கனவுகளுடன் தொடங்கப்படும் அமைப்புகள் காற்றில் கலைவதும்,காற்றில் கட்டப்படும் சீட்டுக்கட்டு மாளிகைகள் காலூன்றி எழுவதும்,புதிதல்ல.பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை
தொடங்கப்பட்ட நாட்களில் எனக்கு அதன்மேல் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை.
முதல்காரணம்,அதற்குத் தலைவர்,உள்ளூர் அரசியல் பிரமுகர்.இரண்டாவது காரணம்,அந்த அமைப்பில் பெரும்பங்கு வகித்த ஆலைத்தொழிலாளர்கள்.

அரசியல் பிரமுகர்கள் ஏற்கெனவே தங்களை ஓர் அரசியல் அமைப்பில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள்.
ஆலைத் தொழிலாளர்கள் ஏதேனுமோர் அரசியல் சித்தாந்தத்தின் ஆளுகைக்குள் இருப்பார்கள். எனவே
கலை இலக்கிய அமைப்பொன்றைத் தொடங்கிவிட்டார்களே தவிர தொடர்வார்களா என்கிற கேள்வி எழுந்தது உண்மை.ஆனால் மிக வலிமையான அமைப்பாக அந்தப்பேரவை உருவாக அவர்களுக்குக்
கண்ணதாசன் மீதிருந்த களங்கமில்லாத பக்தியே காரணம்.

அமைப்பின் தலைவர்,சிங்கை முத்து.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்.அமைப்பின் செயலாளர்,காளிதாஸ்.ஆலைத் தொழிலாளி.சிங்கை முத்துவிற்கு ஹோப்காலேஜ் பகுதியில் ஒரு திரையரங்கம்,ஒரு திருமணமண்டபம்,ஒரு பேக்கரி ஆகியவை சொந்தம்.அரிமா இயக்கத்திலும்,
அவர் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.

கண்ணதாசன் மீது வெறிகொண்ட பக்தர் காளிதாஸ்.ஒர் இயக்கத்தை உருவாக்கி வழிநடத்தும் பண்புகள்
அவரிடம் இயல்பாகவே இருந்தன.பேச்சாற்றல் போன்ற அம்சங்கள் அவரிடம் பெரிதாக இல்லை.ஆனால்
மிகக் குறுகிய காலத்தில் கண்ணதாசன் பேரவையை வலிமையாக வளர்த்தெடுத்தார் அவர்.சிவந்த உருவம்.சிரித்த முகம்.பூனைக்கண்கள்.அப்போது பேரவை,பைந்தமிழ் அச்சகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.பைந்தமிழ் அச்சக உரிமையாளர் திரு. கந்தசாமி.அவருடைய புதல்வர்கள் கணேசன்,ஆனந்தன் இருவருமே பேரவையின் தீவிர உறுப்பினர்கள்.குணசேகரன்,கனராஜ்,ராஜேந்திரன்,பாலச்சந்திரன்,வேலுமணி,தேவ.சீனிவாசன் என்று பலரும் அந்த அமைப்பில் இருந்தார்கள்.

கோவையின் பிரதான சாலைகளாகிய அவினாசி ரோட்டையும் திருச்சி ரோட்டையும் இணைக்கும் முக்கியமான சாலை காமராஜ் ரோடு.காமராஜ் ரோட்டின் மீதே மணீஸ் தியேட்டரும்,சற்றே உள்ளடங்கி
மணிமகால் என்கிற திருமண மண்டபமும் இருந்தன. சொந்தமாக ஒரு மண்டபம் இருப்பது ஓர் அமைப்பிற்கு எவ்வளவு பெரிய பலம் என்று அப்போதுதான் தெரிந்தது.

மண்டபம் கொடுக்க சிங்கை முத்து,அழைப்பிதழ் அடிக்க பைந்தமிழ் அச்சகம்,விழா ஏற்பாடுகளை
துல்லியமாகச் செய்ய காளிதாஸ்,தீவிரமாக உழைக்க உறுப்பினர்கள்,தலைப்புகள் தேர்ந்தெடுக்கவும்,பேச்சாளர்களைத் தெரிவு செய்யவும் தொடர்பு கொள்ளவும் நான் .போதாதா!

கண்ணதாசனுக்குக் கோலாகலமான விழாக்களை எடுத்துத் தள்ளியது பேரவை.ஆலைத் தொழிலாளர்களின் வேலைப்பளு,சம்பந்தப்பட்ட மற்றவர்களின் வெவ்வேறு பணிகள் ஆகியவற்றுக்கிடையே,இது வெறும் ஆண்டுவிழா அமைப்பாக அருகிப் போயிருந்தாலும் யாரும்
கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.ஆனால் முதலில் வாரம் ஒருமுறை என்று தொடங்கி,பிறகு பேரவை உறுப்பினர்கள் தினம்தினம் சந்தித்துக் கொள்ளும் அமைப்பாக உருவானது கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை.

சுகிசிவம் அவர்கள் தலைமையில் பட்டிமண்டபம்,சுழலும் சொற்போர் என்று விதம்விதமான நிகழ்ச்சிகள் இங்கே நடந்தன. மேடையில் பேசியவர்களைவிட பேரவை உறுப்பினர்கள் கண்ணதாசனை மிக நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள்.

கண்ணதாசன் பேரவையில் இருந்தவர்களில் ஒருவரான கனகராஜ்,வித்தியாசமான மனிதர்.
கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகளைச் சொல்லி புதிர்போட்டு புதிய விடைகளைக் கண்டுபிடிப்பார்.

“பட்டகடன் தீர்ப்பேனா?பாதகரைப் பார்ப்பேனா?பாவலர்க்கு மேடையிலே பரிந்துரைக்கப் போவேனா?
கொட்டுகிற தேளையெல்லாம் கும்பிட்டு நிற்பேனா?கொல்லும் கவலைகளைக் குடித்து மறப்பேனா?”
என்பது கவிஞரின் கவிதை வரிகள்.

தயங்கித் தயங்கித்தான் ஆரம்பிப்பார் கனகராஜ்.”சார்! இந்தக் கவிதையிலே கவிஞர் ” கொட்டுகிற தேளையெல்லாம் கும்பிட்டு நிற்பேனா?” அப்படீன்னு ஏன் பாடினார் தெரியுங்களா?”என்று ஆரம்பிப்பார்.

“தெரியலீங்களே கனகராஜ்”

‘அதாவதுங்கோ..இந்தத் தேளு பார்த்தீங்கன்னா,ஒருத்தர கொட்டோணும்னு வைங்க..கொடுக்கைத் தூக்குமுங்க.அப்போ அதோட காலு ரெண்டு பார்த்தீங்கன்னா,கும்புடற மாதிரி குவிஞ்சிருக்குமுங்கோ.
நம்ம கவிஞரு அப்பிராணியாச்சுங்களா….அது கும்புடுதாக்கும்னு இவுருங் கும்புட அது போட்டுத் தள்ளீருமுங்கோ.நம்ம கவிஞரு கூடப் பழகினவிய பலபேரும் அப்படி தேளாத்தான் இருந்திருக்காங்கோ..”

கவிஞரின் கவிதைகளுக்கு கனகராஜ் போலப்பல பாமரப் பரிமேலழகர்கள் பேரவையில் இருந்தார்கள்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டுக்கு பலியாகியிருந்த சமயம்.

“நம்ம கவிஞரு சொன்ன மாதிரியே நடந்து போச்சுங்கோ”என்றார் கனகராஜ்.
“என்ன கனகராஜ்”? என்றதும்,நேரு மறைந்த போது கண்ணதாசன் எழுதிய ஏராளமான கவிதைகளிலிருந்து
மிகச்சரியாக மூன்று வரிகளை எடுத்துக் காட்டினார் .

‘அம்மம்மா என்ன சொல்வேன் அண்ணலைத் தீயிலிட்டார்!
அன்னையைத் தீயிலிட்டார்! பிள்ளையைத் தீயிலிட்டார்!”

“பாருங்கோ! அண்ணல்னு காந்தியைத்தானேங்க சொல்வோம்.காந்தியவும் கொன்னாங்கோ.’அன்னையைத் தீயிலிட்டார்! பிள்ளையைத் தீயிலிட்டார்னு பாடுனாரு.இந்திரா காந்தியயுமு
இப்போ ராஜீவையுமு கொன்னுட்டாங்கோ” என்று தயங்கித் தயங்கிச் சொல்லி விட்டு மெல்ல நகர்ந்து விட்டார் கனகராஜ்.
சுகிசிவம் அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் கண்ணதாசனை,”ஆறடி வளர்ந்த அப்பாவித்தனம்”என்று வர்ணித்திருந்தார்அவர்.

கண்ணதாசன் பேரவை உறுப்பினர்கள் பலருடைய வீடுகளில் கவிஞர் படம் மாட்டப்பட்டிருக்கும்.உறுப்பினர்களின் சகோதரிகளுக்கோ,உறுப்பினர்களுக்கோ நடைபெற்ற
திருமண அழைப்பிதழ்களில் கவிஞரின் படமும்,அவருடைய மங்கல வரிகளும் கண்டிப்பாக
இடம்பெற்றிருக்கும்.

இன்று நடுத்தர வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள் பலர்.அவர்களில் பெரும்பாலோர் இன்னும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.கனகராஜைத் தவிர..

தீவிர கடன்சுமை காரணமாய் சில ஆண்டுகளுக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டார் கனகராஜ்.

(தொடரும்)

Comments

  1. தேளின் உதாரணத்தை மிகச்சரியாக கனகராஜ் கண்டுகொண்டார் , கவிஞரின் மீது கொண்ட பக்தியால் என நினைக்கிறேன் .

    இந்த தொடரை ஆர்வமாக தொடர்ந்து கொண்டுள்ளேன் ,

    http://www.jeyamohan.in/?p=6480

    //ஆனால் அதிதீவிரமான பற்றுடன் ஒரு கலைஞனை அணுகுபவர்கள் நிதானமாக அணுகுபவர்களைவிட ஆழமான அறிதல்களை அடைகிறார்கள் என்ற எண்ணம் சமீப காலமாக ஏற்பட்டு வருகிறது. எனக்கு தல்ஸ்தோய் அளவுக்கு எவர் மேலும் பற்று இல்லை. அவரை அறிந்த அளவுக்கு எவரையும் அறிந்ததில்லை.

    ஏனென்றால் கலை அறிவார்ந்தது அல்ல, ஆழ்மனம் சார்ந்தது என்பதே. பற்றின்றி ‘நடுநிலையுடன்’ கலைப்படைப்புக்குள் செல்பவன், கலைஞனை அணுகுபவன் தன் தர்க்கபுத்தியை அக்கலைஞனைநோக்கி திறந்து வைக்கிறான். பெரும்பற்றுடன் செல்பவன் தன் ஆழ்மனதை திறந்து வைக்கிறான். அக்கலைஞனின் ஒவ்வொரு மன அசைவும் தெரியும் இடத்துக்குச் சென்றுவிடுகிறான். அது ஒரு சிறந்த வழிதான் என்று நினைத்துக்கொள்கிறேன்

    இங்கே குரு என்ற நிலையில் அந்தக் கலைஞன் வந்து விடுகிறான். குருவை களங்கமில்லா பெரும் பக்தியுடன் வழிபட்டாலொழிய கலை கைவராது என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு. காரணம் அந்தப் பெரும் ஈடுபாடு காரணமாகவே நாம் குருவை அதிகவனத்துடன் ஒவ்வொரு கணமும் கூர்ந்து கவனிக்க முடியும்//

  2. சில சமயங்களில் கலைஞனுக்கு ஏற்படாத திறப்புகள் ஒரு நல்ல வாசகனுக்கு ஏற்பட்டு விடும். கலைஞனுக்கும் வாசகனுக்குமான உறவு குரு சிஷ்ய உறவு என ஜெயமோகன் சொல்வது சரியே. தருணங்களில் குருவுக்கு வாய்க்காத சாதனை சிஷ்யர்களுக்கு வாய்க்கும். குருவின் பெயரை சொல்லி தண்ணீர் மேல் நடந்த சிஷ்யன் கதை நினைவுக்கு வருகிறது. குருவுக்கு ஆயிரம் சந்தேகங்கள். சரியாக சொல்லிவிடவேண்டும் என்ற பதற்றம் வேறு. மாணவனை விடவும் நிறைய தெரியும் என்கிற அகங்காரம் ஒருபுறம்.சிஷ்யனோ குருவை நம்புகிறான். அவனை சிஷ்யன் என்பதை விட பக்தன் என்பது சரியாக இருக்கும். விஷ்யங்களின் கண,பரிமாணங்கள் அவனுக்கு பொருட்டே அல்ல. குருவின் வாயிலிருந்து வருவதாலேயே அது முக்கியம் எனக் கருதுபவன். இந்த பக்தி அவனை குருவால் செல்ல முடியாத இடங்களுக்கு கொண்டு செல்கிறது. நல்ல பதிவு. தொடருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *