சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கர் ஒருமுறை என்னிடம்,கோவைக்காரர்களுடன் சாப்பிட உட்காரும்போது ஒரு சிரமம்.வேண்டாம் வேண்டாம் என்றாலும் வற்புறுத்தித் திணிக்கிற “அக்ரஸிவ் ஹாஸ்பிடாலிடி”
உண்டு என்றார். அந்த வார்த்தை எனக்குப் புதுசு.ஆனால்,திருக்கடையூரில்எங்கள் தாத்தா வீட்டில் இந்த விதமான விருந்தோம்பலை எல்லா நாட்களும் பார்க்கலாம்.விருந்தாளிகள் சாப்பிட மறுக்கும் போது,விருந்தோம்பலை ஒரு நிகழ்த்துகலையாகவும் வன்முறையாகவும் நிகழ்த்துவார் எங்கள் தாத்தா, கனகசபைப்பிள்ளை.
எங்கள் தாத்தா கனகசபைபிள்ளை திருக்கடவூரில் பெரிய நிலச்சுவான்தார். அபிராமி அம்பாள் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் குடும்பம் எங்களுடையது .350 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் முன்னோரில் ஒருவரான பிச்சைப்பிள்ளை என்பவர்,(அபிராமி பட்டருக்கு சமகாலத்தவராக இருக்கக் கூடும்)அபிராமி அம்பாள் அலயத்திற்கு 1500 ஏக்கர் நிலம் எழுதி வைக்க அது பிச்சைக்கட்டளை என்ற அறக்கட்டளையாக உருவெடுத்தது அதிலிருந்து எங்கள் குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலர்கள்.அந்த வரிசையில் எங்கள் தாத்தாவின் காலம் பொற்காலம். எல்லா மிராசுதார்களையும் போலவேகாங்கிரஸ் தலைவர்களுடனும் திராவிட இயக்கத் தலைவர்களுடனும் சமமாகப் பழகிய சாமர்த்தியசாலி. பள்ளி,கல்லூரி,மருத்துவமனை என்று பல தர்ம காரியங்கள் செய்தவர்.அவர் வீட்டில் தினமும் நூறு பேருக்காகவது உணவு தயாராகும்.அடையாக் கதவு.அணையா அடுப்பு.

அன்றாடம் காலையில் எட்டு மணிக்கெல்லாம் முழுச்சாப்பாடு சாப்பிடும் பழக்கம் அவருக்கு.
அதற்கு முன் அவர் குளித்துத் தயாராகி பூசை நிகழ்த்தி பாராயணம் செய்யும் வைபவம் பரபரப்பாக நடக்கும்.ஓர் ஆணின் குளியல் வேடிக்கை பார்க்கப்பட்டதென்றாலது அவருடைய குளியல்தான் என்று நினைக்கிறேன்.பெரிய ரெட்டியார் என்ற பணியாளர் கொதிக்கக் கொதிக்க வெந்நீர்த் தவலையைத் தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழைவார்.தண்ணீரை விளாவி வைத்து விட்டு முதற்கட்டுக்குத் தகவல் அனுப்புவார்.அதற்குள் குளியலறையில்
மைசூர் சாண்டல் சோப் மற்றும் வாசனாதி திரவியங்கள் ,சிகைக்காய் பொடி முதலியன தயார் செய்யப்படும். சொக்கலிங்கம்,மாரிமுத்து,சுந்தரராசு,தம்பான் ஆகிய நான்கு பணியாட்கள் சூழ தாத்தா குளியலறையில் பிரவேசிப்பார்.
வேட்டி களைந்து கோவணத்துடன் நிற்கும் அவரிடம் சுந்தரராசு குவளையில் தண்ணீரை நீட்ட,சூடு போதுமா என்று தொட்டுப் பார்த்து தாத்தா தலையசைத்ததும் முழங்கால் அளவில் ஆரம்பித்து தண்ணீரை மெல்ல மெல்ல மேலுக்கு வார்ப்பார் சுந்தரராசு.
சொக்கலிங்கமும் மாரிமுத்துவும் பரபரவென்று கைகால்களைத் தேய்த்துவிட்டு சோப்புப் போடத் தொடங்கும் போது தம்பான் ஒரு காரியம் செய்வார்.பெரிய சைஸ் பனை ஓலை விசிறியை எடுத்து விசிறத் தொடங்குவார்!!
துவட்டி விடுவது, கோவணம் களைந்து மாற்றுவது, சலவை வேட்டியை உதறிக்கட்டுவது போன்ற வேலைகளையும் இந்த நால்வரணி தான் செய்யும்.
அதன்பிறகு அவர் வருகிற இடம் எங்கள் ஆயியின் சாம்ராஜ்யமான இரண்டாம் கட்டு.அங்கே அமைந்திருந்த விஸ்தாரமான ஊஞ்சலில் அவர் வந்து அமர்கிற போது ஏற்கெனவே தயாராக இருக்கும் தவிசுப்பிள்ளை ,எங்கள் ஆயி,
பெரிய தம்பி என்ற பணியாளர், சின்ன ரெட்டியார் என்ற பணியாளர் அகியோருடன் சுந்தரராசுவும் மாரிமுத்துவும் சேர்ந்து கொள்வார்கள்.அவர் ஊஞ்சலில் வந்தமரும் முதல் சில நிமிஷங்கள்
அவரது பொன்னிற மேனியில் வாசனை பிடிக்க போட்டி போடும் பேரப்பிள்ளைகளான எங்களுக்கானவை.எங்களை நாசூக்காக விலக்கிவிட்டுஅவர் நிமிர்வதற்கும், பெரிய அளவிலான முகம் பார்க்கும் கண்ணாடியை பெரியதம்பி அவர் முன் நீட்டவும் சரியாக இருக்கும்.பொதுவாக இந்த நேரங்களில் அதிகமாகப் பேச மாட்டார் தாத்தா.வலது கையை நீட்ட ,சின்ன ரெட்டியார் தந்தச் சீப்பை அதிலே வைப்பார். தன் தலையில் ஒரு வகிடு எடுத்து விட்டு சீப்பைத் திருப்பித் தந்து விடுவார். தாத்தாவின் தலையில் இருக்கும் எழுபது எண்பது முடிகளையும் சீவிவிடும் “தலையாய’ கடமை
சின்ன ரெட்டியாரைச் சேர்ந்தது.அதன்பின் தண்ணீரில் தயாராகக் குழைத்து வைக்கப்பட்டிருக்கும் திருநீறை எடுத்து நெற்றியில், மார்பில்,தோள்பட்டைகளில் முன்னங்கைகளில் மூன்று பட்டைகளாகப் பூசிக் கொள்வார்.அப்போது அவர் உதடுகள் எதையோ முணுமுணுக்கும்.
அதன்பின் ஆயியின் கைகளில் இருக்கும் காபி வட்டா டம்ளர் அவர் கைக்குப் போகும்.காபியை மெல்லப் பருகிக் கொண்டே எங்களிடம் பேச்சுக் கொடுப்பார் தாத்தா. அடுத்தது, தவிசுப்பிள்ளை என அழைக்கப்படும் சமையற்காரரான சண்முகம் பிள்ளையின் “டர்ன்’.பொடி பொடியாய் நறுக்கப்பட்ட,நெய்யில் வறுக்கப்பட்ட சின்ன வெங்காயங்களை கிண்ணம் நிறையப் போட்டு,ஸ்பூனுடன் நீட்டுவார்பிறகு காலை வேளைக்கான மாத்திரைகளைப் பெரியதம்பி நீட்டுவார். விழுங்கிவிட்டு,பூஜை அறைக்குப் பக்கத்திலுள்ள பாராயண அறைக்குக் கிளம்புவார் தாத்தா.அங்கே அவர் பாராயணம் செய்யும் தேவாரம் திருவாசகம்,அபிராமி அந்தாதி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்,அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

தாத்தாவின் பணியாளர்களுக்கு சீருடை கிடையாது.ஆனால் ஆடைகளை வைத்தே அவர்களின் அதிகார எல்லைகளைத் தெரிந்து கொள்ளலாம்.சுந்தரராசு,சொக்கலிங்கம்,தம்பான்,மாரிமுத்து போன்ற கடைநிலைப் பணியாளர்களுக்கு வேட்டி,தலையில் முண்டாசு மட்டும்.சின்ன ரெட்டியார்,பெரியதம்பி-மற்றும் இந்தக் கட்டுரையில்அறிமுகமாகாத ராமதாஸ் கோவிந்தராஜு போன்றவர்களுக்கு
வேட்டி ,முண்டா பனியன் .மேனேஜர் தாத்தா,ஆஸ்தான புலவரான நாராயணசாமி செட்டியார், அவரது மருமகனும், செட்டியார் மாப்பிள்ளை என்றழைக்கப்படுபவருமான கலியபெருமாள் ஆகியோருக்கு சட்டை அணியும் அதிகாரம் உண்டு.

தவிசுப்பிள்ளையான சண்முகம்பிள்ளைக்கு, வேட்டி,பனியன்,உபரியாக-சமையற்காரர்களின் டிரேட்மார்க்கான அழுக்குத் துண்டு.ஆள் குள்ளம் .கறுப்பு.வழுக்கைத் தலை. கொஞ்ச காலம் தாடி வைத்திருந்ததாய் நினைவு.வாயில் புகையிலை எப்போதும் இருப்பதால் அண்ணாந்துதான் பேசுவார்.

ஒருநாளைக்கு ஐம்பது முதல் ஐந்நூறு பேர் வரை சாப்பிடுவார்கள் என்பதால் குறிப்பிட்ட திட்டமோ குறைந்தபட்ச பொதுத் திட்டமோ
இல்லாமல் மன்மோகன்சிங் பழைய அமைச்சரவை போல் சமையல் கடமைகள் இருக்கும்.

காலையில் தாத்தாவின் சபை கூடும். கடிதங்கள் படிப்பது, முக்கிய முடிவுகள் எடுப்பதுஎன்று நிர்வாக வேலைகள் நடக்கும். அதன்பிறகு பதினொன்றரை மணிக்கு மேல்தான் பார்வையாளர் நேரம். பஞ்சாயத்து தொடங்கி, படிப்புக்கோ மருத்துவத்துக்கோ பணம் கேட்டு வருபவர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், பிரபலங்கள் என்று பலரும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.தாத்தாவின் நிர்வாகசபை நடக்கிர போதே, சண்முகம் பிள்ளை
பார்வையாளர்கள் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்வையிட்டு,உத்தேசமாய் சமைக்கத் தொடங்குவார்.
விருந்தினர்களிடம் தாத்தா பேசத் தொடங்குவார்.இப்போது, திண்டுகள் நிறைந்த கட்டிலில் சாய்ந்து கொண்டிருப்பார் அவர். எதிரே இருப்பவர் உள்ளூர்த் தலையாரியா உயர்நீதிமன்ற நீதிபதியா என்று கவலைப்படாமல் நாங்கள் அவரின் பொன்னார் மேனியில் ஏறி விளையாடிக் கொண்டிருப்போம். தன் பேரப்பிள்ளைகளை வந்திருப்பவர்களிடம்,கர்ம சிரத்தையாய் அறிமுகம் செய்வார் அவர். எங்கள் எல்லோரையும் அறிமுகப்படுத்த தாத்தாவிடம் இருந்த பொதுச்சொல் ஒன்றுண்டு.”வெரி பிரைட் பாய்” என்பதுதான் அது.
வந்தவர்களுடன் உரையாடல் முடிந்ததும் “சாப்பிட்டுப் போங்க” என்பார் தாத்தா. வந்தவர்கள் மறுத்தால் அவர் முகம் மாறும்.
“எல்லாம் தயாரா இருக்கு ! சாப்பிடலாமே!” என்பார். வந்திருப்பவர்கள் தயங்கினாலோ மறுத்தாலோ “நல்லாருக்கு!” என்றபடி, “ஷண்முகம் பிள்ளை” என்று குரல் கொடுப்பார்.”எஜமான்”
என்று வந்து நிற்கும் சமையற்காரரிடம் “இவங்க சாப்பிடலையாம்!” என்பார். அந்தக் குரலில் ஒரு பண்ணையாரின் கம்பீரம் இருக்காது. புகார் சொல்லும் பன்னிரண்டு வயதுச் சிறுவனின் ஆற்றாமை தொனிக்கும்.அவரினும் பதறும் சண்முகம்பிள்ளை, “இலை போட்டாச்சுங்கய்யா! சாப்பிட வாங்க!” என்று விருந்தினரிடம் இறைஞ்சுவார். மீண்டும் விருந்தினர்கள் மறுத்தால் நியாயமாக இந்த நடகம் இங்கே முடிய வேண்டும். மோர்,இளநீர் என்று சமரசமாகப் போய்விடலாம்தான்.ஆனால்
முடியாது.

தாத்தாவின் முகத்தைப் பார்ப்பார்சண்முகம் பிள்ளை. ஒரு சிறு தலையசைப்பு. அவ்வளவுதான். இடுப்பில் இருக்கும் துண்டை இறுக்கிக் கட்டிக் கொண்டு “அய்யா! நீங்க அவசியம் சாப்பிட்டுத்தான் போகணும் என்று, விருந்தினர் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுவார் சண்முகம் பிள்ளை.விருந்தினர்கள் பதறிவிடுவார்கள். சில நிமிடங்களிலேயே அவர்கள் இலைக்கு முன்னால் அமர்ந்திருப்பார்கள்.சாப்பாட்டில் காரம் இருக்காது.ஆனால் அவர்கள் கண்கள் கலங்கியிருக்கும். சற்று முன்னர் நடந்த சம்பவத்தின் சுவடே இல்லாமல் பரிமாறிக் கொண்டிருப்பார் சண்முகம் பிள்ளை.எய்யப்பட்ட அம்புக்கு ஏது உணர்ச்சிகள்….

Comments

  1. ஆண்கள்(வயதான) குளிப்பதும் ரசனைக்குரியதே .குளிப்பது உட்பட எதையும் ரசித்தே செய்து பழக்கப்பட்ட பரம்பரை.எய்யப்பட்ட அம்புக்கு ஏது உணர்ச்சிகள் .. கட்டுரையின் கடைசி வரியில் கவிதையின் தொடக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *