அற்புதர்-7

தன் கனவில் அற்புதர்வந்ததாய் பரவசமாகச் சொன்னார் ஒரு சீடர். அற்புதர் தங்கள் கனவுகளிலும் வந்ததுண்டென்று ஏனைய சீடர்களும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். அற்புதரைக் கனவில் காண்பது நனவில் கண்டது போலவே இருந்ததென்று சொன்னார் ஒருவர். நனவில் அற்புதரைக் காண்கிறபோதே அது கனவு போலத்தான் இருக்கிறது என்றார் இன்னொருவர்.

எது கனவு எது நனவு என்ற குழப்பம் பற்றி ஒரு ஜென்கதை உண்டு தெரியுமா என்று தொடங்கினார் இன்னொருவர்.சங்-சூ என்ற ஜென்குரு ஒருநாள் காலையில் குழப்பத்துடன் குடிலின் வாயிலில் அமர்ந்திருந்தாராம்.முந்தைய இரவில் அவர் கண்டவொரு கனவுதான் குழப்பத்துக்குக் காரணம்.

தான் ஒரு வண்ணத்துப் பூச்சியாய் மாறி மலரில் தேனருந்துவதாய் கனவுகண்டார். அவருடைய குழப்பம் இதுதான். “சங்-சூவாகிய நான் வண்ணத்துப்பூச்சியாக மாறுவதாக நேற்று கனவு கண்டேனா? ஒரு வண்ணத்துப்பூச்சி சங்-சூவாக இருப்பதாய் இப்போது கனவு காண்கிறதா?”

வெளியே போயிருந்த தலைமைச்சீடர் திரும்பினார்.அவருக்கு விஷயம் சொல்லப்பட்டது.ஒரு வாளி நிறைய குளிர்ந்த நீரை குருவின் தலையில் ஊற்றினார்.”இப்போது புரிகிறதா? கனவு கண்டது சங்-சூதான்.வண்ணத்துப்புச்சி கனவு கண்டிருந்தால் அது வண்ணத்துப்பூச்சியின் கவலை”.

கடைசியில் விவகாரம் அற்புதரின் கவனத்துக்கே போனது. அப்போது அற்புதர் வாழைப்பழ தேசத்தில் இருந்துவந்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அவர்கள் கனவு சார்ந்த உளவியல் பயிற்சியில் இருப்பவர்களென்றும்  கனவு வழியாகவே அவர்கள் அற்புதர் அனுப்பும் தகவல்களைப் பெறுகிறார்களென்றும் அவர்கள் உரையாடலின்வழி யூகிக்க முடிந்தது.

அற்புதருக்கு வந்தவர்கள் கேட்க விரும்பியது என்னவென்று புரிந்தது. மெல்லச் சொன்னார்.”தூங்கும்போது தூங்குவதால் கனவு வருகிறது. தூங்கும்போது தியானம் செய்யுங்களேன்” வந்தவர்கள் மேலும் குழம்பினார்கள். அதில் ஒருவருக்கு தியானம் செய்யும்போதே தூக்கம்வரும்பாவம்..தூக்கத்தில் அவருக்கெப்படி தியானம் வரும்?

அற்புதர் சொன்னார். “நீங்கள் எட்டுமணிநேரங்கள் தூங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள்.விழிப்பு நிலையிலிருந்து நீங்கள் துயிலுக்குள் நுழையும் விநாடிக்கு முந்தையவிநாடி தூங்கப் போகிறோம் என்பதை உங்கள் விழிப்புணர்வில் பதித்துக் கொள்ளுங்கள். அதேபோல் விழிப்பு வரும் விநாடிக்கு முந்தைய விநாடி, விழிக்கப் போகிறோம் என்று உங்கள் விழிப்புணர்வில் பதித்துக் கொள்ளுங்கள். உறக்கத்துக்கு முந்தைய விநாடியும் விழிப்புக்கு முந்தைய விநாடியும் உங்கள் விழிப்புணர்வுக்குள் வந்தால், எட்டுமணிநேரத் தூக்கம் எட்டுமணிநேரத் தியானமாக மாறும். விழித்தெழும்போது உங்களில் சக்தி நுரைத்துத் ததும்பும்”

அற்புதரை வணங்கி  விடைபெற்றுத் திரும்பும் வழியில் முந்தைய நாள் கனவில் அற்புதரை தரிசித்த சீடர் சொன்னார்,”நேற்றும்  கனவில் அவர் இப்படித்தான் ஏதோ சொன்னதாய் ஞாபகம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது.”

அற்புதரின் குரல் அவருக்குள் ஒலித்தது. “நனவுநிலையில் நீங்கள் விழிப்புணர்வின்றி இருந்தால் கனவில் நினைவூட்டல் வரும். கனவில் கண்டதை மறந்திருந்தால் நனவுநிலையில் நினைவூட்டல் வரும். இரண்டு நிலைகளிலும் மறந்தால் அடுத்த பிறவியில் நினைவூட்டல் வரும். விழிப்புடன் இருங்கள். இந்தப் பிறவியிலேயே  கனவு நிலைக்கும் நனவுநிலைக்குமான வரவு செலவுக் கணக்கை முடித்துக் கொள்ளுங்கள்”

இரு சம்பவங்கள்….ஒரே படிப்பினை

திரு.சுகிசிவம் அவர்கள் சேலத்தில் ஒருமுறை தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.தொடர்ந்து வருகை தந்த பல்லாயிரம் பேர்களில் ஒருவர் தயங்கித் தயங்கி வந்து திரு.சுகிசிவத்தின் கால் அளவைக் குறித்துக் கொண்டு போனார்.நிறைவுநாளன்று கைகளில் ஒருஜோடி
செருப்புடன் வந்தார்.”அய்யா! நான் செருப்பு தைப்பவன்.
உங்கள் பேச்சு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. எனவே
நான் உங்களுக்காக இந்த ஜோடி செருப்பைக் கொண்டு
வந்திருக்கிறேன்.” என்றார். அவர் நிலையறிந்து பணம்
கொடுக்கலாம்.கொடுத்தால் மனம் புண்படுவார்.அவர் அன்புக்கு
விலைவைத்ததுபோல் ஆகிவிடும். திரு.சுகிசிவம் சிலவிநாடிகள்
யோசித்தார். தான் எழுதிய புத்தகங்களில்.கையொப்பமிட்டார்.அடுத்து சொன்ன வார்த்தைகள்தான்முக்கியம்.

“நண்பரே! உங்கள் படைப்பை எனக்குப் பரிசளித்தீர்கள்.நான் என்
படைப்புகளை உங்களுக்குப் பரிசளிக்கிறேன்”என்றார். செருப்போடு வந்தவருக்கோ தன் தலையில் மகுடம் சூட்டிய மகிழ்ச்சி.

இன்னொரு சம்பவம். கவிஞர் வைரமுத்துவிடம் செய்தியாளர்
ஒருவர் மிக அற்புதமான கேள்வி ஒன்றைக் கேட்டார்.”நீங்கள்
சென்னை வந்தீர்கள்.பச்சையப்பன் கல்லூரியில் தங்கப்பதக்கம்
பெற்றீர்கள்.ஆறுமுறை ஜனாதிபதி விருது பெற்றீர்கள்.சரி..ஒருவேளை எழுதப்படிக்கத் தெரியாதவராய் உங்கள் கிராமத்திலேயே இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”
கவிஞர் சொன்னார், “எழுதப்படிக்கத் தெரியாமல் கைநாட்டுக்காரனாய் கிராமத்தில் இருந்திருந்தால் அதிகபட்சமாக ஒரு டீக்கடை வைத்திருப்பேன்.ஆனால் ஒன்று… இந்தியாவின் தலைசிறந்த டீக்கடை வைரமுத்து டீக்கடை என்று ஜனாதிபதியிடம் ஆறுமுறை தேசியவிருது வாங்கியிருப்பேன்”.

எந்தத் தொழில் செய்தாலும் மனமுவந்து செய்தால் முழுமையாக ஈடுபட்டுச் செய்தால் அதில் முத்திரை பதிக்கலாம் முன்னணியில் இருக்கலாம் என்பதைத்தான் இந்த இரு சிலீர் சம்பவங்களும்  உணர்த்துகின்றன

விசையைத் தட்டினால் வெளிச்சம் வருமா? நெய்வேலியில் கேள்வி

நெய்வேலி ஈஷா அன்பர்களின் அன்புமிக்க ஏற்பாட்டில் ஞானத்தின் பிரம்மாண்டம் நூல் விளக்கவுரை நிகழ்த்தினேன். ஒருமணிநேர உரையின் நிறைவில் ஒரு மனிதனின் வாழ்வில் குரு நுழைவதற்கு முன்பும் பின்பும் தெளிவு நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி இப்படிச் சொன்னேன்…

“உங்கள் அறைக்குள்ளேயே இருட்டில் நுழைகிறீர்கள். எது எங்கே இருக்குமென்று தெரியும் என்றாலும் எடுக்க வேண்டியதை எடுக்க நேராகப் போய் நேராக வர முடிவதில்லை.தட்டுத் தடுமாற வேண்டி வருகிறது.

ஆனால் விசையைத் தட்டி வெளிச்சம் அறை முழுவதும் பரவினால் கவலையே இல்லை. எது எங்கே இருக்கிறதென்று தெரிகிறது.  குரு வரும்வரை பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை இருட்டறைக்குள் நுழைந்ததைப் போல்தான் இருக்கிறது. அவர்கள் வாழ்க்கைதான் என்றாலும் அவர்களால் முக்கிய முடிவுகளை எடுக்க முடிவதில்லை.

ஒரு குரு வந்தபிறகு சொந்த அறையில் வெளிச்சம் பரவுவதுபோல் உங்களுக்குள்ளேயே தெளிவு பரவுகிறது. விசையைத் தட்டியதும் வருகிற வெளிச்சம்எல்லாவற்றையும் தெளிவாக துல்லியமாகக் காட்டித் தருவது போல் குருவின் கருணை திடமான தீர்க்கமான முடிவுகள் எடுக்க உதவுகிறது.”

ஒரு சிறு இடைவெளி விட்டுச் சொன்னேன். “நெய்வேலியில்தான் இந்த உதாரணத்தைச் சொல்ல முடியும்.இங்குதான் மின்வெட்டே கிடையாதே! தமிழகத்தின் மற்ற  ஊர்களில் விசையைத் தட்டினால் வெளிச்சம் வரும்” என்று சொன்னால் சிரிக்கிறார்கள் “போங்க சார்! எந்த காலத்திலே இருக்கீங்க!” என்றதும் மின்சாரச் சிரிப்பு சிரித்தார்கள் நெய்வேலிக்காரர்கள்

நிகழ்வின் புகைப்படங்கள்

போகன்வில்லா

தொட்டிக்குள் இருக்கும் பாதுகாப்பை அசல் தாவரங்கள் அங்கீகரிப்பதில்லை.
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
கொட்டிவைத்த மண்ணுக்குள் காலூன்றி நிற்பது மண்கிழிக்கும்
வித்தையில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
பூவா இலையா என்று புரியாமல் இருப்பதொன்றும் பெருமையில்லை.
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
பூக்காமல் காய்க்காமல் கனியாமல் உயிர்ப்பற்று உயிர்தரித்தல் தாவர தர்மமில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
புதராகவும் மண்டாமல் மரமாகவும் திமிராமல் கணக்குப் போட்டு கவிவதில் சாரமில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
கூர்க்காக்களின் விறைத்த சட்டைநுனி மட்டும் ஸ்பரிசிக்கும் செடியாய் இருப்பதில் அர்த்தமில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
கத்திரிக்கோல்களின் கட்டுக்குள் கிடந்தபடி தன்னை கற்பகவிருட்சமாய் கருதுவது சரியில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
வெயிலோ மழையோ தெரியாமல் செயற்கைக்  குளிரில் விறைத்து நிற்பதன்பெயர் செடியில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
நிழல்தரத் தெரியாமல் நிமிரவும் முடியாமல் நிற்பதற்குப் பெயர் மரமில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
காட்டு விருட்சங்களின் அசைவுகளுக்கு நிகராய் தன்னைக் கருதும் திமிரில் அழகில்லை
போகன்வில்லாவுக்கு தான் போகன்வில்லா என்றே தெரியவில்லை

ஜெயமோகன் என்மேல் வழக்கு போடவில்லை

( இணையத்தில் எழுதினாலே வழக்கு பாய்கிற காலமிது. எழுத்தாளர் ஜெயமோகன் பால் கொண்ட நட்புரிமையால் 2009 ஜனவரியில் நான் இதனை எழுதினேன்.அவர் என்மேல் வழக்கேதும் போடவில்லை)

தேமே என்று நடந்து போய்க்கொண்டிருந்த தன்னை ஏன் ஆட்டோவில் கடத்தினர்கள் என்று குழம்பிக் கொண்டே ஆட்டோவில் ஆடியவண்ணம் போய்க் கொண்டிருந்தார் எழுத்தாளர் புயல்வேகன்.கூச்சலிடுவதும் எட்டிக் குதிப்பதும் நவீன எழுத்தாளருக்கழகல்ல என்பதுடன் அவருக்கு குதிக்கத் தெரியாது என்பதும் அவர் வாளாவிருந்ததன் காரணங்கள்.ஆனாலும் அவரின் நுண்மனம் வாள் வாள் என்று கத்திக் கொண்டிருந்தது. கண்கள் இரண்டும் கட்டப்பட்ட நிலையிலும்(அவருக்கு மூன்று கணகள் உண்டென்றுஅவரின் நண்பர் ஒருவர்கட்டங்காப்பியைக் குடித்துக்கொண்டே சொன்னது அவருடைய ஓர்மைக்கு வந்தது) தான் கடத்தப்பட்டபோது கடந்துபோன முட்டுச் சந்துகள்,குறுக்குச் சந்துகள்-அங்கே வசீகரமாய் சிரித்துக் கொண்டிருந்த பல்செட் பாட்டி என்று பலத்த விவரணைகளுடன் தன் வலை மொட்டில்(தன்னடக்கம்) அரைமணிக்கூரில் 500 பக்கங்கள் எழுதப்பட வேண்டிய கட்டுரையை மனதுக்குள் எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தார் புயல்வேகன்.வயது மறந்து சமீபத்தில் “பழய நெனப்புடா பேராண்டி” என்று ஏறியிரங்கிய மலைகள் அவரை சொஸ்த்தாக்கியிருந்தன.பதட்டத்தின் போது தான் வழக்கமாகக் கடிக்கிற மீசையை எட்ட முடியாமல்.மூக்குப்பொடி மணக்கும் கர்ச்சீப்பால் வாயைக் கட்டியிருந்தார்கள்ஆதலால் கடத்தலை நிபந்தனையின்றி ஏற்பது என்ற முடிவுக்கு அவர் வந்த அதே அதீத கணத்தில் ஆட்டோ நின்றது.

நகைச்சுவைத் திருவிழா என்ற பெரிய பேனரின் கீழ் அதிரடி மிமிக்ரி-அட்டகாச கலாட்டா போன்ற விளம்பர வாசகங்கள் மினுமினுத்தன.நடுவர்:
இணையம் புகழ்-சினிமா புகழ் நவீன நாவலாசிரியர் புயல்வேகன் என்று வேறு போட்டிருந்தது.முறைப்படி அழைத்தால் வரமாட்டார் கடத்தி விடுங்கள் என்று பக்கத்தூர் நவீன எழுத்தாளர்” போட்டுக் கொடுத்திருந்த”
திட்டத்தை அமைப்பாளர்கள் நடைமுறைப்படுத்தியிருந்தார்கள்.

என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று தெரியும் முன்னே ஒலிபெருக்கி முன் நிறுத்தப்பட்டிருந்தார் புயல்வேகன்.

“நான் ஆபீஸைவிட்டு எறங்கினப்ப என்னப் பின் தொடர்ந்த நெழலோட குரல நான் கேக்காததால என் குரல இப்ப கேக்கறீங்க” என்று தொடங்கியதுமே எழுந்த கரவொலியில் மிரண்டு போனார் புயல்வேகன்.பேசும்போது கேட்பவர்கள் கைதட்டினால் அது நல்ல பேச்சல்ல என்று தான் முன்னர் எழுதிய இலக்கணத்தைத் தானே மீற நேர்ந்ததில் அவருக்கு வருத்தம்.

அடுத்த விநாடியே சுதாரித்துக் கொண்டு “நகைச்சுவைக்கு நீங்க சிரிக்கறீங்க,ஆனா நகைச்சுவைங்கறது சிரிக்கற விஷயமில்லே!ரொம்ப சீரியஸான விஷயம்.கேரளாவில நெறய மிமிக்ரி கலைஞர்கள் உண்டு.ஆனா அவங்க மிமிக்ரிக்கு அங்க யாரும் சிரிக்கறதே இல்ல.ஏன்னு கேட்டா மிமிக்ரிங்கறதுஉள்ள ஒரு விஷயத்தைத் திருத்தியமைக்கிற முயற்சி.ஆதிப்பிரதியத் திருத்தணும்ங்கிற தவிப்பு மனுஷனுக்குள்ள காலங்காலமா இருக்கிற வேட்கை.தப்பில்லாத பிரபஞ்சம் ஒண்ணு படைக்கணும்னா இருக்கறத பகடி பண்ணனும்.பகடிங்கறதில உள்ள நிதர்சனத்தோட தரிசனத்திலே ஏற்படற வலி தெரியுது. அதனுடைய நீட்சிதான் மிமிக்ரி.ஆனா தமிழ்நாட்டில நகைச்சுவைன்னா சிரிக்கறது,சோகம்னா அழறது,கோபம்னா கோபப் படறதுன்னு நெனக்கறாங்க.அப்படி ஒரு விஷயமே கிடையாது.என்னு கேட்டா விஷயம் அப்படிங்கற ஒண்ணே இல்லைங்கிறதுதான் விஷயம்”

இப்படி உணர்ச்சியல்லாத உணர்ச்சியில் புயல்வேகன் பேசிக்கொண்டே இருந்தபோது அதே ஆட்டோ மேடைக்கே வந்தது.   ஆட்டோ மேடைக்கருகில் வந்து நின்றதில் புயல்வேகன் பதட்டமைடையவில்லை.தொண்டையை செருமிக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.”உதாரணத்துக்கு இந்த ஆட்டோவை எடுத்துக்குங்க. தமிழ்நாட்டிலெ இதை ஆட்டோன்னு நினைக்கறாங்க. ஆக்சுவலா இது ஆட்டோ கிடையாது.கார்ல போன ஒரு தமிழாளு திருவனந்தபுரத்தில  ஒருத்தர உரசீட்டுப் போனப்போ “ஒன் கால உடைப்பேன்”னுஅவரு சபதம் செஞ்சாரு.எல்லாம் அந்த தமிழரோட கால ஒடைப்பார்னு நெனச்சாங்க.ஆன அவரு காரோட ஒரு சக்கரத்தை ஒடைச்சு ஆட்டோ கண்டுபுடிச்சாரு . அதாவது பயணம் ங்கறது மூன்று காலங்களோட சம்பந்தப்பட்டது.பயணம் கிளம்பினது இறந்த காலம்-பயணம் செய்வது நிகழ்காலம்-போய் சேரக்கூடிய இடம் எதிர்காலம். இதத்தான் அவர் கண்டுபிடிச்ச ஆட்டோ குறியீடா சொல்லுது.
முத முதல்லே ஆட்டோ தோன்றினது கேரளாவிலதான். இந்த முக்காலத் தத்துவத்தை கேட்டீர்களா என்று கேள்வி எழுப்பும் பாவனையில் அதுக்கு முதல்ல கேட்டோ கேட்டோ ன்னு தான் பேர் இருந்தது.அதை நம்ம நாட்டில உச்சரிக்கத் தெரியாம ஆட்டோ- ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.அதனால ஆட்டோங்கறதே காரை மிமிக்ரி பண்ணின விஷயம்தான் ”

புயல்வேகனின் இந்தப் போக்கு பெரும்போக்காக இருக்க ஆட்டோ ஓட்டுநர் வேறொரு போக்கின் பெயரைச் சொல்லித் திட்டிவிட்டு வேறோர் ஆட்டோ பிடிக்க தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்.

புயல்வேகனை எதிர்த்து செய்யப்படும் எல்லா வேலகளையும் போலவே இதுவும் பிசுபிசுத்துப் போனதில் பக்கத்தூர் நவீன எழுத்தாளருக்கு வருத்தம்தான்.பேசாமல் புயல்வேகனை பக்கத்துக் காட்டில் விட்டு விட்டு வர நினைத்தார்.

ஆனால் “வாசனை” இதழ் வெளியீட்டு விழாவுக்காக குற்றாலத்தில் தங்கியிருந்தபோது புயல்வேகன் தன் வன அனுபவங்களை
நண்பர்கள் மத்தியிலான தனி சொற்பொழிவில் சொல்லியிருந்தார்.

வனப்பகுதியில் தான் வாங்கி வரும் வர்க்கிகளுக்காகக் காத்திருக்கும் புலிக்குட்டிகள்,தன் பெயர்,முகவரி,செல்லிடப்பேசி எண் போன்றவற்றைத் தெரிந்து வைத்திருக்கும் ஐந்தாறு காட்டானைகள்,தன் பசிக்காக மானடித்து புயல்வேகனுக்காகப் புல்லறுத்து வைத்து குறுஞ்செய்தி அனுப்பும் சிறுத்தைகள் என்று தன் வனசிநேகிதங்கள் பற்றி புயல்வேகன் ஆற்றிய உரையின் சுருக்கத்தை வாசனை இதழ் ஆசிரியர் அறிவின் வேந்தன் சித்தையா ஏற்கெனவே எழுதியிருந்தார்.

எனவே விழா அமைப்பாளர்களுக்குத் தெரியாமல் பக்கத்தூர் நவீன எழுத்தாளர் மெல்ல நழுவ,தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத
விக்ரமாதித்தனாக (விக்ரமாதித்யன் அல்ல) மீண்டும் “தேமே” என்று நடக்கத் தொடங்கினார் புயல்வேகன்

விஸ்வரூபம்

“எப்போ வருவாரோ”நிகழ்ச்சியில் மகாகவி பாரதி பற்றிப் பேச வந்திருந்தார்
ஜெயகாந்தன். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம்  ஒவ்வொரு ஜனவரியும்
கோவையில் நிகழ்த்தும் உன்னதமான தொடர் நிகழ்ச்சி அது.விழாவில்
முகவுரை நிகழ்த்திய கவிஞர் பெ.சிதம்பரநாதன், “இன்று ஜெயகாந்தன்
தன் விஸ்வரூபத்தைக் காட்டுவாரா என்று வந்திருக்கும் நண்பர்களெல்லாம்
எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றார்.
வழக்கம் போல,’நண்பர்களே!” என்று தொடங்கிய ஜெயகாந்தன், மடை திறந்தார்.மகாகவியின் அரிய பாடல்கள், பலரும் தாண்டிச் சென்ற பாடல்கள்,நின்றுகாணாத நுட்பங்கள் எல்லாம் மழைபோல் வந்து விழுந்தன. நாற்பது நிமிடங்கள்கடந்திருக்கும். இடையில் சற்றே நிறுத்தி ஒரு போடு போட்டார். “விஸ்வரூபம்என்பது, நான் காட்டுவதல்ல.நீங்கள் காணுவது’.அவை அந்த வீச்சின் நுட்பத்தைஉள்வாங்கும் முன்னரேவெகுவேகமாய் அடுத்த கட்டத்துக்குப் போனார்.
தோற்றத்தில் வாமனராகிய ஜெயகாந்தன் எப்போதும் விஸ்வரூபத்திலேயே
இருக்கிறார் என்பது விளங்கிய தருணமது.அன்று காலைதான் அவரை ,
கோவையில் அவர் வழக்கமாகத் தங்கும் ஏ.பி.லாட்ஜ் அறையில் சந்தித்து
பேசிக் கொண்டிருந்தேன்.முரசொலி விருதை அவர் வாங்கியிருந்த நேரம் அது.
தி.மு.க. வின் எதிர்ப்பாளராக தொடக்கநாள் தொட்டே விளங்கி வருபவர் அவர்.
ஜே.கே. அந்த விருதை வாங்கியிருக்கக் கூடாதோ என்ற எண்ணம் பரவலாக
இருந்த நாட்கள் அவை. இட்டிலியை விண்டு சட்டினியில் தோய்த்தபடியே
அவராக ஆரம்பித்தார்.”முரசொலி விருது வாங்கியது தவறன்று பலரும்
சொல்கிறார்கள். அவர்களுடன் நமக்கு தீராத பகை ஏதும் உண்டா?”
அடுத்து சில விநாடிகள் மௌனம். விண்ட இட்டிலியை விழுங்கிவிட்டுக்
கேட்டார், ‘அப்படி யாருடனாவது நமக்குப் பகை உண்டா?” அந்த வார்த்தைகளில் இருக்கும் உண்மையின் வீரியத்தை வியந்து கொண்டேயிருந்தேன். ஜெயகாந்தனின் யுத்தங்கள் தனிமனிதர்களுடனானது போலத் தோன்றும்.
 
ஆனால் அவருடைய ரௌத்திரம் சமூகத் தீமைகளுக்கெதிரானவை.
எழுத்தால் ,பேச்சால், பார்வையால்,உரையாடலால் மனசாட்சியின் குரலாய்
ஒலித்துக் கொண்டேயிருக்கும் ஜெயகாந்தன் தன் அமைதியான இருப்பால்
அதனை இன்றும் .நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார்.
மகாகவி பாரதி விழா.மேடையில் கவியரங்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
“கட்ஷூ” ஒலிக்க கம்பீரமாக நடைநடந்து மேடை நோக்கி வந்து கொண்டிருந்தார் ஜெயகாந்தன். அடுத்து அவருடைய சிறப்புரை.
மேடையில் அமர்ந்திருந்த எனக்கு சிலிர்த்தது. கைகளில் இருந்த
கவியரங்கக் கவிதைத் தாள்களில் அவசரம் அவசரமாய் எழுதினேன்.
“பாரதியைக் கண்கொண்டு பாராத தலைமுறைக்கு
 நீயேதான் பாரதியாய் நிதர்சனத்தில் திகழுகிறாய்;-நீ
 தரை நடக்கும் இடிமுழக்கம்;திசைகளுக்குப் புதுவெளிச்சம்;
 உரைநடையின் சூரியனே! உந்தனுக்கு என்வணக்கம்!”
அன்று மேடையில் சிலர் வாசித்த கவிதைகளில் அவநம்பிக்கையும்
சமூகம் பற்றிய சலிப்பும் மேலோங்கியிருந்தது. தன் உரையினூடே
ஜெயகாந்தன் சொன்னார், “இங்கே நிறைய கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள்.
சில கவிதைகளில் அவநம்பிக்கை தொனித்தது.” அவர் உரையின் மிக அபாயமான பகுதியாகிய ஒரு விநாடிநேர இடைவெளி….பிறகு சொன்னார்,
“நம்பிக்கை இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது!!”
இன்று பல எழுத்தாளர்கள் “நாங்கள் ஜெயகாந்தனை என்றோ தாண்டிவிட்டோம்’ என்கிறார்கள். ஜெயகாந்தனின் சிறுகதைகளில் சிலவற்றை
வாசித்ததும் ஒரு வாசகனுக்கு வருகிற மன எழுச்சியை ஒருபோதும் அவர்கள்
தாண்ட முடியாது. கதையின் கருவாய் மேற்கொண்ட விஷயத்திலிருந்து
உந்தி மேலெழுந்து ஜெயகாந்தன் காட்டுகிற காட்சியும் அதில் மலர்கிற
உள்ளொளியும் அவரின் தனித்துவங்கள்.
கவிஞர் வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் வெளியீட்டுவிழா. மேடையில்
கலைஞர் கருணாநிதி, நடிகர் கமல்ஹாசன் ஜெயகாந்தன்.கலைஞருக்கு
மஞ்சள் ரோஜா பூத்துச் சிரிக்கும் பூந்தொட்டி வழங்கப்பட்டது. “எல்லோரோடும்
சண்டையிட்டு இன்று சமாதானமாகியிருக்கும் ஜெயகாந்தனுக்கு வெள்ளைரோஜா”என்ற அறிவிப்புடன் பூந்தொட்டி வழங்கப்பட்டது.
கமல்ஹாசனுக்கு சிகப்பு ரோஜா.
ஜெயகாந்தன் பேச அழைக்கப்பட்டார். .”நண்பர்களே! வைரமுத்து இந்த நூலை என்னிடம்கொடுத்து நேரம் கிடைக்கையில் புரட்டிப் பாருங்கள் என்றார்.
நானும் நேரம் கிடைக்கையில் புரட்டிப் பார்த்தேன்” என்று தொடங்கினார்.
அந்த இரண்டு நிமிடப் பேச்சே புயல் கிளப்பியது.
பலராலும் புரிந்துகொள்ளப்படாத முரட்டு மேதைமை ஜெயகாந்தனுடையது.
அதுபற்றி அவர் வருந்தியதுமில்லை.அதில் அவருக்கு நட்டமுமில்லை. அவரேதிரைப்படப் படல் ஒன்றில் இதை எழுதினார்.
“கும்பிடச் சொல்லுகிறேன் – உங்களை
  கும்பிட்டுச் சொல்லுகிறேன் -என்னை
  நம்பவும் நம்பிஎன் அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
  எனக்கொரு தம்பிடி நஷ்டமுண்டோ?”
விஸ்வரூபத்தை விளங்கிக் கொள்ளாவிட்டால் நஷ்டம் நமக்குத்தானே!
இன்று தொலைக்காட்சிகளிலும் பண்பலை வானொலிகளிலும் யாரோ
முதலீடு செய்து யாரோ தயாரித்த படப்பாடல்களை தங்கள் நண்பர்களுக்கும்
உறவினர்களுக்கும் அர்ப்பணிக்கிறார்கள். செம்மொழியில் சொல்வதென்றால்
“டெடிகேட்” செய்கிறார்கள்.இன்று விஸ்வரூபம் படப்பாடல்கள் வெளியாகின்றன.நான் “விஸ்வரூபம்” என்னும் அந்தப் படத்தின் பெயரை ஜெயகாந்தனுக்கு“டெடிகேட்” செய்கிறேன்.   

தேதி தெரிந்த கவிதை

பல கவிஞர்கள் தங்கள் ஒவ்வொரு கவிதையும் எப்போது பிறந்ததென்று குறித்து வைப்பார்கள்.அல்லது அந்த நாளில் நடந்த சம்பவமே முக்கியமானதாய் அமைந்து அந்தத் தேதியை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். என் கவிதைகளில் பெரும்பாலானவற்றுக்கு ஜாதகமோ பிறந்த தேதியோ கிடையாது.

இன்று பழைய கோப்பு ஒன்றினைப் புரட்டிக் கொண்டிருந்த போது, தேதியிடப்பட்ட கவிதை ஒன்று கிடைத்தது. 26.07.2010 அன்று இந்தக்கவிதையை மலேசியாவில் இருந்தபடி எழுதியிருக்கிறேன்.

ஆனால் இந்தக் கவிதைக்கு தலைப்பிடப்படவில்லை.பிறந்த தேதி தெரிந்துவிட்டது.நேரம் ஞாபகமிருந்தால் ஜாதகம் கணித்து பெயர்சூட்டி விடலாம். பிறந்து ஒன்றரை வருடமாகிவிட்டது..

2010ல் இரண்டுமூன்று முறை மலேசியா சென்றதால் இந்தப் பயணம் எதற்காகவென்று தெரியவில்லை

உயிரெழுத்து மெய்யெழுத்து கத்துக்கிடலாம்-அவன்

ஓரெழுத்து போடாம பாட்டு வருமா?

பொய்யெழுத்தில் ஓலநீயும் செஞ்சுக்கிடலாம்-அவன்

கையெழுத்து போடாம காசுவருமா?

பையப்பைய நூறுபேச்சு பேசிக்கிடலாம்-அவன்

பையக் காலி செஞ்சுபுட்டா மூச்சு வருமா?

கையக்கால ஆட்டிநாம ஆடிக்கிடலாம்-அவன்

கட்டுத்திரை போட்டுப்புட்டா காட்சிவருமா?

சொந்தமுன்னும் பந்தமுன்னும் கொஞ்சிக்கிடலாம்-அவன்

சுட்டுப்புட்டா நெஞ்சுக்குள்ள ஆசவருமா?

வந்தபணம் என்னுதுன்னுஎண்ணிக்கிடலாம்-அவன்

வாங்கிக்கிட ஆளவிட்டா வார்த்த வருமா?

சந்தையில நின்னுநின்னு கூவிக்கிடலாம்-அவன்

சொன்னவிலை சொன்னதுதான் மாறிவிடுமா?

சிந்தையில கோயிலொண்ணு கட்டிக்கிடலாம்-அதில்

சிவகாமி வந்தபின்னே துன்பம்வருமா?

அஞ்சுபுலன் சேர்த்தகுப்பை நெஞ்சில்கிடக்கு-இதில்

அஞ்சுகாசு பத்துகாசு என்ன கணக்கு?

அஞ்சுபூதம் தந்ததுதான் இந்த அழுக்கு-இதில்

ஆசையென்ன ரோஷமென்ன வேண்டிக்கிடக்கு?

அஞ்சுகிற உள்ளத்துல வம்புவழக்கு-அது

ஆணவத்தின் பூட்டுப் போட்டு பூட்டிக்கிடக்கு

அஞ்செழுத்து மந்திரத்தில் சாவியிருக்கு-அதை

அன்னாடம் சொல்லிவந்தா வாழ்க்கையிருக்கு!

இது ரஜினியின் கடமை எனலாமா?

நெய்வேலி மின் நிலையத்தின் உயர் அலுவலர்கள் மத்தியில் “நமது வீட்டின் முகவரி” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினேன். சிறந்த பயிற்சியாளராக அறியப்படுபவரும் அந்நிறுவனத்தின் பொது மேலாளர்களில் ஒருவருமான திரு. ஒய்.எம்.எஸ். பிள்ளை, கேள்வி நேரத்தில் ஒரு கேள்வி எழுப்பினார். “சுய மதிப்பீட்டுக்கும் சுய பிம்பத்துக்கும் என்ன வித்தியாசம்?”

சுயபிம்பம் என்பதை கண்ணாடியில் தெரியும் பிம்பத்துக்கு ஒப்பிடலாம்.நாம் எவ்வாறு தோற்றமளிக்க விரும்புகிறோம் என்பதற்கேற்ப நம் தோற்றத்தில் நாம் செய்யும் சீர்திருத்தங்களை அந்த பிம்பம் பிரதிபலிக்கிறது. ஆனால் அந்த பிம்பம்தான் நாமென்று நாம் நினைப்பதில்லை. நம் உண்மையான தன்மை என்ன, நம் பலம் பலவீனங்கள் என்ன என்றெல்லாம் நமக்குத்தான் தெரியும். அந்த உண்மையான உள்ளீடு நம்  பிம்பத்தில் பிரதிபலிக்காது.

எனக்கு உடனே நினைவுக்கு வந்தவர் ரஜினிகாந்த் தான். சூப்பர் ஸ்டார் என்பது அவர் விரும்பியும் உழைத்தும் கட்டமைத்த சுயபிம்பம். ஒரு நடிகராக அவர் வளர்ந்து வந்த காலங்களில் வாழ்வில் குறுக்கிட்ட பதட்டப் பொழுதுகளைத் தாண்டியும் புயல்நிமிஷங்களைக் கடந்தும் தன்னை உயர்த்தியது எது என்னும் கேள்விக்கு பதில்தேடிய ரஜினிகாந்த்  தன்னைத்தானே  மதிப்பிட்டுக் கொண்டதில் ஆன்மீகம் என்னும் புள்ளி அவருக்குப் புலப்பட்டது.

தனக்கான சக்தியைத் தருவது தன்னினும் மேலான சக்தி என்பதைக்  கண்டுணர்ந்த போதுதான்  ஆன்மீகத் தேடல் மிக்க மனிதராய் அவர்  விரும்பினார். பிரபஞ்சம் என்னும் பெருஞ்சக்திவெள்ளத்தில் தன்னுடைய இடம் எதுவென்று தேடத் தெரிந்ததில்அவர் கண்டுணர்ந்த அம்சத்துக்கும்  சூப்பர் ஸ்டார் பிம்பத்துக்கும் சம்பந்தமில்லை.

விவரம் தெரிந்த குழந்தைகளுக்கும் கூட சூப்பர் ஸ்டாராக அவரைத் தெரியலாம் . ஆனால் துளிர்விட்ட தாவரத்தோடும், பத்து விநாடிகள் முன்னர் பிறந்த இளங்கன்றோடும் தனக்கான தேன்துளியைத் தேடியலையும் வண்ணத்துப் பூச்சியோடும் தன்னை ஒரு சக உயிராக உணர்ந்து பார்க்கும் உந்துதலில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் இல்லை. ரஜினிகாந்த் என்ற பெயரும் இல்லை.

இந்த சுயமதிப்பீட்டுக்கும் சூப்பர்ஸ்டார் என்ற பிம்பத்துக்கும் நடுவிலான இடைவெளி வளர வளரத்தான் ஆன்மீகத்தின் ஆழங்களை அந்த உயிர் உணர்ந்துகொண்டே போகும். தானற்றுப் போதலின் ருசி தெரியாத உயிர்களுக்கு தன்னை அறிதலுக்கான வழி தெரியாது.

ஆன்மீக ருசி கண்ட பிறகு ரஜினிகாந்த் ஏற்று நடித்த பல பாத்திரங்கள், தான் ஒரு செல்வந்தன் என்று தெரியாத ஏழையாகத் தொடங்கி, தன் உடமைகளைக் கைப்பற்றி,தன் உரிமைகளை நிலைநாட்டி எல்லாவற்றிலும் ஜெயித்த பிறகு எதுவும் வேண்டாமென்று காசித்துண்டோடு கிளம்புவதாகத்தான் இருக்கும்.

பெரும்பாலும் மனித வாழ்க்கை இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கை என்னும் திரைப்படத்தில் இடைவேளை வரையில், தான்யார், தன்னிடம் இருக்கும் திறமைகள் என்ன, அவற்றை வெளிப்ப்டுத்த விடாத தீய சக்திகள் எவை என்ற தேடலில் போகிறது.

இடைவேளைக்குப் பிறகு நம் சக்தியை வெளிப்படுத்துவதிலும், செல்வத்தை ஈட்டுவதிலும், செல்வாக்கை நிலைநாட்டுவதிலும் பெரும்பகுதி போகிறது. இதுவரைகூட தன்னைப்பற்றிய சுயபிம்பத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டமும்,அந்தப் போராட்டத்திற்கான வெற்றியும்தான் கிடைக்கிறது.

மிகச்சிலருக்குத்தான் அதன்பிறகு தன்னை மதிப்பிட்டு தன்னை ஆரவாரங்களிலிருந்து விலக்கி வைத்து தான் ஒரு பெரும்சக்தியின் சின்னஞ்சிறு பகுதி என்னும் உணர்வோடு சாதனைகள் என்று கருதப்படும் வெற்றிகளுக்கும் பிறகும் கரைந்து போகிற பக்குவம் மலர்கிறது.

சூப்பர்ஸ்டார் என்ற உயரத்தை எட்டி அந்த உயரத்திலேயே நின்று கொண்டிருக்கும் நிலையிலும் இந்த அடுத்த கட்ட நகர்தல்தான் ரஜினிகாந்த்தின் முக்கியமான அம்சம் என்பதென் கருத்து.இந்தச் சூழலில்தான், ஒருகாலத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்கிற கேள்வியும் அதற்கான விவாதங்களும் ஒருகாலத்தில் சூடுபறந்து இன்றோ ஆறி அவலாகி விட்டது.

இதற்குக் காரணம்கூட தானற்றுப்போதலில் அவருக்கிருக்கும் தவிப்புக்கும் ஒர் அரசியல் தலைவராக உருவாவதற்குத்   தேவையான  குணங்களுக்கும் நடுவிலான வேற்றுமைகள்தான்.இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில்  நிற்கும் அவர் அரசியலுக்கு வருவாரா என்கிற கேள்வி  நமக்கில்லை.ஆனால் அவர் வசமுள்ள ரசிகர்களை தன்னைப் போலவே ஆன்மீகத்தின் ருசி கண்டவர்களாய் ஆக்கலாம். அவருடைய மன்ற உறுப்பினர்களுக்கு  யோகப் பயிற்சியும் தியானப் பயிற்சியும் அவசியம் என்பதை வலியுறுத்துவதில் வலியுறுத்துவதில்   இதைத் தொடங்கலாம்.

ரஜினிகாந்த் ஓர் ஆன்மீக வழிகாட்டியாய் வெளிப்பட வேண்டுமென்பதல்ல நம் எதிர்பார்ப்பு. அவரை சார்ந்திருப்போரை ஆன்மீகம்  நோக்கி  நெறிப்படுத்தலாம்.  தரமிக்க தனிமனிதர்களை உருவாக்குவதன் மூலம் சமூக மாற்றத்திற்கு அவர் வித்திடலாம். அவர் கால்வைக்க நினைக்கும் அல்லது தவிர்க்கும் அரசியலை விட ஆயிரம் மடங்கு அக்கபூர்வமான  பலன்களை இந்த முயற்சி ஏற்படுத்தக்கூடும்

“யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதே ஆன்மீகத்தின் அடிப்படை குணாதிசயம். தான் பெற்ற ஆன்மீக ஆனந்தத்தை  நோக்கிப்  பயணம்  செய்ய ரஜினிகாந்த் நினைத்தால் வழிகாட்டலாம். சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்தை அவர் தாண்டிவிட்டார். அடுத்து…..?

எது சுதந்திரம்…..எது நிர்ப்பந்தம்?

“தெற்கிலிருந்து சில கவிதைகள்”என்னும் நூலில் என் கல்லூரிப்பருவத்தில் ஒரு கவிதை படித்தேன். எத்தனையோ முறை மேற்கோள் காட்டியும் அந்த வரிகளின் தாக்கம் மாறவேயில்லை.

“பறவையான பிறகுதான்
தெரிந்தது…
பறத்தல் என்பது

சுதந்திரம் அல்ல…
நிர்ப்பந்தம் என்று”

இதை எழுதியவர் கவிஞர் சமயவேல் என்று ஞாபகம். சரியாகத் தெரியவில்லை. வீட்டிலிருந்து பத்து நிமிட நடைத்தூரத்தில் இருக்கிறது, பந்தயச்சாலை. நடைப்பயிற்சிக்கு மிகவும் உகந்த இடம். பந்தயச்சாலைக்கு நடந்துபோய் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். காலைப்பொழுதில் கால்வீசி நடந்து பந்தயச்சலையின் இரண்டரை கிலோமீட்டர் சுற்றையும் நடக்கும் நிமிஷங்கள் புத்துணர்வும் சுதந்திரமும் ததும்பும் விதத்தில் இருக்கும். ஆனால் திரும்ப வீடு நோக்கி நடக்கும்போது சிலசமயம் அலுப்பாக இருக்கும். விரும்பி நடப்பது சுதந்திரமாகவும் கடந்தே தீர வேண்டிய தூரம் நிர்ப்பந்தமாகவும் தோன்றுகிறது போலும்!!

இந்தச் சிந்தனையுடன் நடக்கிறபோது இராமனின் வாழ்க்கை நினைவுக்கு வந்தது. இராமன் வனத்துக்குப் போனது விரும்பி ஏற்ற விஷயமா, நிர்ப்பந்தமா என்றொரு கேள்வி எழுகிறது. இராமன் விரும்பித்தான் வனம் சென்றான் என்று தொடக்கம் முதலே அடித்துச் சொல்கிறான் கம்பன். ஆனால் கம்பன் வரிகளிலேயே வெளிப்படும் இராமனின் வாக்குமூலம் வேறொரு நிலைப்பாட்டையும் சொல்கிறது.

இராமன் விரும்பித்தான் வனம் போனான் என்று கம்பன் நிறுவுகிற இடங்கள் மிகவும் சுவாரசியமானவை. “பரதன் உலகை ஆளட்டும். நீ நீண்ட சடாமுடி தாங்கி, செயற்கரிய தவம் செய்ய புழுதி பறக்கும் வெங்காட்டுக்குப் போய் பதினான்கு ஆண்டுகள் கழித்து வா என அரசன் சொன்னான்” என்கிறாள் கைகேயி. இது பலரும் அறிந்த பாடல்தான்.

“ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீபோய்
தாழிருஞ் சடைகள் தாங்கி தாங்கரும் தவம் மேற்கொண்டு

பூழிவெங் கானம் நண்ணி புண்ணிய நதிகள் ஆடி
ஏழிரண்டாண்டில் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்.”

நீண்ட சடை வளர்த்துக் கொள். கடுமையான தவம் செய். புழுதி பறக்கும் காட்டில் வசி என்கிற வரிகளில் வன்மமும் வெறுப்பும் தெரிகிறது. இதைச் சொன்னவன் உன் தந்தை என்று சொன்னால்

அப்பாவிடம் இராமன் சலுகை பெறுவான் என்று நினைத்தாளோ என்னவோ, “இயம்பினன் அரசன்” என்றாள்.

ஆனால் இராமனின் எதிர்வினை வேறுமாதிரி இருக்கிறது. அரசன் இதைச் சொல்ல வேண்டும் என்று அவசியமா என்ன? நீங்களே சொல்லியிருந்தாலும் அதைத் தட்டப் போகிறேனா என்ன? என் தம்பி அரசாள்வது நான் செய்த பாக்கியமல்லவா? மின்னல்களின் வெளிச்சம் படரும் வனம் நோக்கி இப்போதே போகிறேன்” என்கிறான்.

“மன்னவன் பணி அன்றாகில் நும்பணி மறுப்பனோ?என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற பேறு
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்” என்கிறான்.

வனத்தை பூழிவெங்கானம் என்று சொல்லி “அரச கட்டளையை ஏற்று நீ போகத்தான் வேண்டும்” என்பது கைகேயி விதிக்கிற நிர்ப்பந்தம். நீங்கள் சொன்னாலே போதுமே, மின்னல்கள் ஒளிரும் அழகிய வனத்துக்கு இப்போதே போகிறேன் என்பது இராமனின் சுதந்திரம். ஒரு நிர்ப்பந்தத்தை சுதந்திரமாகப் பார்த்தான் இராமன் என்று நமக்குத் தெரிகிறது.

இதே எண்ணத்தை மீண்டும் நினைவுபடுத்துவான் கம்பன். அசோகவனத்தில் இருக்கும் சீதையின் நினைவில் மின்னுகிறது இராமனின் ஆசைமுகம். நீதான் அரசன் என்ற போதும், ஆட்சி இல்லை காட்டுக்குப் போ என்ற போதும் வரைந்து வைத்த செந்தாமரையை ஒத்து மலர்ந்திருந்த திருமுகம்.

“மெய்த்திருப்பதம் மேவு எனும் போதிலும்
இத்திறத்தை விட்டு ஏகு எனும் போதிலும்
சித்திரத்து அலர்ந்த செந்தாமரையினை
ஒத்திருக்கும் முகத்தை உன்னுவாள்”

என்கிறான் கம்பன்

வனத்துக்குப் போவதை மகிழ்ச்சியாக ஏற்றது இராமனின் சுதந்திரம் என்கிற கருத்துருவாக்கம் வேறோர் இடத்தில் கேள்விக்குரியதாகிறது. சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து கொண்ட வாலியை வதம் செய்து கிஷ்கிந்தைக்கு மன்னனாக சுக்ரீவனுக்கு முடிசூட்டினான் இராமன். அப்போது சுக்ரீவனுக்கு உபதேசம் செய்து கொண்டே வருகிறபோது, “பெண்களால் மனிதர்களுக்கு மரணம் வரும். வாலியின் வாழ்க்கை இதைத்தான் சொல்கிறது. வாலியை விடு. பெண்களால்தான் துன்பமும் அழிவும் வரும் என்பது எங்கள் வாழ்விலிருந்தே தெரிகிறதே!இதைவிடவா ஆதாரம் வேண்டும்” என்கிறான்.

மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல்
சங்கையின்றி உணர்தி; வாலி செய்கையால் சாலும்;இன்னும்
அங்கவர் திறத்தினானே,அல்லலும் அழிவும் ஆதல்
எங்களில் காண்டியன்றே; இதனின் வேறுறுதி உண்டோ?

என்கிறான்.

கைகேயியிடம் நீங்கள் சொன்னாலே வனத்துக்கு மகிழ்ச்சியாகப் போவேனே.என்று உற்சாகமாகப் போகிறான் இராமன். நடைப்பயிற்சிக்குக் கிளம்புவதுபோல. ஆனால் நடக்க நடக்க ஒரு கட்டத்தில் சோர்வு வருகிற போது உள்ளத்தில் இருந்த உண்மையான அபிப்பிராயம் வெளிப்பட்டு விடுகிறது.

ஓர் எல்லைக்குப் பிறகு தான் விரும்பி ஏற்றுக் கொண்டதே பாரமாய் அழுத்துவதை தன்னையும் மீறி இராமன் வெளிப்படுத்துகிறான். நிர்ப்பந்தம் என்பதும் சுதந்திரம் என்பதும் சூழல்களிலும் இல்லை, சம்பவங்களிலும் இல்லை. மனதில்தான் இருக்கிறது