உன்கருணை- என் நிலைமை

பத்திரம்  மிக்கது

பத்திரம் அற்றது

உன் கருணை

 

நித்தியம் மிக்கது

நிச்சயம் அற்றது

என்நிலைமை

 

பூவென மலர்வது

பூகம்பம் அதிர்வது

உன் கருணை

 

சுடரென ஒளிர்வது

சருகென அலைவது

என் நிலைமை

 

வாவென அணைப்பது

வாள்கொண்டு துளைப்பது

உன்கருணை

 

தேவையில் நலிவது

தேடலில் பொலிவது

என்நிலைமை

 

 

கேள்வியில் கிடைப்பது

கேள்விகள் அழிப்பது

உன்கருணை

 

தோல்வியில் ஜெயிப்பது

தோற்பதில் சிலிர்ப்பது

என்நிலைமை

 

ஒன்றும் சொல்லாதது

ஒன்றும் தள்ளாதது

உன் கருணை

 

ஒன்றி நில்லாதது

எங்கும் செல்லாதது

என்நிலைமை

 

அச்சம் இல்லாதது

ஆனால் பொல்லாத

உன்கருணை

 

உன்னை நீங்காதது

உள்ளே தூங்காதது

என் நிலைமை

வேதங்கள் நான்குமே வாசல்

கம்பிகள் நடுவே பாம்பாய் -அவள்
கால்தொட நெளிகிற கூட்டம்
செம்பொன் சிங்கா தனத்தே-எங்கள்
சுந்தரி ஆள்கிற கோட்டம்
நம்பி வருபவர்க்கு அன்னை-எங்கள்
நாயகி மதுரை மீனாள்
கும்பிடும் கைகளில் அவளே -துள்ளிக்
கொஞ்சிடும் குழந்தையென்றானாள்

மாடங்கள் சமைத்தனர் அழகாய்-எங்கள்
மாதங்கி ராஜ்ஜியம் நடத்த
கூடல் நகரின் தெருக்கள்-அவள்
காலடி ஓசையில் சிலிர்க்க
ஆடல் நிகழ்த்திய சொக்கன் -அவள்
ஆருயிர்க் காதலில் களிக்க
கூடலில் அவர்கண்ட இன்பம்-அந்தக்
கோயிலில் கொட்டிக் கிடக்க

தோளினில் கிளியினை அமர்த்தும்-அவள்
தோழமை நமக்கொரு நலமாம்
தாளினை உதறிய அசைவே-எட்டுத்
திசைகளில் எழுமெழு ஸ்வரமாம்
பாளை வெடிப்பெனச் சிரிப்பாள்-அவள்
பார்வையில் நிற்பதே பலமாம்
நாளும் விடியலை நிகழ்த்தும்-எங்கள்
நாயகி நினைவே தவமாம்

வேதங்கள் நான்குமே வாசல்-அந்த
வித்தகி கதவுகள் திறப்பாள்
நாதங்கள் அவளுக்குப் படையல்-அதன்
நயங்களை அவள்மிக உகப்பாள்
மோதிடும் தென்றலின் குரலாய்-அவள்
மெல்லிய கீதம் இசைப்பாள்
ஏதுநம் சுமையெனும் போதும்-அவள்
இளநகைச் சுடரால் எரிப்பாள்

அலைவீச்சு

(26.09.2010) மதுரையில் ஈஷாவின் மகாசத்சங்கம். அருகே அழைத்த சத்குரு வாஞ்சையுடன் நலம் வினவி மிகுந்த கனிவுடன் தோள்களில் தட்டிய நொடியில் உள்ளே எதுவோ உடைய, அந்தத் தாக்கத்தில் எழுந்த கவிதை இது:
                தோளில் அவர்கரம் படிந்தது – ஒரு
                 தூரம் உடனே தொலைந்தது
                வாள்போல் பார்வை நுழைந்தது-என்
                 வினையின் வேரொன்று அறுந்தது
               பாதை இருளின் வெளிச்சமாய்-ஒரு
                 பாறை கனமுள்ள அனிச்சமாய்
              ஓதிட முடியா உருக்கமாய்-இங்கே
                 ஒருவரும் தராத நெருக்கமாய்
            பொற்கணம் அருளிய குருவிடம்-என்
                பொல்லா வினைகளை இறக்கினேன்
             அக்கணம் தோன்றிய வெறுமையில்-வான்
                அமுதம் அள்ளிப் பருகினேன்
           கன்றின் இதழ்தொடும் தாய்முலை-எனைக்
               கருணையில் கரைக்கிற மாமலை
           நன்றியில் கண்களும் வான்மழை-என்
                நெஞ்சினில் ஆனந்தத் தேனலை

எதிர்த்துகிட்டு நீந்துதடி ஏடு

சொல்லாத வார்த்தைரொம்ப சூடு -அதை

எல்லோரும் சுமப்பதில்லை பாரு

நில்லாத ஆற்றுத்தண்ணீர் போலே-இங்கே

நீளுதடி நீளுதடி வாழ்வு

ஆசையின்னும் கோபமுன்னும் ஆட்டம்-இது

அத்தனையும் வெத்துப்பனி மூட்டம்

பேசுறதை ஒருநிமிஷம் எண்ணு-எல்லாம்

மீசையோட ஒட்டிக்கிட்ட மண்ணு

ஆமையோடு போலத்தானே மனசு-இதில்

அடங்கியுள்ள ஆசரொம்பப் பெரிசு

தீமையின்னும் நல்லதுன்னும் இல்ல-ஒரு

திரைவிழுந்த பின்ன என்ன சொல்ல

எண்ணம்போல வாழ்க்கையிங்கே ஏது-அட

எதிர்த்துகிட்டு நீந்துதடி ஏடு

வண்ணம்பூசி மறைக்கவழி தேடு-ஆமா

வெளிறிப்போன வாழ்க்கைரொம்பப் பாடு

வெட்கம்விட்டு உண்மைசொன்ன போதும்-ஒரு

துக்கம்வந்து நெஞ்சுக்குள்ளே மோதும்

சொர்க்கங்கெட்டு நரகமாக மாறும் -இதில்

தர்க்கமிட்டு ஆவதென்ன? போதும் !!

தாண்டிப்போகும் நிமிசமெல்லாம் பாடம்-அத

தாங்கிக்கிட்டுப் போகுதடி ஓடம்

தூண்டில்போட்டு காத்திருக்கும் காலம்-அதைத்

துண்டுபோட்டுப் பிடிக்கவரும் வானம்

கடல் தடங்கள்

சிப்பிகள் கிடக்கிற கரையோரம் -நான்

சிரத்தையில்லாமல் நடக்கின்றேன்

உப்புக் கடலலை கூச்சலிட்டும்- நான்

ஒன்றும் சொல்லாமல் கடக்கின்றேன்

கலங்கரை விளக்குகள் கப்பலெல்லாம்-என்

கண்களில் பட்டிடப் போவதில்லை

பலமுறை வருடிய ஓடங்களை-நான்

பார்த்தினி ஏதும் ஆவதில்லை

மூச்சை யடக்கிநான் முத்தெடுத்தேன் -அது

மாலையென் றானபின் கையிலில்லை

வீச்சினை உணர்ந்து உப்பெடுத்தேன் -அது

விரல்களில் கரித்தது தங்கவில்லை

ஓடிப் பொறுக்கிய கிளிஞ்சல்களும்-நகம்

ஒட்டிய கடற்கரை மணல்துகளும்

வாடி யிருக்கிற நேரத்திலே-சில

வார்த்தைகள் என்னுடன் பேசிடட்டும்

காலக் கடல்ரொம்பப் பெரியதுதான் -அது

காட்டி மறைப்பவை ஏராளம்

காலை வருடிய சிற்றலையை-தொட்டுக்

காட்ட முடியுமோ யாராலும்

உப்புக் கடலலை பக்கத்திலே -நான்

உள்ளவன் என்பதைக் காலம் சொல்லும்

எப்போதும் கடலுண்டு என்னுடனே-இதை

இமைக்குள் தெரிகிற நீலம்சொல்லும்

கோடையெனும் பெருவெளியில்…

தூரிகைக் கொடியில் துளிர்க்கும் தளிர்களாய்

பேரறியாத நிறங்களினுலகில்

என்ன நிறமாய் இப்போதிருக்கிறேன்?

ஒற்றைப் புள்ளியில் உராய்ந்த சூரியன்

மற்றொரு புள்ளியாய் சுருங்கிய பொழுதில்

என்னுள் எழுந்த நிலவை என்செய?

வாங்கி வைத்திருந்த வானைச் சுருட்டி

தலைக்கு வைத்துத் தூங்கும் முயலின்

ஈரச் சிலுப்பல் என்னுளோர் வெள்ளமாய்…

கோடை நிலத்தின் கோரைப்புல்வெளி

மூடியும் மறையாக் கற்பக விருட்சம்

எனக்கான கனிகளைக் கனிவித்திருக்கையில்

தனக்கேயான தாளாப்பசியுடன்

தள்ளி நின்று தவித்திருக்கின்றேன்

ஆழியை வீணையாய் ஆக்கி மீட்டிடும்

வாணியின் உள்ளங்கையில் வியர்வையாய்

அடிமுடி தேடிய ஆதிநாள் தவிப்பில்

வெடிபடு நிலத்திடை வெளிவருந் துளியாய்

கசியும் பாறையாய் கமண்டலத் தளும்பலாய்

நிசியில் உருகும் நிசப்த ராகமாய்

எத்தனை வடிவுகள் எடுத்து வருகிறேன்

அசையும் புல்லின் ஆதிதாளத்தில்

இசைமை பிசகா இலைகளின் அசைவில்

மௌனக் கனலாய் மணக்கும் மலர்களில்

கவிழும் அமைதியின் கனத்த இரைச்சலில்

தவமொன்று புரிந்ததும் வரமொன்று கனிந்ததும்

விநாடிகளுக்குள் விரைந்து நிகழ்ந்தன

வாங்கிய வரத்தின் வாரிதிக்குள்ளே

வலம்புரிச் சங்காய் விளைந்ததென் பிரியம்

சங்கின் மடியில் சமுத்திர அலைகளாய்

வந்து போம் கடல்மகள் வருந்திசை எதுவோ

போறாளே பொன்னுத்தாயி…

பல வருடங்களுக்கு முன்,நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்திற்காக
திருச்சியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கினேன்.அறைக்குள் நுழைந்தபோது
காதுகளில் வாக்மென் ஒலித்துக் கொண்டிருந்தது.தொலைக்காட்சியை இயக்கியபோது,டயானாவின் இறுதி ஊர்வலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

வாக்மென்னை அணைப்பதற்கு பதில் தொலைக்காட்சி ஒலியைக் குறைத்துவிட்டுவாக்மெனில் ஒலித்த பாடலைக் கேட்டுக் கொண்டே காட்சியைப் பார்த்தேன்.ஒலித்த பாடல்,”போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு..தண்ணீருஞ் சோறுந் தந்த மண்ண விட்டு!பால்பீய்ச்சும் மாட்ட விட்டு,பஞ்சாரத்துக் கோழிய விட்டு-போறாளே பொட்டப் புள்ளஊர விட்டு”

டயானாவுக்காகவே பாடப்பட்டது போலிருந்தது.அந்தப் பாடலுக்காக
ஸ்வர்ணலதாவுக்கும் தேசிய விருது கிடைத்தது.பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதாமரணம் என்ற செய்தி இன்று மதியம் கிடைத்த போது
இந்தச் சம்பவம்தான் என் நினைவுக்கு வந்தது.

இசை ஆல்பங்களுக்காக நான் எழுதிவரும் பல பாடல்களில் சிலவற்றை
ஸ்வர்ணலதா பாடியிருக்கிறார்.உலகின் அன்னை என்ற தலைப்பில் அன்னைதெரசா பற்றிய ஒலிநாடாவில் நான் எழுதிய இரண்டு பாடல்களை அவர் பாடினார்.அப்போதுதான் அவர் எனக்கு அறிமுகம்.

யாரும் உன்பிள்ளைதான் -இந்த பூமிமீது
யாரும் உன் பிள்ளைதான்
என்ற பாடலில்,

தீயின் நாவு தீண்டினாலும்
தாயின் நாவில் ஏசு நாமம்

என்ற வரிகளைப் பாடும்போது அவர் கண்கள் கலங்கியிருந்தன.
ஸ்வர்ணலதாவின் தாய்மொழி மலையாளம் எனினும்,பாடல்களை கன்னடத்தில்எழுதிவைத்துக் கொண்டுதான் பாடுவார்.

பாடலை எழுதத்தொடங்கும் முன் டைரியின் மேலிரண்டு ஓரங்களில்
இசையமைப்பாளர்பெயரையும்,பாடலாசிரியர் பெயரையும் எழுதி வைத்துக் கொள்வது பாடகர்கள்வழக்கம்.மரபின் மைந்தன் முத்தையா என்று கன்னடத்தில் எழுத மிகவும் சிரமப்படுவார் அவர்.

“பாரிஸ் கிளியே பாரிஸ் கிளியே சாரல்மழையில் என்ன சுகமோ”
என்ற என் பாடலில்,”வைரமுத்துவும் என்னைப்பற்றித்தான் காதல்
கவிதை பாடிக்குவிப்பார்!பாப்பையாவுமே எந்தன் அழகை பட்டிமன்றத்தில்
பேசி ரசிப்பார்”என்ற வரிகள் சரணத்தில் இடம் பெற்றிருந்தன.அந்த வரிகளைப்பாட மிகவும் தயங்கினார்.”எழுதியவர் வைரமுத்துவுக்கு வேண்டியவர்தான்”என்று யானிதேஷ் சொன்னபின் தயக்கத்துடன் பாடிக் கொடுத்தார்.

நான் பார்த்த வரையில் பின்னணிப் பாடகிகளில்,ஒலிப்பதிவுக்கு வந்த இடத்தில்அதிகம் பேசாதவர் அவர்.உயரம் உயரமாய் உடன்வரும் அவருடைய அண்ணன்கள்பாட்டுக்கானதொகை பேரங்களில் ஈடுபட்டு முடிக்கும் தறுவாயில் பாடலை எழுதிக்கொள்ளத் தொடங்குவார்.பாடும்போது தான் ஏதேனும் தவறுசெய்தால்,இசையமைப்பாளர் சுட்டிக் காட்டும் முன்பே நாக்கைக் கடித்துக்கொண்டு,”ஒன் மோர்” என்று தயாராகிவிடுவார்.
இசையமைப்பாளரின் தேவையறிந்து எதிர்பார்ப்புக்கும் மேலாக பாடிக் கொடுப்பதில் ஸ்வர்ணலதா கைதேர்ந்தவர்.புறப்படும் போது,பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு என்று இசையமைப்பாளரிடமும் பாடலாசிரியரிடமும் சொல்ல அவர் தவறியதேயில்லை.ஒருசில ஆண்டுகளாகவே அவர் லைம்லைட்டில் இல்லை.

என் பாடல்களுக்கு வழக்கமாக இசையமைக்கும் யானிதேஷ்,ஸ்வர்ணலதா
கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து ஏனோ அடிக்கடி
கவலைப்படுவார். நுரையீரல்பாதிப்பால் 37 வயதில் அவர் மறைந்தார்
என்கிற தகவல் அதிர்ச்சியாய் இருக்கிறது.அமைதியான முகமும்,சோர்வான புன்னகையும்,தொழிலில் காட்டிய கவனமும் மனதில் வந்து வந்து போகின்றன.

“பொதிமாட்டு வண்டிமேலே போட்டு வச்ச மூட்ட போல போறாளே பொன்னுத்தாயி”என்றஅவர் பாடிய பாடலே அவரை வழியனுப்பட்டும்.
ஸ்வர்ணலதாவுக்கு என் அஞ்சலிகள்.

குகைப்பெருமான் -6

பிரசாதக்கடை வைத்திருக்கும் பெரியவர் தேவசேனாபதி அய்யாவை சமீபத்தில் பார்த்த போதுதான் இன்னொருவிஷயமும் தெரிந்தது.அவருடைய சம்பந்தி,அமரர் கவிஞர் தடாகம் இளமுருகு என்பதுதான் அது.அவரும் தென்சேரிமலை வேலாயுதசாமியையும் அடிவாரத்தில் உள்ள குகைப்பெருமானையும் பாடியிருக்கிறாராம்.முருகன் பக்திப்பாடல்களை விரும்பிக் கேட்கும் நேயர்களுக்கு கவிஞர் தடாகம் இளமுருகுவை நன்கு தெரிந்திருக்கும்.

சூலமங்கலம் சகோதரிகள் பாடிய புகழ்பெற்ற பாடலொன்று அவர் எழுதியதுதான்.”சுட்டதிருநீறெடுத்துதொட்ட கையில் வேலெடுத்து தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்!கட்டழகானதொரு கந்தவடிவேலவனைக்காட்டுவது ஆறெழுத்து மந்திரம்”என்ற பாடல் அது.

என்னுடைய நண்பர் வளர்கவி இராதாகிருஷ்ணனுக்கு இளமுருகு அசிரியர்.இந்தப் பாடலை வளர்கவிஅடிக்கடி சிலாகித்துச் சொல்வார்.குறிப்பாக,குன்றுதனில் நின்றுவளர் கன்றுவழங்கும் நமக்கு
என்றும்வளர் செல்வம் பதினாறுமே!என்ற வரியை அவருடைய வாய் அடிக்கடி முணுமுணுக்கும்.
முருகனைப்பற்றி ஏராளமான இசைப்பாடல்களை எழுதியிருக்கிறார் இளமுருகு.சூலமங்கலம் சகோதரிகள்பாடிய,”கோபுர வாசலிலே உன் கோலம் தெரியுதய்யா!கொஞ்சும் தமிழ்கேட்டு உன்முகம் குறுநகை
புரியுதய்யா!” என்ற பாடலும்,மாஸ்டர் மகராஜன் பாடிய “தென்பழனிக் குன்றத்திலே தென்றல்வரும் மன்றத்திலே அன்பழகன் வீற்றிருந்தான் அழகாக!அவன் அங்கிருந்து காட்சிதந்தான் அருளாக!” என்ற
பாடலும் தடாகம் இளமுருகு எழுதிய பாடல்களில் முக்கியமானவை.

தன் வாழ்வின் அந்திமக்காலத்தில் தன்னுடைய ஆசிரியர் இளமுருகு,கல்கி பகவானின் சீடராகமாறியிருந்த செய்தியை வளர்கவி என்னிடம் சொன்னார்.இறைவன் எல்லாம் நிறைந்தவன்.சர்வ வல்லமை பொருந்திய கடவுளர்கள்,ஒருவருக்கொருவர் உறவினர்களாகவும் இருக்கிறார்கள்.
அவனையே நம்பியிருக்கும் அடியார்களோ ஒருவருக்கொருவர் உறவு கொண்டாடி,இறைவனேகதியென்று இணைந்து பாடிப் பரவசம் பெறுகிறார்கள்.இறைவன்மேல் பிடிப்பும் உரிமை கலந்த
சலிப்பும் உருவாகும் விதமாக,துதிமலர்களில் இடம்பெற்ற பாடல் இது.

தனைவெற்றி கொள்ளவே தெய்வங்கள் இல்லாருன்

தாய்தந்தை யாகவுள்ளார்

தடைகளை நீக்கியே துணைசெயும் இறைவருன்

தமையனா ராகிநின்றார்

வினைவெற்றி வழங்கிடும் அரங்கரோ மாமனாய்

வளர்நகை பூத்து நின்றார்

வலம்நல்கும் திருமகள் நினக்கொரு மாமியாய்

வாஞ்சையே காட்டுகின்றார்

தினைமுற்றும் வனந்தனில் வளர்வள்ளி அம்மையொரு

துணையாக சேர்ந்துநின்றார்

தனித்தபேர் எழிலாளும் தெய்வானைத் தாயுமோர்

இணையாக வந்துநின்றார்

வினைமுற்றும் எளியனின் நினைவேநீ கொள்ளாமல்

விடுவதில் வியப்பில்லையே

சுனைபொங்கும் தென்சேரி அடிவாரம் வளர்பால

தண்டா யுதபாணியே

காருண்ய ரூபம் கணபதி

காரியம் தொடங்கிட கணபதி-இங்கு

காலத்தின் அதிபதி கணபதி
சூரிய உதயம் கணபதி-திரி
சூலியின் மடியில் கணபதி

ஓமெனும் வடிவம் கணபதி-நாம்
ஓதிடும் மந்திரம் கணபதி
பூமியில் எதுவும் கணபதி-நல்ல
பூசனைப் பிரியன் கணபதி

மூலைக்கு மூலை கணபதி-இங்கு
மூலத்தின் மூலம் கணபதி
நீலியின் காவல் கணபதி-நல்ல
நிதர்சன தெய்வம் கணபதி

எளிவந்த இறைவன் கணபதி-நம்
எதிர்வரும் தெய்வம் கணபதி
ஒளிகொண்டு வருவான் கணபதி-நம்
உளந்தனில் அமர்வான் கணபதி

தந்தம் ஒடித்தவன் கணபதி-இங்கு
தன்னைத் தருபவன் கணபதி
பந்தம் அறுப்பவன் கணபதி-நல்ல
பக்தியில் திளைப்பவன் கணபதி

மேருவில் எழுதிய கணபதி-நல்ல
மேதைமை தருபவன் கணபதி
காருண்ய ரூபம் கணபதி-நம்
கண்களில் தெரிபவன் கணபதி