கொலுவிலேறினாள்

கொட்டோடு முழக்கோடு கொலுவிலேறினாள் -அன்னை
கொள்ளையெழில் பொங்கப் பொங்க மனதிலேறினாள்
பொட்டோடு பூவோடு மாதர்வாழவே -அன்னை
பூரணமாய் கருணைதந்து பரிவுகாட்டினாள்

தீபத்தின் ஒளியினிலே தகதகக்கிறாள்-அன்னை
திருவிளக்கின் சுடராகத் தானிருக்கிறாள்
நாபிதனில் ஒலியாக  நிறைந்திருக்கிறாள்-அன்னை
நாதத்துள் மௌனமென மறைந்திருக்கிறாள்

சாமரங்கள் வீசியுப சாரம்செய்கையில்-அவள்
சிலையெனநாம் செம்பட்டு சார்த்தி நிற்கையில்
நாமங்களோர் ஆயிரமும் நவின்றிருக்கையில்-அன்னை
நேர்படவே மழலையாக வந்துநிற்கிறாள்

கோடிமலர் பாதமிட்டும் தீரவில்லையே-அவள்
கொலுவழகைப் பார்க்கும்வேட்கை ஆறவில்லையே
தோடெறிந்த தேவதேவி தென்படுவாளே-வினை

தானெரிந்து போகும்படி அருள்தருவாளே

சந்தனமும் சரமலரும் சூட்டும் போதிலே-சிறு
சலங்கையொலி மெல்லமெல்லக் கேட்கும் காதிலே

மந்திரங்கள் சொல்லச் சொல்ல ரூபம்தோன்றுதே-இனி
மறுமையென்னும் ஒன்றில்லாமல் முடிந்து போகுதே

மங்கலை கொண்டாள் மகாவெற்றி

சங்கல்பம் கொண்டு சமர்செய்ய வந்திங்கு
மங்கலை கொண்டாள் மகாவெற்றி-எங்கெங்கும்
நல்லவையே வென்றுவர நாயகி நாமங்கள்
சொல்லிப் பணிந்தால் சுகம்.

புத்தி வலிவும் பொருள்பலமும் பாங்கான
உத்தி பலமுமே உத்தமிதான் -சத்தியவள்
போடும் கணக்கின் பதிலீட்ட வேண்டியே
ஆடும் விதியாம் அரவு.

வண்ணத் திருவடிகள் வையத்தின் ஆதாரம்
கண்கள் கருணைக் கருவூலம்-பண்ணழகோ
தேவி குரலாகும் தேடும் மனவனத்தே
கூவி வருமே குயில்.

பொன்கயிலை ஆள்கின்ற பேரரசி மாதங்கி
மென்மயிலைப் போற்ற மனம்மலரும்-மின்னொயிலை
காணுதற்கும் நெஞ்சம் குழைவதற்கும் நாமங்கள்
பேணுதற்கும் தானே பிறப்பு.

 அத்தனுண்ட நஞ்சை அமுதாக்கித் தந்தவளை
 தத்துவங்கள் ஆள்கின்ற தத்துவத்தை-பித்துமனத்
தாய்மையை எங்கள் திருவை கலையழகை
போய்வணங்கச் சேரும் புகழ்.

காசி விசாலாட்சி கங்கை தனில்நீந்தும்
ஆசை மிகுமன்ன பூரணி-தேசுடைய
மீனாட்சி காமாட்சி மிக்க வடிவுகளில்
தானாட்சி செய்யும் திறம்.

எங்கள் அபிராமி; ஈசன் நடனத்தில்
சங்கமம் ஆகும் சிவகாமி-பொங்குமெழில்
கற்பகத்தாள் கோலவிழிமுண்டகக் கண்ணியின்
பொற்பதங்கள் நாளும் பணி.

கோனியன்னை எங்களது கோவையிலே தண்டுமாரி
ஞான மருள்பச்சை நாயகியாள்-ஆனைமலை
மாசாணி பண்ணாரி மாரியன்னை பேரருளால்
ஆசைநிச மாகும் அறி.

சித்தம் பதமாகும் செய்கை ஜெயமாகும்
நித்தம் விடியல் நலமாகும்-புத்தம்
புதிய புகழும் பலசேரும் தாயை
இதயம் தனிலே இருத்து.

துயரம் தீர்ப்பாள் மஹாலஷ்மி

அலைகள் புரண்டெழும் ஓசையிலே-ஓர்

அழகியின் சிரிப்பொலி கேட்கிறது

விலைகள் இல்லாப்  புதையல்களில்-அவள்

வண்ணத் திருமுகம் தெரிகிறது

நிலைபெறும் பாற்கடல் பாம்பணையில்-அந்த

நாயகி சரசம் நிகழ்கிறது

வலைவிழும் மீன்களின் துள்ளலைப்போல்-அவள்

விழிபடும் இடமெலாம் கொழிக்கிறது

அறிதுயில் கொள்ளும் பரந்தாமன் -அவன்

அமைதிக்குக் காரணம் மஹாலஷ்மி

வறுமையைக் களையும் வரலஷ்மி-நல்

வளங்கள் தருவாள் தனலஷ்மி

மறுவே இல்லா நிலவாக-நம்

மனங்களில் உதிப்பவள் கஜலஷ்மி

மறுபடி மறுபடி வரும்பசியை-மிக

மகிழ்வாய் தணிப்பாள் சுபலஷ்மி

தானியக் களஞ்சியம் நிரம்பிடவும்-மிகு

தங்கம் வைரம் நிறைந்திடவும்

தேனினும் இனிய நல்வாழ்வில்-எட்டுத்

திசையும் புகழே சூழ்ந்திடவும்

ஞானம் வீரம் வெற்றியெலாம்-வந்து

நேர்பட நம்மைச் சேர்ந்திடவும்

தானாய் இரங்கி அருள்தருவாள்-நம்

துயரம் தீர்ப்பாள் மஹாலஷ்மி

மாலவன் மனைநலம் காபவளாம்-நல்ல
மாதர்கள் முகத்தில் குடியிருப்பாள்
காலம் விதிக்கும் சோதனைகள்-தமை
கருணைப் பார்வையில் துடைத்தெடுப்பாள்
ஓலம் இடுகிற பக்தர்கள் முன் -அவள்
ஒடி வந்தே துயர்துடைப்பாள்
நீல வண்ணனின் நெஞ்சினிலே-ஒளி
நித்திலமாவாள் மஹாலஷ்மி

நானிலம் காப்பாள் மடியில்

பச்சைப் பட்டின் முந்தானை -அந்தப்

பரமனின் நெற்றியை ஒற்றும்

பச்சை வண்ணத் திருமேனி-எங்கள்

பரமனின் பாதியைப் பற்றும்

பச்சைப் புயலாம் மயிலினிலே-ஒரு

பிள்ளை பூமியை சுற்றும்

பச்சை மாமலை திருமாலோ-அவள்

பிறந்த வகையின் சுற்றம்

மாம்பழம் பெற்ற முதல்பிள்ளை -எங்கள்
மாதுமை மடியினில் துஞ்சும்
தேம்பி யழுத பிள்ளைக்கோ-பால்
திருஞானத்துடன் விஞ்சும்
சாம்பல் மேட்டினில் சாம்பசிவம்-உடன்
சாம்பவிக் கொடிநின்று கொஞ்சும்
கூம்பிய உயிர்கள் மலர்ந்துவிட-அவள்
குளிர்மலர் அடிகளே தஞ்சம்

நாயகிஎங்கள் சிவகாமி -இந்த
நானிலம் காப்பாள் மடியில்
தாயாம் எங்கள் அபிராமி-துயர்
துடைத்திட வருவாள் நொடியில்
ஆய கலைகள் அனைத்தையுமே-அவள்
ஆதரிப்பாள் கைப்பிடியில்
மாயைகள் தீர்க்கும் மஹாமாயை -நம்
முன்வருவாள் பல வடிவில்

தேரின் வடம்தொடும் கைகள்-அதில்
தேவதேவியின் முத்தம்
வேருக்கு நீர்விடும் கைகள் -தமை
வித்தகி கைகளும் பற்றும்
பேருக்கு ஆசையில்லாமல்-பணி
புரிபவர் மனமவள் முற்றம்
காருக்கும் நீர்தரும் கருணை-நிறை

கடைவிழி யால்புவி சுற்றும்

அடக்கும் அங்குசம்

கட்டிவைத்தும் மனக்களிறு கட்டுப்படாது-அது
காமங்கொண்டு பிளிறுவதை விட்டுவிடாது
தட்டிவைக்க அவள்வராமல் தலையடங்காது-எங்கள்
தேவதேவி குரல்தராமல் நிலையடங்காது

அங்குசத்தைக் கொண்டுநின்றாள் ஆலயத்திலே-நம்
அகந்தையெல்லாம் தளரவைக்கும் ரௌத்திரத்திலே
அங்கயற்கண் பார்வைபட்ட ஆனந்தத்திலே-அட
ஆனையெல்லாம் பூனையாகும் சிவலயத்திலே!

பாணமைந்தும் கரும்புவில்லும் பூங்கரத்திலே-ஒரு
பார்வையிலே மனமடங்கும் அவள்பதத்திலே
கோணங்களோ ஒன்பதுஸ்ரீ சக்கரத்திலே-நவ
கோள்களெல்லாம் வணங்கிநிற்கும் ஸ்ரீபுரத்திலே 

சிந்துரத்தில் தோய்ந்தபாதம் சமர்க்களத்திலே-கொடும்
சினமெழுந்து சூலமேந்தும் அமர்க்களத்திலே
வந்தபகை மாய்க்கும் அன்னை ஒளிரதத்திலே-அவள்
வைத்தசுடர் பற்றிக்கொள்ளும் வினைப்புனத்திலே

சொல்லாய் மலர்கிறவள்

ஏந்திய வீணையில் எழுகிற ஸ்வரங்கள்

எண்திசை ஆண்டிருக்கும்

மாந்திய அமுதம் பொய்யென தெய்வங்கள்

மதுரத்தில் தோய்ந்திருக்கும்

பூந்தளிர் இதழ்களில் பிறக்கிற புன்னகை

புதுப்புது கலைவளர்க்கும்

சாந்தமும் ஞானமும் சரஸ்வதி தேவியின்

சந்நிதி தனில்கிடைக்கும்

படைப்புக் கடவுளின் பத்தினித் தெய்வம்
படையல் கேட்கிறது
விடைக்கும் மனங்களின் அறியாமை தனை
விருந்தாய்க் கேட்கிறது
நடையாய் நடந்து நல்லவை தேடிட
நிழல்போல் தொடர்கிறது
படைகள் நிறைந்த மன்னவர் பணியும்
பெருமிதம் தருகிறது

பனையோலை முதல் கணினித் திரைவரை
பாரதி ஆளுகிறாள்
தனையே பெரிதென எண்ணிடும் மூடர்முன்
திரைகள் போடுகிறாள்
நினையும் நொடியில் கவியாய் கலையாய்
நர்த்தனம் ஆடுகிறாள்
வினைகள் ஆயிரம் விளையும் விரல்களில்
 வித்தகி வாழுகிறாள்

சின்னஞ் சிறிய மழலையின் நாவினில்
சொல்லாய் மலர்கிறவள்
கன்னஞ் சிவந்த கன்னியர் அபிநயக்
கலையாய் ஒளிர்கிறவள்
மின்னல் ஒளியாய் உளியின் முனையில்
மெருகுடன் மிளிர்கிறவள்
இன்னும் பலவகைக் கலைகளில் எல்லாம்
இன்பம் தருகிறவள்

வாணியின் நிழலில் வாழ்கிற பொழுதில்
வருத்தம் சுடுவதில்லை
தூணின் அழகிலும் தெரிகிற தேவியின்
தூய்மைக்கு நிகருமில்லை
காணும் திசைகளில் கவின்மிகு வடிவில்
காட்சி கொடுக்கின்றாள்
பேணத் தெரிந்தவர் வாழ்வினில் எல்லாம்

புத்தொளி தருகின்றாள்

இது இராமாயணம் அல்ல….

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு……..

மோதிய அலைகளில் ஆடியபடியே
பாதங்கள் படுமென ஏங்கியபடியே
நாயகன் திருமுகம் தேடியபடியே
தோழமை எனும்சொல் சூடியபடியே

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு……..

துடுப்புகள் ஏனோ அசையவுமில்லை
திடுக்கிட்ட வேடன் தெளியவுமில்லை
வழக்கத்தின் மாற்றம் விளங்கவுமில்லை
இலக்குவன் ஏதும் அறியவுமில்லை

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு……..

சொந்த நதியிலா சொந்தம் தொலைவது
எந்தத் திசையில் நாவாய் செல்வது
வந்ததும் சென்றதும் விடுகதையானது
சந்தக் காவியம் சிறுகதையானது


காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு……..

குகனொடும் ஐவர் என்றதும் பொய்யா
வகையறியாதவர் வென்றது மெய்யா
சகலரும் காணச் சென்றனன் ஐயா
ரகுவரன் தோள்களில் ராவணன் கையா


காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு……..

வேர்விடும் சொந்தம் வருந்தியதென்ன
கூரிய கணைகள் குழம்பியதென்ன
கார்நிற வண்ணன் கணக்குகள் என்ன
மாறிய திசையின் மர்மங்கள் என்ன

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு……..

பரிபுரை திருவுளம்

அவள் தரும் லஹரியில் அவளது பெயரினை
உளறுதல் ஒருசுகமே
பவவினை சுமைகளும் அவளது திருவிழி
படப்பட சுடரெழுமே
சிவமெனும் சுருதியில் லயமென இசைகையில்
சிறுமியின் பரவசமே
புவனமும் அவளது கருவினில் தினம்தினம்
வளர்வது அதிசயமே

நதிமிசை பெருகிடும் அலைகளில் அவளது
நெடுங்குழல் புரண்டு வரும்
சிதைமிசை எழுகிற கனலினை அவளது
சிறுவிரல் வருடிவிடும்
விதியதன் முதுகினில் பதிகிற எழிற்பதம்
வினைகளைக் கரையவிடும்
மதியென எழுகிற திருமுக ஒளியினில்
கதிர்மிசை சுடருமெழும்

கனல்பொழி நுதல்விழி கருணையின் இருவிழி
கயலென சுழன்றிடுமே
மனமெனும் சிறுகுடில் தனிலவள் நுழைகையில்
மிகுமங்கு   ஸ்ரீபுரமே
பனிபடர் மலரிடை பரவிடும் சுகந்தமும்
பரிபுரை திருவுளமே
இனிவரும் உயிர்களும் இவளது மடியினில்
இருந்தபின் கரைந்திடுமே

நிலமிசை நெளிகிற சிறுபுழு அசைவுகள்
நிகழ்வதும் அவளருளே
மலைகளை விழுங்கிடும் பிரளய வரவுகள்
அதிர்வதும் அவள்செயலே
உலைகொதி அரிசியில் உலகெழு பரிதியில்
உமையவள் அருள்நலமே
இலைபயம் இலையென இதழ்வரும் ஒளிநகை
எமைநலம் புரிந்திடுமே

சிரித்து நிறைகின்றாள்

மலைமகள் இரவுகள் நிகழ்ந்திடும் பொழுதுகள்
மலேய நாட்டினிலே
கலைமகள் அலைமகள் கடைவிழி பதிந்திடும்
காவிய வீட்டினிலே
நலம்பல வழங்கிடும் நாயகி எங்கெங்கும்
நின்று ஜொலிக்கின்றாள்!
சிலைகளில் மலர்களில் பனியினில் வெயிலினில்
சிரித்து நிறைகின்றாள்
 
மங்கலத் திருவடி நடமிடும் கொலுசொலி
மழைவரும் ஒலிதானே!
பங்கயத் திருமுகம் பொலிந்திடும் கலைநயம்
பகலவன் ஒளிதானே!
அங்கென இங்கென ஆயிரம் மாயைகள்
அவளது களிதானே!
எங்களின் அன்னையின் கைவிரல் தாயங்கள்
எழுகடல் புவிதானே!
 
வீசிய பாதங்கள் விசைகொள்ளும் விதமே
வருகிற காற்றாகும்
பேசிய வார்த்தைகள் வேதமென்றே இந்த
பூமியில் நிலையாகும் 
ஆசையில் ஊட்டிய பருக்கைகள் சிந்தி
ஆயிரம் பயிராகும்
ஈசனின் பாகத்தில் ஏந்திழை சேர்ந்ததே
இரவொடு பகலாகும்
 
புன்னகையால் சில புதிர்களை அவிழ்க்கும்
பேரெழில் நாயகியாம்
இன்னமுதாகவும் கொடுமருந்தாகவும்
இலங்கிடும் பைரவியாம்
தன்னையும் கடந்தவர் தவத்தினில் லயிக்கையில்
தென்படும் தேன் துளியாம்
அன்னையின் தாண்டவம் அரங்கேறும் இடம்
அதுதான் வான்வெளியாம்!