பதங்களைத் தேடு (நவராத்திரி 3)

ஆயிரம் சூரியன் பார்வையில் சுடர்விடும்

அன்னையின் திருமுகம் நிலவு
தாயவள் கருணையின்பாய்படுத் துறங்கிட
துன்பமும் இன்பமும் கனவு
பாய்மரக் கப்பலில் போகிற பிள்ளைக்கு
பயமில்லை சமுத்திர விரிவு
தேய்வதும் வளர்வதும் தன்னியல் பெனும்மனம்
தானாய் உணர்ந்தது தெளிவு
சாமரம் வீசிடும் அரம்பையர் நடுவினில்
சாகசச் சிரிப்புடன் தெரிவாள்
காமனின் அம்பினைக் கைப்பற்றும் கன்னிகை
குமரியில் நெடுந்தவம் புரிவாள்
ஊமையின் மனதிலும் ஊற்றெழும் பாட்டுக்கு
ஊர்த்துவ தாண்டவம் இடுவாள்
தீமைகள் சூழ்கையில் தாவி எடுத்துதன்
தாளெனும் தொட்டிலில் இடுவாள்
எல்லாம் சலிக்கையில் எதிரில் வருபவள்
எல்லா பதில்களும் தருவாள்
சொல்லால் தீண்டிட வருகிற்ச் பிள்ளையின்
சொற்களில் நிறைந்து வழிவாள்
கல்லாய் செம்பாய் பொன்னாய் அமர்ந்தும்
கண்ணெதிரே அவள் அசைவாள்
பொல்லா வினைகளின் நில்லாக் குறும்புகள்
பார்வையில் எரித்து விடுவாள்
ஆலயம் அவளது அரசவையாகும்
அன்பர்கள் மனமே வீடு
காலங்கள் அவளது கால்கொலுசாகும்
கானங்கள் அதற்கெனப் பாடு
வேலெனும் விழிகள் வினைகளைச் சாடும்
விரைந்தவள் பதங்களைத் தேடு
வாலை சிரித்துன் வாழ்வுக்குள் நுழைந்ததும்
வாசலை இழுத்து மூடு

முதல்துளி அபிராமி (நவராத்திரி-2)

ஒருகுரல் கொடுத்தால் மறுகுரல் கொடுக்கும் உண்மை அபிராமி
ஒருவரும் அறியாத் திசையிலும் உடன்வரும் அண்மை அபிராமி
வரும்பகை எதையும் வற்றிடச் செய்யும் வன்மை அபிராமி
நெருநலும் இன்றும் நாளையும் நிகழும் நன்மை அபிராமி

காலனை உதைத்த கால்களும் சிவக்கும் நடனம் அபிராமி
காலங்கள் உருட்டும் கைகளின் அழகிய நளினம் அபிராமி
நீலமுணர்த்தும் தியானத்தின் நிறைவில் சலனம் அபிராமி
தூலமும் துச்சம் என்கிற தெளிவின் தருணம் அபிராமி

பட்டரின் நாவில் பதங்கள் மலர்த்தும்   புலமை அபிராமி
தொட்டது துலங்க துணையென நிற்கும் கருணை அபிராமி
கெட்டவர் நடுங்க கீழ்மைகள் களையும்  கடுமை அபிராமி
முட்டிய கன்றின் இதழ்தொடும் அமுதின் முதல்துளி அபிராமி

ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வடிவாய் உதிப்பவள் அபிராமி
உன்னிய நெஞ்சில் ஓமெனும் மந்திரம் பதிப்பவள் அபிராமி
மன்னிய வினைகள் முழுவதும் வீழ்ந்திட விதிப்பவள் அபிராமி
சந்நிதி வரச்சொல்லி சித்துகள் நிகழ்த்தி சிரிப்பவள் அபிராமி

அமுத கடேசனின் ஆழ்தவம் அடைகிற அரும்பொருள் அபிராமி
குமுத மலர்க்கரம் அபயம் எனச்சொல்லும் கருப்பொருள் அபிராமி
இமய மலைக்கொரு ராணியென்றெழுந்த திருமுகம் அபிராமி
சமயங்கள் அனைத்தும் சங்கமமாகும் துறைமுகம் அபிராமி

அவளே அறிவாள் (நவராத்திரி 1)

அடர்ந்த வனந்தனில் ஒற்றைத் தடம்விழும் அழகாய்-வினை
படர்ந்த மனந்தனில்    பைரவி  நீநடை      பழகாய்
தொடர்ந்து வருந்துயர்க் கனலில் உருகிடும் மெழுகாய்-மனம்
இடரில் கரைகையில் திடம்தனைத் தந்திட வருவாய்
ஏற்றிய தீபத்தில் இளநகை செய்பவள் யாரோ-பலர்
சாற்றிய மறைகளில் சாரமென்றிருப்பவள் யாரோ
காற்றினில் வருகிற கீதத்தில் அவளது பேரோ-திரு
நீற்றினில் தகிக்கிற நெருப்பினில் அவளெழு வாளோ
காலத்தின் பேரிகை கைகளில் தாங்கினள் காளி-ஒரு
மூலத்தின் மூலத்தில் மூண்டெழும் சுடரெங்கள் தேவி
நீலத்தை கண்டத்தில் நிறுத்தினள் எங்களின் நீலி-இடும்
ஓலத்தைக் கேட்டதும் உடன்வருவாள் திரி சூலி
தாங்கிய கனவுகள் திடுமெனக் கலைகிற போது  -மனம்
ஏங்கிய ஏக்கத்தில் எல்லாம் கனக்கிற போது
நீங்கிய உறுதியை நிர்மலை மறுபடி தருவாள்-மடி
தூங்கிடச் செய்து தூக்கத்தில் விழிப்பொன்று தருவாள்
ஆயிரம் பந்தங்கள் அலைபோல் வந்திங்கு போகும்-அதில்
காயங்கள் இன்பங்கள் காலத்தின் போக்கினில் ஏகும்
மாயங்கள் யாவையும் மாதவள் செய்கிற ஜாலம்-நம்
தாயவள் உறவே நிலையென்று காட்டிடும் கோலம்
கவளங்கள் உருட்டிக் கைகளில் அன்னை இடுவாள்-இதழ்ப்
பவளங்கள் மின்ன புன்னகையால் உயிர் தொடுவாள்
துவள்கிற பொழுதில் துணையென வந்தருள் புரிவாள்-நம்
கவலைகள் துடைக்கிற கணந்தனை அவளே அறிவாள்

சொல்லவா… சொல்லவா… வெண்ணிலாவே!

இசையமைப்பாளர் யானிதேஷின் இசையில் “இன்னிசைக் காவலன்” என்ற திரைப்படத்துக்காக எழுதப்பட்ட பாடல் இது……

பல்லவி:
சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே
என்னவோ என்னவோ என்கனாவே
கன்னிப்பெண் ஆசைகள் ஆயிரம்
நெஞ்சுக்குள் என்னவோ ஊர்வலம்
சின்னதாய் மோகங்கள் ஆரம்பம்
மன்னவன் அல்லவோ காரணம்
சரணம்-1
யாரோடும் சொல்ல இங்கு வார்த்தையில்லை
சொல்லாத போதுநெஞ்சம் தாங்கவில்லை
ஆனாலும் இந்தக்காதல் ரொம்பத் தொல்லை
தள்ளாடும் பாவமிந்த ஜாதிமுல்லை
ஏதேதோ ஆசைபொங்க இன்பமான நடகம்
உல்லாச ஊஞ்சலாடும் வாலிபம்
தீராத தாகம்தீர காமன்தானே காரணம்
கண்ணோடு கண்கள்பேசும் சாகசம்
நெஞ்சோடு இன்பபோதை மெல்ல மெல்ல ஏறும் நேரம்
(சொல்லவா சொல்லவா)
சரணம்-2
நான்கூட வானவில்லின் ஜாதிதானே
என்மேனி தேனிலூறும் சோலைதானே
செந்தேனைத் தேனீபோலத் தேடினானே
செந்தீயில் பூவைப்போல வாடினேனே
அம்மாடி வேலிதாண்டும் ஆசையென்ன நியாயமோ
என்தேகம் இந்தவேகம் தாங்குமோ
பொல்லாத காதல்வந்து சொல்லித்தந்த பாடமோ
கண்ணாளன் செய்ததென்ன மாயமோ
நெஞ்சோடு இன்பபோதை மெல்ல மெல்ல ஏறும் நேரம்
(சொல்லவா சொல்லவா)
(பாடலை கேட்க கீழே சொடுக்கவும்)

தொடர்புடைய சுட்டி :
குடும்பப் பாட்டாய் மாறிய காதல் பாட்டு

மனிதம் வாழ்க!

காலத்தால் பண்படுதல் மனித நீதி
கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி
கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும்
கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும்
வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று
வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று
நூலறிவும் நுண்ணறிவும் வளரும் போது
நேற்றிருந்த சட்டங்கள் இன்றைக்கேது?
தூக்கிலிடும் சட்டத்தை பலதேசங்கள்
தூக்கியெறிந்தே இங்கு தூய்மை ஆச்சு
ஆக்கமுடன் அகிம்சையினைத் தந்த நாட்டில்
அடிப்படைகள் மாற்றிவைத்தால் என்ன பேச்சு?
தூக்கமில்லா சிறைவாழ்க்கை நெடுநாள் தந்தார்
தொலைந்துவிட்ட காலத்தைக் கணக்கில் பார்த்தால்
ஆக்கிவைத்த தண்டனையும் முடிந்த தென்று
ஆணையினைத் தருவதுதான் நியாயமாகும்
மூவருக்கு மட்டுமல்ல நம்தேசத்தில்
மூண்டபல குற்றங்கள் புரிந்துவிட்ட
யாவருக்கும் சிறைவாசம் தரலாம் ஆனால்
யாருயிரைப் பறிப்பதுவும் நியாயமில்லை
காவலுக்கே சட்டங்கள் கொல்ல அல்ல!
கருணைக்கே குடியரசு! கொளுத்த அல்ல!
பூவுலகே கொண்டாடும் புனித பூமி
பொருந்தாத தண்டனையைப் போக்க வேண்டும்
வீரமங்கை செங்கொடியின் விரல்கிழித்து
விழித்தெழுந்த தீக்கனலின் வெப்பம் போதும்
ஈரவிறகாய் இருக்கும் மனதில் கூட
இனவுணர்வு என்கின்ற செந்தீ மூளும்
தூரத்தே தெரிகின்ற சிறுவெளிச்சம்
தூக்கிலிடும் சட்டத்தைத் தூக்கில் போடும்
பாரதத்தின் சட்டத்தைத் திருத்தும் கைகள்
பார்முழுதும் கொண்டாடும் பெருமை காணும்

ஆதி சிவனின் அரசாங்கம்

(நீயே சொல் குருநாதா –  கவிதை தொகுப்பிலிருந்து….)

பெளர்ணமி நிலவின் பால்வழிந்து
பாருங்கள் மலைமேல் அபிஷேகம்
வெள்ளித் தகடொன்று வேய்ந்ததுபோல்
வெள்ளியங்கிரியின் திருக்கோலம்
அடடா அழகிய இரவினிலே
ஆதி சிவனின் அரசாங்கம்
வேண்டும் வரங்கள் வழங்கிடவே
தியான லிங்கத்தின் திருக்கோலம்
தங்கம் இழைத்த கலசத்திலே
தகதகக்கிறது மேற்கூரை
லிங்கம் தோன்றிய பரவசத்தில்
சலசலக்கிறது நீரோடை
மெளனம் பேசும் வனங்களெல்லாம்
மூழ்கியிருக்குது தியானத்தில்
கவிதை பாடும் பறவைகளும்
கூட்டில் அடங்குது மோனத்தில்
பாறையில் கசிகிற நீர்த்துளிகள்
பக்தியில் இளகிடும் மனம்போலே
பாரமாய் உள்ள பழவினைகள்
கரையுது பாருங்கள் பனிபோலே
தியான லிங்கத்தின் தரிசனத்தில்
தினமும் புதிதாய்ப் பிறந்திடலாம்
ஞானம் என்கிற பேரொளியில்
நாமொரு சுடராய் எரிந்திடலாம்

(ஈஷா யோகா நிகழ்ச்சியில் அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ ராம் பரசுராம் அவர்களால் இந்த பாடல் பாடப்பெற்றது…பாடலை கேட்க கீழே சொடுக்கவும்)

ராகம் : ரேவதி

செப்டம்பர் 3 சத்குரு பிறந்தநாள்

Sadguru
பல்லவி
உள்ளம் ஒன்று கொண்டு வந்தேன்
உன்னை வைக்கத்தான்
வெள்ளம் போலே நீநுழைந்தாய்
நானும் மூழ்கத்தான்
கள்ளங்கள் விழுங்கிய கனலே கனலே
கண்ணெதிர் வருகிற கனவே கனவே
எல்லை இல்லா இன்பம் இங்கே
உன்பேர் சொல்லித்தான்
சத்குரு பாதங்கள் சரணடைந்தேன்

சருகெனப் போனவன் உயிர்மலர்ந்தேன்

சரணம் 1

எத்தனை பிறவிகள் என்னைச் சுமந்தே
எல்லாத் திசையிலும் நடந்தேனோ
எத்தனை தவங்கள் எப்படிச் செய்தேன்
எவ்விதம் உன்னை அடைந்தேனோ
மூச்சினில் கலந்தது உன்கருணை
பேச்சினில் வருவது உன்கவிதை
காட்சியில் தெரிவதும் கணத்தினில் மறைவதும்
கேட்டதைத் தருவதும் உன்மகிமை
சரணம் 2
ஆசையின் முதுகில் ஆயிரம் காதம்
ஆடிக் குலுங்கிய பயணமோ
பாசத்தில் வழுக்கி பள்ளத்தில் சறுக்கி
போனதும் எத்தனை தூரமோ
பாதையின் முடிவில் உனதுமுகம்
பார்த்ததும் தெளிந்தது எனதுமனம்
நாதத்தின் நடுவில் ஞானத்தின் மௌனம்
நிகழ்ந்ததில் தொலைந்தது  வினையின் கனம்

நன்மை பயக்கும் எனின்…..

“பிள்ளையார் பெப்ஸி குடிக்கிறார் தெரியுமா? அங்கே நிக்கறேன்” செல்ஃபோன் இல்லாத காலத்தில் தங்கள் அலுவலர்கள் இடையில் உரையாடலுக்காகத் தரப்பட்டிருந்த வாக்கி டாக்கியைக் கையில் வைத்துக் கொண்டுபேசிக்கொண்டிருந்தார் தினமலர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த ஐயப்பன்.

கோவையில் கல்கி நூற்றாண்டு விழாவிற்கு வந்த அனைவருமே அந்த சிலையை ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணிமேல்நிலைப்பள்ளியின் முதல் தளத்தில் கலையரங்கம். தரைதளத்தில்,அலங்காரப் பந்தலின் கீழ் சாய்விருக்கையில் சாய்ந்தபடி, படு தீவிரமாக “கல்கி” வாசித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார்.

அவர் எதிரே இருந்த டீப்பாயில் பிரித்து வைக்கப்பட்டிருந்தது மைசூர்பா பெட்டி.திறந்து வைக்கப்பட்டிருந்தது ஒரு பாட்டில் பெப்ஸி. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் நடத்திய கல்கி நூற்றாண்டு விழாவில்தான் இந்த அமர்க்களம்.

விழாவிற்கு தலைமை தாங்கியவர் கிருஷ்ணராஜ் வாணவராயர். அன்றும் இன்றும் இளைஞர்களின் ஆதர்சம்சிறப்புப் பேச்சாளர்கள் வரிசையிலோ ஒரு விசித்திரமான கூட்டணி. பாலகுமாரன், சோ, கலை விமர்சகர் சுப்புடு.

விழாவில் இறைவணக்கம் பாட வேண்டியவர் எதனாலோ வரவில்லை. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு.கிருஷ்ணன் தன் வழக்கமான பாணியில் சுப்புடுவை கலாய்த்துக் கொண்டிருந்தார். “சார்! நீங்க மேடையிலே இருக்கீங்கன்னதும் இறைவணக்கம் பாடக்கூட ஆளைக் காணோம்”.

கொஞ்ச நேரத்தில் ஏதோ வேலையாக வெளியே வந்த என்னை தயங்கித் தயங்கி அணுகினார் அந்தப் பெரியவர்.”சார்! வணக்கம்.” ஏறிட்டுப் பார்த்தேன். பரிச்சயமான முகம்தான். வயது எழுபது இருக்கும். பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்.”வணக்கம்! சொல்லுங்க சார்” என்றேன். கூடுதல் தயக்கத்துடன் கேட்டார்… “இல்லை ! நான் நல்லா பாடுவேன் சார். இந்த விழாவிலே இறைவணக்கம் பாட சான்ஸ் கிடைக்குமா?”

இறை வணக்கம் பாட வேண்டியவர் வராமல் போன விஷயம் இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அகஸ்மாத்தாக அகப்பட்டார். ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் “கிருஷ்ணன் சாரைக் கேட்டு சொல்றேன்” என்று நகர்ந்தேன். தமிழ்த்தாய் வாழ்த்து கேசட் போட்டுவிடலாம் என்ற முடிவை மாற்றிக் கொண்டு அவரைப் பாடச் சொல்வதென்று
முடிவெடுத்தோம்.

“கிருஷ்ணா ஸ்வீட்ஸ்” கிருஷ்ணன்

சுமாரான குரல். பாட அழைக்கப்பட்ட போதும், பாடி முடித்த பிறகும் “ரொம்ப நன்றி சார்!” என்று வெவ்வேறு பாவங்களில் சொன்னார். சுப்புடு கையாலேயே அவருக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசும் கொடுத்ததில் புளகாங்கிதம் அடைந்தார் மனிதர். மேடையின் ஓரத்தில் இருந்த என்னிடம் “ரொம்ப சந்தோஷம் சார்! ரொம்ப நன்றி சார்” என்று பலமுறை
சொன்னது கூச்சமாகவே இருந்தது.

விழா முடிந்து கீழே நின்று கொண்டிருந்த என்னை நெருங்கினார் அந்தப் பெரியவர். கைகளில் பொன்னாடையும் நினைவுப்பரிசும். நான்காவது நன்றியை வாங்க நான் தயாரான போது பத்தடி தொலைவில் நின்று கொண்டு தோரணையாகக் கைச்சாடை போட்டு அழைத்தார். அருகே போனதும் அவர் கேட்ட கேள்வி,”என்னப்பா! கார் ரெடியா இருக்கா?”

எனக்குப் புரியவில்லை. சற்றே குரலை உயர்த்திச் சொன்னார். “அதான் தம்பி! உங்களுக்காக இறைவணக்கம் பாடியிருக்கேன்லே! வீட்டுக்குப் போக கார் கொடுங்க”. விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கார் மட்டுமே இருந்தது. ஏதோ ஒரு வண்டியை எப்படியோ ஏற்பாடு செய்து அனுப்பினோம். அப்போது எரிச்சலாக இருந்தாலும் அவர் வீட்டுக்குப் போய் என்ன செய்திருப்பார் என்று யோசித்தேன்.

குறுகலான ஒரு வீதியைக் கடந்து அவர் வீட்டு வாசலில் கார் போய் நின்றிருக்கும்.மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் ஆச்சரியமாகப் பார்த்திருப்பார்கள். ஓட்டுநரிடம் “வரேன்ப்பா!
கிருஷ்ணன் கிட்டே சொல்லீடு” என்று சத்தமாகச் சொன்னபடியே வீட்டுக்குள் நுழைந்திருப்பார்.”கல்கி நூற்றாண்டு விழாவுக்குப் போனேனா! சுப்புடு பார்த்துட்டார். நீங்க பாடியே ஆகணும்னு ஒரே பிடிவாதம். பாடினேன். அவங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். நீங்க பஸ்லே போறதாவதுன்னு பிடிவாதமா கார் வைச்சு அனுப்பீட்டாங்க”என்று தோரணையாக சால்வையை
மருமகளிடம் நீட்டியிருப்பார்.

வீட்டில் சரிந்து கொண்டிருக்கும் செல்வாக்கை மீட்டுக்கொள்ள இந்தச் சின்ன நாடகம் அவருக்குப் பயன்பட்டிருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன் அதே ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் சந்தித்த ஒரு பெரியவரின் ஞாபகம் வந்தது. திரு.கிருஷ்ணனை “என்னப்பா! சொல்லுப்பா” என்று தயங்கித் தயங்கி ஒருமையில் அழைப்பார். அடிக்கடி வந்து உதவிகள் பெறுவார். போகும்போது இன்னும் தயக்கமாய் “ஏம்ப்பா ! வாங்கிக்கட்டுமா? மைசூர்பா?” என்பார்.

கிருஷ்ணன் கையொப்பமிட்டுத் தரும் காகிதத்தைக் கவுண்ட்டரில் காண்பித்து ஒருகிலோ மைசூர்பா இலவசமாய் வாங்கிக் கொண்டு மெல்ல நகர்வார். வீட்டுக்குள் நுழையும்போது இவருடைய தோரணையும் மாறியிருக்கும்.

“இந்த கிருஷ்ணன் கூட ஒரே தொல்லையாப் போச்சு! வேணாம் வேணாம்னா கேக்கறதில்லை. ஒதுங்கிப் போனா கூட வம்பா கூப்பிட்டு கையில மைசூர்பாவைத் திணிச்சுடறது” என்ற செல்லச் சலிப்போடு மருமகள் கைகளில் கொடுத்திருப்பார்.

வீட்டுக்குள் சின்னச் சின்ன சலுகைகளைப் பெறவும் பெரிய மனிதர்களின் பரிந்துரைகள் தேவையாயிருக்கிறது பெரியவர்களுக்கு!!

உளிகள் நிறைந்த உலகமிது – 15

எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறை சார்ந்த நல்ல புத்தகங்கள் கையில் கிடைப்பதும் ஒருவகை கொடுப்பினைதான். அப்படியொரு கொடுப்பினையின் பேரில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள் ஓ&எம் என்று அழைக்கப்படும் விளம்பர நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான டேவிட் ஒகில்வியின் இரு புத்தகங்கள். ஓகில்வி ஆன் அட்வர்டைசிங் மற்றும் தி அன்பப்ளிஷ்ட் டேவிட் ஒகில்வி. இவை கல்லூரிப் பருவத்தில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள். நல்ல வேளையாக பாடமாக இல்லை.

டேவிட் ஒகில்வி (David Ogilvy)

இவை சமைத்துப் பாருங்கள் வகையறா புத்தகங்கள் அல்ல. விளம்பர நிபுணர் ஒருவரின் மனநிலை, வாழ்க்கைமுறை போன்ற அம்சங்களை உணர்வு ரீதியாய் உள்வாங்க உதவுகிற புத்தகங்கள் . ஒகில்வி அலுவலக சகாக்களிடம் நடந்து கொள்கிற முறை, அவர்  அனுப்பிய அலுவலகக் குறிப்புகள் ஆகியவை இரண்டாவது புத்தகத்தில் இருப்பவை. எனக்கு ஒகில்வியின் எழுத்துக்கள் அகஸ்மாத்தாக அறிமுகமாயின.

ஒரு விளம்பரத்துக்கு அங்கீகாரம் தர க்ளையண்ட் முரண்டு பிடித்தால் அவரை எப்படி சமாளிப்பது என்பதற்கு விளையாட்டாக ஒரு கவிதையை ஒகில்வி எழுதியிருப்பார். பெரும்பாலும் விளம்பரத்தின் தரம் படைப்பாக்கத்தின் துல்லியம் போன்றவற்றை மதிக்கத் தெரியாத வாடிக்கையாளர்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள் கொண்டவை அவை.

வாடிக்கையாளர் ரொம்ப சிணுங்கினால்
அவர் நிறுவன லோகோவை இருமடங்கு பெரிதாகப் போடு
இன்னும் அவர் சமாதானமாகவில்லையா?
அவருடைய தொழிற்சாலையின் படத்தைப் போடு
மனிதர் இன்னும் முரண்டு பிடிக்கிறாரா?
வேறு வழியே இல்லையா?
சரி சரி! அவர் புகைப்படத்தைப் போட்டுத் தொலை!!

If your client groans and cries
make his logo twice the size;
If he is still refractory
put a picture of his factory;
Only in the gravest cases
should you show the client`s faces;

தன்னுடைய நிறுவனத்தில் புதிதாக சேர்பவர்களுக்கெல்லாம் ரஷ்ய பொம்மை ஒன்றைப் பரிசளிப்பார் ஒகில்வி. அந்த பொம்மையின் கழுத்தைத் திருகித் திறந்தால் அதேபோல அதனினும் சிறிய பொம்மை ஒன்று இருக்கும்.அதற்குள் அதனினும் சிறிய பொம்மை. அதற்குள் அதனினும் சிறிதாய் மற்றொரு பொம்மை. அதற்குள் ஒரு சீட்டு வைத்திருப்பார் ஓகில்வி.

“தம்மைவிட சிறியவர்களை வேலைக்கு எடுத்தால் ஒரு நிறுவனம் சித்திரக் குள்ளர்களின் கூடாரமாகிவிடும். தம்மை விடப் பெரிய திறமை வாய்ந்தவர்களை  வேலைக்கு எடுத்தால் அந்த நிறுவனம் அசுரத்தனமாக வளரும்.அந்த நம்பிக்கையில்தான் உங்களை வேலைக்கு எடுத்திருக்கிறோம்”.

ஒகில்விக்கு அபாரமான நகைச்சுவையுணர்வும் உண்டு.கிறுக்குத் தனமாக யோசிப்பவர்களுக்கே புதுமையான சிந்தனைகள் தோன்றும் என்று நம்பினார். ஓ&எம் நிறுவனத்தின் ஜகார்தா கிளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கென் பிராடி என்ற இளைஞருக்கு 29 வயதான போது அவருக்கு ஒகில்வியிடமிருந்து வந்த வாழ்த்து வாசகங்கள் இவை:

“நீ அபாரமான இளைஞன். நம் நியூயார்க் அலுவலகத்துக்கு வா! நான் உன் கைகளைக் குலுக்க வேண்டும்”. வந்தவருக்கு ஒகில்வி சொன்ன உபதேசம் என்ன தெரியுமா?”

“இங்கே பார்! கிறுக்குத்தனத்தை மட்டும் இளமையிலிருந்தே நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், பிற்காலத்தில் அது முதுமைக்கோளாறு என்று யாரும் தவறாகப் பேச மாட்டார்கள்”.

ஒகில்வியின் மதிப்பீடுகளில் இன்றும் செல்லுபடியாகக் கூடிய விஷயம் என்று நான் கருதுவது, தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும் அச்சு விளம்பரங்களுக்கும் வேண்டிய அம்சங்கள்  என்று அவர் சொன்னவைதான். தொலைக்காட்சி விளம்பரத்தில் சுவாரசியம் தூக்கலாக இருக்க வேண்டும், அச்சு விளம்பரத்தில் சாமர்த்தியம் தூக்கலாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கான விளம்பரங்கள் மற்ற தொலைக்காட்சிகளிலும் இடம் பெற்றதைப் பார்த்திருப்பீர்கள். இது மிக முக்கியமான ஊடகப் புதுமை. போட்டியாளர்களின் கோட்டைக்குள் தங்கள் கொடியை அறிமுகம் செய்வது போலத்தான்.

அமெரிக்காவில் ஒருமுறை தொலைக்காட்சி செய்திகள் நடுவே ஒரு செய்தித்தாளின் விளம்பரம் ஒளிபரப்பானது. அந்த விளம்பரம் தொலைக்காட்சி செய்திகளையே நக்கலடித்ததுதான் சுவாரசியம்.

“இந்த செய்திகளை ஆற அமர விரிவாகப் படித்தால்தானே நல்லது. அவசரம் அவசரமாக வாசித்தால் பயனுண்டா? செய்தித்தாளில் படித்தால் அந்தப் பகுதியைக் கத்தரித்து வைத்துக் கொள்ளலாம். இன்னும் எவ்வளவோ பயன்கள். ஆனால் ஒரு விஷயம். செய்தித்தாள்களின் பயனை தொலைக்காட்சியின் சில விநாடிகளில் சொல்லிவிட முடியுமா என்ன?. இது சாமர்த்தியமா?சுவாரசியமா? இரண்டும்தான்.

விளம்பரங்களில் இடம்பெறும் சுவாரசியமும் சாமர்த்தியமும் ஒட்டுமொத்த ஜனத்தொகைக்கும் புரியவேண்டும் என்று அவசியமா? அவசியமில்லைதான். உங்கள் இலக்குக்குட்பட்ட வாடிக்கையாளர் யாரோ அவர்களுக்குப் புரிய வேண்டியது மிகவும் அவசியம்.அவர்கள் வாழ்க்கைத் தரத்தின் பாஷையில் அவர்களுக்கு சுவாரசியம் தருகிற விதமாக விளம்பரம் அமைந்தால் போதும்.

சமீபத்தில் ஒரு கார் விளம்பரம் பார்த்தேன்.ஒரு பெண் குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி ஓர் இளைஞனை அழைக்கிறாள்.

“தேடுவது?”

“அதான் நம்ம search engine இருக்கே என்று உற்சாகமாய்க் கிளம்புகிறான் இளைஞன். காரை சர்ச் என்ஜின் என்று சொல்வது இளைஞர் வட்டாரத்தில் கவனிக்கப்படும். பக்கத்து வீடு எங்கே
இருக்கிறது என்று பார்க்கவே சர்ச் என்ஜின்களை நம்பும் இந்தத் தலைமுறையின் இதயங்களில் இந்த விளம்பரம் இடம் பிடிக்கும்.

இந்த விளம்பரத்தில் சுவாரசியமும் இருக்கிறது. சாமர்த்தியமும் இருக்கிறது. சாமர்த்தியமும் சுவாரசியமும் மிக்க விளம்பரங்கள் சந்தையில் வெல்கின்றன. பல நேரங்களில் சந்தையையே வென்றெடுக்கின்றன.

(தொடரும்…)