குற்றாலக் கதகதப்பில்

நீரலையின் சாட்டைகொண்டு ஆடுகிறாள் அன்னை
நேரவரும் யாவரையும் சாடுகிறாள் அன்னை
பேரொலியின் தாளமிட்டுப் பாடுகிறாள் அன்னை
பாய்ந்துவந்து எனையணைக்கத் தேடுகிறாள் அன்னை

ஆடுகிறாள் அன்னை-அவள் -தேடுகிறாள் என்னை

வான்கருணை அருவியாக வந்து இறங்கும்-அதில்
ஊன்நனைந்து உயிர்நனைந்து உள்ளம் மயங்கும்
நான்தொலைந்து போக அங்கே நேரம் அரும்பும்
தேன்பொழிந்து தேன்பொழிந்து தேங்கி நிரம்பும்

நேரம் அரும்பும்-தேன் -தேங்கி நிரம்பும்

வினைகரைக்கும் கருவியைத்தான் மேனியென்கிறோம்
விரைந்துவிழும் அருவியைத்தான் ஞானியென்கிறோம்
கனவினிலே காணும் இன்பம் கானலென்கிறோம்
கண்னெதிரே விழும் அருவி காளியென்கிறோம்

ஞானியென்கிறோம்-அருவி-காளியென்கிறோம்

நீர்த்திரளின் அற்புதம்தான் நமது குற்றாலம்-சிவன்
ஊர்த்துவத்தின் நடனத்திலே அருவி பொற்றாளம்
கோர்த்துவைத்த வேதமிங்கே கோடி கற்றாலும்
ஆர்த்துவரும் அருவிமுன்னே அறிவு தாம்பூலம்

நமதுகுற்றாலம்-அது சிவனின் பொற்றாளம்

காசிக்காற்று

காசிநகரில் கங்கை வீசும் நதியலைகள்
பேசும் மொழிநமசி வாயம்
கீசுகீசெனவே பூசலிடுங்கிளிகள்
பாஷை அதுநமசி வாயம்
ஆசைவிடும்தருணம் ஆகிவரும் மரணம்
வாசல் வரும்நமசி வாயம்
பாசம் விடும்மனதும் பாரம் சுடும்நொடியில்
ஈசன் குரல்நமசி வாயம்

இமைகள் கதவடைய இதயம் மடையுடைய
அமைதி அதுநமசி வாயம்
சுமைகள் சிறகசைய சுடலை விறகெரிய
சுடரும் ஒளிநமசி வாயம்
இமயம் மனவெளியில் எழும்பும் ஒருநொடியில்
நிரம்பும் பனிநமசி வாயம்
சமயம் அமைந்துவர சுயங்கல் உணர்ந்தவுடன்
கனியும் கனிநமசி வாயம்

கடலில் புயலசைய திசைகள் அதிர்ந்தசைய
நடன கதிநமசி வாயம்
இடர்கள் மனம்கடைய தொடரும் வலிநிறைய
இழையும் சுகம்நமசி வாயம்
தடைகள் உடைந்துவிழ விழிகள் தொடர்ந்துஅழ
நிகழும் அருள்நமசி வாயம்
கடையன் இவன்வினைகள் முழுதும் தகர்ந்துவிழ
படரும் இருள்நமசி வாயம்

சோடா தமிழர் பானமா ?

நண்பர் சுகா எழுதிய கட்டுரை ஒன்றைக் குழுமத்தில் படித்த நண்பர் துகாராம்,
சோடா தமிழர் பானமா என்ற கேள்வியை எழுப்பினார்.அது தமிழர் பானமே,
கோலி சோடாவில் அடைபட்டிருப்பது தமிழர் மானமே என்று நிறுவி நான் எழுதிய ஆய்வுக் கட்டுரை(?).
இது தொடர்பாக வழங்கப்படும் கவுரவ டாக்டர் பட்டங்கள் கண்டிப்பாக ஏற்கப்பட
மாட்டாது

ஓடா நீர்நிலை உலர்மரக் கோடை
பாடாப் புள்ளினம் பயிலாப் புல்வெளி
நீடார் வெம்மை நீங்கிடத் தமிழர்
சோடா பருகிச் சுகம் பெறுவாரே”

என்னும் பழம்பாடல் வழியே, சோடா தமிழர் பானம் என்று நிறுவலாம்.

“ஆயுங்காலை அடர்ந்திடு குடுவையில்
வாயு கலந்த வெற்று நீரினைக்
கோயமுத்தூர்க் கோலி அடைத்து
வாயில் கவிழ்ப்பர் வண்டமிழ் மரபினர்”

என்று கோவைக்கலியிலும் ஒரு பாடல் காணப்படுகிறது

இனி,வருங்காலக் குறிப்புகளை முன்கூட்டியே பாடிய கிளிப்பாணி பித்தர் சுவடிகளில்

“தென்னாட்டவரும் தன்னிலை திரிந்து
தன்னாட்டவரின் தூநீர் மறந்து
பன்னாட்டவரின் பானங்கலந்து
என்னாட்டங்கள் இங்காடுவரோ”
என்று பாடியிருப்பதால்

“பன்னாட்டவரின் பானங்கலந்து” என்பது மதுவில் கலக்கும் சோடா கூட வெளிநாட்டுத் தயாரிப்பாக இருக்கும் என்ற குறிப்பைச் சுட்டுவதாய் உய்த்துணரலாம்.

இன்னுந் தேடினால் சோடா தமிழர் பானமே என்று முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத்தக்க வகையில் தரவுகள் கிடைக்கும் .
மிக முக்கியமான தகவல் என்னவென்றால், சுகா கட்டுரை படித்து துகாராம் இந்தக் கேள்வியை எழுப்புவார் என்பதையும் கிளிப்பாணிப்பித்தர் முன்கூட்டியே பாடியுள்ளார்.

“தகாதன செய்யும் தன்மையன் ஒருவன்
சுகாவெனும் பெயரினன் சுடர்மின் சுவடியில்
மிகாநிலை மிகுந்து முன் புனை உரைக்கு
துகாராம் வினாவுந் துலங்கிடுமாறே”

என்ற பாடல் எதேச்சையாகக் கண்ணில் பட்டபோது இறும்பூது எய்தினேன்

கங்கைக் கரையினிலே

என் வீட்டுக்காரி தீவிரமான மாரியம்மன் பக்தை சார்!”
என்னைப்பார்க்காமல், டைமண்ட் ஹோட்டல் அறையிலிருந்த நிலைக்கண்ணாடியைப்
பார்த்தபடியே மெல்லிய குரலில் சொன்னார் நண்பர். நிலைக்கண்ணாடி மேசையில்
வைக்கப்பட்டிருந்த பையில்தான் அவருடைய மனைவியின் அஸ்தி இருந்தது.காசி
டைமண்ட் ஹோட்டலுக்கு அன்று மதிய விமானத்தில் தான் வந்து
இறங்கியிருந்தோம்.மறுநாள் காலை அஸ்தி கரைக்க ஏற்பாடாகியிருந்தது
காசிக்கு இவ்வளவு விரைவில் மீண்டும் போகக்கூடிய வாய்ப்பு நேருமென்று
எதிர்பார்க்கவில்லை.ஆனால் வருத்தம் கலந்த வாய்ப்பு.நண்பருக்கும் எனக்கும்
ஒரே நாளில் திருமணம் நடப்பதாக இருந்தது.அவருக்குக் கோவையில்-எனக்கு
மதுரையில்.இரு திருமணங்களிலும் கவிஞர் வைரமுத்து கலந்துகொள்ள
வேண்டியிருந்ததால் நான் என் திருமணத்தை ஒருநாள் ஒத்திப் போட்டேன்.
நண்பர் சொந்த மாமன் மகளை மணந்தார். சேலத்தில் பல இடங்களில் புகழ்பெற்ற
இனிப்பகம் நடத்தி வருபவர் அவர்.
2009 ஆகஸ்ட்டில்அவருடைய மனைவி கோவையில் அம்மா வீட்டிற்கு வந்த இடத்தில்
திடீர் மரணமடைந்தார்.காரியங்கள் முடிந்ததும் அஸ்தியைக் கரைக்க காசி செல்ல
விரும்பினார் நண்பர்.

“சேலம் கோட்டை மாரியம்மன் மேலே அவளுக்கு ரொம்ப பக்தி சார்.அவ
அங்கே இருந்த வரைக்கும் அந்த அம்பாள் பார்த்துக்கிட்டான்னு அவ ஃபிரண்ட்ஸ்
எல்லாம் நம்பறாங்க” நிலைக்கண்ணாடியில் தெரிந்த நண்பரின் முகத்தையே
மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தபெண்ணின் மரணம் நிகழ்ந்தது கூட சக்தி நர்ஸிங் ஹோமில்தான்.தன் இஷ்ட
தெய்வத்தின் மடியில்தான் கண்மூடியிருக்கிறார் என்று ஆறுதலாய் சொல்லத்
தோன்றியது.சொல்ல வேண்டாமென்றும் தோன்றியது.
“காசியிலே அஸ்தி கரைச்சா காசியிலேயே மரணமடைந்ததற்கு சமானம்.அந்த
அம்மாவுக்கு மறுபிறவி கிடையாது.”
கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் சொன்ன வார்த்தைகள் நண்பருக்கு ஆறுதலாக
இருந்தன.காசியில் வந்திறங்கிய கையோடு கனபாடிகளை சந்தித்தோம். பெரிய
இடத்துப் பரிந்துரையுடன் அவரைக் கோவையிலிருந்தே தொடர்பு கொண்டிருந்தோம்.
“காலமே ஏழரைக்கெல்லாம் வந்துடுங்கோ”என்று சொல்லியிருந்தார்
கனபடிகள்.அவருக்குப் பூர்வீகம் சுவாமிமலை.காசியில் அவர்,அவருடைய அண்ணா
மற்றும் வாரிசுகள் ஒரு வைதீக சாம்ராஜ்யமே நடத்துகிறார்கள்.

அவர் வீட்டு வரவேற்பறையில் உள்ள பெரிய புகைப்படத்தில் சிவாஜி கணேசன்
குடும்பத்துடன் கங்கைக்கரையில் அமர்ந்திருக்க கனபாடிகள்
பூஜை நடத்திக் கொண்டிருந்தார்.மற்ற புகைப்படங்களில்,சங்கர் தயாள் சர்மா,
முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கனபாடிகளுக்குப் பொன்னாடை
போர்த்திக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் சரியாக ஏழரைக்குப் போனபோது கனபாடிகள் வீட்டுத்திண்ணையில்
வீற்றிருக்க நாவிதர் சவரம் செய்து கொண்டிருந்தார்.பூஜைக்கான ஆயத்தங்கள்
செய்யப்பட்டிருந்தன.
கனபாடிகளின் அண்ணா பிள்ளை சிவக்குமார் தலைமையில் புரோகிதர்கள் தயாராக
இருந்தனர்.சிவக்குமார்,அமெரிக்காவில் உயர்பதவியில் இருந்தவர்.
இப்போது காசியில் பலரை உச்ச பதவிக்கு வழியனுப்பும் “காரியத்தில்”
இருக்கிறார்.

கங்கைக்கரையில் மணிகர்ணிகா காட் அருகே புரோகிதர்கள் காரியத்திற்கு
உட்கார்ந்தார்கள்.பெண்குரலொன்று மெல்லென்றொலிக்க திரும்பிப்பார்த்தேன்.
கன்னங்கறுத்த இளம்பெண் ஒருத்தி. மலர்களும் அகல்களும் அடங்கிய
கூடையை இடக்கரத்தால் இடையில் ஒடுக்கிக் கொண்டு அஸ்தி வைக்கப்பட்டிருந்த
பையை நோக்கி வலக்கையை நீட்டி புரோகிதர்களிடம் ஏதோ சொல்லிக்
கொண்டிருந்தாள். மெலிந்த தேகம். கண்கள் இரண்டும்
ஒளித்துண்டுகள்.முக்காடிட்டிருந்தாள்.கால்களில் செருப்பில்லை.அவள் குரலை
புரோகிதர்கள் பொருட்படுத்தவில்லை.கண்களைத் திருப்பிக் கொள்ள முடியாத
ஆகர்ஷம் அவளிடம் இருந்தது.

காரியம் முடியும் வரை அதே பகுதியில் உலவிக் கொண்டிருந்தாள்.சடங்குகளை
மேற்பார்வை பார்க்கும் தோரணை அவளிடம் இருந்தது.நண்பர் முதல்நாள் இரவு
சொன்ன விஷயம் என் நினைவுக்கு வந்தது.
“சேலம் கோட்டை மாரியம்மன் மேலே அவளுக்கு ரொம்ப பக்தி சார்.அவ
அங்கே இருந்த வரைக்கும் அந்த அம்பாள் பார்த்துக்கிட்டான்னு அவ ஃபிரண்ட்ஸ்
எல்லாம் நம்பறாங்க”
எனக்குள் மெல்லிய நடுக்கம் பரவியது.மனதுக்குள் அனிச்சையாய் மலர்ந்தன
வரிகள்:

கைகளிலே மலரேந்தி காளி வந்தாள்
கங்கைநதிக் கரையோரம் நீலி வந்தாள்
மைநிறத்துப் பேரழகி நேரில்வந்தாள்
மலரடிகள் நோகும்படி அருளவந்தாள்

ஓடமெல்லாம் ஓய்ந்திருந்த நதியோரம்
வேதமொழி முழங்குகிற கரையோரம்
தேகந்தனை இழந்தமகள் செல்லும்நேரம்
தேவதேவி அருகிருந்தாள் வெகுநேரம்

மங்கையிவள் வாழ்ந்திருந்த விதம்பார்த்து
கங்கையிலே அவள்கரையும் தினம்பார்த்து
எங்களன்னை நேரில்வந்தாள் இடம்பார்த்து
எங்குமவள் ஆகிநின்றாள் ஒளிபூத்து

காரியங்கள் முடிந்ததும் அந்தப்பையை கங்கையில் நனைத்து அந்தப் பெண்ணிடம்
கொடுத்தேன்.கூடவே நீட்டிய நூறு ரூபாய்த்தாளை அலட்சியமாக வாங்கிக்
கொண்டு,பையை மட்டும் பத்திரப்படுத்திக் கொண்டு சிறு தலையசைப்போடு
நகர்ந்தாள் அவள்.

கலசத்தில் இருந்த ஒன்பதுவாசற் பையின் எச்சம் சிறிது நேரத்தில் கங்கையில்
கரைந்தது.எல்லாம் முடிந்தது

இப்படித்தான் ஆரம்பம்-5

எத்தனையோ குளறுபடிகளுக்கு நடுவிலும் கவியரசு கண்ணதாசன் நினைவு மன்றம் முறையாகவே
கட்டமைக்கப்பட்டிருந்தது.கவியரங்கிற்குக் கோமகனை அழைத்து வந்தவரும், கண்ணதாசன் விழாக்களுக்கு தாராளமாக செலவுசெய்தவரும்/செய்பவருமான அந்த குறுந்தாடிக்காரர் கிருஷ்ணகுமார், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வலம்புரி ஜான் அவர்களை மன்றத்தின் சிறப்புத் தலைவராக விளங்கக் கோரி ஒப்புதலும் பெற்றிருந்தார்.

நான் ஒரு பிரபலத்தை சிறப்பாலோசகராகத் திகழ ஒப்புதல் பெற்றுத் தருவதாக சொன்னதோடு
ஒப்புதலும் வாங்கிவிட்டேன்.அந்தப் பிரபலம்தான் சுகிசிவம் அவர்கள். கோவையில் இராமநாதபுரம் என்றொரு பகுதி.அங்குள்ள வேல்முருகன் கோவிலில் கந்தர் சஷ்டி விழாவில் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்த வருவார்.தொடர்ந்து போய்க் கேட்பேன்.குறிப்புகள் எடுப்பேன்.
இதுமாதிரியான கூட்டங்களுக்குப் போகும்போதெல்லாம்,”நாமொரு பள்ளி மாணவன்.பெரியவர்கள்
சொற்பொழிவைக் கேட்க வந்திருக்கிறோம்”என்று எனக்குள் இருக்கும் அம்பி முனகுவான்.”அதெல்லாம் இல்லை!நம் சக பேச்சாளர் வந்திருக்கிறார்.இவரை இங்கிருக்கும் யாருக்கும் தெரியாது.நாம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும்”என்று எனக்குள் இருக்கும் அந்நியன் முழக்கமிடுவான்.அப்போது என்னிடம் இரண்டு செட் பட்டு ஜிப்பாக்கள் இருந்தன.பட்டு ஜிப்பா குர்தாவில் கிளம்புகிறேன் என்றால் கூட்டம் கேட்கப் போவதாகப் பொருள்.எட்டு முழம் வேஷ்டி,மடித்துவிடப்பட்ட முழுக்கை சட்டையோடு கிளம்பினேன் என்றால் கூட்டம் பேசப்போவதாகப் பொருள்.

கூட்டம் கேட்கப் போகும் இடங்களில் எனக்குள் இருக்கும் அந்நியன் செய்யும் அலம்பல்களைப் பார்த்து,பேச்சாளர்கள்,
என்னை அமைப்பாளர்கள் வீட்டுப் பிள்ளை என்று எண்ணிக் கொள்வார்கள்.அமைப்பாளர்களோ பேச்சாளருக்கு ரொம்ப வேண்டியவர் போலிருக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள்.இந்த பில்ட் அப்புக்கு தன்னையும் அறியாமல் பெரிதும் துணை போனவர் சுகிசிவம்தான்.
அவர் பேச்சை ஆர்வமாக ரசித்துக் கேட்பதைத் தொடர்ந்து கவனித்து வந்தவர், தன் வழக்கத்திற்கு மாறாக என்னைப் பார்த்து புன்னகைக்கவெல்லாம் ஆரம்பித்தார்.
அமைப்பாளர்களுக்கே அதெல்லாம் அப்போது கிடைக்காது. எனவே நான் அவருக்கு ரொம்ப வேண்டியவன் என்று எல்லோரும் நினைக்கத் தொடங்கினார்கள்.இரண்டு மூன்று நாட்களிலேயே
மேடையில் அவர் அமர்ந்தவுடன்,கூப்பிடு தூரத்தில் நிற்கும் என்னையழைத்து காதில் ஏதோ சொல்வார்.நான் கம்பீரமாகத் தலையசைத்து விட்டு அவர் காதுகளில் எதையோ சொல்லிவிட்டு மேடைக்குப் பின்னால் போய்விடுவேன்.
உண்மையில்,தனக்கு சோடா வேண்டும் என்றுதான் கேட்டிருப்பார்.ஆனால் நான் செய்யும் தோரணையோ,அவர் ஏதோ கந்தபுராணத்தில் சந்தேகம் கேட்ட மாதிரியும் நான் விளக்கம் தந்த மாதிரியும் இருக்கும்.
இந்தப் பழக்கத்தை வைத்துக் கொண்டு அவரிடம் பேசி சிறப்பாலோசகராக விளங்க ஒப்புதல் வாங்கி விட்டேன்.வலம்புரி ஜானின் ஒப்புதல் கடிதம் வரும்முன்னே இவர் ஒப்புதல் வந்துவிட்டதால் லெட்டர் பேடில் சிறப்பாலோசகர்; சொல்லின் செல்வர் சுகிசிவம் என்று அச்சிட்டிருந்தோம்.வலம்புரி ஜானின் பதில் கடிதத்தில்.”நண்பர் சுகிசிவத்தை நலம்கேட்டதாகச் சொல்லுங்கள்”என்றொரு வரியும் இருந்தது.அதைக்காட்டியதும் சுகிசிவம் முகத்தில் ஆச்சரியம்.அதற்கான காரணத்தை அவரே சொன்னார்.
அதற்கு சில ஆண்டுகள் முன்பாகத்தான் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்திருந்தது.அதில்
நடைபெற்ற வழக்காடு மன்றத்தில் இருவரும் நேருக்கு நேராக மோதிக் கொண்டிருந்தார்கள்.அபோதுதான் வழக்காடுமன்றங்களில் அணிக்கு ஒருவர் என்ற நிலை மாறி,
ஒரு வழக்கறிஞர் ,துணையாய் ஒர் இளம் வழக்கறிஞர் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருந்தனர்.ஓரணியில் சுகிசிவம்,பேராசிரியை இளம்பிறை மணிமாறன்.எதிரணியில் வலம்புரிஜான்,புலவர் இந்திரகுமாரி.நடுவர்,பேரறிஞர்.எஸ்.இராமகிருஷ்ணன்.

“கம்பராமாயணத்தில் தமிழுணர்வு இருக்கிறது.மறுப்பவர்கள் குற்றவாளி” என்பது தலைப்பு.வலம்புரிஜான்,தமிழுணர்வு இருப்பதாய் சொல்கிறது.சுகிசிவம் அணி மறுத்துப் பேச வேண்டும்.எனவே
நிகழ்ச்சி அமைப்பின் படியும் வலம்புரி அணியே ஆளுங்கட்சி.அரசியலிலும் அவர் அப்போதுதான் அதிமுக வந்திருந்தார்.
வலம்புரி ஜான் பேசத் தொடங்கினார்.சீதை அன்னம்போல் அசைந்து வருகிறக் ஆட்சியைக் கம்பன் வருணிக்கும் பாட்டை வைத்துக் கொண்டு,அவருடைய பாணியில் “அன்னம் அசைகிறது!
அழகாக அசைகிறது’ என்றெல்லாம் வர்ணிக்க அரம்பித்ததும்,சுகிசிவம் எழுந்து,’அது மிதிலாபுரியைச் சேர்ந்த வடநாட்டு அன்னம்!இதிலே தமிழுணர்வு எங்கே இருக்கிறது ” என்றதும் ஒரே ஆரவாரம்.உடனே புலவர் இந்திரகுமாரி எழுந்து “சுகிசிவம் நாகாக்க வேண்டும் ! நாங்கள் ஆளுங்கட்சி” என்று இரண்டு அர்த்தங்களில் சொல்ல,அதற்கு சுகிசிவம் ஒரே அர்த்தத்தில்”நீங்கள் இப்போதுதான் அந்தக்கட்சிக்கு வந்திருக்கிறீர்கள்.அங்கே நிலையாக இருப்பீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் ‘ என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.

போதாக்குறைக்கு சுகிசிவம் அணிக்கு சாதகமாகத் தீர்ப்பளித்த பேராசிரியர் இராமக்கிருஷ்ணன்,
“ஜெயித்திருக்க வேண்டிய தனது கட்சியைத் தோற்கடித்த பெருமை வலம்புரி ஜானையே சாரும்”
என்று வெளிப்படையாகச் சொல,வலம்புரியார் தன்மீது பகை பாராட்டியிருக்கக் கூடும் என்பது சுகிசிவம் அவர்களின் கணிப்பு.ஆனால் வலம்புரியர்,’அரசியலிலே இதெல்லாம் சகஜமப்பா”என்று அந்த சம்பவத்தை அங்கேயே மறந்திருந்தார்.

இத்தகைய பின்புலங்களுடன் உருவான கண்ணதாசன் மன்றம்,தன் வளர்ச்சி நிதிக்காக மை டியர் மாமா நாடகம் நடத்தியது.நாடகம் நடைபெறும் முன்பே,கடும் கருத்து வேறுபாடு காரணமாக ரவி மன்றத்திலிருந்து விலகினார்.அவருடைய அலுவலகத்தில் இயங்கிய மன்றம்,பழையூரில் கல்விச்சங்கம் அருகே பாழடைந்த மாடிக் கட்டிடம் ஒன்றில் புதிதாக வந்த அந்த இரட்டைப்பட்டம் வாங்கியவர் அறையில் இயங்க ஆரம்பித்தது.

சிவகங்கைச்சீமையில் கவியரசு கண்ணதாசன்,”விடியும் விடியும் என்றிருந்தோம்! அது முடியும் பொழுதாய் விடிந்ததடா!”என்றொரு பாடல் எழுதியிருப்பார்.கண்ணதாசன் மன்றத்தைப் பொறுத்தவரை,அந்த நாடகம் நடந்த நாள் அப்படித்தான் விடிந்தது.பெருமளவில் பணக்கையாடல் நடந்தது.லூஸ்மோகன் முழுப்பணம் தந்தாலொழிய மேடையேற மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.நகைச்சுவை நாடகம் தொடங்கும் முன்னால் திரைக்குப் பின்னே ஒரு சோக நாடகமும் கண்ணீர்க் காட்சிகளும் நடந்து கொண்டிருந்தன.என் வகுப்புத்தோழன் விஜயானந்துக்கும்
எனக்கும் இதில் நடந்த ஊழல்கள் பற்றி ஒன்றும் தெரியாது.விஜயானந்தின் அப்பா சில ஆயிரங்களைக் கொடுத்து நாடகத்தை நடத்தச் சொல்லிவிட்டு,தன் மகனையும் என்னையும் அழைத்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறினார். மாலை போட்டு விரதமிருந்த கதாசிரியர் அள்ளித் தெளித்திருந்த ஆபாச வசனங்கள் பார்வையாளர்களை நெளியச்செய்தன.இடைவேளையில் சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு வந்தனர்.விஜய திருவேங்கடம்,தன் உரையில்,நாடகத்தின் ஆபாசத்தை நாசூக்காகக் கண்டித்த போது அரங்கம் கரவொலி செய்து ஆமோதித்தது.
புத்திசாலித்தனமாக திட்டமிட்டு இரட்டைப்பட்டக்காரர் எல்லோருக்கும் பட்டை நாமம் சார்த்தியிருந்தார்.ஆளுக்கொரு திசையாகச் சிதறினோம்.அந்த அமைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிகளும் வீணில் முடிந்தன. அதே நேரம் வழக்கறிஞர் மனோகரன் போன்றவர்கள் ஆர்வமாக நடத்திவந்த கண்ணதாசன் இலக்கியக் கழகம் என்கிற அமைப்பும் வேகம் குறைந்து வந்தது.ஓரிரு வருடங்கள் முடிந்தன.
இதற்குள் நான் கல்லூரியில் சேர்ந்திருந்தேன்.வாசிப்பு,கூட்டங்கள் கேட்பது,கூட்டங்களில் பேசுவது எல்லாம் தொடர்ந்தது.அப்படி நாளிதழில் செய்தி பார்த்துவிட்டு ஓர் அமைப்பின் தொடக்கவிழாவில் கலந்து கொள்ள பீளமேடு ஹோப்காலேஜ் என்ற பகுதிக்கு ஒரு மாலை வேளையில் போனேன்.தேநீரகம் ஒன்று விடுமுறை விடப்பட்டு அங்கே கூட்டம் நடந்து கொண்டிருந்தது.உள்ளே நுழைந்த என்னை அங்கிருந்த அமைப்பாளர்கள் பிரியமுடன் வரவேற்று மேடைக்கு அழைத்துப் போயினர். பேசுமாறும் கேட்டுக் கொண்டனர். அந்த அமைப்பின் பெயர்,”பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை”.

தொடரும்

இப்படித்தான் ஆரம்பம்-4

கண்ணதாசன் மறைவுக்காக நடந்த இரங்கல் கூட்டத்தில்,”கண்ணதாசனின் வரிகளுக்கு இதுவரை காணாத பொருள்களையெல்லாம் அவருடைய ரசிகர்கள் காண்பார்கள் “என்று பேசினாராம் ஜெயகாந்தன்.உண்மைதான்.கவிஞரின் வரிகளுக்கு புதிய நயங்களையும் விளக்கங்களையும் தேடித் தேடிச் சொல்லத்தஒடங்கியவர்கள் பலர்.அவர்களில் நானும் ஒருவன்.

“கூடிவரும் மேகமெனக் கூந்தலைத் தொட்டார்-
குவளை போல மலர்ந்ததென்று கண்களைத் தொட்டார்-தொட்டால்
ஒடியுமென்று இடையைமட்டும் தொடாமலே விட்டார்”
என்ற பாடலை
சொல்லிவிட்டு,”இதில் கவிஞர் எவ்வளவு நயமாக ஒரு விஷயம் வைத்திருக்கிறார் தெரியுமா?’
என்று நிறுத்துவேன்.
“மேகத்தை கூந்தலுக்கு உவமை சொன்னார் .கண்களுக்கு குவளை மலர்களை உவமை
சொன்னார்.ஆனால் .இடை தொட்டால் ஒடியுமென்று தொடாமலே விட்டார் என்று பாடியவர்,இடைக்கு ஓர் உவமை கூட சொல்லவில்லை.ஏன்தெரியுமா? அது மெல்லிய இடை.
மிக மெல்லிய இடை.அதை உவமையால்தொட்டால் கூட ஒடிந்துவிடும் என்பதால் தான் கவிஞர் உவமை சொல்லக்கூட இல்லை”.என்றதும் கண்ணதாச பக்தர்கள் ஆனந்த பாஷ்பம் சொரிவார்கள்.
இவையெல்லாம் மாலைநேர மன்ற சந்திப்புகளில் அரங்கேறும் விவாதங்கள்.

ராஜ்நாராயண் என்ற வடநாட்டுத்தலைவர் பிரதமராக வேண்டும் என்று ஜனதாவில் ரகளை செய்து கொண்டிருந்த நேரம்.ஆள் தாடியும் மீசையும் தலைப்பாகையுமாய் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.”இந்தாளை கேலி செய்து கவிஞர் பாடியிருக்கார் தெரியுமா?” என்றொரு புதிரை அவிழ்த்துவிடுவார் ரவி.”என்ன பாட்டுங்க அது?” என்றதும்,”தப்புத் தாளங்கள்-வழி தவறிய பாதங்கள்”என்ற பாடலைப் பாடிவிட்டு,”பாராளும் கோலங்கள் பரதேசி வேஷங்கள்” என்ற வரிகளை விரல் அபிநயத்துடன் பாடிக்காட்டுவார் ரவி.

இதற்கிடையே கண்ணதாசன் மன்ற வளர்ச்சிநிதிக்கான நாடக ஏற்பாடுகள் சூடுபிடிக்கத் தொடங்கின.பிச்சைக்காரியைப் பணக்கார இளைஞன் காதலிப்பதாகக் கதை.இதில் லூஸ்மோகன்
சில காட்சிகளில் தோன்றுவதாக அமைத்திருந்தார்கள்.

உள்ளூரிலேயே நாடக ஆசிரியர் ஒருவரை ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.அவர் எடுத்த எடுப்பிலேயே “உங்களுக்கு நல்ல நேரம்” என்றார்.”என்னை எழுதச் சொன்னா எந்த நாடகமும் சக்ஸஸ்தான்.ஆனா எனக்கு தண்ணி வாங்கிக் கொடுத்து கட்டுப்படியாகாது.உங்க நல்ல நேரம் இப்ப நான் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கேன்.அதனாலே மதியம் சாப்பாடு வாங்கிக் கொடுத்தா போதும்”.அவரை தினம் நாடக ரிகர்சலுக்கு அழைத்துப் போவதும்,வாணிவிலாஸில் சாப்பாடு வாங்கிக் கொடுப்பதும் என்னுடைய பொறுப்பு.(செந்தில் உணவு விடுதி அசைவ உணவகம் என்பதால் விரதக்காரர் அங்கே வரமாட்டாராம்).

என் வகுப்புத் தோழன் விஜயானந்த் வீட்டு மாடியில்தான் ரிகர்சல்.பழையூரில் சின்ன உணவுக்கடை வைத்திருந்த ஒருவர்தான் ஹீரோ.கறுப்பாக இருந்தாலும் களையான முகம்.ஆனால் அவர் ஹீரோவாக ஒப்பந்தமாக முக்கியக் காரணம்,நாடக செலவில் பெரும்பகுதியை அவர் தருவதாக ஒப்புக் கொண்டிருந்ததுதான்.பக்கத்தில் எங்கிருந்தோ ஹீரோயின் ரிகர்சலுக்கு வந்த போது பார்த்தேன்.ஹீரோவின் அழகை எல்லோரும் பாராட்டும் படியாக இருந்தார் ஹீரோயின்.

இதற்கிடையே நான் ஊடல்கொள்ளும் விதமாய் ஒரு சம்பவம் நடந்தது.ஹீரோ ஹீரோயின்
முதலிரவுக் காட்சிக்கான பாடல் ஒன்றை சத்தியநாராயணன் எழுதிவிட்டார்.
“இரவு நேரம் உறவுக்காலம்
இளமை தேகம் துடிக்கும் நேரம்” என்பது அந்தப் பாடலின் பல்லவி.
அவர் அய்யர் வீட்டுப் பையன்.சொற்ப சம்பளத்தில் எங்கேயோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அவர் எல்லா கலைகளிலும் கைவைப்பார்.ஒருமுறை எங்கள் வீட்டுக்கு அவர் வந்த போது அடுத்த நாள் ஆயுள் ஹோம பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.எங்கள் பூர்வீக ஊரான திருக்கடையூரிலிருந்து குருக்கள்கள் வந்திருந்தார்கள்.”மாமா மாமா “என்று அவர்களுடன் அந்நியோன்னியமான சத்தியநாராயணன்,அடுத்த நாள் அதிகாலையில் பஞ்சகச்சத்தோடு வீட்டுக்கு வந்துவிட்டார்.மந்திரம் சொல்வதிலிருந்து பூஜைப் பொருட்கள் எடுத்துத் தருவது வரை அவர்களுக்கு வெகு ஒத்தாசையாய் இருந்தார்.

அதுவரை,அந்தக் குழுவிலேயே எல்லாம் வல்ல கவிஞனாக என்னை நிலைநிறுத்திக் கொள்ள படாத பாடு பட்டுக் கொண்டிருந்தேன்.கண்ணதாசன் கவியரங்கில் சொதப்பியதை ஈடுசெய்ய நினைத்திருந்த என் கனவில் இடிபோல் இறங்கியது,சத்தியநாராயணன் பாடல் எழுதிவிட்ட செய்தி.மிதமாக என் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தேன்.”பள்ளிக்கூடப் பையன்தானே!
சமாளித்துவிடலாம் என்று நினைத்திருப்பார்கள்போல! ஆனால் முடியவில்லை.பிறகு ஒர் ஒப்பந்தம் உருவானது.கதாநாயகியான அந்தப் பிச்சைக்காரி,சந்தோஷமாகப் பாடிப் பிச்சையெடுப்பதுதான் ஒபனிங் ஷாட்.
“சுகம்தரப் புறப்படும் பாடல்
சுமைதரும் துயருடன் ஊடல்!
மகிழ்வென்னும் போதை மனம்காணும்போதே
நிலவோடுதான் உறவாடுமே”
என்று தொடங்கும் பாடலை எழுதிக் கொடுத்தேன்.ஒரு பிச்சைக்காரி இப்படிப் பாடுவாளா என்று யாருமே கேட்கவில்லை.பாடலை எழுதிக்
கொண்டுபோகும்போது மறக்காமல் வெற்றிலை பாக்கெல்லாம் போட்டுக் கொண்டு போனேன்.

ரிகர்சல் மும்முரமாக நடந்தது.ஜனவரி 1ம்தேதி நாடகம்.நாடகத்தின் பெயர் “மை டியர் மாமா’.கோவை வானொலி நிலைய உதவி இயக்குநர் விஜய திருவேங்கடம்,அன்னபூர்ணா உரிமையாளர் கே.தோமோதரசாமி நாயுடு,ஆடிட்டர் சி.ஜி.வெங்கட்ரமணன் அகியோர் சிறப்பு விருந்தினர்கள். ஜனவரி 1ம் தேதி காலை கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினார் லூஸ் மோகன்…தனியாக அல்ல.”சிஸ்டரோடு”

(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம்-3

ரொட்டிக்கடை வீதி கலகலத்துக் கொண்டிருந்தது.அன்று கண்ணதாசன் விழா. ரொட்டிக்கடை வீதி தெருமுனையிலேயே மாலைநிகழ்ச்சி. தெருவெங்கும் டியூப்லைட் கட்டி,சீரியல் பல்ப் போட்டு காலையிலிருந்தே ஏற்பாடுகள் களைகட்டிக் கொண்டிருந்தன.
காலை பத்து மணிக்கு முதல் நிகழ்ச்சியாக மைக்செட்காரருடன் தகராறு.ஒலிபெருக்கிகளைக் கட்டியதுமே,ஒலிப்பரிசோதனைக்காக முதல் கேசட்டைப்போட்டார்.”தொட்டால் பூ மலரும்’ என்று பாடல் ஒலித்ததும்,வீதியின் வெவ்வேறு இடங்களில் தோரனம் கட்டிக்கொண்டிருந்த பேரவை நண்பர்கள் சொல்லி வைத்தாற்போல மைக்செட்காரரிடம் ஓடினோம்.”யோவ்! யோவ்! அது கண்ணதாசன் பாட்டு இல்லேய்யா”என்று நாங்கல் கத்த,”டெஸ்டிங்குக்காக தாங்க போட்டேன்”
என்று சமாதானம் சொல்ல முயன்றார் அவர்.
“இன்னைக்கு வேற யார் பாட்டையும் போடக்கூடாது”என்று நாங்கள் போட்ட சத்தத்தில் ஆடிப்போனார் அவர்.விழா முடிந்தபோது ஜன கண மண கூடப் போடவில்லை பாவம்.அந்த
வீதியோரக்கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி கவியரங்கம்.ஏற்பாடு நாந்தான்.
கவிஞர் கோமகன் கவியரங்கத் தலைவர். .

கவியரசு கண்ணதாசன் என்கிற பொதுத்தலைப்பில்
மண்ணுலகில்,பெண்ணுலகில்.பண்ணுலகில்,விண்ணுலகில் என்று நான்கு தலைப்புகள் தந்திருந்தோம்.கடைசித் தலைப்பு எனக்கு.பங்கேற்கும் கவிஞர்களின் பெயர்கள்
தனியாக அமைக்கப்பட்டிருந்தன.

இறையன்பு சின்னக்கண்ணதாசன்
முத்தையா அரசு பரமேசுவரன்
என்று, பட்டிமண்டபத்தில் போடுவதுபோல் போட்டிருந்தார்கள்.நான்கு மணிக்கே நான் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன்.பட்டு ஜிப்பா குர்தா என்று சூழலுக்குப் பொருந்தாத கெட்டப்பில் வீதியெங்கும் நான் அலைந்து திரிந்ததைப் பார்க்க “சாளரம் தோறும் தாமரை பூத்தன”.அப்படியொரு வேடிக்கைக்காட்சியை அந்த வீதி அதுவரை கண்டிருக்கவில்லை போலும்.

கவியரங்கத்தலைவர் கோமகன் என்று ஞாபகம் இருக்கிறது.விழாத்தலைவர் வேறு யாரோ. அவர் வராத காரணத்தால் அருகில் குடியிருந்த தமிழாசிரியர் ஒருவரை அழைத்து வந்தோம்.அவர் அருகில் குடியிருப்பவர் மட்டுமல்ல.சாயங்காலமானால் கோப்பையிலே குடியிருப்பவர்.முழுபோதையில் மேடைக்கு வந்தார்.கண்ணதாசனைப்பற்றி பத்து நிமிடங்கள்
பேசிவிட்டு அழைப்பிதழைப் பார்த்து அறிவித்தார்.”இன்று நடைபெறவுள்ள கவியரங்கில்
இறையன்பு என்பவர்,சின்னக்கண்ணதாசன் என்ற தலைப்பிலும்,முத்தையா என்பவர்,அரசு பரமேசுவரன் என்ற தலைப்பிலும் கவிதை வாசிப்பார்கள்’ .
கோமகனின் ஆவேசமான கவிதைகளில் அவர் சார்ந்திருக்கும் கம்யூனிசக் கொள்கையின் அனல் வீசியது.
“சாகக் கிடக்கையிலும்-இந்த
சாண்டில்யக் கிழவனுக்கு
மோகத்தைப் பற்றித்தான்
நாவல் வருகிறதாம்
அவன் வீட்டில்
மூன்று வேளையும்
முருங்கைக்காய் சாம்பாரோ”
என்ற அவரின் வரிகள் நினைவிலிருக்கின்றன.

“கண்ணதாசனைப்போல் தண்ணியடித்தால்
கவிதைவரும் என்றார்கள்!
நானும் அடித்தேன்!
வந்தது…
கவிதையல்ல வாந்தி”
என்று இறையன்பு பாடியதாக ஞாபகம்.

விண்ணுலகில் கண்ணதாசன் என்று நான் பாடிய கவிதை ,என்னை உட்பட யாருக்குமே
புரியவில்லை.கண்ணதாசன் விண்ணுலகில் எப்படியிருப்பார் என்று கற்பனையில் சொன்ன சந்தக்கவிதை அது.

விழாவுக்குப்பிறகு புதிதாக உறுப்பினர்கள் சேர்ந்தார்கள்.பேரவை நண்பர்கள் வந்து உட்கார்ந்திருப்பது ஓவிய வேலைகளுக்கு இடைஞ்சல் என்று யார் நினைத்தார்களோ இல்லையோ,ரவியின் பங்குதாரரும் சுமாரான ஒவியருமான இந்திரஜித்துக்கு அந்த எண்ணம் இருந்தது.

பேரவைக்காரர்களிடம் அவசரப்பட்டு சண்டை போட்டுவிடுவார் இந்திரஜித்.ஆனால் பேரவை நண்பர்களால் அவருக்குக் காரியம் ஆக வேண்டியும் இருந்தது.ரவியின் ஒவியக் கூடத்தில்பெரிய பெரிய போர்டுகளை எழுதுவார்கள்.அந்த போர்டுகளை ஸ்கூட்டரில் வைத்து எடுத்து வரும்போது பின்னால் அமர்ந்து பிடித்துக்கொள்ள பேரவை ஆட்களின் தயவு அவருக்குத் தேவையாயிருந்தது.

“ஹலோ! போயிட்டு வந்துடலாம் வாங்க!’என்று கெஞ்சலும் மிரட்டலும் கலந்த தொனியில் அழைப்பார் இந்திரஜித்.இதற்காகவே சண்டை போட்டவர்களிடம் வலிய சென்று சமாதானம் பேசுவார் .அதற்கு அவர் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டு வந்த சமாதான வசனம்,கேட்பவரை குலைநடுங்கச் செய்யும்.”சரி விடுங்க பாஸ்! இப்பொ சங்கடமாயிடுச்சு!
நாளைக்கு நீங்க டெத் ஆயிட்டா நான் வந்து அழுவேன்!நான் டெத் ஆயிட்டா நீங்க வந்து அழுவிங்க!”
இதற்கு பயந்து கொண்டே இந்திரஜித் சமாதானம் பேசும்முன்னால் தாமாகவே வலியப்போய் பேசிவிடுவார்கள் பேரவை நண்பர்கள். (சில வருடங்கள் கழித்து இந்திரஜித் சாலை விபத்தில் இறந்தார் என்று பின்னால் எங்கேயோ கேள்விப்பட்டேன்.)

பிறந்தநாள் விழாவுக்குப்பின்னர் அதற்குப்பின்னால் அக்டோபரில் கண்ணதாசன் நினைவுவிழா.250 ரூபாய் வசூலாகியிருந்தது.கவியரங்கம் வேண்டாம் என்ற தீர்மானத்தை நானே முன்மொழிந்தேன்.கருத்தரங்கமும் பட்டிமண்டபமும் நடத்த முடிவானது.
கருத்தரங்கத் தலைவருக்கு பத்து ரூபாய் தர பட்ஜெட்டில் இடமிருந்தது.யாரை அழைக்கலாம் என்று எங்கள் பள்ளித் தமிழாசிரியரும்,கம்பன் கழகச் செயலாளருமான புலவர்,க.மீ.வெங்கடேசன் அவர்களிடம் கேட்டபோது அவருக்குத் தெரிந்த தமிழாசிரியர் ஒருவர் பெயரைச் சொன்னார்.”நீங்க பத்து ரூபாய் கொடுங்க! அதை உங்க மன்ற வளர்ச்சி நிதிக்காக
தந்துடச் சொல்றேன்.அவரையே தலைவராப் போடுங்க”
.
ஆசிரியர் சொன்ன யோசனையில் அகமகிழந்து,”அவர் தலைவர்! அன்னவர்க்கே சரண் நாங்களே’
என்று அவரையே தலைவராகப் போட்டோம்.விழாநாளில்,பள்ளியில் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் மகனுடன் வந்துவிட்டார் விழாத்தலைவர்.
மன்றப்பொருளாளருக்கு ஒரு யோசனை.பணம்கொடுத்தால் திருப்பித் தரப்போகிறார்.நாகரீகத்திற்காவது நாம் மறுக்க வேண்டும்.அவர் வேண்டாமென்பார்.மீண்டும் வற்புறுத்த வேண்டும்.எதற்கிந்த தர்மசங்கடம்..பணத்தையே கொடுக்காமல் பெரிய கும்பிடாகப்போட்டு வழியனுப்பினோம்.

சில நாட்களுக்குப் பிறகுதான் விஷயம் தெரிந்தது.நன்கொடையாகப் பத்து ரூபாயைத் தருகிற எங்கள் தமிழாசிரியரின் யோசனையைவிழாத்தலைவர்தள்ளுபடி செய்துவிட்டார்.பத்துரூபாயை எதிர்பார்த்தே வந்திருக்கிறார்.நாங்கள்பணம் தராததால் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரமுள்ள வீட்டிற்கு மகனுடன் நடந்தே போயிருக்கிறார் பாவம்!!

இதற்கிடையில் பேரவையில் சில புதிய முகங்கள் பொறுப்பேற்றன.கருத்தரங்கத் தலைவரை கால்நடையாய் அனுப்பிய சோகவரலாறுகள் தொடராமல் இருக்க வேண்டுமென்றால் மன்ற
வளர்ச்சிநிதிக்காக நாடகம் போடுவதென்று முடிவானது.பாப்பநாயக்கன்பாளையத்தில் வீதிக்கொரு நாடகக்கலைஞர் இருப்பார்.அதே பகுதியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் திரைத்துறையில்
ஜெயித்த பிறகு பாப்பநாயக்கன் பாளையத்தில்வீட்டுக்கொரு நாடகக் கலைஞர் தோன்றத் தொடங்கினார்.

ஆனால் உள்ளூர்க்காரர்களை மட்டும் வைத்து நாடகம் நடத்தாமல் சினிமா நட்சத்திரம் ஒருவரை
அழைப்பது என்று முடிவானது.அப்போது பேரவையின் தலைவராக இருந்தவர் சென்னையிலிருந்து கோவைக்கு வந்தவர்.ரஜினிகாந்த்துடன் ரம் சாப்பிட்டதாகத் தொடங்கி,ரகம் ரகமாய் அனுபவக்கதைகளை அள்ளிவிடுவார்.தன்பெயருக்குப்பின்னால் இரண்டு எம்,ஏ.பட்டங்களைப் போட்டிருந்தார்.அவரை பேரவை ஏகமனதாக நம்பியது.இரண்டு எம்.ஏ.பட்டங்களுக்கான நான்கெழுத்துக்கள் நடுவே புள்ளிவைக்கக் கூடாது என்பது எங்களுக்கு அப்போது புரியவில்லை.

ஜெய்சங்கர் ,விஜயகுமார் இருவரில் யாரையாவது ஒப்பந்தம் செய்வதாய்ச்சொல்லி,அவரும் இன்னொரு நண்பரும் சென்னைக்கு ரயிலேறினார்கள்.நான்கு நாட்களுக்குப்பின் திரும்பியவர்கள்,”கண்டேன் சீதையை” என்று சொல்ல வேண்டியதுதானே!

சென்னை பல்லவனின் டவுன்பஸ் சீட்டுக்களில் 52 சீட்டுக்களை அள்ளி “எவ்வளவு அலைஞ்சுட்டு வந்திருக்கோம் பாருங்க”என்று செயற்குழுவின் முன் போட்டார்கள்.அலைந்து திரிந்து ,அவர்கள் நாடகத்திற்காக ஒப்பந்தம் செய்து வந்திருந்த நடிகர்……லூஸ்மோகன்!!

-தொடரும்

இப்படித்தான் ஆரம்பம் -2

கோவை மாநகருக்குள்ளேயே அதன் புராதன அமைப்பையும் அழகையும் தொன்மத்தையும் தரிசிக்க விரும்புகிறவர்கள் பாப்பநாயக்கன்பாளையத்தைப் பார்க்க வேண்டும்.பெருமாள்கோவில்,பிரகாரவீதிகள்,பிளேக் நோய் பரவிய காலத்தில் மக்களைக்காத்த பிளேக் மாரியம்மன் கோவில்,சின்னதாய் ஒரு திண்ணைமடம் என்று மனசுக்கு இதமாக இருக்கும்.அங்கேதான் நான் படித்த மணிமேல்நிலைப்பள்ளியும் இருக்கிறது.
கிழகு மேற்கு வடக்கு தெற்கு என்று நான்காகப் பிரியும் பெரிய சாலைகளில்,தென்புறச்சாலை தொடங்குமிடத்தில் இரண்டு மைதானங்களுடன் கம்பீரமாய் பரந்து விரிந்திருக்கும் எங்கள் பள்ளி.

அதற்கு எதிரே வடக்குப் பக்கமாய் உள்ள வீதியில் நடந்தால் காந்தி சங்கம் ஒன்று.அடுத்து
வலது பக்கம் சுதா ஸ்டோர்ஸ்.இடது பக்கம் பிந்து ஸ்டோர்ஸ்.இரண்டிலும் மாணவ மாணவிகள்
மொய்த்துக் கிடப்போம்.பிந்து ஸ்டோர்ஸில் கணேஷ் என்றோர் அண்ணன்.இலக்கிய ஈடுபாடு உண்டு.நான் ஏதாவது கவிதைகள் எழுதிக் கொண்டுபோய் காட்டினால்,”இது போன வாரம்தான்
குமுதத்திலே வந்தது.காது குத்தாதே’என்பார் இரக்கமேயில்லாமல்!!
அதே வீதியில் இன்னும் நேராக நடந்தால் நான்கு குறுகிய சாலைகள் பிரியும்.மேற்கே திரும்பினால் செந்தில் உணவு விடுதி.பாக்யராஜை வைத்து திரைப்படங்கள் தயாரித்த நஞ்சப்பன்
சகோதரர்கள் நடத்தி வந்த உணவகம்.சைவக்குடும்பத்தில் பிறந்த நான் அநேக வகை அசைவ உணவுகளுக்கு நன்கு பழகியது அங்கேதான்.மேற்கே திரும்பாமல் கொஞ்சதூரம் நடந்து இடதுபுறம் திரும்பினால் ரொட்டிக்கடை வீதி தொடங்கும். அந்த வீதியின் தொடக்கத்திலேயே இருந்ததுதான் ரவியின் ஓவியக்கூடம்.அந்த ஓவியக்கூடத்திலேயே ரவி,மனோகரன் ஆகிய இரண்டுபேர் சேர்ந்து தொடங்கியிருந்ததுதான் கவிஞர் கண்ணதாசன் நினைவு மன்றம்.

ஒடிசலாய்,உயரமாய்,சிகப்பாய் இருப்பார் ரவி. தாய்மொழி மலையாளம்.கண்ணதாசன் பாடல்களில் தீராத காதலுடையவர்.பத்துக்குப் பத்து அலவில்தான் அவருடைய ஓவியக்கூடம்.ரவியின் கைவண்ணத்தில் கண்ணதாசனின் கம்பீரமான ஒவியம் ஒன்று வீதிநோக்கி வைக்கப்பட்டிருந்தது.எங்கள் பள்ளிச் சுவரில் கண்ணதாசன் படத்தை
வரைந்திருந்தவரும் அவரே.மனோகரன்,ஆலைத் தொழிலாளி.அவர்களிடம் வலிய சென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.இந்த நேரத்திற்குள் கண்ணதாசன் கவிதைகள் பலவும் எனக்கு மனப்பாடம் ஆகியிருந்தன.

மன்றத்தில் சேர வந்திருக்கும் பள்ளிச்சிறுவன் என்று சாவகசமாக பேசத்தொடங்கினர் இருவரும்.”கண்ணதாசன் பாட்டெல்லாம் கேட்டிருக்கீங்களா தம்பி?”பிரியமாகக் கேட்டார் மனோகரன்.கண்ணதாசன் பாடல்களையும் கவிதைகளையும் நான் சரளமாக சொல்லத் தொடங்கியதும் இருவருக்கும் சொல்ல முடியாத சந்தோஷம்.டீ வாங்கிக் கொடுத்தார்கள்.நிறைய பேசவிட்டுக் கேட்டார்கள்.அன்றிலிருந்து அன்றாடம் மாலைநேரம் மன்றம்நோக்கித் தானாக நகரத் தொடங்கின கால்கள்.

ரவி,மனோகரன்,தீபானந்தா என்று புனைபெயர் வைத்திருந்த போலீஸ்காரர் ஒருவர்,சத்யநாராயணன் என்று மன்றம் விரிவடைந்து கொண்டே போனது.
சாயங்காலமானால் எல்லோரும் கூடிவிடுவோம்.பேச்சும் கும்மாளமுமாய் அந்த வீதியே ரெண்டுபடும்.ரவி பெரும்பாலும் புன்னகை பொங்க அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்.

அதற்கிடையில் என் வகுப்புத்தோழன் விஜயானந்த் .பள்ளித் தோழன் அசோக்குமார் ஆகியோரை உறுப்பினர்களாகச் சேர்த்திருந்தேன்.மன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை,பள்ளி
மாணவர்களாகிய நாங்கள் மூவர்தான் கொஞ்சம் வசதியான பின்புலத்தைச் சேர்ந்தவர்கள்.ஆனாலும்
எங்களை அந்த ரீதியில் பயன்படுத்த அந்த நண்பர்கள் சிறிதும் முயலவில்லை என்பதை இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

எங்கள் வீட்டுக்கு எங்கள் பூர்வீக ஊரிலிருந்து ஜோதிடர் ஒருவர் வந்திருந்தார்.அகோரம் என்று பெயர். ஒரு குச்சியை வைத்துக் கொண்டு மணிபார்க்கும் கணக்கை கற்றுக் கொடுத்திருந்தார்.ஒரு குச்சியை எடுத்துக்கொள்ள வேண்டும்.16 விரற்கடைகள் அளந்து மீதமுள்ள பகுதியை உடைத்து வீசிவிட வேண்டும்.பிறகு தரையில் ஊன்றிப்பார்த்தால் அதன் நிழல் விழும்.
நிழலின் அளவு போக குச்சியின் உயரத்தைக் கணக்கிட வேண்டும்.உச்சிப் பொழுதுக்குப் பிறகு குச்சியின் உயரத்தை விட நிழலின் அளவைக் கணக்கிட வேண்டும் என்று குழப்பமாக ஏதோ சொன்னார்.
அதற்கு அவர் சொன்ன இரண்டுவரிப்பாடலை மறுநாளே சபையில் அரங்கேற்றினேன்.

“காட்டுத் துரும்பெடுத்துக் கண்டம் பதினாறாக்கி
நீட்டிக் கிடந்தது போக நின்றதொரு நாழிகை”.

இதுவே உச்சிப்பொழுதுக்குப் பிறகு ..

“நீட்டி நின்றதுபோகக் கிடந்ததொரு நாழிகை”.

இந்தப் பாட்டைக்கேட்டதும் மனோகரனுக்கு பயங்கர உற்சாகம்.’இனிமே வாட்சை அடகு வச்சா
மீக்கற வேலையில்லை! ஒரு குச்சி இருந்தா போதும்’ என்றபடியே ஒரு குச்சியை உடைத்து
பரிசோதனைகள் செய்து நிழலை அளந்து,குச்சியை அளந்து பதினைந்து நிமிடங்கலுக்குப் பிறகு,”ரவி!! பணி பதினொண்ணு’ என்று அறிவித்தார்.”ஆமாம்!நீ கண்டுபுடிச்சு சொல்றதுக்குள்ளே
மணி கேட்டவன் போத்தனூரு போயிடுவான்’என்று கிண்டலடித்தார் ரவி.

கண்ணதாசன் மன்றம் வைத்தாயிற்று.கண்ணதாசனுக்கு விழா எடுக்க வேண்டாமா? கண்ணதாசன் பிறந்தநாளாகிய ஜூன் 24ல் விழா நடத்த முடிவாயிற்று.கவியரங்கம் நடத்தும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.கோவையில் கல்லூரி மாணவர்களில் இலக்கிய ஆர்வமுள்ளவர்களை இணைத்து கலைத்தேர் இலக்கிய இயக்கம் கண்ட அரசு.பரமேசுவரன்,தென்றல் ராஜேந்திரன் ஆகியோர் எனக்கு நண்பர்களாகியிருந்தார்கள்.அப்போது அவர்கள் டி.ராஜேந்தர் தலைமையில் கவியராங்கம் நடத்த வேண்டும் என்ற உத்தேசத்தோடு,கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் டி,ராஜேந்தர் நம்பர் கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். கோவையில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவப் பேச்சாளர்களும் கலைத்தேர் இலக்கிய இயக்கத்தில் இருந்தனர்.
அந்தக் குழுவிலேயே நான் ஒருவன்தான் பள்ளிமாணவன். தொடர்பு வசதிகள் இந்த அளவு இல்லாத காலத்தில் பரமேசுவரனும் ராஜேந்திரனும் அலைந்து திரிந்து உருவாக்கிய அமைப்பு அது.

அவர்கள் துணையுடன் கவியரங்கம் அமைப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. போதாக்குறைக்கு
கலைத்தேர் நடத்திய கவியரங்கம் ஒன்று ஏற்கெனவே நடந்திருந்தது.மொத்த செலவி 25 ரூபாய்.அரங்க வாடகை 10 ரூபாய்.அருட்தந்தை ஜான் பீட்டர் எங்கள் மேல் இரக்கப்பட்டு திவ்யோதயா அரங்கில் ஒர் அறையை அளித்திருந்தார்.அழைப்பிதழ் அச்சாக்க செலவு 15 ரூபாய்.பரமேசுவரன்,ராஜேந்திரன்,நான் ஆகியோர் ஆளுக்கு 5 ரூபாய் அளித்திருந்தோம்.
மீதம் 10 ரூபாயைத் தந்தவர் கவியரங்கிற்குத் தலைமை தாங்கிய வேளாண் பலலைக்கழக
மாணவர். 10 ரூபாய் தந்திருக்காவிட்டாலும் அவர் தலைமையில்தான் கவியரங்கம் நடந்திருக்கும்.
மாணவர்கள் மத்தியில் அந்த மாணவர் அன்றே பிரபலம்.இன்று அவர்பெயர் வெ.இறையன்பு.ஐ.ஏ.எஸ்

-தொடரும்

இப்படித்தான் ஆரம்பம்

எனக்குப் பிடித்த பித்துகளில் முதல் பித்து கண்ணதாசன் பித்து.ஒன்பதாம் வகுப்பு படிக்கிற போது பிடித்த பித்து.இதுவரை தெளியாமல் என்னை இன்றும் இயக்குகிற பித்து.1981 அக்டோபர் 17ல்’கண்ணதாசன் இறந்தார்.1981 ஜூன் மாதம் தொடங்கிய கல்வியாண்டு என்னைப் பரம எதிரியாய்க் கருதியிருந்தது.நானும் பதில்சண்டை போடாமல் பள்ளிச்சீருடையிலேயே பள்ளிக்குப் போவதாய் சொல்லிவிட்டு ஊர்சுற்றத் தொடங்கியிருந்தேன்.
எங்கள் ஓவிய அசிரியர் திரு.தண்டபாணி தொடங்கிய ஸ்வீட் என்கிற சிறுவர் இதழின் துணை ஆசிரியராகவோ உதவி ஆசிரியராகவோ வேறு நியமனமாகியிருந்தேன்.
ஆசிரியர் சொல்லாமல் நானாக மேற்கொண்ட வேலை ,தினந்தோறும் பள்ளி நேரங்களில் டவுன்ஹால் காந்திபுரம் என்று பகுதி பகுதியாகப் போய் ஸ்வீட் விற்பனை எப்படி இருப்பது என்று விசாரிப்பது.ஸ்வீட்டும் சரியாகப் போகவில்லை.நானும் பள்ளிக்கு சரியாகப் போகவில்லை.

ஒருமுறை கடையொன்றில் இதழ் பற்றி நான் கேட்க,உள்ளே எங்கேயோ வைத்திருந்த கடைக்காரர் தேடத் தொடங்கினார்.எங்கள் உரையாடலைக்கேட்டுக் கொண்டிருந்த ஒருவர்,”ஸ்வீட்னு ஒரு பத்திரிகையா?ரெண்டு ரூபா தானா? கொடுங்க பார்க்கலாம்”என்று
கேட்டுநின்று கொண்டிருந்தார்.பத்திரிகை கிடைத்தபாடில்லை.ஸ்வீட் வாசகராகியிருக்க வேண்டி விரும்பிக்கேட்ட அவர் சர்க்கரை நோயாளியாக இருந்திருப்பாரோ என்று இப்போது சந்தேகம் வருகிறது.ஆனாலும் வாரம் மூன்று நாட்களாவது கடைகளில் என் அதிரடி சோதனையும்,அதைத்தொடர்ந்து காலை பத்து மணிக்கு ஏதாவதொரு காலைக்காட்சியும் வாடிக்கையாகிப்போனது.

மதிப்பெண்கள் “சரசர”வென்று குறையத்தொடங்கின.வீட்டில் ஏச்சும் பேச்சும் அதிகரிக்க,காலைக்காட்சியுடன் மேட்னிஷோவும் சேர்த்துப் பார்க்கத் தொடங்கினேன்.
எங்கள் உறவினர் திரு.சிவசுப்பிரமணியம் கோவை மதுரா வங்கியில் கிளை மேலாளராக இருந்தார்.சிதம்பரத்தில் புகழ்பெற்ற குடும்பம் அவருடையது.ஆஜானுபாகுவாய் சிவந்த நிறமாய்
சிரித்த முகமாய் இருப்பார்.என்போன்ற சிறுவர்களையும் ‘வாங்க போங்க’ என்றுதான் பேசுவார்.
பள்ளி அளவிலான பேச்சுப்போட்டிகளில் நான் வெட்டி முறிப்பதைக் கேள்விப்பட்டு,ஊக்கம் கொடுப்பார்.1981 ஆகஸ்ட் 1ல் என் பிறந்தநாளைக்கு கண்ணதாசன் கவிதைகள் ஆறாவதுதொகுதியையும் மேத்தாவின் அவர்கள் வருகிறார்கள் தொகுப்பையும் பரிசாகத் தந்தார்.
அன்று பிடித்த பைத்தில்,கண்ணதாசன் கவிதைகள் தொகுதி என்னுடன் எல்லா சினிமாக்களுக்கும் வரத்தொடங்கிவிட்டது.இதைக்கேள்விப்படாமலேயே கவிஞருக்கு உடல்நலம் குன்றியது.அமெரிக்கா போனார்.அமரரானார்.அவரை வெறியுடன் படிக்கத் தொடங்கியது அப்போதுதான்.

இடையில் ஸ்வீட் விற்பனை கவலைக்கிடமாய் இருந்தது.ஒருநாள் தண்டபாணி ஆசிரியர் அறையில் ஆசிரியர் குழு கூட்டம் கூடியது.என் வகுப்புத் தோழன் கதிர்வேலும் நானும் குழுவில் இருந்தோம்.அவன் கதிர் என்ற பேரில் எழுதுவான்.தண்டபாணி ஆசிரியர்,ஸ்வீட் சிறுவர் இதழாக இல்லாத பட்சத்தில் இன்னும் நன்றாகப்போகும் என்று நம்பிக்கை கொடுத்தார்.அதற்கு அவர் அறிவித்த திட்டம்தான் அதிரடியானது.

ஸ்வீட் இதழின் அட்டையில் சில்க் ஸ்மிதா படத்தைப்போடுவதுதான் அந்தத் திட்டம்.எங்கள் ஆலோசனையைக் கேட்டார்.”சரிங்க சார்’ என்பதுதான் எங்கள் பதிலாக இருந்தது.ஏனென்றால் நாங்கள் அப்போது பெரிய பத்திரிகையாளர்கள் ஆகியிருந்தோம்.புகழ்பெற்ற பத்திரிகை துணை ஆசிரியர் ஒருவர்,தன்னிடம் வந்த சிறுகதைகளை மேலோட்டமாகப்படித்துவிட்டு ‘குப்பை.குப்பை’ என்று சொன்னதாய் எதிலோ படித்தேன்.அந்த ஹோதா எனக்கு ரொம்பப்பிடித்துவிட்டது.வகுப்புத் தோழர்களிடம்,”கதை எழுதிக்கொடுத்தால் ஸ்வீட்டில் போடுவேன்” என்று ஆசைகாட்டுவேன்.எழுதிக் கொண்டுவந்து தருவார்கள்.அலட்சியமாய் பக்கங்களைப் புரட்டிவிட்டு “குப்பை,குப்பை” என்று சொல்ல கதிர் ஆரவாரமாய் சிரிப்பான்.முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன்கள் மறுநாளும்
கதை எழுதிக் கொண்டுவருவார்கள்.

அப்படித்தான் கே.தேவராஜ் எழுதிக் கொண்டுவந்த கதை.திருப்பதியில் அர்ச்சனைக்குத் தேங்காய் பழம் வாங்கிய ஒரு மனிதனைப்பற்றியது.தேவராஜ் திருப்பதி பார்த்ததில்லை.ஆனால் உள்ளூர்க்கோயில் வாசல்களில் தேங்காய் பழக்கடைகளைப் பார்த்திருக்கிறான்.இது போதாதா?
கதையின் நாயகன் திருப்பதியில் தேங்காய் பழம் வாங்கி காசு கொடுக்காமல் கோயமுத்தூர் வந்துவிடுகிறான்.கடைக்காரனும் பின்தொடர்ந்து அதே பஸ்ஸில் ஏறி வருகிறான்.வீட்டுக்குள்
நுழைந்து கதவை சார்த்திக்கொள்கிற கதாநாயகன்,கடைக்காரன் கதவைத்தட்டினால் தான் இல்லையென்று சொல்லச் சொல்லிவிடுகிறான்.இவன்குணம் தெரிந்த கடைக்காரன்,மணிஆர்டர் வந்திருப்பதாக சொல்ல கதாநாயகன் வெளியே வந்து கடைக்காரனிடம் மாட்டிக் கொள்கிறான்.

இந்த நீதிக்கதையை எழுதிய கே.தேவராஜ் பத்திரிகை தர்மத்தை மீறிச் செய்த ஒரு காரியம்தான் என் கோபத்தைக்கிளறியது.வகுப்பில் நான் கடைசி பெஞ்ச் என்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.கே.தேவராஜ் முதல் பெஞ்ச்.கிளாஸ் லீடர் வேறு.கடைசி பெஞ்ச்சுக்கு வந்து கதையைக் கொடுத்துவிட்டு காத்திருப்பதுதான் பத்திரிகை தர்மம்.ஆனால் முதல் பெஞ்ச்சில் போய் உட்கார்ந்துகொண்டு,ஓணான் போல் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டு நான் படித்து முடித்ததும்,அங்கிருந்தே “எப்படி” என்றான்.அரைகிலோ அதிக அழுத்தத்துடன் “குப்பை குப்பை” என்று நான் குரல் கொடுக்க அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.”போடா டேய்” என்று கத்த பதிலுக்கு நான் கத்த ஒரே ரகளை.

இத்தகைய அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ள சில்க் ஸ்மிதா படத்தை அட்டையில் போடுவதே சிறந்த வழி என்று தோன்றியது.தீவிரமாக யோசித்த தண்டபாணி ஆசிரியர்,
“முத்தையா!நாளைக்கு வர்றபோது சில்க் பற்றி ஒரு கவிதை எழுதிக்கிட்டு வா! அவங்களும் உழைச்சுதான் மேலே வந்திருக்காங்க!இதை உணர்த்தற மாதிரி இருக்கணும்”என்றார்.
அடுத்த நாளே கவிதையைக் கொண்டுபோய் ‘பிடிசாபம்’ என்று அவர் கைகளில் கொடுத்துவிட்டேன்.

“உழைப்பதில் எண்ணம்
உயர்வது திண்ணம்
தழைத்தே சிலுக்கு வாழ்க”

என்பதாகத் தொடங்கும் அந்தக் கவிதையின் முதல்வரி மட்டும் நினைவிலிருக்கிறது. ப்டித்துப்பார்த்த அசிரியரின் முகம் இருண்டது.அப்புறம் ஸ்வீட் இதழ் வரவில்லை.சில்க்கின் தற்கொலையும் தள்ளிப்போனது.என் உறவினர்கள் பலரிடம் 20 ரூபாய் சந்தா வேறு வசூல் செய்து கொடுத்திருந்தேன்.அவர்களில் பெரும்பாலோருக்கு அது ஞாபகத்தில் இல்லை என்பது எனக்கு ஆறுதலாக இருந்தது.

ஸ்வீட் நின்ற சோகத்தில் இருந்தஎன்னை நிலைகுலையச் செய்தது கண்ணதாசனின் மரணச்செய்தி.
தோல்வி பயமும் தாழ்வு மனப்பான்மையும் மண்டிக்கிடந்த பொழுதுகளில்,”உனக்குள்ளும் இருக்கிறது தமிழ்” என்று என்னை உசுப்பியவை அவருடைய வரிகள்.

தினத்தந்தியில் வந்த கண்ணதாசனின் புகைப்படத்தை வெட்டி,சயின்ஸ் நோட் அட்டையில் ஒட்டி,
வீட்டு மாடியில் இரங்கல் கூட்டம் நடத்தினேன்.எதிர்வீட்டில் இருந்த சஜ்ஜி,(இன்று சுயமுன்னேற்றப் பயிற்சியாளராக அறியப்படும் சஞ்சீவ் பத்மன்) அடுத்த வீட்டில் இருந்த பொடியன்கள் கணேஷ் மகேஷ் ஆகியோர் என் மிரட்டலின் பேரில் இரங்கல்கூட்டத்தில் கலந்து கொண்ட மூன்றே மூன்று பார்வையாளர்கள்.கவிஞர் படத்தை சுவரோடு திருப்பி வைத்து விட்டு,”இப்போது படத்திறப்பு” என்று அறிவித்துவிட்டு படத்தை நேராக வைத்தேன்.பிறகு இரங்கலுரையும் ஆற்றினேன்.
அந்தப்படத்திற்கு தினமும் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிப்போடத் தொடங்கினேன்.இன்னும் என்னென்ன விதங்களில் கண்ணதாசன் நினைவைக் கொண்டாடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது,எங்கள் பள்ளிச்சுவரிலேயே கவிஞரின் உருவப்படத்துடன் பலவண்ணங்களில் மின்னிக் கொண்டிருந்தது “கவிஞர் கண்ணதாசன் நினைவு மன்றம்”என்ற விளம்பர அறிவிப்பு!!

-தொடரும்