டுகள் குடும்பம் நடத்தினாள் என்பது இளங்கோவடிகள் வாக்கு.

“மறப்பருங் கேண்மையோ டறப்பரி சாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
வுரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன விற்பெருங் கிழைமயிற்
காண்டகு சிறப்பின் கண்ணகி”
.
இந்த வாழ்க்கை நிலையில்லாத்தென்பதால் இருக்கும் போதே அனுபவிக்க வேண்டுமென்பது போன்ற வேகத்தில் இருவரும் இன்பம் துய்த்தனர் என்கிறார் இளங்கோவடிகள்.

“தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து – நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல்
நிலையாமை கண்டவர் போல் நின்று.

கூட்டம் நடந்திருந்தால் இருவரும் உறங்கியிருப்பார்களே என்று பேராசிரியர் சொல்வது வேடிக்கை. அது கூட்டத்துக்கு முந்தையதாகிய முன்னிகழ்வின் அங்கம்.(foreplay).

சாலினித் தெய்வம் ஆவேசித்து அவளை “கொங்கச் செல்வி குடமலையாட்டி” என்கிற இடத்தை வைத்துக் கொண்டு, “உலகில் மற்றவர்களுக்கெல்லாம் கண்ணகி தெய்வமாகவே தெரிவதாக அடிகள் சுட்டுவர் என்பது அடிப்படையே இல்லாத தகவல். சாலினித் தெய்வம் மட்டுமே சொல்வது எப்படி உலகத்தவர் எல்லாம் சொல்வதாகும்? கண்ணகி கோபத்துடன் வருவதைப் பார்க்கும் காவலன் பேசுவது அவளுக்குள் இருக்கும் தெய்வாம்சத்தை உணர்ந்ததன் விளைவல்ல.

இன்றும் கோபமுற்ற பெண்களை “பத்திரகாளி போல” என்கிறோம். ஊரார் அவளைத் தெய்வம் என்றது அவளுக்குள் இருந்தெழுந்த ஆவேசத்தின் எழுச்சி கண்டுதான். அதுவரை மானிடப்பெண்ணாக இருந்த கண்ணகி தன்னுள் இருந்த தெய்வாம்சத்தைப் படிப்படியாக உணர்கிறாள். அது வஞ்சிக் காண்டத்தில் முற்றுப் பெறுகிறது. கோவலன் இறப்பின் பின்னரே அந்தப் படிநிலை எழுச்சி காணப்படுகிறது. புகாரில் குடும்பம் நடத்தும்போது இயல்பான மானிடப்பெண்ணாகவே கண்ணகி இருக்கிறாள்.

கன்னிப் பெண்தான் கடவுளாக முடியும் என்கிற கருத்து பிற்போக்குத் தனமானது.கன்னிமைக்கும் கடவுட்தன்மைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. வாழ்வாங்கு வாழ்பவர்களை மற்றவர்கள் தெய்வமாக்குவார்கள். கண்ணகி அப்படி வாழ்ந்தவள். மற்றபடி கண்ணகிக்கு பேராசிரியர் செய்து முடித்திருக்கும் கன்னிமைப் பரிசோதனை ஆதாரமில்லாதது. அவசியமில்லாததும் கூட

மரபின்மைந்தன் முத்தையா

*******

 இந்தக் கட்டுரை வெளிவந்த பிறகு பேராசிரியர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.அவர் கேட்ட கேள்விகள்:

1) இளங்கோவடிகள்தான் சிலம்பை எழுதினார் என்று உங்களுக்குத் தெரியுமா?அதற்குக் கல்வெட்டுச் சான்று உண்டா?

2)இருவரும் கூடினார்கள் என்றால் ஏன் குழந்தை பிறக்கவில்லை?

3) இருவரும் கூடினார்கள் என்றால் கோவலன் ஏன் பேசிக் கொண்டிருந்தான்?

உரையாடலின் முடிவில்,”சாலமன் பாப்பையா என் மாணவர் தெரியுமா?”என்றார். “அப்படியா?” என்றேன். “நீங்கள் யாரிடம் சிலப்பதிகாரம் படித்தீர்கள்?” என்றார். “இளங்கோவடிகளிடம் படித்தேன்” என்றேன்

“ஓ! அப்படியானால் இது உங்கள் சொந்தக் கருத்து” என்று வைத்துவிட்டார்.

ஆனால் அவர் அதற்குமுன் சொன்ன நிறைவு வாசகம் என் உள்ளத்தைக் குளிர்வித்தது.“இது உங்கள் இளமையைக் காட்டுகிறது!!!!”

சாம்பல் வாசனை

பாம்பின் கண்களில் பதட்டம் பார்க்கையில்
பச்சைத் தவளையின் ஆறுதல் மொழியாய்
தீப்பற்றும் உன் தீவிரத்தின் முன்
முழக்கங்கள் முயன்று முனகவே செய்கிறேன்:
 காட்டு நெருப்பு கலைத்த கலவியில்
உக்கிரம் பரப்பி ஓடும் விலங்காய்
எல்லாத் திசையிலும் எரிதழல் பரப்பும் உன்
பார்வையில் எனக்கென பனியும் சுரக்கும்

அடுத்த விநாடியே அரும்பு கட்டும் –
புன்னகைக்குள்ளே புதையும் எரிமலை
சமதளமாகி சந்தனமாகி
எரிந்த சுவடுகள் எல்லாம் தணிந்திட
எழுந்து நதியாய் என்னை நனைக்கும்..
தேம்பும் எனனைத் தழுவுமுன் கைகளின்
சாம்பல் வாசனை சர்ப்பத்தை எழுப்பும்

நீங்கா நிழலின் நீட்டக் குறுக்கம்
தீரா வியப்பைத் தருவது போல்தான்
பரஸ்பர நிழல்களாய் படரும் நமக்குள்
நிகழ்ந்து கொண்டிருக்கும் நீட்டமும் குறுக்கமும்:

பகடைக் காயின் பக்கங்கள் போல
உருளும் கணங்களின் உன்மத்தம் தெறிக்க
இரவின் மௌனம் கடையும் ஒலியில்
திரளும் அன்பும் திரளும் சினமும்
உருகும் உயிரில் ஒளியை வழங்கும்

பாவை பாடிய மூவர்

மார்கழி மாதத்தின் மகத்துவங்களில் முக்கியமானவை அறிவால் சிவமேயாகிய மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், சூடிக்கொடுத்த  சுடர்க்கொடியாம் ஆண்டாள் பாடிக் கொடுத்த திருப்பாவையும். அவற்றின் ஆன்மத் தோய்வும் பக்தி பாவமும் அளவிட முடியா அற்புதங்கள்.  இந்து சமயத்திற்கு சைவமும் வைணவமும் இரண்டு கண்கள் எனில்  அந்தக் கண்களின் இரண்டு பாவைகளே திருப்பாவையும் திருவெம்பாவையும் எனலாம்.

“குத்து விளக்கெரிய, கோட்டுக்கால கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின்மீது
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா” 

என்னும் ஆண்டாளின் சொல்லோவியமும்,

“மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியில் புரண்டாள்” என்ற மணிவாசகரின் சொற்சித்திரமும்
அளிக்கும் அனுபவங்கள் பரவசமானவை. இந்த இரண்டு படைப்புகளிலும் ஊறித் திளைத்த உள்ளம் கவியரசு  கண்ணதாசனின் உள்ளம்.

“கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டுக் கண்ணன் வந்தான்”
என்று பாடியவர் அவர்.

ஆன்மீக மரபில் பிறந்து வளர்ந்தாலும் நாத்திக இயக்கத்தில் ஈடுபட்டு,  பின்னர் அங்கிருந்து விடுபட்டு,மீண்டும் ஆன்மீகத்தில் ஆழங்கால் பட்டவர் அவர்.

“நல்லறிவை உந்தனருள்
தந்ததென எண்ணாமல்
நாத்திகம் பேசிநின்றேன் 

நடைபயிலும் சிறுவனொரு
கடைவைத்த பாவனையில்
நாற்புறம் முழக்கி வந்தேன் 

கல்வியறிவு அற்றதொரு
பிள்ளையிடம் நீகொடுத்த
கடலையும் வற்ற விட்டேன் 

கருணைமயிலே உனது
நினவுவரக் கண்டதன்பின்
கடலையும் மீறிநின்றேன் ” என்பது கவியரசரின் வாக்குமூலம்.

சமய இலக்கியங்களில் இருந்த திளைப்பு அவருக்குள் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்ததன் விளைவாக திருப்பாவை,  திருவெம்பாவை ஆகியவற்றை அடியொற்றி அவர் படைத்ததே  தைப்பாவை. பாவை நோன்பு நோற்கும் பெண்களின் குரலாக திருப்பாவையும்  திருவெம்பாவையும் இருக்க,தைமகளாகிய பாவையிடம்  நேர்படப் பேசும் தொனியில் தைப்பாவை அமைந்திருக்கிறது  தமிழர் அகவாழ்வு,வீரம்,வேளாண்மையின் சிறப்பு அரசர் மாண்பு உள்ளிட்ட பல்வேறு பாடுபொருட்களைக் கொண்டது தைப்பாவை.

“தைபிறந்தால் வழிபிறக்கும்”என்பது போல தை மாதத்தில்  தமிழர்கள் நலனுக்கு வழிபிறக்கும் என்னும் உணர்வுடன் தைப்பாவையின் முதல் பாடல் தொடங்குகிறது.

“எந்தமிழர் கோட்டத்து
இருப்பார் உயிர்வளர
எந்தமிழர் உள்ளத்து
இனிமைப் பொருள்மலர
எந்தமிழர் கைவேல்
இடுவெங் களம்சிவக்க
எந்தமிழர் நாவால்
இளமைத் தமிழ்செழிக்க
முந்து தமிழ்ப்பாவாய்
முன்னேற்றம் தான்தருவாய்
தந்தருள்வாய் பாவாய்
தைவடிவத் திருப்பாவாய்
வந்தருள்வாய் கண்ணால்
வாழ்த்துரைப்பாய் தைப்பாவாய்”
என்பது தைப்பாவையின் முதல் பாடல்.
“மார்கழிக்குப் பெண்ணாக
மாசிக்குத் தாயாக
பேர்கொழிக்க வந்த
பெட்டகமே”
என்று தைமகளை வர்ணிக்கிறார் கவியரசர்.

பொங்கல் வைக்கும் நாளில் விடிய விடிய அறுவடை நடந்து  வேளாண்குடிப் பெருமக்களின் வீடுகள் பரபரப்பாக இயங்குகின்றன.  காளைமாடுகள் இழுத்துவரும் வண்டிகளிலிருந்து நெல்மூட்டைகள. இறக்கப்படுகின்றன. நெல்மணிகள் களஞ்சியங்களில் கொட்டப்  படுகின்றன.வளைக்கரங்கள் சலசலக்க பெண்கள் படையலிடத்  தயாராக வாழையிலைகளை விரித்து வைக்கிறார்கள்.  இன்னொருபுறம் தாழை மடல்களையும் பின்னுகிறார்கள்.  விடிந்த பிறகு தயிர் கடைய முடியாதாகையால் கதிர்  கிளம்பும் முன்னே தயிர் கடைகிறார்கள். அதன்பிறகு  சேவல் கூவுகிறது.

குழந்தைகள் பொங்கலோ பொங்கல்  என்று உற்சாகக் குரலெழுப்புகிறார்கள். இத்தனை சம்பவங்களையும்  பாட்டுப் பட்டியலாகவே கவியரசர் வழங்குகிறார்.

“காளை மணியோசை களத்துமணி நெல்லோசை 
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக் குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ!
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலெழுவாய் தைப்பாவாய் 

தன் மனம்கவர்ந்த காதல் பெண்ணைத் தீண்ட முற்படும் போது வேலை  நிமித்தமாய் பிரிந்து போகிறான் தலைவன்.பிரிவுத் துயரில்  வாடுகிறாள் தலைவி.பிரிந்தவர் மீண்டும் தைமாதத்தில் சேர்வார்கள்  என்று தைமகளையே தலைவிக்கு ஆறுதல் சொல்ல வேண்டுகிறார்.

“வாளைத் தொடு காளை
வடிவைத் தொடு வேளை
வேலைக்கென ஓலை
விரைவுற்றது சென்றான்;
நூலைத் தொடும் இடையாள்
நோயுற்றனள் பாராய்
வேலைப்பழி விழியாள்
வியர்வுற்றனள் காணாய்
ஆலந்தளிர்த் தத்தை
அமைவுற்றிட இத் தை
காலம்வரல் கூறாய்
கனிவாய தைப்பாவாய்” 

சங்க இலக்கியச் செழுமரபின் நெறிநின்ற இப்பாடல் கவியரசரின்  ஆளுமைக்கு சான்று.அதேநேரம் அவர் பயின்ற சமய இலக்கியங்களாகிய  பாவைப் பாடல்களின் தாக்கம் தலைப்பில் மட்டுமின்றி தைப்பாவையை  பாவாய் என்றழைக்கும் உத்தியில் மட்டுமின்றி தைப்பாவை கவிதை  வரியிலும் எதிரொலிக்கிறது.

ஆண்டாள், திருப்பாவையில் கண்ணனை வர்ணிக்கும்போது
“கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்” என்று பாடுகிறார்.
கதிர்போன்ற ஒளியும் நிலவுபோன்ற குளுமையும் ஒருங்கே கொண்டவன்
கண்ணன் என்பது உரையாசிரியர்கள் விளக்குகிற உட்பொருள்.
இந்த நயத்தை உள்வாங்கிய கவியரசர் கண்ணனின் அந்தத் தன்மையை
தமிழ்ச்சமுதாயத்தின்மேல் ஏற்றிப் பாடுகிறார்.

“எங்கள் சமுதாயம்
ஏழாயிரம் ஆண்டு
திங்கள்போல் வாழ்ந்து
செங்கதிர்போல் ஒளிவீசும்” என்கிறார்.

தமிழ் மன்னர்கள் பற்றிய சுவைமிக்க பதிவுகளையும்  தைப்பாவையில் கவிஞர் எழுதுகிறார்.குறிப்பாக சேரமன்னன் பற்றிய கவிதை மிக அழகான ஒன்று
“இருள்வானில் நிலவிடுவான்
நிலவாழ்வை இருளவிடான்
செருவாளில் கை பதிப்பான்
கைவாளை செருவில்விடான்
மருள்மானை மனத்தணைவான்
மனமானை மருளவிடான்
தரும்சேரன் பெற்றறியான்
தழைக்கும்கோன் வஞ்சியிலும்
நிறையாயோ உலவாயோ
நிலவாயோ தைப்பாவாய்”


சங்க இலக்கிய சாரத்தையும் சமய இலக்கிய உத்தியையும் ஒருசேர  வெளிப்படுத்தும் தைப்பாவை, கவியரசு கண்ணதாசனின் முத்திரைப்  படைப்புகளில் முக்கியமானது

ஆதியோகி வந்தமர்ந்த ஆலயம்

ஆதியோகி வந்தமர்ந்த ஆலயம்- நம்
ஞானயோகி ஆக்கிவைத்த ஆலயம்
ஜோதியாக நின்றொளிரும் ஆலயம்- இதைத்
தேடிவந்து சேர்பவர்க்கு ஆனந்தம்
யோகமென்னும் கொடைநமக்குத் தந்தவன்-இந்த
தேகமென்றால் என்னவென்று சொன்னவன்
ஆகமங்கள் தாண்டியாடும் தாண்டவன் -இந்த
ஆதியோகி அனைவருக்கும் ஆண்டவன்
சத்குருவின் சக்திமிக்க தந்திரம்- அட
சொல்லிச் சொல்லித் தீரவில்லை மந்திரம்
 பக்திகொண்டு பொங்கியதே நம்மனம்- அந்தப்
பரமனுக்கும் இங்குவரச் சம்மதம்
சாம்பசிவம் நீலகண்டன் என்றவன் -கரும்
பாம்பின்நஞ்சில் பால்கலந்து உண்டவன்
வீம்புகொண்டு மீண்டும்மண்ணில் வந்தவன் – நாம்
வாழ்வதற்குக் காரணங்கள் தந்தவன்
கண்ணெதிரே கடவுள்வந்த சாகசம்- அதைக்
காட்டுவிக்கும் கருணைவேறு யார்வசம்?
எண்ண எண்ண விந்தை அந்த அற்புதம்-என்றும்
இன்பம் இன்பம் சத்குருவின் பொற்பதம்

கமலத்தாள் கருணை

தேனமுதம் அலைவீசும் தெய்வீகப் பாற்கடலில்
வானமுதின் உடன்பிறப்பாய் வந்தாய்-
வானவரின் குலம்முழுதும் வாழவைக்கும் மாலவனின்
வண்ணமணி மார்பினிலே நின்றாய்
சீதமதி விழிபதித்து செல்வவளம் நீகொடுத்து
சோதியெனப் புதுவெளிச்சம் தருவாய்
வேதமுந்தன் வழியாக வெண்ணிலவு குடையாக
வளர்திருவே என்னகத்தே வருவாய்
மூன்றுபெரும் அன்னையரின் மூளுமெழில் கருணையிலே
மண்ணுலகம் இயங்குதம்மா இங்கே
தோன்றுமுங்கள் துணையிருந்தால் தோல்வியென்றும் வாராது
தொட்டதெல்லாம் துலங்கிடுமே நன்றே
கலைமகளும் வார்த்தைதர அலைமகள்நீ வாழ்க்கைதர
கவலையெலாம் நீங்கிடுமே நொடியில்
மலைமகளும் சக்திதர முயற்சியெலாம் வெற்றிதர
மணிவிளக்கை ஏற்றிவைப்பாய் மனதில
சேர்த்தநிதி பெருகுவதும் செம்மைபுகழ் வளருவதும்
செய்யவளே உன்கருணை தானே
கீர்த்தியுடனவாழுவதும் கருதியதை எய்துவதும்
கமலத்தாள் கருணையிலே தானே
கனகமழை பெய்வித்த காருண்ய மாமுகிலே
கண்ணார தரிசித்தேன் கண்டு
தனமுடனே கனம்நிரம்பி மனம்மகிழச் செய்திடுவாய்
தாங்கிடுக தளிர்க்கரங்கள் கொண்டு

அன்னபூரணி-( நவராத்திரி – 8)

தள்ளிநிற்கும் படித்துறையைத் தாவித்தொடும் கங்கைநதி
தாளமிடப் பாடுபவளாம்
அள்ளிவைத்த பூக்களிடை உள்ளுறையும் விஸ்வேசன்
உள்ளமெங்கும் ஆடுபவளாம்
கள்ளமுற்ற நெஞ்சினையும் வெண்பளிங்காய் மாற்றியதில்
கோயில்கொண்டு வாழுபவளாம்
விள்ளலன்னம் கையில்விழ விம்மிவிம்மி நெஞ்சமழ
வினைதீர்க்கும் அன்னையவளாம்
பேசுமொழி உள்ளிருந்து பாட்டின்பொருளாயிருந்து
பூரணத்தை சுட்டுபவளாம்
வீசுதென்றல் ஊடிருந்து சுவாசத்திலே உட்புகுந்து
சக்கரங்கள் தட்டுபவளாம்?
ஆசையின்மேல் கனலுமிட்டு ஆட்டமெலாம் ஓயவிட்டு
ஆனந்தமே நல்குபவளாம்
காசிஅன்னபூரணியாம் தேசுடைய பேரழகி
காவலென்று காக்கவருவாள்
அத்தனை உயிர்களுக்கும் அன்னமிடும் தாயவளை
அண்டியபின் என்ன கவலை?
பித்தனை உருகவைக்கும் பேரழகி உள்ளிருந்து
பேசுவதே இந்தக் கவிதை
முத்தியைத் தரும்தருணம் முந்திவந்து கைகொடுக்கும்
மோகினியின் கோயில் நுழைவோம்
எத்தனை இழைத்தவினை அத்தனையும் துகளாக்கும்
யாமளையின் பாதம் தொழுவோம்
கைமலர்கள் நோகயிந்த வையமெல்லாம் படியளக்கும்
காசிஅன்னபூரணேஷ்வரி
மைவிழிகள் புன்னகைக்க உய்யுமொரு மந்திரத்தை
மெல்லச்சொல்லும் மந்த்ரேஷ்வரி
நெய்விளக்கின் தீபவொளி நெக்குருகச் செய்திருக்க
நிற்பவளே காமேஷ்வரி
மெய்யெனுமோர் பொய்யுடலின் மோகமெல்லாம் தீர்த்தருள்வாய்
மஹாமாயே ஜகதீஷ்வரி