கர்ணன்-3

பக்தியும் பணிவும் பொங்கிடும் மனதுடன்
பணிந்தே கர்ணன் நிற்கின்றான்
சக்தியின் களஞ்சியம் பரசுராமனின்
குருகுலம் தனிலே கற்கின்றான்
தந்தையை கொன்றவன் ஷத்ரியன் என்பதில்
தாங்க முடியாக் கோபத்திலே
அந்தணருக்கே வில்வித்தை போதனை
பரசுராமனின் கூடத்திலே
 
தானெந்த குலமென்று தெரியாத தனால்
மாணவன் ஆனான் கர்ணனுமே
ஆனந்த மாக போதனை வழங்கி
ஆதரித்தான் பரசு ராமனுமே
மாணவன் மடியில் தலைவைத்துக் கிடந்தான்
முனிவன் ஒருநாள் மதியத்திலே
ஆணவ இந்திரன் சதிசெய்ய வந்தான்
அங்கொரு வண்டின் வடிவத்திலே
 
கர்ணனின் தொடையினை வண்டு துளைத்திட
கடும்வலி பொறுத்தே அமர்ந்திருந்தான்
வருகிற இரத்தம் முகத்தில் பட்டதும்
பரசுராமன் விழித்தெழுந்தான்
ஷத்ரியன் தானே வலிபொறுப்பான் எனும்
சிந்தனை எழுந்தது முனினுக்கு
கற்ற வித்தை கைவிடும் என்றே
கொடுத்தான் சாபம் கர்ணனுக்கு
 
தந்தையை அறியான் தாய்முகம் அறியான்
குருவும் பகையா கர்ணனுக்கு?
எந்தத் திசையிலும் எதிர்கொள்ளும் வேதனை
இரக்க குணம்மிக்க மனிதனுக்கு
நடப்பதை எல்லாம் பொறுப்பதைத் தவிர
நல்லவன் இதயம் என்னசெய்யும்
இருப்பதை எல்லாம் கொடுப்பதில் தானே
கர்ணனின் இதயம் அமைதி கொள்ளும்

கர்ணன்-2

பாண்டவர் கௌரவர் எல்லோருக்கும்
போதனை வழங்கும் ராஜகுரு
ஆண்டிடும் அரசர் தொழுதிடும் துரோணர்
வில்வித்தை தனிலே வீரகுரு
பாண்டவ இளவல் பார்த்திபன் அர்ச்சுனன
பயின்ற வில்வித்தை அரங்கேற்றம்
நீண்டது வரிசை நிறைந்தனர் அரசர்
எங்கும் வீரர்கள் நடமாட்டம்
வித்தை காட்டினான் விஜயன் அங்கே
வந்தவர் எல்லாம் வியந்தனராம்
இத்தகு வீரனை எதிர்ப்பவர் உண்டோ
எனும்குரல் கேட்டு பயந்தனராம்
மொத்த சபையும் மவுனம் காக்க
முழங்கி எழுந்தான் கர்ணனுமே
பித்தா நீஎன்ன அரசனா என்றதும்
தலைகவிழ்ந்தானே வீரனுமே
சிங்கம் போன்றவன் சிறுமைப்பட்டதில்
சிலிர்த்தே துரியோதனனெழுந்தான்
அங்க நாட்டின் அரசனாய் கர்ணனை
ஆக்குவேன் என்றே முரசறைந்தான்
எங்கும் பழிச்சொல் ஏற்றவன் கர்ணன்
இந்த உதவியில் நெகிழ்ந்தானே
பொங்கும் நன்றியில் துரியோதனனின்
பாச நண்பனாய் இணைந்தானே
அன்று தொடங்கிய அன்பின் உறவு
அமர காவியம் ஆகியதே
நன்றி உணர்வும் நட்பின் பலமும்
நாளும் நாளும் கூடியதே
 
துரியோ தனனின் அந்தப் புரத்தில்
சொக்கட்டான் விளையாட்டு
கர்ணனும் பானுமதியும் ஆடிட
கணவன் வருகிற ஒலிகேட்டு
பானுமதியும் பணிவாய் எழுந்தாள்
பின்னால் கர்ணன் பார்க்கவில்லை
ஏனென்று கைகளை நீட்டிட மேகலை
அறுந்தது இதையெதிர் பார்க்கவில்லை
 
மண்ணில்சிதறிய முத்துக்கள் உருண்டு
மன்னனின் கால்களில் மோதியதே
கண்ணெதிர் நண்பன் நின்றிடக் கண்டதும்
கர்ணனின் உள்ளம் பதறியதே
களங்கமில்லாமல் துரியன் கேட்டான்
கைகளில் முத்துக்கள் எடுத்திடவோ
மனங்கவர் நண்பா நீமகிழும்படி
முத்துக்கள் நூலில் கோர்த்திடவோ
 
உள்ளங்கள் கலந்து பழகிய பின்னே
ஒருதுளி ஐயம் வருவதில்லை
வெள்ளம் போன்ற அன்பின் வழியில்
வருத்தம் ஏதும் விளைவதில்லை
 
தொடரும்….

கர்ணன்-1

நாட்டியப்பள்ளி ஒன்றில் கர்ணன் குறித்த நாட்டிய நாடகம் கேட்டார்கள்.  கூடுமானவரை ஒரே சந்தத்தில் இருந்தால் நல்லதென்று சொன்னார்கள். ஆறு அத்தியாயங்களாய் எழுதிக் கொடுத்தேன். வலைபூவில் சுலபத் தவணை முறையில் இடுவதாகத்திட்டம்..
                             விநாயகர் வணக்கம்

ஆனைமுகன்! எங்கள் ஆனைமுகன்!-எங்கும்
ஆனந்தம் நிலவிட அருள்வானே
ஞானமுனி அந்த வியாசன் சொல்ல
பாரதம் மலைமேல் புனைந்தானே
தானெனும் எண்ணம் துளியும் இலாமல்
தந்தம் ஒடித்து வரைந்தானே
தானத்திலே உயர் கர்ணனின் கதைசொல்ல
துணையாய் அவனே வருவானே

அத்தியாயம் – 1

சந்திர சூரியர் உளநாள் மட்டும்
சரித்திரம் ஆன மகராசன்
குந்தி போஜனின் அரண்மனை தனிலே
திருவடி பதித்தான் துர்வாசன்
வந்தனம் கூறி இருப்பிடம் தந்து
வண்ணத் திருவடி தொழுதிருந்தான்
குந்தி தேவியாம் புதல்வியை அரசன்
பணிவிடை செய்யப் பணித்திருந்தான்

சின்னஞ் சிறுமியின் பணிவிடை கண்டு
முனிவன் மிகவும் மகிழ்ந்துவிட்டான்
எண்ணும் தேவர் எதிர்வந்து குழந்தை
வரம்தரும் மந்திரம் அருளிவிட்டான்
ஒன்றும் அறியாச் சிறுமிநம் குந்தி
சூரியன் முன் அதைச் சொன்னாளே
பொன்னொளி பொங்கப் பகலவன் வந்தான்
பிள்ளையைக் கைகளில் தந்தானே

காதினில் குண்டலம் மார்பினில் கவசம்
குழந்தை சிரித்தது அழகாக
மாதிவள் இதயம் தாய்மையின் பரிவில்
கரைந்தே போனது மெழுகாக

பிஞ்சுக் கைகளில் பிள்ளையை சுமந்தாள்
பாவம் குந்தி பதறிவிட்டாள்
நெஞ்சம் கலங்கி நிலைகுலைந்தாள் அவள்
நினைத்துப் பார்த்தொரு முடிவெடுத்தாள்
பேழை ஒன்றினில் பிள்ளையை வைத்துப்
போகும் நதியினில் விட்டாளே
வாழிய மகனிவன் வாழிய என்றே
வாழ்த்திக் கண்ணீர் விட்டாளே

புனலில் மிதந்த பேழையும் அஸ்தின
புரத்தின் வழியே போகிறது
நதிநீரா டிய தேரோட் டிக்கு
குழந்தையின் அழுகுரல் கேட்கிறது
தனிவழி போகிற பேழையை அவனும்
திறந்து பார்த்ததில் அதிர்ந்துவிட்டான்
கனியிதழ் விசும்பும் குழந்தையைக் கண்டதும்
கடவுளின்  பரிசென்று மகிழ்ந்துவிட்டான்

கண்களில் மின்னல் கொஞ்சும் பிள்ளை
காணக் காணப் பேரழகு
விண்ணில் ஒளிரும் சூரியன் போலே
வெளிச்சம் பொங்கும் சீரழகு
கர்ணன் எனும்பேர் வைத்து வளர்த்தான்
கூறுங்கள் இவன்போல் யாரழகு?
மண்ணவர் மகிழ வில்லும் வாளும்
பயின்று வளர்ந்தது தோளழகு

வருகிற நதியில் கிடைத்தவன் இன்று
வாலிபனாக வளர்ந்தானே
இருப்பதைக் கொடுக்கும் இதயம் படைத்து
எவரும் போற்ற உயர்ந்தானே

தொடரும்…..

அவள்தான்

 பாடிடச் சொன்னவள் அவள்தான் -இந்தப்
பாதையைத் தந்தவள் அவள்தான்
தேடிய வெளிச்சமும் அவள்தான்-உள்ளே
தெரிகிற ஜோதியும் அவள்தான்
வீணையை மீட்டிடும் விரலாய்-என்
விதியினை ஓட்டிடும் குரலாய்
காணென்று காட்டிடும் அருளாய்-என்
கண்முன்னே வருபவள் அவள்தான்
அண்டத்தைப் பிண்டத்தில் அமைத்தாள்-அதில்
ஆயிரம் அதிசயம் சமைத்தாள்
கண்டத்தில் நீலத்தைத் தடுத்தாள்-எனைக்
கண்டதும் களுக்கென்று சிரித்தாள்
பாய்கிற கடலலை அவளே-வரும்
பாய்மரக் கப்பலும் அவளே
தாயவள் எங்கணும் ஜொலிப்பாள்-அவள்
திருக்கடையூரினில் இருப்பாள்
தாடங்கம் தானந்த இந்து-பிற
கோள்களும் அவளின்கைப் பந்து
நாடகம் நடத்திட நினைத்தாள்-அவள்
நலமென்றும் வலியென்றும் வகுத்தாள்
அதிர்வுகள் அடங்கிடும் தருணம்-நகை
அழுகையும் முடிந்திடும் தருணம்
உதிர்கிற மலரென வருவாள்-இந்த
உயிருக்கு ஒருகதி தருவாள்

பனைமரங்களின் கனவு

காற்றிலாடும் பனைமரங்கள் கனவுகண்டன
கற்பகமாய் மலர்வதுபோல் நினைவுகொண்டன
நோற்பதுபோல் ஒற்றைக்காலில் நின்றிருந்தன
நனவாகும் நமதுகனா என்றிருந்தன
சாமமாகும் போதுகூட விழித்திருந்தன
சாவிலாத வாழ்வுகாணத் துடித்திருந்தன
தாமதமேன் என்றுசொல்லித் தவித்திருந்தன
தூயமகன் வரவையெண்ணி சிலிர்த்திருந்தன
உதயவேளை தன்னிலங்கே ஒருவன் தோன்றினான்
ஓலைகளைப் பறித்தெடுத்துக் கொண்டுபோயினான்
பதப்படுத்தி ஆணிதொட்டு வரையலாயினான்
புண்ணியப்பூங் கவிதைகளைப் புனையலாயினான்
தேனலைகள் புரண்டெழுந்து திசைநனைத்தன
தெய்வங்களும் இறங்கிவந்து தமிழ்படித்தன
கானம்பாடும் பறவைகளும் குரல்கொடுத்தன
கம்பநாடன் என்றுசொல்லி சிறகசைத்தன
ஓலைகளில் அமுதவாரி ஊற்றெழுந்தது
உலகமெங்கும் கவிதையின்பக் காற்றெழுந்தது
காலம்நின்று பார்த்துவிட்டுக் கால்நடந்தது
தேரெழுந்தூர்த் தச்சன்செய்த தேரசைந்தது
பனைமரங்கள் அவனிடத்தில் பக்தி கொண்டன
பாட்டரசன் தொட்டவையோ முக்தி கொண்டன
கனவு நனவானதெனக் கண்டு கொண்டன
கவியமுதை ஓலைகளில் மொண்டுதந்தன
கம்பநாடன் விழிமலர்கள் கருணைநல்கின
கவிதைகள்தான் பனையின்நுங்கில் சுவையும்நல்கின
அன்றுமுதல் பனைமரங்கள் உயரமாயின
விண்ணிலுள்ள கம்பனுக்கு விசிறியாயின

குடும்பப் பாட்டாய் மாறிய காதல் பாட்டு

உலகின் அன்னை என்ற தலைப்பில் அன்னை தெரசா பற்றிய என் பாடல்களடங்கிய முதல் இசை ஆல்பம் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றிருந்த நேரமது. சுஜாதா,ஸ்வர்ணலதா, ஹரிணி
போன்றவர்கள் உருக்கமாகப் பாடியிருந்தார்கள். என்னை ஊக்குவிப்பதற்காக
கவிஞர் வைரமுத்து ஒரு முன்னுரையும் பேசித்தந்திருந்தார்.அதன்பிறகு
தொடர்ச்சியாக பக்தி கேசட்டுகளுக்கு எழுதிக் கொண்டிருந்த போது, முழுவதும்
காதல் பாடல்களைக் கொண்ட ஆல்பம் ஒன்று தயாரிப்பதென்று முடிவானது.

“காதல் வரும் காலம்”என்பது அந்தப் பிறக்காத குழந்தைக்கு சூட்டப்பட்ட
பெயர்.

“உயிரெல்லாம் உருகிட உருகிடப் புதுசுகம்
அடடடா இளமையின் கனவுகள் தினம்தினம்”
என்ற பல்லவியுட்ன் தொடங்கும் பாடலில் வருகிற வரி காதல் வரும் காலம். அந்த ஆல்பம் வெளிவரும் காலம் வரவில்லை. ஆனால்  மெட்டுக்கு எழுதப்பட்ட அந்த ஏழு பாடல்களில், ஒரு பெண் தன் காதலை
வெளிப்படுத்தியும் வெளிப்படுத்தாமலும் தவிக்கும்போது பாடுவதாய் அமைந்த
ஒரு பாடலை, சினிமாக் கம்பெனி ஒன்று வாங்கிவிட்டதாகத் தெரிவித்தார், இசையமைப்பாளர் யானிதேஷ். “இன்னிசைக் காவலன் ‘ என்ற திரைப்படத்துக்காக வாங்கப்பட்ட பாடல் அது. அந்தப் பாடலுக்கு நேர்ந்த கதியைப் பார்க்கும் முன்னால், அந்தப் பாடலைப் பார்த்துவிடுவோமே.

பல்லவி:
சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே
என்னவோ என்னவோ என்கனாவே
கன்னிப்பெண் ஆசைகள் ஆயிரம்
நெஞ்சுக்குள் என்னவோ ஊர்வலம்
சின்னதாய் மோகங்கள் ஆரம்பம்
மன்னவன் அல்லவோ காரணம்

சரணம்-1

யாரோடும் சொல்ல இங்கு வார்த்தையில்லை
சொல்லாத போதுநெஞ்சம் தாங்கவில்லை
ஆனாலும் இந்தக்காதல் ரொம்பத் தொல்லை
தள்ளாடும் பாவமிந்த ஜாதிமுல்லை

ஏதேதோ ஆசைபொங்க இன்பமான நடகம்
உல்லாச ஊஞ்சலாடும் வாலிபம்
தீராத தாகம்தீர காமன்தானே காரணம்
கண்ணோடு கண்கள்பேசும் சாகசம்

நெஞ்சோடு இன்பபோதை மெல்ல மெல்ல ஏறும் நேரம்
(சொல்லவா சொல்லவா

சரணம்-2
நான்கூட வானவில்லின் ஜாதிதானே
என்மேனி தேனிலூறும் சோலைதானே
செந்தேனைத் தேனீபோலத் தேடினானே
செந்தீயில் பூவைப்போல வாடினேனே

அம்மாடி வேலிதாண்டும் ஆசையென்ன நியாயமோ
என்தேகம் இந்தவேகம் தாங்குமோ
பொல்லாத காதல்வந்து சொல்லித்தந்த பாடமோ
கண்ணாளன் செய்ததென்ன மாயமோ

நெஞ்சோடு இன்பபோதை மெல்ல மெல்ல ஏறும் நேரம்
(சொல்லவா சொல்லவா

இது நடந்து ரொம்ப நாட்களுக்குப் பிறகு இசையமைப்பாளர் யானிதேஷ் அவசரம் அவசரமாய் ஓர் அதிகாலையில் அழைத்தார். “அய்யா! ஒரு தப்பு நடந்து போச்சு! நம்ம சொல்லவா சாங் இருக்கே, அதை ஷூட்
பண்ணீட்டாங்க!பிரச்சினை என்னன்னா, அந்த யூனிட்டில பெரும்பாலான ஆட்களுக்கு தமிழ் தெரியாது.ஒரு பொண்ணு அப்பா
அம்மாவோட பாடற சிச்சுவேஷனுக்கு பாட்டை ஷூட் பண்ணி வைச்சிருக்காங்க.குளோஸப் ஷாட் வேற இருக்கு.அதனால லிப் ஸிங்க்
கெடாத அளவு அதே ட்யூனுக்கு குடும்ப சூழலுக்கு ஒரு பாட்டு வேணும்” என்றார்.

தூக்கக் கலக்கத்தில்”எப்பங்க வேணும்”என்று கேட்டதும் “ஒருமணிநேரத்தில
கொடுத்தாபோதும் “என்று சொல்லிவிட்டு,நான் சுதாரித்துக் கொள்ளும் முன்
வைத்து விட்டார்.

நடந்த உரையாடலே கனவாக இருக்குமோ என்று தோன்றியது.சத்குருவைத் தவிர ஆண்கள் என் கனவில் வருவதில்லை என்பதால் செல்ஃபோனை எடுத்துப் பார்த்தேன். காலை 5.18.யானிதான் அழைத்திருந்தார்.

குடும்பத்துக்காக எத்தனையோ பேர் காதலைத் தியாகம் செய்ததுண்டு.குடும்ப
சூழலுக்காக காதல் பாடலைத் தியாகம் செய்த ஒரே பாடலாசிரியன் நானாகத்தான் இருப்பேன் “இன்னிசைக் காவலன்” படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் இதுதான்

பல்லவி:
சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே
என்னவோ என்னவோ என்கனாவே
கண்ணிலே ஆயிரம் மின்னலே
மந்திரம் போட வா தென்றலே
சொந்தங்கள் சேர்ந்திடும் நாளிலே
பொன்மழை தூவுதோ விண்ணிலே

சரணம்:1
சந்தோஷ ராகம்பாடும் நேரம்தானே
நெஞ்சோடு இன்பமான பாரம்தானே
ஆகாயம் வந்துபார்க்கும் வாழ்க்கைதானே
ஆஹாஎன் வீடு கூட வானம்தானே

எந்நாளும் ஓய்விலாத தந்தைதானே சூரியன்
என்றாலும் எங்களுக்கு ஸ்நேஹிதன்
பிள்ளைகள் சுற்றிவந்து கும்மிகொட்டும் பெண்ணிலா
அன்னைதான் எங்களுக்கு வெண்ணிலா

அன்பென்ற ராகம்பாடி ஆடுகின்ற வானம்பாடி
(சொல்லவா சொல்லவா

சரணம்:2
தெய்வங்கள் சேர்த்துவைத்த சொந்தம்தானே
தெய்வீகம் என்பதிந்த பந்தம்தானே
பிள்ளைகள் ஆளுகின்ற காலம்தானே
பொய்பேசி மாட்டிக்கொள்ளும் பூக்கள்நாமே

பொன்வீடு காவலென்று ஆடிப்பாடும் பூங்கொடி
கண்தூங்கும் மெத்தைதானே தாய்மடி
எல்லார்க்கும் வாழ்க்கையுண்டு நம்பிப்பாடு கண்மணி
நம்போல வேறு இங்கு யாரடி

காலங்கள் நம்மை வாழ்த்தி கானம்பாடும் இந்தநேரம்
(சொல்லவா சொல்லவா

திரைப்படத்தில் இந்தப்பாடலை கல்யாணி பாடியிருந்தார்.
ஆல்பத்தில் பாடியவர் கோபிகா. படத்தில் இந்தக் காட்சியைப் பார்க்க
விரும்பினேன்.நான் பார்க்கப் போகும்முன் படம் போய்விட்டது!!

டைட்டில் சாங்

ரொம்ப வருஷங்களுக்கு முன்னர்,ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு பாடல் எழுத அழைத்தார்கள்.”முக்கியமான பாட்டுங்க…இந்தியத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக ஜேசுதாஸ் ஒரு சீரியலுக்கு பாடப் போறாரு.நீங்கதான் பாட்டு எழுதப் போறீங்க.டூயட் சாங்”என்றார்கள்..

சீரியல் பேரு என்னங்க?

அது இன்னும் வைக்கலீங்க..ஆங் சொல்ல மறந்துட்டேன்.அதுக்கு ஒரு டைட்டில் சாங்கும் வேணும்

அப்ப டைட்டில் தெரியணுமில்லீங்களா!

அது சொல்றோம் சார்! முதல்ல டூயட் எழுதுங்க!இது காமெடி சீரியல் . அதனாலே டூயட் சாங் கொஞ்சம் காமெடியா இருக்கணும். கே.எம்.ராஜு மியூசிக்.அட்ரஸ் சொல்றோம்..வந்துடுங்க..

லுங்கியும் பனியனுமாக வீட்டில் இருந்தார் ராஜு.அவருடைய மனைவி திருமதி லதா ராஜு,தொலைக்காட்சியில் பெரிய பதவியில் இருந்தார்.
ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவுக்கு ஆஸ்தான இசையமைப்பாளர்
ராஜு.

இரண்டு ஹீரோக்களுக்கான சீரியல்.ஒரு ஹீரோ வெற்றி விக்னேஷ்வர்.(இப்போது அநேக பக்திப் படங்களில் அவர்தான் ஹீரோ என்று கேள்வி. உருண்டு புரண்டு சாமி கும்பிடுவாராம்.) வீட்டு வேலைக்காரி
விநோதினியை விரும்புகிறார்.பையனின் அப்பா தடை.அப்பாவின் எதிர்ப்பை மீறி கைப்பிடிக்க கனவு காண்கிறார்கள்.ஊதுபத்தி புகையிலிருந்து கனவுப்புகைக்கு காட்சி மாறும்போது பாடல் தொடங்கும்.

“பல்லவியில பிராமின் காஸ்ட்யூம்.முதல் சரணத்துலே கிறிஸ்டியன்
காஸ்ட்யூம்.ரெண்டாவது சரணத்துலே முஸ்லிம் காஸ்ட்யூம்.ஒவ்வொரு
பல்லவியிலேயும் பையனோட அப்பாவ கிண்டல் ப்ண்ணனும்.பட்சே… லவ்
கான்செப்ட்”என்றார் ராஜு.

அதுசரி.காதலை விட காமெடி ஒன்று உண்டா என்ன?யோசிக்கும்போதே ஆர்மோனியத்தை இசைத்துக் கொண்டே தத்தகாரம் பாடிக்காட்டினார்:

“தரரே தரரா-தர
தரரே ரரரா-தர
தரராரே தரராரி ரா….
தானன்னனே தன தன்னானேனா
தானன்னனே தன தன்னானேனா
தனனே தனனா தனனே தனனா
தன தானே…தானின னா….

“ஞான் இப்ப வரூ..” என்று கொஸ்டின் பேப்பர் கொடுத்த வாத்தியார் போல்
சந்தேகப் பார்வை பார்த்துவிட்டு எழுந்து போனார் அவர்.

15 நிமிடங்களுக்குப் பிறகு அவர் வருவதற்குள் நான் எழுதியிருந்த பல்லவி,
அவருக்குப் பிடித்திருந்தது.சினிமா பாஷையில் சொன்னால்,அவருக்கு மேட்டரை விட மீட்டர் முக்கியம்.

“அழகே அழகே-கொஞ்சம்
அருகே வரவா-புது
மடிசாரில் அசைந்தாடி வா
ஆசாரங்கள் இங்கே கூடாதம்மா
காதல்வந்தால் அங்கே பஞ்சாங்கமா
இணைந்தோம் கிளியே கலந்தோம் நிலவே
இளம்பூவே  சேர்ந்திட வா…”

டைரக்டர் அருகில் இல்லை .ஆனால் ராஜு “பல்லவி ஓக்கே.ஆயாளுக்கு ஞான்
பரயாம்.இப்போ சரணம்”என்று பாய்ச்சல் சந்தம் ஒன்றை வாசித்துக்
காட்டினார்.கிறிஸ்துவ மதத்தின் கல்யாண உடையில் காட்சி மாறுமாம்:

தாரத் தரத்த ராரே
தாரத் தரத்த ராரே
தாரத் தரத்த ராரீரா ..

சில நிமிஷங்களிலேயே வரிகளைச் சொன்னேன்.

“காலம் தடுத்த போதும்
காதல் ஜெயித்து வாழும்
ஆடும் இளைய பூங்கொடி”

ராஜு உற்சாகமாகி,முதல் சரணத்தின் அடுத்த பகுதியையும் வாசித்தார்:
‘இங்கே பையன்ட அச்சனை கேலி  செய்யணும்’ என்று நினைவு படுத்தினார்:
தாரார தார தாரரே
தாரார தார தாரரே
தரர்ர தார தார தார தாரரீ

“ஏவாளின் காதல் வென்றதே
ஆதாமின் அப்பன் இல்லையே
இறைவன் ஏற்றுக் கொண்ட சொந்தம் தானடி”
என்ற வரியும் ஓகேயானது.இப்படியே பாடல் முழுவதையும் முடிக்கும்போது
டைரக்டரும் வந்தார்.ஸ்ரீதரிடம் வேலை பார்த்தவராம்.பாட்டைக் கேட்டுவிட்டு,
“நல்லா வந்திருக்கு!டைட்டில் சாங் எழுதிடுங்க”என்றவரிடம் டைட்டில்
என்னசார்?என்றோம்.

“இன்னும் வைக்கலை” என்றார் இரக்கமேயில்லாமல். இரண்டு சகோதரர்கள்.
பெரியவன் பாச்சா.பரமசாது.பக்திமான்.சின்னவன் கீச்சா. ரெட்டைவால்.ரகளையான ஆள். வெற்றி விக்னேஷ்வர் பாச்சா.கணேஷ்(ஆர்த்தி) கீச்சா. பாச்சாவுக்கு அவர்களின் அப்பா விஞ்ஞானி(மௌனராகத்தில் வருகிற மிஸ்டர் சந்திரமௌலி) வில்லங்கமான ஊசி ஒன்றை அவர் பாச்சாவுக்குப் போட்டதும் கதை கந்தலாகிறது.

டைரக்டர் சொன்னார்,”தம்பி! இந்தக் கதைய வச்சு சரணத்தை எழுதீடுங்க!
டைட்டில் ரெடியானதும் பல்லவியிலே டைட்டில் வச்சுக்கிடலாம்.
இசையமைப்பாளர்,கழுவுகிற மீனில் நழுவுகிற மீனானார்.”அப்போ லிரிக்ஸ்
எழுதட்டும்!பின்னே ட்யூன் செய்யாம்”

“பாச்சாவுக்கு பக்திமுத்தி போயிருப்பான் காசி
போகுமுன்னே அப்பன்வந்து போட்டுப்புட்டான் ஊசி
காமெடிக்கும் எங்களுக்கும் ராசிநல்ல ராசி
கவலையெல்லாம் மறந்திருப்போம் கமான் டேக்கிட் ஈஸி”

“பாச்சா கீச்சா அடிக்கும்லூட்டி பாக்க வேணும் நீங்க
மனசுவிட்டு சிரிக்கவைக்க வந்திருக்கோம் நாங்க
வாரா வாரம் எங்களுக்குக் காத்திருங்க நீங்க
கவலையெல்லாம் மறக்கவைப்போம் ஒரே ஜாலிதாங்க”

என்ற இரு சரணங்களுக்கும் டியூன் செய்து ஒரு வாரத்துக்குப் பிறகு
சீரியலுக்குப் பெயர் வைத்தார்கள்.”ஹரே பாச்சா ஹரே கீச்சா”என்று.
அவசரம் அவசரமாய் என்னிடம் தொலைபேசியில் கேட்டுப் பெற்ற பல்லவி,

“ஹரே பாச்சா ! ஹரே கீச்சா! இது புதுவித பஜனையப்பா
பசுவைப்போல பாச்சா!குரங்குப்பய கீச்சா!தெனம்தெனம் ரகளையப்பா”

ஆனால்……
படம் எடுப்பதாக இருந்தாலும் சரி,
பிரபல வார இதழில் தொடர் எழுதுவதானாலும்சரி…இப்போதெல்லாம் முதலில்
தலைப்பு வைப்பதில்தான் முழு கவனம் செலுத்துகிறார்கள்.
அதற்கென்ன என்கிறீர்களா/போகப்போகப் புரியும்.இந்தக் கட்டுரையின் நோக்கம்
தெரியும்!!