கண்ணதாசனின் கவித்துவம் கனல்வதற்கு முக்கியக் காரணம், வார்த்தைகள் வந்து விழும் அனாயசம். இந்த அனாயசத்தையும் எளிமையையும் விளக்க முடியாமல் இன்று பலரும் திணறுகிறோம். கண்ணதாசன் பாடல்களில் எளிமையாக வந்து விழும் வார்த்தைகளுக்குள் நூல்பிடித்துக் கொண்டே போனால் அது நம்மை வைரச்சுரங்கங்களிலே கொண்டுபோய் சேர்த்து விடுகிறது.

நீண்ட நாட்களுக்குப்பின் “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா” பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பொதுவாக காதல் பாடல்களில் வரும் வர்ணனைகள் பெண்ணை ஆதர்சப் பெண்மையாகவும், தாய்மையின் தழலாகவும் சித்தரிப்பது ரொம்ப அபூர்வம். சீதைக்கு, வனவாசத்தில் தன் வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள நல்ல பெண்துணை கிடையாது. அசோகவனத்தில் இருந்த பத்துமாதங்களில் கொஞ்சம் ஆதுரமாய்ப்பேச திரிசடை கிடைத்தாள். அவளும் அருகே அரக்கியர் இல்லாத போதுதான் ஆறுதலாய்ப்பேச முடியும்.

நாட்டுக்கு வந்த பிறகு காட்டுக்கு மீண்டும் போய் பிள்ளைகளைப் பெறுகிறாளே அப்போதாவது பெண்குழந்தை பிறந்ததா?ஆண்கள். அதுவும் இரட்டையர்கள். சீதையால் மாமியார்களிடம் பேச முடியாது. சகோதரிகளாகவே இருந்தாலும் அயோத்தி மருமகள்களாகிய மற்றமூவருக்கும் எத்தனையோ பிரச்சினைகள். சீதைக்கொரு மகள் இருந்திருந்தால் மனம்விட்டுப் பேசி அழுதிருப்பாள். தன்னுடைய நாயகி சீதைக்கு மகளாகப் பிறந்திருந்தால் அவள் பூமியைப் பிளந்து கொண்டு போயிருக்க மாட்டாள் என்று கவிஞருக்குத் தோன்றியிருக்க வேண்டும். எனவே, “கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா” என்கிறார்.

நாயகியிடம் தாய்மைப்பண்பு இருக்கிறதென்றால், அவள் சீதைக்குத் தாயாகத்தானே ஆகியிருக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். சீதை,  மண்மகளுக்கு மகள். அவளுக்குத் தேவைப்பட்ட உறவெல்லாம் தாய்மையின் கனிவுமிக்க ஒரு மகள்தான் கவிஞர் பாடும் நாயகியின் தாய்மைப்பண்பு அடுத்த வரியிலேயே வெளிப்படுகிறது. விசுவாமித்திரருக்கும் மேனகைக்கும் மகளாகப் பிறந்தவள் சகுந்தலை. பெற்றோர் இருவரும் பிள்ளையைக் காட்டில் விட்டுப் போக, மயில்கள் தங்கள் தோகைகளால் மூடி குழந்தையைப் பாதுகாக்க, கண்வ முனிவர் கண்டெடுத்து வளர்த்ததாய் கதை போகிறது. தாயின் அரவணைப்பில்லாமல் வளர்ந்தவள் சகுந்தலை.

அவளுக்கு தாய்மையின் பரிவை உணர்த்தத் தன் நாயகியால்தான் முடியும் என்று கவிஞர் கருதுகிறார்.”காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா” என்கிறார்.சீதைக்கு கனிவு மிக்க மகளாகவும்,சகுந்தலைக்கு பரிவுமிக்க தாயாகவும் ஆகும் தகுதியோடு பிரபஞ்சத்தின் பேரன்பையெல்லாம் இழைத்துச் செய்த வடிவாக எழுந்து நிற்கிறது கவிஞர் ஆராதிக்கும் பெண்மை.

இவ்வளவு கனிவுமிக்க பெண் பேசுகிற சொல் எப்படியிருக்கும்? திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி. இதை உள்வாங்கி வைத்துக் கொண்டு உரிய இடத்தில் பயன்படுத்துகிறார் கவிஞர்.

“கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக்கனி ஆக்குமுந்தன் ஒருவாசகம்”.

திருவாசகத்தின் இயல்பு கல்மனதைப்பிசைந்து கனியாக்குவது. இது, தன் நாயகியின் ஒரு வாசகத்திற்கே உண்டு என்றால் அவள் அன்பின் பிழம்பாய் அல்லவா இருக்க வேண்டும் . போதாக்குறைக்கு பேரழகியாகவும் இருக்கிறாள். அமராவதியின் இடத்தை ஈடு செய்யக்கூடியவளாக இருக்கிறாள். கலைசிந்தும் கண்கள், உண்டென்று சொல்லும் வண்ணக் கண்கள். இல்லையென்று சொல்லும் இடை. பிறருக்கே வாழ்கிற இந்தப்பெண்ணுக்கு கண்ணுறக்கம் இரண்டு முறை. பிறப்பில் ஒருதூக்கம். இறப்பில் மறுதூக்கம்.அவளுடைய இயல்பு, பாலிலும் வெண்மை. பனியிலும் மென்மை. கண்ணதாசன் வெவ்வேறு பாடல்களில் குழைத்து வைத்திருக்கும் வண்ணங்களைத் தொட்டுத் தொட்டுத் தீட்டினால் ஒப்பற்ற பெண்மையின் உயிர்ச்சித்திரம் அல்லவா உருவாகிறது!!

பிரபஞ்சத் தாய்மை போன்ற பெரிய வார்த்தைகளைக் கூட அறியாத எளிய அன்பில் கண்ணதாசனின் பெண்கள் உருவெடுக்கின்றனர். கம்பனில், இராமன் திருமணத்தின்போது, வயது மூத்த பெண்கள் எல்லாம் கோசலையின் மனநிலையில் இருந்து, இராமனைத் தங்கள் மகனாகவே வரித்து மணக்கோலத்தை ரசித்திருந்தார்களாம். “மாதர்கள் வயதின் மிக்கார் கோசலை மனதை ஒத்தார்’என்றெழுதினான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

இதை மிக நுட்பமாக உள்வாங்கிக் கொண்ட கவிஞர், “பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி’பாடலில், “மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க’ என்று பாடுவார். பெண்ணுக்கான முகங்கள் ஏராளம். கடவுளைப்போல.கடவுளுடைய சிறப்பே எல்லா முகங்களும் அழகாயிருப்பதுதான். புகுந்த வீட்டில் காட்டுகிற முகம் ஓரழகென்றால் பெண் பிறந்த வீட்டில் காட்டுகிற பாசம் பேரழகு.ஆணுக்கு அத்தகைய  பெருந்தன்மை கிடையாது. பெண்ணெடுத்த வீட்டில் இறுதி வரை தலைமை விருந்தினனாய் இருக்கவே ஆண் ஆசைப்படுகிறான்.
கணவன் அழகற்றவனாய்,ஊனமுற்றவனாய் இருந்தாலும் அவனை உச்சிமேல்  வைத்துக் கொண்டாடுகிறாள் பெண். ‘கைகால்கள் விளங்காத கணவன் குடிசையிலும் காதல்மனம் விளங்க வந்தாள் அன்னையடா! காதலுக்கும் பெருமையில்லை கண்களுக்கும் இனிமையில்லை கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா” என்று கணவன்தான் தாழ்வு  மனப்பான்மை தொனிக்க  பிள்ளைக்குத் தாலாட்டுப் பாடுகிறான். கண்ணதாசன்  காட்டும் காதல் தலைவி கணவனின் குறையை ஒப்புக்  கொள்வதேயில்லை.
“தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ -உங்கள்
 அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ'” என்று அரவணைத்துக் கொள்கிறாள்.

கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா-அது
கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா” என்று ஆறுதல் சொல்கிறாள்.”

அதே நேரம், மணவாழ்வின் பூரிப்பில் மனம் மயங்கிக் கிடந்தாலும் பிறந்த வீட்டின் வாசலிலும் பருவமழையாய்ப் பொழிய அவள் தவறுவதில்லை.

“பூமணம் கொண்டவள் பால்மணம் கொண்டாள்

  பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள்ரெண்டில் மாமன் தெய்வம் கண்டான்”

என்று சகோதரனைக் குளிர்விக்கும் தங்கையாக மிளிர்கிறாள்.

“காலமகள் கண்திறப்பாள் சின்னையா- நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா’ என்று தலையை வருடித் தூங்க வைக்கும் தமக்கையாகப் பொலிகிறாள்.
“அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்”  என்று தந்தை மெச்சும் மகளாக மலர்கிறாள்.

“நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின்மேலே”என்று பெருமையடித்துக் கொள்ளும் கணவனிடம், “அந்தக் கருணைக்குநான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே” என்று பரிசளிக்கும் அரசியாகவும்  பரிவுமிக்க  மனைவியாகவும் ஒளிர்கிறாள்.

“வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது-அதில்தான்சரித்திரம் நிகழ்கின்றது!

யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு அதுவரை பொறுப்பாயடா-மகனே -என் அருகினில் இருப்பாயடா”

என்று தத்துவம் கூரும் தெய்வீகத் தாயாய் தோற்றமளிக்கிறாள்
“ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ!
 மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ'”

என்று முருகனைக்கூட   உரிமையுடன் கடிந்து கொள்ளும் தமிழ்ப்பாட்டியாய் தடியூன்றி  வருகிறாள். தாய் என்ற நிலையில் மட்டுமின்றி எல்லா நிலைகலிலும் தாய்மையின் தண்ணிழல் பரப்பி நிற்கிறார்கள் கண்ணதாசனின் கவிதை நாயகிகள்!!

(தொடரும்…)

Comments

  1. "கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
    கல்லைக்கனி ஆக்குமுந்தன் ஒருவாசகம்".

    எத்தனயோ முறை இந்த வரியை சுலபமாக கடந்து சென்றிருக்கிறேன்.
    கண்ணதாசனின் எளிமையான வீச்சில் பந்து எல்லை கோட்டை கடந்து செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *