திருக்கடையூரில் பிச்சைக்கட்டளை எஸ்டேட் சார்பில் தேவாரப் பாடசாலை ஒன்றையும் தாத்தா நடத்தி வந்தார்கள்.திருமுறைகள், அபிராமி அந்தாதி ,திருப்புகழ் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் வகுப்புகள் தினமும் நடக்கும்.பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் தரப்படும்.
பயிற்சி பெற்றவர்கள்,கோயில்களில் ஓதுவார்களாகப் பணிக்குச் சேரலாம்.பல ஆண்டுகள் தங்கிப்பயில வேண்டிய குருகுலமாக இருந்தது அது. திருத்தணி சுவாமிநாதன் கூட்தொடக்கத்தில் அங்கே பயின்றவர்தான்.
பாடாசாலைக்கென்றே தேவார ஆசிரியர், புல்லாங்குழல் வித்வான் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
படிக்க வரும் பசங்களுக்கு உணவு, தங்குமிடம், ஆடைகள் ,அனைத்தும் இலவசம்.
ரத்தினம் பிள்ளை என்பவர் தேவார ஆசிரியர். “வாத்தியாரய்யா” என்பது பொதுப்பெயர்.அவருக்கு வீடு கொடுதது
வீட்டைத் தொட்டாற்போல பாடசாலையையும் அமைத்திருந்தார்கள். ரத்தி்னம் பிள்ளை சிதம்பரத்துக்காரர்.
உயரத்தைக் கூட்டிக் காட்டும் ஒற்றை நாடி தேகம். தான் மிகவும் கறார் பேர்வழி என்பதை,கிராப்பிலேயே காட்டுவார்.நரைத்த தலை நட்சத்திர உணவகங்களின் புல்வெளி போல் சீராக வெட்டப்பட்டிருக்கும்.குறைந்தபட்ச சிகையையும் என்ணெய் தடவி வாரியிருப்பார். நெற்றியில் திருநீறு.புருவங்கள் மத்தியில் குங்குமம்.கழுத்துக் கண்டத்தை ஒட்டி ஒற்றை ருத்திராட்சம்
சிவப்புக் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும். வேட்டியு்ம் மேல்துண்டும் அணிந்து சீராகக் கைகளை வீசி
அவர் நடந்து வரும் பாங்கே “நான் வாத்தியார்! நான் வாத்தியார்!” என்று பறைசாற்றுவது போலிருக்கும்.
தன் மனைவியோடும் மகளோடும் குடியிருந்தார் அவர்.மகள் கொஞ்சம் அசடு.
ஒரே நேரத்தில் பாட சாலையில் பத்துப் பதினைந்து பையன்கள் தங்கிப் படிப்பார்கள்.அத்தனை பேருக்கும் உணவு பாடசாலையிலேயே தயாராகும்.குழம்பு ரசம் அனைத்தையும் தாத்தா தினம் ருசி பார்ப்பார்.
எங்கள் பண்ணைவீட்டிலிருந்து இருபதடி தள்ளி்த்தான் பாடசாலை.ருசி பார்ப்பதென்றால் கிண்ணங்களில்
குழம்பு ரசத்தைப் பண்ணை வீட்டுக்குக் கொண்டு வந்தால் போதும்தானே? தாத்தா ஒத்துக் கொள்ள மாட்டார.
வாத்தி்யாரும் பிறரும் தங்களுக்கு் சமைத்துக் கொள்ளும் உணவை ருசி பார்க்க அனுப்பி விட்டு பைய்யன்களுக்கு மட்டமான உணவைப் போட்டு விட்டால்??
அதற்கொரு விதி செய்தார் அவர். சொக்கலிங்கமும் பெரிய ரெட்டியாரும் குழம்பு ரசம் தயாரானதும்
தவலையோடு பண்ணை வீட்டுக்குத தூக்கி வரு்வார்கள்.பெரிய ரெட்டியாருக்கு சற்றே கூன் விழுந்திருக்கும்.
தவலைக்குக் காதுகளாக பெரிய இரும்பு வளையங்கள் இருக்கும் .ஒரு காதைப் பற்றிக் கொண்டு சொக்கலிங்கம் முனனால் நடக்க,ஒரு கையால் தவலையின் காதைப் பிடித்துக் கொண்டு
பூமியைப் பார்த்த வாக்கில் இன்னொரு கையை சொக்கலிங்கத்தின் முழங்கைக்கு மேலே ஊன்றிக்கொண்டு
காலை அகட்டி அகட்டி வருவார் பெரிய ரெட்டியார்.
திருக்கடையூ்ரில் மாதவிக்குளம் போலவேஆனைகுளம் பூ்சை குளம் ஆகியவையும் உண்டு,பாடசாலைப் பசங்கள் அனைவரும் கண்டிப்பாக சனிக்கிழமையன்று அந்தக் குளங்களில் எண்ணெய்தேய்த்துக் குளிக்க வேண்டும்.சின்னப் பசங்களுக்கு எண்ணெய் தேய்க்கவும், குளத்தில் குளிக்கையில் கண்காணிக்கவும் பண்ணை ஆட்கள் போவார்கள்.அன்று பசங்களுக்கு மதிய வகுப்பு கிடையாது.சனிக்கிழமையன்று மதிய சாப்பாடுபருப்பு்த்துவையல்,மிளகுக்குழம்பு,பூண்டு ரசம்,சுட்ட அப்பளம்.அன்று மட்டும் மோர் கி்டையாது.
பல நாட்கள் எங்களுக்குப் பொழுது விடிவதே பாடசாலைப் பசங்களின் குரல் கேட்டுத்தான். பூஜையறைக்கு முன்னர் உள்ள பரந்த முற்றத்தில் கெட்டி ஜமுக்காளம் வி்ரித்து மலைப்ப்பாம்பு போல் நீ…..ண்ட
ஒரே தலையணையைப் போட்டு பேரப்பிள்ளைகள் அனைவரும் படுத்திருப்போம்.எங்களை எழுப்பாமல் தாத்தா பூஜை செய்தாலும் தீபாராதனையின் போது பாடசாலைப் பசங்கள் கூட்டாக தேவாரம் பாடுவார்கள்.அவர்களுக்கு
காலை வகுப்பு, மதிய வகுப்பு என்றிருந்தாலும், எங்களுடன் விளையாடுவதற்காக சுழற்சி முறையில”டெபுடேஷனில்” வருவதும் உண்டு.ராஜேந்திரன்,கட்டையன் என்னும் செல்வராஜ்,மாரிமுத்து,தாமோதரன் ஆகியோரைத்தான் இப்போதுஞாபகமி்ருக்கிறது .
இருப்பவர்களிலேயே குட்டையானவனும் குறும்பானவனும் செல்வராஜ்
எனும் கட்டையன்தான்.ஆனால் எங்கள் தாத்தாவிடம் ரொம்ப நல்ல பெயர் அவனுக்கு.தாத்த கோவைக்கு வரும்போது உடன் வரக்கூடிய எடுபிடிகளில் அவனும் மாரிமுத்துவும் இருப்பார்கள்.கட்டையன் “குறத்தி வாடி என் குப்பி” பாட்டை நன்றாகப் பாடுவான்.கோவைக்கு வந்திருந்தபோது கட்டையன் மாரிமுத்து ஆகியோரை எங்களுக்குத் துணைக்கு வைத்துவிட்டு
பெரியவர்கள் வெளியே போய் விட்டார்கள். எல்லோரும் தரையில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டி ருந்த போது அந்தப் பாட்டைப் பாடச் சொல்லி மாரிமுத்து நச்சரித்துக் கொண்டேயிருந்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கட்டையன் தன் கணீர்க்குரலில்”குறத்தி வாடி என் குப்பி”
என்று இழுத்துவிட்டு “ங்ஞா ங்ஞா ங்ஞா” என்று வருகிற இடத்தில் ஒவ்வொரு ங்ஞாவுக்கும் மாரிமுத்தை உட்கார்ந்த வாக்கிலேயே எட்டி எட்டி
உதைத்து உருட்டினான்.யாராவது “கட்டையா” என்ரு குரல் கொடுத்தால்
“ஏன்” என்று அவன் தரும் பதில்குரலின் அதிர்வு அடங்கும் முன்பே முன்னே வந்து நிற்பான்.
இந்தப் பசங்களுக்கும் வாத்தியார் குடும்பத்திற்கும் அவ்வளவாக ஆகாது.
குறிப்பாக வாத்தியார் மனைவிக்கு.அவர் சொல்கிற வேலைகளைப் பசங்கள் செய்வதில்லை என்பதில் கடுப்பாகி, “கட்டேல போக” என்று அந்த அம்மாள் திட்ட, பசங்கள் கோரஸாக “பல்லாக்கில் போக” என்று கத்திவிட்டு ஓடி வந்து விடுவார்கள்.
அவர்களுக்கு சொல்லித் தரவென்றோ அல்லது பக்க வாத்தியமாகவோ புல்லாங்குழல் தாத்தா என்றழைக்கப்பட்ட ராஜாமணி அய்யர் இருப்பார். அவரை ஒரு கைக்குட்டைக்குள் மடித்து விடலாம்.தீவிர எம்.ஜி.ஆர்.ரசிகர்.
மூத்து முதிர்ந்த குள்ள உருவம். உதடுகளும் கைகளும் நடுங்க ஈனஸ்வரத்தில் புல்லாங்குழல் வாசிப்பார்.அப்புறம் ஓர் ஓரமாய் கண்ணுக்குத் தெரியாவண்ணம் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.
கோடை விடுமுறையில் தாத்தா எங்களை 10-15 நாட்கள் சுற்றுலா அழைத்துச் செல்லும்போது பையன்கள் சுழற்சி முறையில் உடன்வருவார்கள். அவர்களும் சிறுவர்கள்தான் என்பது அப்போது சிறுவர்களாக இருந்த எங்களுக்கு உறைக்காது.
திருச்செந்தூரில் கோயில் அருகிருந்த கடைகளில் நங்கள் ஆரவாரமாகப் பொருட்களை அள்ளிக்கொண்டிருந்த போது ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த தாமோதரனிடம் எங்கள் பெரியம்மாவோ அம்மாவோ
யாரோ ஒருவர் “உனக்கு என்னடா வேணும் ” என்று வற்புறுத்திக் கேட்ட பிறகு, தலையைக் குனிந்து கொண்டே
நாணிக்கோணி “மோதிரம்” என்று கேட்டு ஒரு பிளாஸ்டிக் மோதிரத்தை
ஆசையாகக் கேட்டு வாங்கிக் கொண்டது ஞாபகமிருக்கிறது.
ஒருநாள் திருக்கடையூரில் எங்கள் வீடு அல்லோலகல்லோலப்பட்டது.
பாடசாலைப் பசங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களி ல்
பெரும்பாலோர் அழுது கொண்டிருந்தனர். ரத்தினம் பிள்ளை குடும்பத்தினர் பற்றி,ஆனைகுளத்தின் படித்துறைகளில் பையன்கள் கேலிச்சித்திரம் வரைந்திருந்தனர்.
ரத்தினம் பிள்ளை அன்று ஆடிய ருத்திரதாண்டவம்,பசங்களுக்கு விழுந்த
அடி,”அய்யய்யோ கும்பிடறேஞ் சாமி”என்ற தாமோதரனின் அலறல்,
இவையெல்லாம் இன்னும் காதுகளில்,ஒலிக்கிறது.
வாத்தியார் சொல்லித் தந்த தேவாரப் படல்களைப் பசங்கள்பாடக் கேட்டதுண்டு. , அவர் குடும்பத்தைப்பார்த்து
பசங்கள் தாமாகவே வரையக் கற்றுக்கொண்ட கேலிச்சித்திரங்களை அப்போது பார்க்க முடியவில்லை.ஆனைகுளமும் இப்போது வறண்டிருக்கும்.
அடுத்த முறை திருக்கடையூர் போகும் போது அதன் சுவர்களையாவது பார்த்து விட்டு வர வேண்டும்.