கம்பனில் சுழலும் சொற்போர்

நடுவர் :”கலைமாமணி”மரபின்மைந்தன் முத்தையா

கற்பவர் மனங்களைப் பெரிதும் கவர்பவன்

அயோத்தி இராமனே– முனைவர்.குரு.ஞானாம்பிகை

ஆரண்ய இராமனே-   முனைவர்.து.இளங்கோவன்

 கோதண்ட இராமனே- திருமதி மகேஸ்வரி சற்குரு

இடம்:அருள்மிகு கோதண்டராமசுவாமி ஆலயம்
ராம்நகர், கோவை -641009

நாள்: 24.11.2012  சனிக்கிழமை மாலை 6.00 மணி

     சொற்போர் வெடிக்கும்!                 சூடு பறக்கும்!

(அமரர் டி.எஸ்.சங்கர ஐயர் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி)
தங்கள் வருகை……..எங்கள் உவகை

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!!

அற்புதர்-14

ஆண்டின் மிக இருண்ட இரவை அற்புதரின் முன்னிலையில் அணுஅணுவாய் உள்வாங்க பல இலட்சம்பேர் வந்துகொண்டிருந்தனர்.
மிகநீண்ட மலைப்பாம்பாய் வந்து கொண்டிருந்த அந்த வரிசையைப்
பார்த்த அற்புதர் புன்னகைத்த வண்ணம் வணங்கினார்.அவருக்கு
அன்றிரவு முழுவதும் தன் பங்குதாரருடன் ஒரு பணியிருந்தது..

ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கும் உயிர்ச்சுருளை உசுப்பிவிட்டு சீண்டிவிட்டு சீறவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அற்புதருக்கு அளவிட முடியாதஆனந்தம்.

தங்களுக்குள் இருக்கும் அந்த உயிர்ப்பை உணர்ந்தவர்கள்,உணராதவர்கள் அனைவருக்கும் அற்புதரின் சபையில் ஆசனங்கள் இர்ருந்தன.உலகின்
வெவ்வேறு திசைகளிலிருந்தும் குழலோடும் யாழோடும்முரசுகளோடும்
அங்கமெங்கும் தாண்டவத் துகள்களோடும் வந்துசேர்ந்த வல்லோர் குழு
கவிந்து கொண்டிருந்த இருளின் ஒவ்வோர் அணுவிலும் அதிர்வுகள்
கூட்டின.

அந்த இரவில் அங்கிருந்தோரின் முதுகுத்தண்டுகள் வழியே
மின்னல் வேகத்தில் பாம்புகள் ஊர்ந்து செல்லத் தொடங்கின.
சுருண்டு கிடந்த சாரைகளும் விரியன்களும் ராஜநாகங்களும்
துயில் கலைந்தெழுவதையும்,மெல்ல அசைவதையும் அங்கு வந்தவர்தம்  உடலசைவை வைத்தே உணர முடிந்தது.

அற்புதரின் திருமேனி மாபெரும் மகுடியாய் எழுந்து நின்று அத்தனை
நாகங்களையும் ஆட்டுவித்தது.ஆலமுண்ட கண்டமென்று நீலம்
படர்ந்திருந்த நள்ளிரவில் அற்புதரின் மகாமந்திர உச்சாடனத்தில் அத்தனை நாகங்களும் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாய்
படம்விரித்தன.

உச்சிவரை உயர்ந்தெழுந்த நாகங்கள் உள்ளே நிகழ்த்திய உறியடி உற்சவத்தில் உச்சியிலிருந்த பாற்குடத்தின் துளிகளை பருகின
நாகங்கள். பசிதுயில் மறந்தன தேகங்கள். நெடுந்தொலைவில்
ஒலித்தவொரு சித்தர் பாடல் அந்த வெள்ளிமலையெங்கும் விரிந்து
பரந்தது..

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்பவர்க்கு
 தேங்காய்ப்ப்பால் ஏதுக்கடி-குதம்பாய்
 தேங்காய்ப்பால் ஏதுக்கடி “

அற்புதர்-13

அற்புதரின் இரவுகள் ஏகாந்தமானவை.அவரின் அறிதுயில் பொழுதுகளில் அகலத் திறந்த அவரின் ஆன்மவாசல்வழி தங்களுக்கானசொர்க்கவாசல் தென்படுகின்றதா என்று வடிவிலாத் துளிகள் வந்து நிற்பதுண்டு.

பெருவழிக்கான பாதை திறக்க நெடுங்காலமாய் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் மீது அற்புதரின் கண்ணோக்கம் படும்போதே அவர்களின் பயணப் பொழுது முடிவாகிவிடும்.

கையிலிருக்கும் மூட்டை முடிச்சுகளைக் களவு கொடுப்பதே அந்தப்
பயணத்துக்கான அடிப்படைத் தகுதி என்றறிந்தவர்கள் அற்புதர் அவற்றைக் களவாடும் கணத்திற்கென்று ஆவலுடன் காத்திருப்பார்கள்.நெடுங்காலமாய் சுமக்கும் அந்த மூட்டை முடிச்சுகளை அவர்களிடமிருந்து தனியே பிரித்தறியும் அற்புதமே அற்புதருக்குத்தான் சாத்தியம். தங்கள் மூட்டைகளைத் தங்களிடமிருந்து பிரிக்கவும்,தங்கள் முன்னிலையிலேயே அவற்றை எரிக்கவும் அவர்கள் அற்புதரையே பெரிதும் நம்பியிருப்பார்கள்.

கைகளில் இருக்கும் மூட்டைகளை மட்டுமின்றி அவர்கள் பெயரில் பதிவான சரக்குகளையும் கைப்பற்றி எரிப்பதில் கைதேர்ந்தவர்அற்புதர். எனவே அவர்களின் பயணிகள் தங்களின் உடமைகள் பத்திரமாய் களவு போயிருக்கும் என்ற நிம்மதியுடன் காணாமல்போவார்கள்.

பலரும் பயணம் போவதாய் நினைத்துக் கொண்டு ரங்கராட்டினத்தில்
ஏறிவிட்டு தொடங்கிய இடத்திற்கே திரும்பத் திரும்ப வந்து கொண்டும் வழியெங்கும் கதறிக் கொண்டும் இருக்கும்போது, அற்புதரின் வாகனத்தில் ஏறியவர்களால் விரும்பிய இடத்திற்கு விரைந்து செல்ல முடிந்தது. ஒருபோதும் திரும்பத் தேவையில்லாதஉல்லாசப் பயணம் அது.

ஒருதிசைக்கும் மறுதிசைக்குமான பயணமா?ஒருகரைக்கும் மறுகரைக்குமான பயணமா? என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருப்பவர்கள் வந்துசேரக் காலம் பிடிக்கும் என்பதை அற்புதர் அறிவார். விரும்பி வரும் பயணிகளே காத்திருப்போர் பட்டியலில்இருக்க ஒருசில பயணிகளுக்காக அற்புதர் காத்திருப்பதும் உண்டு.

செல்ல வேண்டிய பாதையாகவும் சென்று செலுத்தும் வாகனமாகவும் சேர வேண்டிய ஷேத்திரமாகவும் தானேயானதை ஒருபோதும் அற்புதர் அறிவித்ததேயில்லை.செல்பவர்கள் கண்டதில்லை.சென்றவர்கள் சொன்னதில்லை.

அற்புதர்-12

சின்ன வயதிலிருந்தே சிகரங்கள் என்றால் அற்புதருக்கு மிகவும் பிரியம்.அவரது பாதங்களிலும் பாதுகைகளிலும் வாகனச்சக்கரங்களிலும் மலைவாசனையும் வனவாசனையும்வந்து கொண்டேயிருக்கும்.முன்பொரு காலத்தில் பரமனின் பாதங்கள் பதிந்த மலைத்தடங்களில்
அற்புதர் தன் குருநாதரை தரிசித்தார்.எனவே மலைகளின் தரிசனம், அவருக்கு தாய்முலை கரிசனம்.
அன்று தொடங்கி எல்லாச் சிகரங்களிலும் அவருக்கான பாதைகள் விரியத் தொடங்கின.சமவெளிகளில்அற்புதர் நடந்து வரும்போதெல்லாம் ஒரு சிகரம் நடந்து வருவதைப்போலவே இருக்கும். மலையேறும்
மனிதர்கள் அடிவாரங்களில் இளைப்பாறி அதன்பின் தொடங்குவதுபோல் அவருடைய திருவடிகளில்இளைப்பாறி ஆன்மீகச் சிகரங்கள் நோக்கி ஆயிரமாயிரம்பேர் தங்கள் தேடல்களைத் தொடங்கினர்.
ஒரு மலையை நாம் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. கரடு முரடான பாதைகள் கொண்டதென்றுமலைகளைப் புரிந்து வைத்திருப்பவர்களுக்கு அங்கே மெல்லிய மலர்கள் கிள்ளல் பயமின்றி கிளுகிளுத்துச் சிரிப்பதை உணரவே முடியாது. பறவைகளும் விலங்குகளும் தங்கள் இயல்புப்படிமலைகளில் வாழ்வது போல், அற்புதரின் அணுக்கத்தில் ஒவ்வொரு மனிதரும் தங்கள்
உயிரியல்பை உணரத் தொடங்கினர்.ஆனால் அற்புதரின் பிரம்மாண்டம் மட்டும் அவர்களுக்குமுற்றாகப் பிடிபடவில்லை.
கரிய பாறைகளின்மேல் கண்ணுறங்கும் முகில்களைப்போல் அற்புதரின் தோள்களில் சுமைகளைவைத்து தாள்களில் துயின்றன பல்லாயிரம் உயிர்கள்.மலையெங்கும் ஆங்காங்கே ஊஞ்சல் கட்டும்வெள்ளி அருவிகளாய் கண்கள் ஊற்றெடுக்க மூடிய இமைகள் மூடியவண்ணம் தியானத்தில் இருந்தனர்மனிதர்கள்.காற்றின் அசைவில் சிலிர்த்தசையும் மரங்களாய் அற்புதரின் சுவாசத்தில் சிலிர்த்தன மனங்கள்.
மலையில் ஆங்காங்கே தென்படும் காட்டு நெருப்பாய் தவத்தின் உச்சியில் அவ்வப்போது சிலரின் வினைக்காடுகள்எரியும்போதும் மௌனசாட்சியாய் அசையாதிருந்தார் அற்புதர். பனிபடர்ந்த சிகரமுகடுகளின் சொல்லொணா வசீகரம்அற்புதர் விழிமூடியமரும்தருணங்களில் கவிவதும், அவரின் விழிகள்மலரும்பொழுதில் உயிர்களெங்கும் வெய்யில் படர்வதும்
அவர் அசலர் என்பதை அடிக்கடி உணர்த்தின.
இருளின் விழுதுகள் பிடித்திறங்கி நட்சத்திரங்களும் நிலவும் மலைகளில் உலவ வரும் இரவுகளின்இரகசியக் குறிப்பை சில்வண்டுகள் பரிமாறிக்கொள்வதுபோல், அற்புதருக்கும் ஆகாயத்துக்கும் நடக்கும்
தகவல் பரிமாற்றத்தை இரவு நட்சத்திரக் கண்கள் மினுங்க கேட்டுக் கொண்டிருக்கும்.
அந்த இரவுகளின் சூட்சுமக் குறிப்புகளை மொழிபெயர்த்து அற்புதர் என்னும் கருணைச்சிகரத்தின்அடிவாரத்தில் வந்தமரும் வசந்தகாலப் பறவையொன்று வாய்விட்டுப் பாடியது
சிகரத்தில் ஏறும் எந்த மனிதனும்
சிகரம் வென்றவன் இல்லை
உயரத்தைத் தொட்டவன் எல்லா நேரமும்
உயரத்தில் நிற்பதும் இல்லை
சிகரம் தீண்டிய முகிலகளும் பனியும்
சுவடே இன்றிக் கரையும்
சிகரம் என்பதே கரையச் சொல்வது
எத்தனை பேருக்குப் புரியும்?”
அந்தப் பாடலின் வரிகள் தோறும் வெளிச்சம் போட்டது,அற்புதரின் புன்னகை,

அற்புதர்-11

ஆகாயத்தைக் குறிவைப்பவர்களில் அற்புதரும் ஒருவர். ஆனால் அவர் குறிவைப்பது, தான் ஏற்கெனவே வென்றுவிட்ட ஆகாயத்தை. நெற்றிப் புருவங்கள் நடுவே வந்து நின்ற வெட்டவெளியின் விரிவை வெளியிலும் காண்பதால் அவர்பார்க்கும் ஆகாயம், அவருடைய ஆகாயம்.

ஆனால் ஆகாயத்தைக் குறிவைத்து அவர் எய்யும் அம்புகள் எதையும் கிழிக்கும் அம்புகளல்ல.கிழிந்த ஆகாயத்தைத் தைக்கும் அம்புகள்.பூமியை நாணாக்கி மேல்நோக்கி மெல்ல மெல்ல எழும் அம்புகளை அவர் எய்த வண்ணம் இருக்கிறார்.

அற்புதரின் படைவீரர்கள் அல்லும்பகலும் அந்த அம்புகளை எய்தவண்ணம் இருக்கிறார்கள். அகஆகாயத்தின் ஆனந்தம் உணர்ந்த அற்புதர் புற ஆகாயத்தின்காயங்களை ஆற்றப் பச்சைப் பசுங்கணைகளை விண்நோக்கி விடுத்தவண்ணம் இருக்கிறார்.

“அம்பு காயத்தை ஆற்றுமா?”என்றொரு விமர்சகர் எழுப்பிய கேள்விக்கு அற்புதரின் படையிலிருந்தொருவர் பதில்சொன்னார். “அன்பு காயத்தை ஆக்குமென்றால் அம்பு காயத்தை ஆற்றாதா என்ன?”

“ஆகாயம் நோக்கிய ஆன்மீகத்தவம், வான்கருணையை வரவழைப்பது போல் ஆகாயம் நோக்கிய தாவரத்தவம், வான்மழையை வரவழைக்கும்” என்றார் அற்புதர். விரல் சொடுக்கியதும் பல இலட்சம் பசிய அம்புகள் வான்நோக்கி எழுந்ததை உலகின் வெற்றி ஆவணங்கள் சாதனை என்று சொன்ன போதுஅற்புதர் சொன்னார்,

“இது சாதனையா என்று தெரியவில்லை. அப்படியிருந்தால் ஒரு வேண்டுகோள். யாரேனும் ஒருவர் இந்த சாதனையை முறியடித்து இந்தசாதனையிலிருந்து மீண்டுவர எனக்கு உதவுங்கள்”.

“அப்படியானால் இது சாதனையில்லையா?” அதிர்ச்சியுடன் கேட்டவர்களுக்குஅற்புதர் தந்த பதில் இது. “இந்த அம்புகள் நம் அகிம்சைச் சகோதரர்கள். நம்வெளிமூச்சு இவர்களின் சுவாசம். அவர்களின் வெளிமூச்சு நம் சுவாசம். இவர்களுடன் நமக்கிருப்பது இரத்த பந்தமல்ல. சுவாச பந்தம்”

அற்புதரின் அமைதிப்படை தொடுக்கும் பசிய அம்புகளின் பாய்ச்சலைப் பார்த்த உலகம் ஆகாயம் நோக்கிய இந்த ஆக்கபூர்வமான அம்புகள், கந்தலாகிவிட்ட ஆகாயத்தின் ஆடையைத் தைக்கும் ஊசிகள் என்பதை உணர்ந்தார்கள்.

அற்புதர்பால் கொண்ட அன்பால், அவரை “மரம் நடும் சாமி’என்று மற்றவர்கள்சொன்னபோது, ஆகாயத்தைக் குறிவைத்துக் கொண்டிருந்த அற்புதர்அவசரமாய்ச் சொன்னார், “நான் வந்தது மரங்களை வளர்க்க அல்ல..உயிர்களை மலர்த்த.. இது காலத்தின் தேவைக்குக் கைகொடுக்கும் வேலை. உலகைக்காக்க ஆகாயத்தின் ஓசோனை உறுதிசெய்ய என்னில் அங்கமாய் இருக்கும் பசுமைக்கரங்களால் மரங்கள் வளரும். ஆனால் என் சொந்த நந்தவனத்தில் காற்றின் அமுதத்தை உள்வாங்கி உயிரென்னும் பூக்கள் மலரும். உயிர்கள் மலர்த்துவதே என் வேலை. மரங்கள் வளர்ப்பது என் லீலை”

தமிழக முதல்வர் ம.கோ.இரா.

இப்படித்தான் உலகத்தமிழ் மாநாட்டின்போது எம்.ஜி.ஆர்.தனித்தமிழ் ஆர்வலர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். அவருக்கு தமிழறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பும் பற்றும் இருந்தது.

சில தமிழ்ச்சொற்களைப்பற்றி அவர் வேடிக்கையாகக் கேட்டதையும்
அதற்கு முதல்வர் மனம் புண்படாமல் தான் விடைதந்த விதம் குறித்தும்
அவ்வை நடராசன் அவர்கள் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஓட்டுநரை “காரோட்டி”என்று சொல்வதை எம்.ஜி.ஆர். ஒருமுறை கிண்டல்
செய்தாராம்.”அது என்ன காரோட்டி கா..ரோட்டி” என்று கேலி செய்ய உடனே அவ்வை நடராசன்,”எனக்கென்னங்க தெரியும்? எனக்கு படகோட்டிதான் தெரியும்” என்று சொல்ல, ஒருகணம் திகைத்த எம்.ஜி.ஆர்,
வெடித்துச் சிரித்திருக்கிறார்.

அவர் முதல்வராக இருந்த காலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாவதில் காட்டிய அக்கறை,பாரதியார் நூற்றாண்டு கொண்டாடிய
விதம் இவையெல்லாம் மொழி ஆர்வலர்களின் மனங்களில் அவர்மீது
மிகுந்த மதிப்பை ஏற்படுத்தின.

மொழியுணர்வும் இனவுணர்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
ஆட்சியாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர்.மொழிக்கொள்கையில் காட்டிய
உறுதி குறித்தெல்லாம் அரசியல் உலகில் ஆழமாய் அகலமாய் விவாதங்கள் நடந்துள்ளன. இந்தி எதிர்ப்பில் தமிழகத்தில் எழுந்த
கொந்தளிப்பின் பின்னால் இருந்த உணர்ச்சு மதிப்பளித்த எம்.ஜி.ஆர்.
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் எடுத்த நிலைப்பாடுகளையும்
தமிழகம் நன்கறியும்.

சமீபத்தில் “நாடாளுமன்றத்தில் வைகோ”என்ற நூலைப் படித்தபோது,
முதலமைச்சராக இருந்தபடி எம்.ஜி.ஆர்.எடுத்த ஒரு முக்கிய நிலைப்பாட்டை நூலாசிரியர் திரு.மு.செந்திலதிபன் மிக செறிவாகப்
பதிவு செய்திருப்பதைப் பார்த்தேன்.

இராமேஸ்வரத்திலிருந்து ஈழத்திற்கு ஆயிரம் இளைஞர்களுடன் படகில்
செல்லப்போவதாய் திரு.பழ.நெடுமாறன் அறிவித்தார். அவர் புறப்படும்
இடத்தில் கைதாவார் என்றும் இராமேஸ்வரத்தில் கைதாவார் என்றும்
வதந்திகள் உலவின. இராமேஸ்வரம் கடற்கரைக்கு நெடுமாறன் குழுவினர்
சென்று நின்றபோது கரையில் ஒரு படகைக்கூட காணோம். போராட்டக்
குழுவினர் திரும்ப நேர்ந்தது.

இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது எம்.ஜி.ஆர் தந்த
பதில் இது: ” அன்னை இந்திராகாந்திக்கு ஓர் ஆபத்து நேர்ந்தபோது,
அவர் உயிரைக் காத்தவர் மாவீரர் நெடுமாறன்.ஆனால் கடலில் போகும்
வேளையில் அவர் உயிருக்குப் பாதுகாப்பு உண்டா?எதிரிகள் வந்து சுட்டால் அவரால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியுமா? ஒரு நெடுமாறனை இழந்தால் இன்னொரு நெடுமாறனை உருவாக்க முடியுமா?
அதனால்தான் படகுகளை அப்புறப்படுத்தச் சொன்னேன்.

ஆனால் மக்கள் நடுவே இனவுணர்வை மேம்படுத்த அவர் செய்து வரும்
பிரச்சாரம் விலைமதிப்பில்லாதது.ஒரு முதலமைச்சராக இருப்பதால் நான்
செய்ய முடியாத பிரச்சாரத்தை அவர் செய்கிறார்.  எனவே அவரைக் கைது
செய்ய வேண்டாமென்று சொன்னேன்”என்றாராம் எம்.ஜி.ஆர்.

படகோட்டிகளை அப்புறப்படுத்தியதிலும் அந்தப் படகோட்டி
வித்தியாசமாகத்தான்   சிந்தித்திருக்கிறார்.

அற்புதர்-10

வானம் வைக்கும் வண்ண வண்ண வரவேற்பு வளைவுகளும்
மேகங்கள் தெளிக்கும் பன்னீர்த் துளிகளும் அற்புதரின் குடிலுக்கு
கடவுள் வருவதை உலகுக்கு உணர்த்தின.அற்புதரின் செயல்கள்
அனைத்திலும் அறிவிக்கப்படாத பங்குதாரராகிய கடவுள்,அற்புதரின்
குடிலில் நுழையும்முன் வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த காலணிகளின்
வரிசையில் தன் காலணிகளையும் கழற்றி வைத்தார்.

அப்புறம் அற்புதரின் குடிலில் வரவேற்பறையிலிருந்த விருந்தினர்
பதிவேட்டில் மின்னல் கொண்டு வெளிச்சக் கிறுக்கல் கிறுக்கினார்

எழுத்தேதும் அறியாமல் எல்லாம் அறிந்த பல ஞானியரின் பெருவிரல் ரேகைப்பதிவுகளும் அந்த வருகைப்பதிவேட்டில் இருப்பதைக் கண்ட கடவுள்அந்த ரேகைகளை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார்.

கடவுள் வருகிற தேதியறிந்து கூட்டம் கூட்டமாய் திரண்டிருந்த பல்லாயிரம் மனிதர்கள் வெள்ளாடையணிந்து வரிசையாய் வந்த விதம்
வனம்நடுவே வெள்ளைநதியொன்று புகுந்ததுபோல் இருந்தது.அற்புதரின்
அருகே ஆசனமிட்டமர்ந்திருந்த கடவுள் முன்னர் தலைவணங்கிய
மனிதர்களை அற்புதர் வணங்கினார்.

“நம் குடிலுக்கு கடவுளை வெற்றிகரமாய் அழைத்துவந்த உங்களுக்கென்
பாராட்டுக்கள்”என்று அற்புதர் அறிவித்ததும் கடவுள் வாய்விட்டுச் சிரித்தார்.
அவருடைய சிரிப்பு முடிய அரைக்கணம் இடைவெளிவிட்ட அற்புதர்
தொடர்ந்தார்….

“இந்தக் கடவுளை நான்தான் அழைத்து வந்தேனென்று இந்தக் கடவுள்
உட்பட எல்லோரும் கருதிக் கொண்டிருக்கிறீர்கள், உண்மையில் என்ன
நடந்தது தெரியுமா?ஒளிந்திருந்த கடவுளின் கால்களைப் பிடித்தும், வராத போது அவர்
காதுகளைப் பிடித்தும் இழுத்து வந்திருக்கிறேன். தானிருப்பதே தெரியாமல்
இருப்பதுதான் கடவுளுக்குப் பிடிக்கும். எனவே அவர் ஓடி ஓடி ஒளிந்து
கொள்கிறார்” என்றார் அற்புதர்.

“எங்கே ஒளிகிறார்? எங்கே ஒளிகிறார்”என்றனர் மனிதர்கள். இப்போது
அற்புதர் வாய்விட்டுச் சிரித்தார். “யாரும் அணுக முயலாத அளவு
முடைநாற்றம் வீசுகிற இடங்களில் கடவுள் ஒளிகிறார். அந்த இடம்
எங்கே இருக்கிறது என்கிறீர்களா?மனிதர்களின் உயிர்தான் கடவுளின்
உறைவிடமும் மறைவிடமும்.அங்கேதன் பிறவிகள் பலவாய் நீங்கள்
சேர்த்த வினைகளின் மூட்டைகள் முடைநாற்ரம் வீசுகின்றன. நான்
உங்கள் மூச்சுக் காற்றுவழி உள்ளே நுழைந்து, உயிரைத் தூய்மை செய்து
உள்ளே ஒளிந்திருக்கும் கடவுளைக் கண்டுபிடிக்கிறேன். உங்களுக்குள்
இருக்கும் அதே கடவுளின் நீட்சியைத்தான் கோயிலில் இருத்துகிறேன்”
என்றார் அற்புதர்.

கேட்டுக் கொண்டிருந்த மனிதர்களின் கண்களில் இருந்து அலையலையாய் வழிந்த ஆனந்தக் கண்ணீரைக் கண்ட அற்புதர் சொன்னார்.”முந்திவருகிற ஆனந்தக் கண்ணீர்தான் உள்ளே உள்ள
கடவுளின் அடையாள அட்டை.உங்களுக்குள் இருக்கும் கடவுளை உணர்ந்த உங்களை வணங்குகிறேன்”.

அற்புதர் – 9

அற்புதரின் பிரதேசத்திற்குள் புதிதாய் வந்தார் அந்த மனிதர். அவர் புதியவர் என்ற எண்ணம் அவருக்கு மட்டுமே இருந்தது. அற்புதரின் அங்க அடையாளங்களை அவர் ஏற்கெனவே விசாரித்தறிந்திருந்தார். அற்புதர் ஆடைகள் அணியும் பாங்கு பற்றி, அவர் கேள்விப்பட்டிருந்தார்.யாரையும் கேட்காமலே அற்புதரை அடையாளம் கண்டுவிட வேண்டுமென்று அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்.

முதிய தோற்றமுள்ள எளிய மனிதர் ஒருவர் அந்த மனிதருக்கு சற்று முன்பாக சென்று கொண்டிருந்தார். சுயதேடலின் பாதையில் செல்வதாலேயே சுடர்பொங்கும் வடிவுடைய இளைஞர்கள் சிலர் அந்த முதியவர் திரும்பிய வளைவில் எதிரே வந்து கொண்டிருந்தனர்.அவர்களுக்குப் பணிவாய் வணக்கம் செலுத்தினார்அந்த முதியவர். அவரை சற்றுத் தாமதமாகவே கண்டு கொண்டஇளைஞர்கள் அதே பணிவுடன் முதியவரையும் புதியவரையும் வணங்கினர். உள்ளார்ந்த பணிவுடன் வணக்கங்களை எதிர்கொண்டு பழகியிராத புதியவர் பதறினார்.

இங்கிருப்பவர்கள் எவ்வளவு தூரம் அற்புதரால் கட்டுப்படுத்தப் பட்டிருந்தால் இப்படி வளைந்து பணிந்து வணங்குவார்கள் என்று நினைத்துக் கொண்டே நடந்தார்.ஆனால் அந்த இளைஞர்களின் வணக்கத்தைப் பெற்றபோது உள்ளே ஏதோ அசைந்ததை உணர்ந்தார்.

முன்னே போய்க்கொண்டிருந்த முதியவர் முன்னே செந்தீயாய் உடையணிந்த சின்னஞ்சிறுவர்கள் வெள்ளைச் சிரிப்புடன் வந்துகொண்டிருந்தனர். நிலம் பார்த்து நடந்து கொண்டிருந்த குழந்தைகளின் நிழல்பார்த்த நொடியிலேயே அந்த முதியவர் பணிந்து வணங்கியதைப் பார்த்தார். புதியவர் மனதில் பச்சாதாபம் பொங்கியது. “குழந்தைகளையும் இப்படி குனிந்து வணங்குகிறார் என்றால் இவர்தான் இங்கிருக்கும் கடைநிலை ஊழியர்களினும் கடைநிலையில் இருக்க வேண்டும்”என்றுஅனுமானித்துக் கொண்ட அவரால் குழந்தைகள் அதே பணிவுடன் பதிலுக்கு முதியவரையும் தன்னையும் வணங்கியதைக்கூட கவனிக்க முடியவில்லை.

அந்த முதியவர் உணவுக்கூடத்தினுள் நுழையக்கண்டு புதியவரும் நுழைந்தார். அங்கே வரிசையாகத் தட்டுகள் வைக்கப்பட்டிருக்கக்  கண்டு தானும் ஒரு தட்டின் முன் அமர்ந்தார். யாரோ ஓர் இளைஞர் அந்த முதியவரின் தட்டருகே தண்ணீர்க்குவளையொன்றை வைத்ததும் குனிந்து கும்பிட்டதைக் கண்டு அனுதாபத்தின் உச்சத்திற்கே போனார் புதியவர்.

ஒருகுவளை தண்ணீருக்கே இப்படி குனிந்து கும்பிடுகிறார் என்றால் அந்த முதியவருக்கு அதைக்கூடத் தராமல் எத்தனைநாள் வாடவைத்தார்களோ என்று நினைத்துக் கொண்ட புதியவர்,
“இந்தக் கொடுங்கோலரின் எல்லைக்குள் இனியும் இருக்கலாகாது”  என்று நினைத்து எழுந்து நடந்தார்.

அந்த முதியவர்தான் அற்புதரென்றும் அந்தப் பணிவு அற்புதரின் முதல் போதனையென்றும் அறிந்திருந்தால் அவர் அப்படி எழுந்து சென்றிருக்க மாட்டார்.ஆயினும் அவர் திரும்பி வருவார் என்னும் பொருள்பட அவர் சென்ற திசைநோக்கிப் பணிவுடன் வணங்கினார் அற்புதர்

அற்புதர் – 8

அற்புதருக்கு வாகனங்கள் ஓட்டப் பிடிக்கும். கரடுமுரடான சாலைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் அடிக்கடி பயணம் செய்யும் முரட்டு சாலையொன்றில் ஒருநாள் ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது..” ஆட்கள் வேலை செய்கிறார்கள்”என்று.அந்தப்பலகையைப் பார்த்ததும் அற்புதரின் இதழ்களில் குறுநகை அரும்பியது.

அடுத்த சில மாதங்களில் கண்ணாடிபோல் வழுக்கிக் கொண்டு போன அதே சாலையில் அற்புதர் வெகுவேகமாக சென்று கொண்டிருந்தார். அந்த நெடுஞ்சாலையில் அவருடைய விரல்கள் மானசீகமாய் ஒரு வரியை எழுதிப் பார்த்தன,” ஆட்கள் வேலை செய்தார்கள்”.

சிறிது தொலைவிலேயே இன்னொரு சாலை தெரிந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவு குண்டும் குழியுமாய் இருந்த சாலையைக் கண்ட அற்புதரின் இதழ்களில் மீண்டும் முறுவல் மலர்ந்தது. இப்போது மற்றொரு வரியை அவருடைய விரல்கள் மானசீகமாய் எழுதிப் பார்த்தன, “ஆட்கள் வேலை செய்வார்கள்”.

அன்றிரவு அற்புதர் தன் நாட்குறிப்பில் எழுதினார். “கரடுமுரடான பாதைகள் சரிசெய்யப்பட வேண்டியவை. யாரோ என்றோ வேலை செய்வார்கள். எல்லா சாலைகளும் சரியாகும். வேலைசெய்யும் விருப்பம் இருப்பின் வாழ்க்கைப்பாதை நேராகும். நீங்களாக செய்ய முடியாவிட்டால் வேலை செய்ய வருபவரை செய்ய அனுமதியுங்கள். உங்கள் வாழ்வை நேர்ப்படுத்தவே ஞானிகள் காலங்காலமாய் வேலை செய்கிறார்கள்.

உங்கள் பாதையின் குழிகளை மூடி சமன்செய்வதுபோல் உங்கள் மனதின் கோணல்களை நேர் செய்யுங்கள். வாழ்வில் நேர்ந்த வலிகளை யாரோ தந்த விருதுபோல் பொத்தி வைக்காதீர்கள். சாலை மோசமாக ஆக விரைந்து சீர்செய்யும் விவேகம் இருப்பவர்களே!வாழ்க்கை மோசமாக ஆக விரைந்து விழித்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களால் முடியாதென்றால்  கண்மூடிக் கேளுங்கள். உள்ளுக்குள் தேடுங்கள்.அறிவிப்புப் பலகை இல்லாமலேயே ஆட்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள்” என்றெழுதினார் அற்புதர்.

எழுதுகோலைக் கீழே வைத்த அற்புதரின் கண்களில் எழுதி முடித்த களைப்பல்ல…எத்தனையோ சாலைகளில் வேலை செய்யும் களைப்பு!!