எங்கள் எஜமானர் ஜாக்கிரதை -ஜிம்மி, -டைகர்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதன் நோக்கமே, அவற்றின் நிபந்தனையில்லாத நேசத்தை, நல்ல உணர்வுகளை, நம்பிக்கையை நன்றியை, நாம் கற்க வேண்டும் என்பதற்காகத்தான்.

உயிர்களிடையே பேதம் பார்க்காத பரந்த மனம் வளர்வது, செடிகள் வளர்ப்பதில் தொடங்கி, மீன்கள் வளர்ப்பது, செல்லப் பிராணிகள் வளர்ப்பது என்று படிப்படியாக நீளும்.

மேலும் பரிவும் கனிவும் நிரம்பிய உள்ளம் உருவாக வழி மற்றஉயிர்களுடன் தொடர்பு படுத்திக் கொள்வதுதான்.

ஆனால் எவ்வளவு செல்ல பிராணிகள் சுற்றி இருந்தாலும் தங்கள் தன்மையில் மாறாமல் இருப்பவர்கள், அநேகமாக அந்தப் பிராணிகளை தாவரங்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

எளிய உயிர்கள் கூட பெரிய விஷயங்களை நமக்கு உணர்த்தி வரும். அப்படி உணர்த்தியும் உணராதவர்கள் வீட்டு வாயில்கலில் மேற்கண்ட அறிவிப்புப் பலகை தொங்கினாலும் ஆச்சர்யம் ஏதுமில்லை.

பேச விஷயமில்லையா? பேசாதீர்கள்!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

ஒருவரைப் பார்த்து நலம் விசாரிப்பதும் வணக்கம் சொல்வதும் அடிப்படைப் பண்பாடு. அவர் நன்கு அறிமுகமானவர் என்றால் கூடுதலாய் சில வினவுதல்கள், பகிர்தல்கள், பரிமாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கும்.

ஆனால், அதிகம் அறிமுகம் ஆகாதவரை நட்பு வளையத்துக்குள் கொண்டு வருகிற முயற்சியில் அர்த்தமில்லாத, அவசியமில்லாத, உரையாடல்களில் ஈடுபடுவது பலநேரம் சங்கடங்களையே விளைவிக்கும்.

அருமையான மனிதர் என்று பேரெடுக்கிறீர்களா, அறுவையான மனிதர் என்று பேரெடுக்கிறீர்களா என்பது உங்கள் உரையாடல்களில் அர்த்தம் இருப்பதைப் பொறுத்தே அமையும்.

பேச்சு நிதானப்படும்போது பக்குவமும் வரும். பக்குவம் கைவரும்போது பலரும் புகழும் விதமாய் மரியாதை மலரும்.

பேசவேண்டுமே என்று பேசாதீர்கள். மற்றவர்கள் நீங்கள் தங்களிடம் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கும் விதமாக, அர்த்தமுள்ள உரையாடல்களால் இதயங்களை வெல்லுங்கள்…