கோவை மாநகருக்குள்ளேயே அதன் புராதன அமைப்பையும் அழகையும் தொன்மத்தையும் தரிசிக்க விரும்புகிறவர்கள் பாப்பநாயக்கன்பாளையத்தைப் பார்க்க வேண்டும்.பெருமாள்கோவில்,பிரகாரவீதிகள்,பிளேக் நோய் பரவிய காலத்தில் மக்களைக்காத்த பிளேக் மாரியம்மன் கோவில்,சின்னதாய் ஒரு திண்ணைமடம் என்று மனசுக்கு இதமாக இருக்கும்.அங்கேதான் நான் படித்த மணிமேல்நிலைப்பள்ளியும் இருக்கிறது.
கிழகு மேற்கு வடக்கு தெற்கு என்று நான்காகப் பிரியும் பெரிய சாலைகளில்,தென்புறச்சாலை தொடங்குமிடத்தில் இரண்டு மைதானங்களுடன் கம்பீரமாய் பரந்து விரிந்திருக்கும் எங்கள் பள்ளி.

அதற்கு எதிரே வடக்குப் பக்கமாய் உள்ள வீதியில் நடந்தால் காந்தி சங்கம் ஒன்று.அடுத்து
வலது பக்கம் சுதா ஸ்டோர்ஸ்.இடது பக்கம் பிந்து ஸ்டோர்ஸ்.இரண்டிலும் மாணவ மாணவிகள்
மொய்த்துக் கிடப்போம்.பிந்து ஸ்டோர்ஸில் கணேஷ் என்றோர் அண்ணன்.இலக்கிய ஈடுபாடு உண்டு.நான் ஏதாவது கவிதைகள் எழுதிக் கொண்டுபோய் காட்டினால்,”இது போன வாரம்தான்
குமுதத்திலே வந்தது.காது குத்தாதே’என்பார் இரக்கமேயில்லாமல்!!
அதே வீதியில் இன்னும் நேராக நடந்தால் நான்கு குறுகிய சாலைகள் பிரியும்.மேற்கே திரும்பினால் செந்தில் உணவு விடுதி.பாக்யராஜை வைத்து திரைப்படங்கள் தயாரித்த நஞ்சப்பன்
சகோதரர்கள் நடத்தி வந்த உணவகம்.சைவக்குடும்பத்தில் பிறந்த நான் அநேக வகை அசைவ உணவுகளுக்கு நன்கு பழகியது அங்கேதான்.மேற்கே திரும்பாமல் கொஞ்சதூரம் நடந்து இடதுபுறம் திரும்பினால் ரொட்டிக்கடை வீதி தொடங்கும். அந்த வீதியின் தொடக்கத்திலேயே இருந்ததுதான் ரவியின் ஓவியக்கூடம்.அந்த ஓவியக்கூடத்திலேயே ரவி,மனோகரன் ஆகிய இரண்டுபேர் சேர்ந்து தொடங்கியிருந்ததுதான் கவிஞர் கண்ணதாசன் நினைவு மன்றம்.

ஒடிசலாய்,உயரமாய்,சிகப்பாய் இருப்பார் ரவி. தாய்மொழி மலையாளம்.கண்ணதாசன் பாடல்களில் தீராத காதலுடையவர்.பத்துக்குப் பத்து அலவில்தான் அவருடைய ஓவியக்கூடம்.ரவியின் கைவண்ணத்தில் கண்ணதாசனின் கம்பீரமான ஒவியம் ஒன்று வீதிநோக்கி வைக்கப்பட்டிருந்தது.எங்கள் பள்ளிச் சுவரில் கண்ணதாசன் படத்தை
வரைந்திருந்தவரும் அவரே.மனோகரன்,ஆலைத் தொழிலாளி.அவர்களிடம் வலிய சென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.இந்த நேரத்திற்குள் கண்ணதாசன் கவிதைகள் பலவும் எனக்கு மனப்பாடம் ஆகியிருந்தன.

மன்றத்தில் சேர வந்திருக்கும் பள்ளிச்சிறுவன் என்று சாவகசமாக பேசத்தொடங்கினர் இருவரும்.”கண்ணதாசன் பாட்டெல்லாம் கேட்டிருக்கீங்களா தம்பி?”பிரியமாகக் கேட்டார் மனோகரன்.கண்ணதாசன் பாடல்களையும் கவிதைகளையும் நான் சரளமாக சொல்லத் தொடங்கியதும் இருவருக்கும் சொல்ல முடியாத சந்தோஷம்.டீ வாங்கிக் கொடுத்தார்கள்.நிறைய பேசவிட்டுக் கேட்டார்கள்.அன்றிலிருந்து அன்றாடம் மாலைநேரம் மன்றம்நோக்கித் தானாக நகரத் தொடங்கின கால்கள்.

ரவி,மனோகரன்,தீபானந்தா என்று புனைபெயர் வைத்திருந்த போலீஸ்காரர் ஒருவர்,சத்யநாராயணன் என்று மன்றம் விரிவடைந்து கொண்டே போனது.
சாயங்காலமானால் எல்லோரும் கூடிவிடுவோம்.பேச்சும் கும்மாளமுமாய் அந்த வீதியே ரெண்டுபடும்.ரவி பெரும்பாலும் புன்னகை பொங்க அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்.

அதற்கிடையில் என் வகுப்புத்தோழன் விஜயானந்த் .பள்ளித் தோழன் அசோக்குமார் ஆகியோரை உறுப்பினர்களாகச் சேர்த்திருந்தேன்.மன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை,பள்ளி
மாணவர்களாகிய நாங்கள் மூவர்தான் கொஞ்சம் வசதியான பின்புலத்தைச் சேர்ந்தவர்கள்.ஆனாலும்
எங்களை அந்த ரீதியில் பயன்படுத்த அந்த நண்பர்கள் சிறிதும் முயலவில்லை என்பதை இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

எங்கள் வீட்டுக்கு எங்கள் பூர்வீக ஊரிலிருந்து ஜோதிடர் ஒருவர் வந்திருந்தார்.அகோரம் என்று பெயர். ஒரு குச்சியை வைத்துக் கொண்டு மணிபார்க்கும் கணக்கை கற்றுக் கொடுத்திருந்தார்.ஒரு குச்சியை எடுத்துக்கொள்ள வேண்டும்.16 விரற்கடைகள் அளந்து மீதமுள்ள பகுதியை உடைத்து வீசிவிட வேண்டும்.பிறகு தரையில் ஊன்றிப்பார்த்தால் அதன் நிழல் விழும்.
நிழலின் அளவு போக குச்சியின் உயரத்தைக் கணக்கிட வேண்டும்.உச்சிப் பொழுதுக்குப் பிறகு குச்சியின் உயரத்தை விட நிழலின் அளவைக் கணக்கிட வேண்டும் என்று குழப்பமாக ஏதோ சொன்னார்.
அதற்கு அவர் சொன்ன இரண்டுவரிப்பாடலை மறுநாளே சபையில் அரங்கேற்றினேன்.

“காட்டுத் துரும்பெடுத்துக் கண்டம் பதினாறாக்கி
நீட்டிக் கிடந்தது போக நின்றதொரு நாழிகை”.

இதுவே உச்சிப்பொழுதுக்குப் பிறகு ..

“நீட்டி நின்றதுபோகக் கிடந்ததொரு நாழிகை”.

இந்தப் பாட்டைக்கேட்டதும் மனோகரனுக்கு பயங்கர உற்சாகம்.’இனிமே வாட்சை அடகு வச்சா
மீக்கற வேலையில்லை! ஒரு குச்சி இருந்தா போதும்’ என்றபடியே ஒரு குச்சியை உடைத்து
பரிசோதனைகள் செய்து நிழலை அளந்து,குச்சியை அளந்து பதினைந்து நிமிடங்கலுக்குப் பிறகு,”ரவி!! பணி பதினொண்ணு’ என்று அறிவித்தார்.”ஆமாம்!நீ கண்டுபுடிச்சு சொல்றதுக்குள்ளே
மணி கேட்டவன் போத்தனூரு போயிடுவான்’என்று கிண்டலடித்தார் ரவி.

கண்ணதாசன் மன்றம் வைத்தாயிற்று.கண்ணதாசனுக்கு விழா எடுக்க வேண்டாமா? கண்ணதாசன் பிறந்தநாளாகிய ஜூன் 24ல் விழா நடத்த முடிவாயிற்று.கவியரங்கம் நடத்தும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.கோவையில் கல்லூரி மாணவர்களில் இலக்கிய ஆர்வமுள்ளவர்களை இணைத்து கலைத்தேர் இலக்கிய இயக்கம் கண்ட அரசு.பரமேசுவரன்,தென்றல் ராஜேந்திரன் ஆகியோர் எனக்கு நண்பர்களாகியிருந்தார்கள்.அப்போது அவர்கள் டி.ராஜேந்தர் தலைமையில் கவியராங்கம் நடத்த வேண்டும் என்ற உத்தேசத்தோடு,கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் டி,ராஜேந்தர் நம்பர் கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். கோவையில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவப் பேச்சாளர்களும் கலைத்தேர் இலக்கிய இயக்கத்தில் இருந்தனர்.
அந்தக் குழுவிலேயே நான் ஒருவன்தான் பள்ளிமாணவன். தொடர்பு வசதிகள் இந்த அளவு இல்லாத காலத்தில் பரமேசுவரனும் ராஜேந்திரனும் அலைந்து திரிந்து உருவாக்கிய அமைப்பு அது.

அவர்கள் துணையுடன் கவியரங்கம் அமைப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. போதாக்குறைக்கு
கலைத்தேர் நடத்திய கவியரங்கம் ஒன்று ஏற்கெனவே நடந்திருந்தது.மொத்த செலவி 25 ரூபாய்.அரங்க வாடகை 10 ரூபாய்.அருட்தந்தை ஜான் பீட்டர் எங்கள் மேல் இரக்கப்பட்டு திவ்யோதயா அரங்கில் ஒர் அறையை அளித்திருந்தார்.அழைப்பிதழ் அச்சாக்க செலவு 15 ரூபாய்.பரமேசுவரன்,ராஜேந்திரன்,நான் ஆகியோர் ஆளுக்கு 5 ரூபாய் அளித்திருந்தோம்.
மீதம் 10 ரூபாயைத் தந்தவர் கவியரங்கிற்குத் தலைமை தாங்கிய வேளாண் பலலைக்கழக
மாணவர். 10 ரூபாய் தந்திருக்காவிட்டாலும் அவர் தலைமையில்தான் கவியரங்கம் நடந்திருக்கும்.
மாணவர்கள் மத்தியில் அந்த மாணவர் அன்றே பிரபலம்.இன்று அவர்பெயர் வெ.இறையன்பு.ஐ.ஏ.எஸ்

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *