கட்சிதம் : (நாவல்)-2

ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துக்கொள்கிறபோது, இளங்கோவனுக்கு செம்மலரையும் செம்மலருக்கு இளங்கோவனையும் அடையாளமே தெரியவில்லை. நீங்க இளங்கோவன் தானே, நீங்க செம்மலர் தானே என்கிறமாதிரி அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

உண்மையில் அந்தக்குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயே இறந்துபோய்விடுகிறது. அந்த விபரம் இளங்கோவனுக்குத் தெரியக்கூடாது என்று செம்மலர் சொல்லியிருக்கிறாள்.

இளங்கோவன் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே இருக்கிறான். இந்த இடத்தில் ஓர் அழகான பாத்திரத்தை இளஞ்சேரல் அறிமுகப்படுத்துகிறார். மூன்று பக்கங்கள் மட்டுமே வரக்கூடிய கதாபாத்திரம் அது.

இளங்கோவனுடைய மிக நெருங்கிய நண்பன். கடன் வாங்கி, மது அருந்திவிட்டு திரிகிற ஆளாக குணா மாறிவிடுகிறான். எல்லா இடத்திலும் மது அருந்திவிட்டு, பிரச்சினை செய்கிற ஆளாக இருக்கிற குணா, இளங்கோவன் சொன்னால் திருந்திவிடுவான் என்று குணாவினுடைய அப்பா நினைத்து அவனிடம் அழைத்துப்போகிறார்.

இளங்கோவன் சொன்னதும், சரி, நீ சொல்வதுபோல் செய்கிறேன். நாளையிலிருந்து நாளை நீ மறுபடியும் சொல்லாதமாதிரி பார்த்துக்கிறேன் என்று குணா சொல்கிறான். ஒருவனைத் திருத்திய மனநிறைவோடு இளங்கோவன் திரும்புகிறான். ஆனால் அடுத்த நாள், முதலாளியின் நெருக்கடி தாங்காமல் குணா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறான்.

காரியங்கள் முடிந்து வீட்டுக்கு வருகிறபோது, ஏற்றியிருக்கிற விளக்குக்கு அருகில் குணாவின் மனைவியும் இரு குழந்தைகளும் படுத்திருக்கிறார்கள். குணாவின் மனைவி படுத்திருப்பதை, “காய்ந்து அணைந்துபோன திரியை எடுத்துப்போட்டது போல் படுத்திருந்தாள்” என்று எழுதியிருக்கிறார். போகிற போக்கில் சொல்கிற உவமைதான். ஆனால் அருமையான அழுத்தமான உவமை அது.

இடையில் இளங்கோவனுக்கு அடிக்கடி மயக்கம் வருகிறது. செம்மலரின் கல்யாணத்துக்குப் போனவன், மயக்கம் போட்டுவிழுகிறான். ஓர் அச்சகத்திற்குச் சென்று பேசிக்கொண்டிருந்தவன், அப்படியே மயக்கம் போட்டு விழுகிறான். ரமேஷையும் செம்மலரையும் கோவிலில் சந்திக்கிறபோதும் மயக்கம் போட்டு விழுகிறான். அவனுக்கு ஏதோ தலையில் பிரச்சினை.

ஆபரேஷன் செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. அதற்கான அறுவைச் சிகிச்சையும் நடக்கிறது.

குணாவின் மறைவுக்குப் பிறகு கட்சியின் பெரிய கூட்டம் நடக்கிறது. அப்போது, குணாவின் மனைவி செம்பாவை, இளங்கோவனுக்கு திருமணம் செய்வதாக உறுதிப்படுத்துகிறார்கள் கட்சியினர். சி.ஆரிடம் ஒரு கேள்வி கேட்பான் இளங்கோவன். “என்ன தோழர், கடைசி வரைக்கும் என்னை சித்திரவதை பண்ணீட்டுத்தான் இருப்பீங்களா”என்று. ஆனால் அவர்களது திருமண வாழ்வைப் பற்றி விரிவாக எழுதவில்லை.

செம்மலரும் ரமேஷ¨ம் முதியோர் இல்லம் தொடங்குகிறார்கள். இல்லத் திறப்புவிழாவில் இளங்கோவன் வருகைக்காக காத்திருப்பார்கள். முதியோர் இல்லம் தொடங்குகிறபோது, ரமேஷ், செம்மலர் தம்பதி, இளங்கோவனை தங்களுடைய மகனாக தத்தெடுத்துக்கொள்வதாக ஓர் அறிவிப்பு செய்கிறார்கள். அது கதையின் முக்கியமான இடம். இளங்கோவன் பார்த்துக்கொண்டேயிருக்கிறான்.

எங்கள் மூன்று பேருக்குள்ளும் இருக்கிற சங்கடத்தை, முடிச்சை அவிழ்ப்பதற்கான ஒரே வழி இதுதான் என்கிறார்கள்.

கட்சியின் மூத்த தலைவர், இது எனக்குத் தெரியாது. நான் திக்பிரமை பிடிச்சமாதிரி உட்கார்ந்திருக்கிறேன். ஆனால் இதை நான் வரவேற்கிறேன் என்கிறார்.

இதுபோல் அவர்களின் வாழ்க்கை, அனிதாவின் மரணம் வரைக்கும் நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஓர் இயக்கத்தில் தீவிரமாக இருக்கிற ஓர் இளைஞனுக்கு கட்சியின் ஏற்ற இறக்கங்கள், மார்க்சிய இயக்கத்தின் மீது வெளிப்படையான விமர்சனங்களை வைக்கிறான் இளங்கோவன்.

“இப்போ நம் கட்சியிலும் ஜாதி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. காசு பார்க்க ஆரம்பிச்சாட்டாங்க. கல்யாணம் பண்ணி வைக்க ஆரம்பிச்சுட்டாங்க” என்று இளங்கோவன் சொல்கிறான். இது திராவிட இயக்கங்கள் உட்பட எல்லா இயக்கங்களிலும் இருக்கிறது.

பொது வாழ்க்கை நோக்கிப் போன ஓர் இளைஞன், வாழ்வின் பலவிதமான அலைக் கழிப்புகளின் மத்தியிலும் உறுதியோடு இருந்து, அதுபோல வாழ்க்கை கொண்டுவந்து போடுகிற எல்லா மாற்றங்களையும் நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டு வாழ்கிறவனாக, பொதுவாழ்க்கையும் இயக்கமும் அந்த இளைஞனைப் பண்படுத்தியிருக்கிறது என்பது இந்த நாவல் முடிவில் நமக்குத் தோன்றக்கூடிய உணர்வு. அந்த வகையில் இளஞ்சேரலுடைய ஒரு முக்கியமான படைப்பு என்று இந்த கட்சிதம் நாவலைச் சொல்லலாம்.

கட்சிதம் : (நாவல்)-1

ஆசிரியர் : திரு.இளஞ்சேரல்

இளஞ்சேரலுடைய கருட கம்பம் உள்ளிட்ட எல்லா நூல்களையும் நான் வாசித்திருக்கிறேன். எல்லாப் பாத்திரங்களும் சட்டென்று மனதுக்குள் பதிந்துவிடும். வித்தியாசமான கதைக்களமாக இருக்கும்.

கட்சிதம் நாவல் முதல் வாசிப்பில் வேறு கதைக்களமாக இருக்கிறதே என்று யோசித்தேன். வாசிக்க வாசிக்க அவருடைய மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கட்சிதம் நாவலைச் சொல்லலாம் என்று கருதினேன்.

கொங்குப் பிரதேசத்தில் குறிப்பாக கோவை, இளஞ்சேரலின் சொந்த ஊராகிய இருகூர் பகுதியில் மார்க்சிய தாக்கமுள்ள குடும்பங்களில் நிகழ்கிற முக்கியச்சம்பவங்கள், சர்வதேச அரசியல், தேசிய அரசியல், உள்ளூர் அரசியல் போக்கு ஆகியவற்றை கதையின் ஊடாக சொல்கிற நாவல் கட்சிதம்.
இளங்கோவன்தான் கதையின் நாயகன். மார்க்சிய தொண்டர். நாயகனுக்குரிய பலங்கள் எல்லாம் சித்தரிக்கப்படாத இயல்பான மிகையற்ற மனிதன். திறமையான மனிதன். அப்பகுதியில் இருக்கிறவர்களின் மொத்தக் குடும்பமுமே கட்சியில் இருக்கும். எல்லோருமே தோழர்கள் என்பது மாதிரியான சூழல்.

கட்சிப்பணியில் இணைந்து பணியாற்றுகிற செம்மலருக்கும் இளங்கோவனுக்கும் நேசம் மலர்கிறது. அது விமர்சனத்துக்கு உட்படுகிறது. இருவரும் சொந்தம்தான். இந்தக் காதல்தான் கதைக்களமா என்றால் இல்லை. காதலைத்தாண்டி மனித உணர்வுகளும், உறவுகளும்தான் இந்நாவலின் பலம்.

குறிப்பாக, பொதுவுடைமை இயக்கத்தினர் எவ்வளவு பேர் தொடர்பில் இருக்கிறார்கள். எப்படிப் பழகிக்கொள்கிறார்கள், அவர்களின் வயதுக்குரிய அதிகாரத்தையும் உரிமையையும் எங்கெங்கெல்லாம் காட்டுகிறார்கள் என்பதை விளக்குகிறது கட்சிதம் நாவல்-.

சி.ஆர். என்கிற ஒரு பாத்திரம். கட்சியின் மூத்த தோழர். காட்பாதர் போல… அவரும் சில நண்பர்களும் இளங்கோவனுக்காக செம்மலரைக் கேட்டு தூதுபோகிறார்கள்.

ராக்கியன் பெண்ணுடைய அப்பா. கட்சிக்காரர்தான். ஆனால் தீவிரமாக இயங்காதவர். செம்மலரைப் பெண் கேட்டு தோழர்கள் செல்கிறபோது, ராக்கியன், நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் நாங்கள் வேற பக்கம் முடிவு பண்ணிட்டோம். ரமேஷ், DYFI அமைப்பின் மாவட்டப் பொறுப்பில் இருக்கிறார். கோஆப்ரேடிவ் வங்கியில் பணியாற்றுகிறார். அரசாங்க வேலையில் இருக்கிற பையன் என்று சொல்கிறார்.

செம்மலர் உறுதியாக இருக்கிறாள். இளங்கோவனின் தங்கை மதுமிதாவும் செம்மலரும் தோழிகள். சுஜாதா படத்தில் வருகிற பாட்டுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. ‘நீ வருவாயென நான் இருந்தேன். ஏன் மறந்தேன் என நான் அறியேன்’ என்கிற பாட்டு அது.

இளங்கோவன், குடும்பம் சார்ந்த ஆள் இல்லை. இளங்கோவன் கட்சி வேலை, கிரிக்கெட் விளையாடப்போவது, வேலைக்குப் போவது என்பதுமாதிரியான ஆள்.

எனக்கு கட்சிதான் பெரிது என்று சொல்கிற அளவுக்கு இளங்கோவன் இருக்கிறான்.

பொதுவுடைமை இயக்கம், மனங்களை எப்படிப் பண்படுத்தி வைத்திருக்கிறது என்பதற்குப் பல இடங்கள் இந்த நாவலில் இருக்கின்றன.

செம்மலர் திருமணத்திற்கு முன்பே, கட்சியில் நெருக்கடி வருகிறது. கதையின் நகர்வுகள் அழகாக இருக்கின்றன.

அரசியல் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தேர்வில் தேவகவுடாவை முன்னிறுத்தியபோது, ஜோதிபாசு முன்னிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அந்நிகழ்வில் இளங்கோவன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். கட்சியின் பொலிட்பீரோவில் முடிவு செய்துவிட்டார்கள். அதைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்கிறபோது, அதையே இந்த இளைஞர்கள் துடிப்பாகப் பேசி வெளியே போகிறார்கள். சி.ஆர்.அதற்கு மேலோட்டமாக துணை நிற்கிறார்.

இவர்களை மூன்று மாதங்கள், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்கிறார்கள். அந்த வேளையில் செம்மலர் வேலைக்குப் போகிறார். பேருந்துக்குப் போகும்போதாவது செம்மலரைப் பார்க்கலாம் என்று இளங்கோவன் வண்டியுடன் போனால், ராக்கியன், பெண்ணை அழைத்துப் போகக் காத்திருக்கிறார். இளங்கோவனைப் பார்த்து, நீ யாருக்காக காத்திருக்கிறாய் என்று கேட்க, அதற்கு அப்பா வர்றார், அண்ணன் வர்றார் என்று சொல்லி சமாளிக்கிறான்.

செம்மலர் வரும்போது, ராக்கியன் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. உடனே இளங்கோவன் தன் வண்டியைக் கொடுத்து அனுப்புகிறான். செம்மலரும், ராக்கியும் செல்கிறார்கள். அப்போது மழை பெய்கிறது. ஒரு அப்பா தன் மகளிடம் சொல்கிற இயல்பான வசனம் கொண்ட அந்த இடம் எனக்குப் பிடித்திருக்கிறது.

வண்டியில் செல்லும்போது, அப்பா செம்மலரிடம், “இளங்கோவனை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செஞ்சுட்டோம். சங்கத்துக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டோம் தெரியுமில்ல. அவனோட அதிகமா பழகாதே. அவனுக்கு நக்சல்களோடயும், ம.க.இ.கவோடயும் தொடர்பிருக்க வாய்ப்பிருக்குன்னு கமிட்டி எச்சரிக்கை பண்ணியிருக்கு” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறார்.

அப்பாவின் பேச்சுக்கு செம்மலருடைய எதிர்வினை என்ன என்பதை இளஞ்சேரல் அழகாக விவரிக்கிறார்.

“அவளின் காதுகளுக்கு இந்தச் செய்தியை மழை அனுமதிக்கவேயில்லை. அவள் பின்னால் வந்து கொண்டிருக்கிறவனின் வண்டி வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டே வருகிறாள்” என்று எழுதுகிறார். இளங்கோவன் பின்னால் வந்துகொண்டிருக்கிறான் என்பதுதான் விஷயம். அப்பா சொன்னதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

செம்மலருக்கு இருந்த உறுதி அபாரமான உறுதி.

இதுபோன்ற சூழ்நிலைகளில் செம்மலரின் திருமணத்திற்கு முன்பே, செம்மலரின் காதல் விவகாரம் மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களினால் இளங்கோவன் விஷம் அருந்துகிறான். அது பிரச்சினையாகிறது. அதிலிருந்து மீண்டு வருகிறான்.

செம்மலருக்குத் திருமணமாகிறது. அந்தத் திருமணத்திற்குச் சென்று திருமண வேலைகளையும் இளங்கோவன் செய்கிறான்.

மூன்று இடங்களில் ஜோதிபாசுவுடனான சந்திப்பு வருகிறது. ஓர் இடம் அநேகமாக கற்பனை. ஜோதிபாசு பிரதமராவது போல ஒரு காட்சி. இன்னோர் இடம், அவர் பிறந்த நாளுக்கு அவரைப் பார்க்கப்போகிறார்கள். தமிழ்நாட்டுப்பாதகை தாங்கிய இவர்களுக்கு வழிவிட்டு தனியே அழைத்துப்போகிறார்கள். ஜோதிபாசுவை சந்தித்து வணங்கி வாழ்த்துத் தெரிவித்துவிட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு நன்றி என்று அவர் நன்றி தெரிவிக்கிறார்.

மூன்றாவது சந்திப்பு கோவைக்கு ஓர் கூட்டத்திற்காக ஜோதிபாசு வருகிறார். அப்போது செம்மலர், ரமேஷ் தம்பதிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இளங்கோவன்தான் ஜோதிபாசுவைச் சந்தித்து குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொல்லலாம் என்று யோசனை தெரிவிக்கிறான்.

அவரும் ஜோதிபாசு என்று பெயர் வைக்கிறார். அவையெல்லாம் மிக அழகான இடங்கள். ஜோதிபாசுவைப் பற்றிய வர்ணனை. அவருடைய தோற்றம், அவருடைய குணம், அவருடைய மென்மையான போக்கு, அவர் தன்னுடைய பிஏவிடம் பேசும் பாங்கு இவற்றையெல்லாம் விவரிக்கிற இடங்கள் அருமையானவை.

அதுபோலவே, ரமேஷ¨ம் இளங்கோவனும் பேசிக்கொள்கிற இடங்களும் அழகானவை.

ரமேஷ், “செம்மலர் உங்கள் பிரச்சினைய நேரடியாக சொன்னாங்க தோழர். ஸாரி, இரண்டு வீட்லயும் பேசி எல்லாம் முடிவு பண்ணிட்டாங்க. இப்ப என்ன பண்றதுன்னு தெரியல” என்கிறான்.
அவனுடைய துன்பத்தை இயல்பாக மறைத்துக்கொள்வதைப் போலவும், பிரச்சினைக்கெல்லாம் நானே காரணம் என்பதைப் போலவும் இளங்கோவன் அவனுக்குத் தெளிவாக்கி, தன்மீதுதான் தவறு என்பதைப் பக்குவமாகச் சொன்னான்.

அவர்கள் இருவருக்குமான உரையாடல் மிக அழகானதாக இருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகுதான் இளங்கோவன் மனதில் ஓர் அழுத்தம் வருகிறது.

“அவன் புறப்பட்டான். இளங்கோவனுக்குள் நுழைந்த நிம்மதி தென்றல் வீசுவதாக உணர்ந்தான். எல்லாம் சரி. இந்த ஆரவாரங்கள் அனைத்தையும் தன்னால் தரிசனம் மட்டுமே செய்ய முடியும். மகிழ்ச்சியின் எல்லா ஊண்களையும் செம்மலர் பிடுங்கிக்கொண்டு போய்விட்டதை அறிந்தான். செம்மலர் அவன் மீதும், இவன் அவள் மீதும் கொண்டிருந்த அளப்பரிய காதலை, அந்த இருதயத்தை அவன் பிடுங்கிக்கொண்டு போன துயரம், சில கணங்களில் துள்ளிக்கொண்டு முன்னால் நிற்கிறது.”
கட்சியிலும், வீட்டிலும் இளங்கோவனைப் பொருட்படுத்துவதில்லை. இந்த இடத்தை அவன் மன நிலையை மிக அழகாக இளஞ்சேரல் எழுதுகிறார்.

“கட்சி, வீடு, தோழர்கள், நண்பர்கள் எல்லாம் வயதான நோயாளியை விலக்கி வைத்துக் கிடத்துவதைப் போல் தன்னை கைவிட்டுவிட்டதாக உணர்ந்தான். மைதானத்துக்கு வந்தால், சகலமும் மறந்து சிறுவனின் உற்சாகத்தை மனமும் உடலும் எடுத்துக்கொள்ளும். ஆனால் இப்போது அப்படியில்லை. கிரிக்கெட் விளையாடச் சென்றாலும் ஒரு நிதானமில்லாமல் தான் வருகிறான்.” அவையெல்லாம் அழகான இடங்கள்.

கதையின் போக்கைப் பார்த்தால், செம்மலருக்குத் திருமணமாகி, பிறந்த குழந்தைக்கு ஜோதிபாசு என்று பெயரிடப்படுகிறது. அந்தக் குழந்தை எப்படி இருக்கிறது என்று வழியில் பார்க்கும் கேட்கிறான். இன்னொரு குழந்தையிருக்கிறது. பள்ளிக்குப்போகிறது என்று சொல்கிறாள் செம்மலர்.

(தொடரும்)

அடுத்ததைத் தேடு

உன்னத கணங்கள் வாழ்வில் நிகழ்வதோ
ஒவ்வொரு நாளும்தான்;
உன்னால் என்னால் காண முடிந்தால்
உயர்வுகள் தினமும்தான்;
தன்னினும் பெரிதாய் ஏதோ ஒன்று
துணைக்கு வருகிறது;
முன்னினும் வாழ்க்கை மேம்படும் வாய்ப்பை
முனைந்தால் தருகிறது!

எண்ணிய தொன்று எட்டிய தொன்றா?
ஏன் இப்படி ஆகும்?
எண்ணப் போக்கினில் ஏற்படும் தெளிவே
ஏணிப் படியாகும்;
வண்ணக் கனவுகள் வசமாய் ஆவதும்
வேலையின் திறமாகும்;
கண்ணுக்கெதிரே வாய்ப்புகள் திறக்கும்
கண்டால் வளம் சூழும்!

விழுந்தும் எழுந்தும் விரைகிற அலைதான்
கரையைத் தொடுகிறது;
விழுவதன் வலியோ விலகிடும் எழுந்தால்;
விபரம் புரிகிறது;
நழுவிய வாய்ப்பினை நினைத்துச் சலித்தால்
நெஞ்சம் வலிக்கிறது;
அழுகையை விடுத்து அடுத்ததைத் தேடு
ஆற்றல் இருக்கிறது!

நம்மால் முடிந்ததை நிகழ்த்திக் காட்ட
நமக்கிந்த பிறவியடா;
சும்மா இருந்தால் சோம்பிக் கிடந்தால்
சுமைதான் வாழ்க்கையடா;
விம்மல் தணித்து விவேகம் வளர்த்து
வெற்றிகள் குவித்துவிடு;
இம்மியும் உயரம் இழக்காமல் நீ
இமயம் ஆகிவிடு!

-மரபின் மைந்தன் முத்தையா

 

எழும் நீயே காற்று!

துளை கொண்ட ஒருமூங்கில்
துயர்கொண்டா வாடும்?
துளிகூட வலியின்றித்
தேனாகப் பாடும்;
வலிகொண்டு வடுகொண்டு
வந்தோர்தான் யாரும்;
நலமுண்டு எனநம்பி
நன்னெஞ்சம் வாழும்!

பயம்கொண்டால் ஆகாயம்
பறவைக்கு பாரம்;
சுயம்கண்டால் அதுபாடும்
சுகமான ராகம்;
அயராதே; அலறாதே;
அச்சங்கள் போதும்;
உயரங்கள் தொடவேண்டும்
உன்பாதை நீளும்!

உடைகின்ற அச்சங்கள்
உன்வீரம் காக்கும்;
தடையென்ற எல்லாமே
தூளாக்கிக் காட்டும்;
படைகொண்டு வருகின்ற
பேராண்மைக் கூட்டம்
நடைகண்டு விசைகண்டு
நாடுன்னை வாழ்த்தும்!

ஊருக்கு முன்பாக
உன்திறமை காட்டு;
பேருக்கு முன்பாக
பட்டங்கள் கூட்டு;
வேருக்கு பலம்சேர்க்க
வேர்வைநீ ஊற்று;
யாருக்கும் அஞ்சாமல்
எழும் நீயே காற்று!

– மரபின்மைந்தன் முத்தையா

 

ஒருநாள் பூக்கும்!

பூஞ்சிறகில் புயல் தூங்கக் கூடும் – அது
புறப்படும்நாள் தெரிந்தவர்கள் இல்லை
தேன்துளியில் கலை பதுங்கக்கூடும் – அது
தீப்பற்றும் நாளறிந்தோர் இல்லை
வான்வெளியும் விடுகதைகள் போடும் – அது
விளங்கும் பதில்சொல்பவர்கள் இல்லை
ஆனாலும் நம் பயணம் நீளும் – அதில்
ஆனவரை காண வேண்டும் எல்லை!

காற்றின்கை காகிதமாய் திரிந்தால்- அதில்
குறிப்பிட்ட இலக்கேதும் உண்டோ
நேற்றினது பாதிப்பை சுமந்தால் – நம்
நெஞ்சிற்கு அமைதிவரல் உண்டோ
மாற்றாமல் வைத்த பணம் போலே – இங்கு
மனிதசக்தி செயல்மறந்து போனால்
ஏற்றங்கள் உருவாவதில்லை – இதனை
எண்ணாமல் புகழ் பிறப்பதில்லை!

சூழல்கள் எவ்வளவோ மாறும் – உன்
சூத்திரங்கள் அதற்கேற்ப மாற்று
வாழத்தான் உயிர்களெல்லாம் ஏங்கும் – உன்
வாழ்வுக்கோர் காரணத்தைக் காட்டு
தாழ்வுகளைத் தள்ளிஎழும் உத்தி – அது
தானாக வந்துன்னைக் காக்கும்
தாழ்திறந்து வாசலைப்பார் தம்பி – நீ
தேடிவைத்த கன்றொருநாள் பூக்கும்!

 – மரபின்மைந்தன் முத்தையா

 

வருடங்கள் மாறும்!

வருடங்கள் மாறும்; வயதாகும் மீண்டும்;
பருவங்கள் நிறம் மாறலாம்
உருவங்கள் மாறும் உணர்வெல்லாம் மாறும்
உலகத்தின் நிலை மாறலாம்
கருவங்கள் தீரும் கருணை உண்டாகும்
கனிவோடு நாம் வாழலாம்
ஒரு பார்வை கொண்டு ஒரு பாதை சென்று
உயர்வெல்லாம் நாம்காணலாம்!

பிழைசெய்வதுண்டு சரிசெய்வதுண்டு
பழியேதும் நிலையில்லையே
மழைகூடக் கொஞ்சம் பின் தங்கிப் போகும்
அதனாலே தவறில்லையே
இழைகூடப் பாவம் இல்லாத யாரும்
இங்கில்லை இங்கில்லையே
குழையாத சோறா குலுங்காத தேரா
குறையின்றி உலகில்லையே!

நீஉன்னை நம்பு நலம்சேரும் என்று
நிஜமாக நீவெல்லலாம்
யார் எய்த அம்பு? யார்தந்த தெம்பு?
யாருக்கும் நலம்சூழலாம்
வான் வந்த மேகம் தான் தந்து போகும்
வாழ்வெல்லாம் அதுபோலத்தான்
நாம்கொண்ட ஞானம் நாம் தந்து போனால்
நிலையாக நாம் வாழலாம்-!

– மரபின்மைந்தன் முத்தையா

 

மரபின் மைந்தன் பதில்கள்

இன்றைய தமிழ்ப்படங்கள் மிகவும் சிதைந்து வருகின்றன. மீண்டும் தலைநிமிர்வது எப்போது?

-ஆ.ரேவதி, தாரமங்கலம்.
திரைப்படங்கள், தமிழ்ச்சமூகத்தின் ஒரே பொழுதுபோக்கு என்கிற நிலை மாறிவருவதால், கால மாற்றங்களை மனதில் கொண்டு திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

கேளிக்கைத் தன்மை மிகுதியாக இருப்பதை நீங்கள் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இதே சூழலில்தான், கருத்தியல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களும் வருகின்றன.

கோடிக்கணக்கில் ரூபாய்கள் புழங்கும் துறை திரைத்துறை. எனவே மொத்தமும் சிதைந்து விட்டது என்று சொல்வதும் மிகை. முழுவதும் தலை நிமிர்ந்துவிட்டது என்பதும் பிழை.

வணிகரீதியான பாதுகாப்பில் செலுத்தும் அதே கவனத்தை சமூகப் பொறுப்புணர்விலும் இன்னும் அதிகமாகக் காட்டினால் நன்றாக இருக்கும்.

மரபின் மைந்தன் பதில்கள்

இன்றைய மாணவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறீர்களா?

அ.அருள், ராமநாதபுரம்.
முந்தைய தலைமுறையில், சுதந்திரப் போராட்ட காலங்களிலும், தமிழகத்தில் நிகழ்ந்த மொழியுணர்வுப் போராட்டங்களிலும் பங்கேற்ற மாணவர்கள் சிலர், அரசியலில் பெரிய நிலைக்கு வந்தார்கள்.

அதற்குக் காரணம், அவர்களுக்கு வழிகாட்ட தன்னமில்லாத தலைவர்கள் இருந்தார்கள்.
இன்று, இளைஞர்களை எவ்வித உள்நோக்கமும் இன்றி வழிகாட்டவோ, வளர்த்தெடுக்கவோ சரியான தலைவர்கள் இல்லை. எனவே இந்தச் சூழலில் மாணவர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கவில்லை.

மரபின் மைந்தன் பதில்கள்

இன்றைய வளரிளம் பருவத்தினர் அனைத்து தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி வருகின்றனரே! இவர்களைத் திருத்த வழி கூறுங்களேன்?

ஜெ.அந்தோணி- ஆசிரியர், இடிந்தகரை.
வளரிளம் பருவத்தில் தீய பழக்கங்களுக்கு இளைஞர்கள் சிலர் ஆளாவதன் காரணம், அவர்கள் மட்டுமல்ல. நோய்களுக்கு தடுப்பூசி போட்டு வளர்க்கும் பெற்றோர்கள், குழந்தைகள் மனதில் தடுப்பூசி போடாமல் வளர்த்ததே காரணம்.

குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் இருக்கையில், பண்பாட்டின் சிறந்த அம்சங்களை கதைகளாகவோ பழக்கங்களாகவோ அறிமுகப்படுத்தாமல் விட்டுவிட்டு இளைஞர்கள் ஆனபின் புலம்புவதில் பயனில்லை.

ஒழுக்கமான வாழ்வில் இருக்கும் வசதிகளை, வெற்றிகளைப் புகட்டி குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

மூன்று வேளையும் உணவை ஊட்டுவதுபோலவே நயமாகவும் பயமாகவும் ஒழுக்க உணர்வை ஊட்டினால் சமூகத்தீமைகளில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள்.

பெற்றோருடைய அன்பின் ஆளுமையும், குடும்பத்தில் நிலவும் பண்பாட்டுச் சூழலுமே தலைசிறந்த பண்புகளும் தலைமைப் பண்புகளும் கொண்ட குழந்தைகளை உருவாக்கும்.