“அவள் ஒரு தொடர்கதை”திரைப்படத்தின் கதாசிரியர் திரு.எம்.எஸ்.பெருமாள். அமரர் சுகி.சுப்பிரமணியன் அவர்களின் புதல்வர்.திரு.சுகி.சிவம் அவர்களின் மூத்த சகோதரர். சென்னை தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், வெவ்வேறு மாநிலங்களில் நிலைய இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது “தெய்வம் தந்த வீடு” பாடல் பற்றி அபூர்வமான தகவல் ஒன்றைச் சொன்னார். தன் சம்பாத்தியத்தால் குடும்பத்தைத் தாங்குகிற இளம்பெண், ஊதாரியாகவும், ஊர்சுற்றியாகவும் குடிகாரனாகவும் இருக்கும் அண்ணனை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறாள்.அண்ணன் கதாபாத்திரம் ஆர்ப்பாட்டமாக வெளியேறுவதுதான் கதை. அங்கே ஒரு பாடல்வைக்க வேண்டுமென இயக்குநர் கே.பாலசந்தர் சொன்னதும் கடுமையாக எதிர்த்தவர் எம்.எஸ்.பெருமாள். அந்த இடத்திற்கும் சரி, கதாபாத்திரத்திற்கும் சரி, பாடல்காட்சி பொருந்தாது என்பது அவருடைய கட்சி. வாதங்களைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு பாலசந்தர் சொன்னாராம், “பெருமாள்! பாட்டெழுதப் போறது நீங்களோ நானோ இல்லை. கவிஞர் எழுதப் போறார்.சரியா வந்தா வைச்சுக்குவோம் .இல்லேன்னா விட்டுடுவோம்”

தயாரிப்பாளர் இராம.அரங்கண்ணல் அலுவலகத்தில் பாடல் கம்போஸிங் தொடங்கியது. நேரம் போய்க் கொண்டிருந்ததே தவிர அன்று கவிஞர் விளையாட்டுப் பேச்சிலும்  வேடிக்கையிலும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்குமேல் பொறுமையிழந்த எம்.எஸ்.வி. கவிஞருடன் ஊடல் கொண்டு கிளம்பிப் போக “போறான் போ” என்று தன் வேடிக்கைகளைத் தொடர்ந்தார் கவிஞர். அவரது மற்றொரு நெருங்கிய நண்பரான இராம.அரங்கண்ணல்,”கண்ணா! இப்படியே பண்ணிகிட்டிருந்தா கதையிலே வர்ற பொண்ணு மாதிரி நானும் உன்னைத் தூக்கி வீதியிலே வீசச் சொல்லிடுவேன்” என்றதும்,”டேய்! வீதின்னா கேவலமாடா? உன் ஆபீஸ் இல்லாட்டி என்ன? அது தெய்வம் தந்த வீடுடா!தெய்வம் தந்த வீடு ..வீதியிருக்கு” என்று பொழியத் தொடங்கிவிட்டார்.

எம்.எஸ்.வி.புறப்பட்டு சிலநிமிஷங்கள்தான் ஆகியிருந்தன. செல்ஃபோன் வசதிகள் இல்லாத காலம்.எம்.எஸ்.வி. வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து, “கார் வந்தால் ஆர்மோனியத்தை இறக்க வேண்டாம்.பாடல் வந்டுவிட்டது. திரும்பி வரச்சொல்லுங்கள்”என்று சொல்லி கம்போஸிங் தொடர்ந்ததாம்.

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட விட்டேத்தியான மனிதனின் அலட்சியக் குரலிலேயே அடர்த்தியான தத்துவங்களைப் பொழிந்திருப்பார் கண்ணதாசன்.

“கள்ளிக்கென்ன முள்ளில் வேலி”, “காட்டுக்கேது தோட்டக்காரன்” என்பது போன்ற கேள்விகளும், “வெறுங்கோயில் இதிலென்ன அபிஷேகம்?என் மனமென்னும் தெருக்கூத்து பகல்வேஷம் என்பது போன்ற கேலிகளும், “தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம்” போன்ற தெறிப்புகளும் நிறைந்த பாடல் அது.

அந்தப் படத்தின் நாயகிதான்,கடந்த அத்தியாயத்தில் கண்ட தியாகதீபம். ஆசை ஆசையாய் காதலிப்பாள். தன் தங்கைக்கும் காதலனுக்கும் தொடர்பு ஏற்பட்டதும் சந்தோஷமாகக் கல்யாணம் செய்து வைத்து வரவேற்பு வைபவத்தையும் முன்னின்று நடத்துவாள். அவள் மனவோட்டத்தை அறிந்த விகடகவி வாயிலாக விளையாடியிருப்பார் கவிஞர். அந்த விகடகவிக்கும் இவள்மீது ஒருதலைக் காதல்.


“ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு அங்கேயும் ஆசையுண்டு! அதிலொரு பெண்கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கமுண்டு”



ஆனாலும் என்ன செய்ய? “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்பதுதான் சமாதானம். அந்த மனநிலையில் தன் காதலையும் தங்கைக்கு விட்டுக்கொடுக்கிறாள் தமக்கை. தனக்குக் கிடைக்காவிட்டாலும் தன்னுடைய நாயகி,தன் மனம் நிறைந்த காதலனுடன் கிளியாக சிறகடிப்பாள் என்பது விகடகவி கொண்ட விருப்பம். அதுவும் தப்புக் கணக்காகி விடுகிறது.

“ஒருகிளி கையோடு ஒருகிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா
உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒருகிளி ஒதுங்குதம்மா
அப்பாவி ஆண்கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா!-அது
எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான் இப்போது புரிந்ததம்மா”

இத்தனை சுகமாக திரைக்கதையை சொன்ன கவிஞரின் சித்தரிப்பு,ஒரு கதையின் நாயகியை காலத்தால் அழியாத குணச்சித்திரமாய் வார்க்கிறது. காதலனை மணந்துகொண்ட தங்கை கருவுறுகிறாள். தமக்கை என்ற முறையில் மனம் மகிழ்கிறாள் நாயகி.

“ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்! அழகுமலர் அன்னையென ஆனாள்!ஆதரிப்பாள் தென்மதுரை மீனாள்” என்று ஆடிப்பாடுகிறாள். ஆடிப்பாடுகிற போதே தன் அடிமனத்தின் ஆசையையும் அழகாகச்சொல்லி விடுகிறாள். தான் காதலித்த காலத்தில், இவனுடைய கருவை வயிற்றில் தாங்கும் கனவு நாயகிக்கு இருந்தது. தன் மனதில் கருக்கொண்ட மழலை இன்று எங்கே?

“தேடுதடி என்விழிகள் செல்லக்கிளி ஒன்று-சிந்தையிலே நான் வளர்த்த கன்று-உன் வயிற்றில் பூத்ததடி இன்று”!

மசக்கையில் இருக்கும் தங்கையின் மனநிலை புரிந்து கேலிசெய்யவும் முடிகிறது அவளால்….
“மந்திரத்தில் மயங்குகிறாள் சந்தனத்தைப் பூசு-மல்லிகைப்பூ விசிறி கொண்டு வீசு-அவள் மணவாளன் கதைகளையே பேசு” என்கிறாள்.

வெற்றிமகள் கையிரண்டைப் பற்றிவிட்டான் திருடன்
நெற்றியிலும் திலகமிட்டான் மீராவின் கண்ணன்  -ஒரு
நெஞ்சினிலும் திலகமிட்டான் காதலிலே மன்னன்
என்று, மைத்துனனாகிவிட்ட பழைய காதலனையும் உரிமையுடன் கேலி பேசுகிறாள்.

சில மாதங்களில் பிறக்கப் போகும் குழந்தையை நினைத்தால் அவளுக்கு சின்னஞ்சிறு கிளியே பாடல் நினைவுக்கு வருகிறது.
“கண்ணம்மா என்றழைக்கும் பாரதியின் பாட்டு-கவிதையிலே நான்ரசித்தேன் கேட்டு-அதைக்கண்ணெதிரே நீயெனக்குக் காட்டு” என்று பாடுகிறாள்.

எல்லாம் சரிதான். என்ன இருந்தாலும் இவளும் பெண்தானே! என்ன சொல்லி தன்னை சமாதானம் செய்து கொண்டிருப்பாள்? அடிமனதில் காதல்நிலா அஸ்தமித்து விட்டதா? தியாகத்தின் வலிதான் அந்த தீபத்தின் ஒளியா? இந்தப் பாடலின் உச்சம் என்று நான் கருதுகிற வரிகள் இவைதான்:

அய்யனுடன் கோவில்கொண்டாள் திருமகளாம் தங்கை
அடிவாரம் தனிலிருந்தாள் அலர்மேலு மங்கை-அவன்
அன்புமட்டும் போதுமென்று நின்றுவிட்டாள் அங்கே

அந்தப் பெண்மனதின் உணர்வுகளை எந்தச் சிகரத்தில் ஏற்றிவைக்கிறார் பாருங்கள்.

இதேபோல் ஒரு தமக்கையை அரங்கேற்றம் படத்திலும் பார்க்கிறோம். தன்னையே விற்று, தன் குடும்பத்தை ஆளாக்குகிறாள். அக்காவின் அவல வாழ்வு முழுதாகத் தெரியாத நிலையிலும் கூட, தன் கனவுகளுக்கு வடிவம் கொடுத்த அவளை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் தங்கை, அக்காவைப் பற்றிய பாடலுடன் தன் இசைவாழ்வை அரங்கேற்றுகிறாள்

“மூத்தவள் நீகொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியிலின்றுஇளையவள் அரங்கேற்றம்”  என்ற பாடலில் உணர்ச்சி வெள்ளம் கரைபுரள்கிறது .

நாயகி,குடும்பத்திற்காகத் தன்னையே விற்பதைக்கூட புனிதமாக்கிப் பார்க்கின்றன கவிஞரின் வரிகள்.

 மேகத்தால் மழைபொழியும் …மேகத்திற்கு லாபமென்ன?
தியாகத்தால் எமைவளர்த்த தெய்வம்கண்ட லாபமென்ன?


தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம்
மண்ணிலே ஒருவரில்லை மங்கை உனக்கீடு சொல்ல
என்னவோ நீகிடைத்தாய் எல்லார்க்கும் வாழ்வு தர

அறிவும் ஆளுமைப்பண்பும் கொண்ட தன் தமக்கை மட்டும் ஆணாகப் பிறந்திருந்தால் அவள் வாழ்வு வேறுவிதமாய்த் துலங்கியிருக்குமாம்


“ஆணாகப் பிறந்திருந்தால் ராஜாங்கம் உனதுகையில்
பெண்ணாகப்பிறந்துவிட்டாய் நாங்கள்தான் உன்மடியில்”
என்று நொந்து கொள்கிறாள் தங்கை.

அந்த நாயகியின் வாழ்வில் எத்தனையோ இரவுகள்.ஆனாலும் உள்ளம் உகக்கும் உறவுகள் இல்லை.களைத்துக் கண்மூடினாலும் கனவில் வருவதென்னவோ குடும்பம்தான்.

“கல்யாண சுகமும் இல்லை கடமைக்கு முடிவுமில்லை
எத்தனை இரவுகண்டாய் என்னநீ உறவுகண்டாய்
கண்மூடும் வேளையிலும் எம்மைத்தான் கனவுகண்டாய்”

எத்தனையோ முதிர்கன்னிகள் தங்கள் தியாகத்தைக்கூட குடும்பம் உணராத வலியில் கண்ணீர் விடுகையில்,அவர்கள் மனங்களையெல்லாம் மயிலிறகால் வருடுகின்றன கவிஞரின் வரிகள்.

(தொடரும்..)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *