கம்பன் கவியாய் கலையெழிலாய்
அம்புலி சிரித்திடும் அழகாக
அம்மன் வீசிய தாடங்கம்
அதைத்தான் நிலவென்பார் பொதுவாக
மின்னல் இழைகளின் கோலங்கள்
முழுமை பெறுவதே முத்துநிலா
தென்றல் கடைந்த வான்தயிரில்
திரளும் வெண்ணெய் பட்டுநிலா
கனவில் சூரியன் காணுகிற
காதல் முகமே அழகுநிலா
மனதில் தினமும் பௌர்ணமியாய்
மல்லிகை மலர்த்தும் முழுமைநிலா
கோள்களாம் அகல்களின் ஒளியினிலே
கார்த்திகை தீபம் ஏற்றும்நிலா
நாள்கள் என்கிற நாடகங்கள்
நகையுறக் கண்டே நகரும்நிலா
கார்த்திகைப் பெண்களின் முலைப்பாலாய்
கந்தன் கனியிதழ் வழிந்தநிலா
கார்நிறக் கண்ணன் வேய்குழலின்
கானம் போலப் பொழிந்தநிலா
தரையோ கடலோ மலைமுகடோ
தாரைகள் பொழியும் தாய்மைநிலா
நரையோ திரையோ வாராமல்
நித்தம் ஒளிரும் தூய்மைநிலா
ஒலியே இல்லா இசையாக
உயிரை வருடும் நாதநிலா
வலியே இல்லா வலியாக
வாட்டியெடுக்கும் போதைநிலா
திரையே இல்லா அழகாக
திசைகள் துலக்கும் கோலநிலா
உரையே இல்லாக் கவியாக
உயிரை உலுக்கும் ஞானநிலா