கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலுள்ள ஈஷா யோக மையத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்புண்டு. அங்கே அமைந்திருக்கும  தியானலிங்கம், பிராணப் பிரதிஷ்டையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.யோக மரபில் , மனித உடலில் ஏழு சக்கரங்கள் இருப்பதாகச் சொல்வார்கள். அந்த  ஏழு சக்கரங்கள்  தியானலிங்கத்திலும் அமைந்துள்ளன. எழு சக்கரங்களும் முழுவீச்சில் தூண்டப்படுவதே பிராணப்பிரதிஷ்டை.. சக்தி முழுவீச்சில் தூண்டப்படுகையில் சிவம் எனும் அம்சம் அங்கே நிகழ்கிறது. இதுதான் பிராணப் பிரதிஷ்டையின் தாத்பர்யம்..

ஒரு மனிதனுக்குள் இந்த சக்திநிலை தூண்டப்படும் போது அவன் சிவனாகவே கருதப்படுகிறான்.திருமூலர்,இதைத்தான்,  “குருவே சிவமெனக் கூறினன் நந்தி” என்கிறார். இருக்கட்டும்…இதற்கும் கண்ணதாசனுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

இந்தத் தத்துவங்களில் ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட எனக்கு, திருவருட்செல்வர் திரைப்படத்தில், கவிஞர் கண்ணதாசனின் ஒரு பாடலைக் கேட்டபோது தூக்கிவாரிப் போட்டது. சுந்தரரை சிவபெருமான் ஆட்கொள்கிற இடம்.”சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே”என்ற பாடல்…

“பக்திப் பெருக்கினிலே ஊனுருக-அந்தப்
பரவசத்தில் உள்ளே உயிருருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக-என்
சந்ததியே உந்தனுக்கு அடிபணிய…”
என்றெழுதியிருப்பார் கவிஞர்.
சக்திநிலையின் திரட்சியே சிவம் என்ற யோக மரபிலான கருத்தை ஒருவரியில் சொல்லியிருந்தார் கவிஞர்.

 இதேபோல் இன்னொரு  விஷயம். யோகமரபில்  சிவபெருமான் ஆதிகுருவாக  வணங்கப்படுபவர்.  அவர்களுக்கு முருகப்பெருமானும் ஒரு யோகிதான். முருகனுக்கு ஆறுமுகங்கள் என்பதற்கு புராணம் சொல்லும் காரணம் பலரும் அறிந்தது. சிவபெருமானின் ஐந்து முகங்களுடன்,அதோமுகம் என்ற ஆறாவது முகத்தையும் உருவாக்கி அவற்றில் எழுந்த கனலில் உதித்தவனே கந்தன் என்பது கந்தபுராணம்.

ஆனால் யோகமரபில் இதற்குச் சொல்லப்படுகிற காரணம் வேறு. முருகன் என்னும் யோகி, ஓருடலுக்குள் ஆறு உயிர்களை நிலைநிறுத்தி கடுந்தவம் இயற்றியவர். அந்த  ஆறு உயிர்களேஆறுமுகங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

முக்காலம் உணர்ந்த ஞானிகளும் அதிசயித்துப்பார்க்கும் இத்தவத்தை நிகழ்த்திய யோகி கர்நாடகா மாநிலத்திலுள்ள சுப்ரமண்யா எனும் குமார பர்வதத்தில் வாழ்ந்தவர் என்றும், நின்ற நிலையிலேயே அவர் சமாதியடைந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்தக் குமாரபர்வதம், அறுபடை வீடுகளில் ஒன்றென்று பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார் குறிப்பிட்டுள்ளார். கந்தன் கருணை படத்தில் எது புதியது என்று  முருகன்  கேட்க  அந்தக்கேள்விக்கு மட்டும் கவிஞரின் பாடல் இடம் பெற்றிருக்கும். முந்தைய மற்ற கேள்விகளுக்கெல்லாம் அவ்வையின் அசல் பதில் பாடல்கள்.

அந்தப் பாடலில் வருகிற ஒருவரி, “மூன்றுகாலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது”. யோக மரபில் இத்தகைய கருதுகோள் இருப்பது கவிஞருக்குத் தெரியுமா, அல்லது அதைத்தான் சொல்கிறாரா என்பதெல்லாம் கூட அனாவசியம். அவருடைய வாக்கில் சில தெய்வீக உண்மைகள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக் கொள்கின்றன.

அதே பாடலில், கந்தனைப் பொறுத்தவரை எவையெல்லாம் புதியது என்று சொல்லிக்கொண்டே வருவார் கவிஞர். அவற்றில் ஒரு வரி: திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன்மேனி புதியது
திருப்பாவையில் கண்ணனின் முகத்தைச்சொல்ல வந்த ஆண்டாள், “கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்” என்பார். அதற்கு உரையெழுதியவர்கள் கதிர்போன்ற ஒளியும், நிலவு போன்ற குளுமையும் கொண்டதால் அது கதிர்மதியம் போன்ற முகம். அதேபோல  கந்தனின் திருமேனி திங்களின் தண்மையினையும் கதிரவனின் ஒளியையும் கொண்டுள்ளது.
இப்பாடலின் முத்தாய்ப்பு வரி, உனது தந்தை பரமனுக்கோ வேலும் மயிலும் புதியது என்பதுதான். வேலும் மயிலும் சிவபெருமானுக்குப் புதியதா?அவற்றை அவர் பார்த்ததேயில்லையா? சிவபெருமான் அழிக்கும் கடவுள்.அவருடைய கையிலிருப்பது சூலாயுதம். அதற்கு அழிக்கத்தான் தெரியும்.ஆனால் மாமர உருவில் சூரன் நிற்க முருகன் எறிந்த வேல்பட்டு சேவலாகவும் மயிலாகவும் சூரன் உருமாறினான் என்பது புராணம். பகைவனை அழிக்க வேண்டிய ஆயுதம், வனை உருமாற்ற, வாகனமாகவும் கொடியாகவும் ஆட்கொண்டார் முருகன். அழிக்கும் கடவுளாகிய சிவபெருமானுக்கு ஆயுதம் கொண்டு ஆக்கவும் முடியும் என்று காட்டியதால் பரமனுக்கு வேலும் மயிலும் புதியது…

புராணப்படங்களுக்குப் பாடல்கள் எழுதும்போது அதற்காகத் தனியாக பக்தி இலக்கியங்களைப் படித்தவரில்லை கவிஞர். ஏற்கெனவே அவற்றில் ஆழங்கால் பட்டிருந்தார். எனவே மறைபொருளான விஷயங்களைக்கூட
அவரால் அனாயசமாக எழுதிச்செல்ல முடிந்தது.

திருமறைக்காட்டில் உள்ள சிவாலயத்தில் வேதங்கள் வழிபாடு நிகழ்த்தி வாசல்கதவை அடைத்து விட்டதாக ஐதீகம். திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் திருமறைக்காட்டில் எழுந்தருளிய போது, திருநாவுக்கரசர் பதிகம் பாட கதவு திறந்தது. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிக் கதவை மீண்டும் மூடினார்.  இது திருத்தொண்டர் புராணம் வாயிலாகவும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பதிகங்கள் மூலமாகவும் அறியக் கிடைக்கிற செய்தி.

பண்ணினேர் மொழியாள் உமைபங்கரோ
மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினை
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே
என்பது திருநாவுக்கரசர் தேவாரம்.இந்தப்பாடல்தான் திருமறைக்காட்டில்
திருநாவுக்கரசர் பாடிய பதிகத்தின் முதல் பாடல்.

இந்த மூலப்பாடலையே தொகையறாவாகக் கொண்டு திருவருட் செல்வர் திரைப்படத்தில்

தாழ்திறவாய்-மணிக்கதவே தாழ்திறவாய்-ஆலய மணிக்கதவே தாழ்திறவாய்
மறைநாயகன் முகம்காண ஆலய மணிக்கதவே தாழ்திறவாய்
என்று தொடங்கும்  பாடலெழுதியிருப்பார் கவிஞர். புராணச் செய்திகள் குறித்த ஆழ்ந்த புரிதல் அவருக்கிருப்பதை இந்தப்பாடலின் பல இடங்களில் உணரமுடியும்.

மனக்கதவம் திறந்த பரம்பொருளே

திருக்கதவம் திறக்க வரமருளே
இருகரம் கூப்பி உன்னை வலம்வரவே-எங்கும்
சிவமயமாய் மலர தாழ்திறவாய்
என்றெழுதும்போது, சிவபக்தர்களுக்கு, “கைகாள் கூப்பித் தொழீர் “என்ற திருநாவுக்கரசர் தேவாரம் நினைவுக்கு வராமல் போகாது.

பத்து பாடல்கள் பாடியும் திருக்கதவம் திறவாமை கண்டு பதினோராவது பாடலில்,
“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக்காடரோ
சரக்க இக்கதவம் திறப்பிம்மினே” என்று பாடினார் திருநாவுக்கரசர். கோயில் கதவு திறந்தது.இதையே..

ஆடும் திருவடி கோலம் அறிந்திட
அரனே தாழ்திறவாய்
அன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட
சிவனே தாழ்திறவாய்
அருள்நெறி தெளிவுற திருமுறை புகழ்பெற
அன்பே தாழ்திறவாய்
ஒருமுறை இருமுறை பலமுறை கேட்டேன்
ஒளியே தாழ்திறவாய்

என்றெழுதுகிறார் கவிஞர். பத்து பாடல்கள் பாடியும் கதவு திறக்கவில்லை என்கிற புராணச் செய்தியை

ஒருமுறை இருமுறை பலமுறை கேட்டேன்
ஒளியே தாழ்திறவாய்
என்ற வரி புலப்படுத்துகிறது.

அதே திரைப்படத்தில் அப்பூதியடிகள் புராணம் காட்சியாகியிருக்கும். திருநாவுக்கரசரையே குருவாக வழிபடும் அப்பூதியடிகளின் வீட்டிற்கு எழுந்தருள்வார் திருநாவுக்கரசர். உணவு படைக்க வாழையிலை அறுத்துவரும் அப்பூதியடிகள் மகனை நாகம் தீண்டி இறந்துவிடுவான். திருநாவுக்கரசர், சிறுவனின் உடலை திருக்கோயிலுக்குச் சுமந்து சென்று பதிகம்பாடி, பிள்ளையை உயிர்ப்பிப்பார்..
  திருநாவுக்கரசரின் விடந்தீர்த்த திருப்பதிகம் இப்படித் தொடங்கும்.
ஒன்று கொலாம் அவர்சிந்தை உயர்வரை
ஒன்றுகொலாம் உயரும்மதி சூடுவர்
ஒன்றுகொலாம் இடு வெண்தலை கையது
ஒன்றுகொலாம் அவர் ஊர்வதுதானே

என்று தொடங்கி ,”இரண்டுகொலாம்”, “மூன்றுகொலாம்” என்று பத்துவரையில் எண்ணலங்காரமாய் அமைந்திருக்கும் அந்தத் தேவாரம்.பதிகம் முழுவதிலும் மொத்தம் நாற்பது இடங்களில்”கொலாம்” என்று  வருமாறு  பதிகம் பாடியிருப்பார்  திருநாவுக்கரசர். நிகழ்ந்த சம்பவம் பற்றிய குறிப்பே பதிகத்தில் இல்லையே என்று  சிலர்  கருதுவர் . இந்த  ஐயத்தைத்  தீர்த்துவைத்தவர், பேரறிஞர் அமரர் தி.வே.கோபாலய்யர்.சமணத்தில் விடம் இறக்குவதற்கான  மந்திரம், “லாம்” என்பது.சமணராயிருந்து,சமணர்களாலேயே “தங்களின்  மேலாம் தருமசேனர்’என்று பட்டம் தரப்படும் அளவு உயர்ந்து  நின்றவர்  திருநாவுக்கரசர். விடமிறக்கும் மந்திரத்தை இடையிலே  பெய்து சிவபெருமானின்  சிறப்புகளைச் சொல்லும் விதமாகவும் இந்தப் பதிகத்தை அமைத்திருக்கிறார் திருநாவுக்கரசர்.இந்த நுட்பம் கோபாலய்யர் போன்றோருக்குப்  புரியும். சாதாரணர்களுக்குப் புரியுமா? திருநாவுக்கரசர் நிலையில் நின்று கவிஞர் எழுதிய அற்புதமான பாடல் இது
 நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே-உனக்கு
நல்லபெயர் வைத்தவர்யார் சொல்லுபாம்பே
ஆதிசிவன் தலையமர்ந்த ஆணவமா-அவன்
அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா

 இறைவனின் கோபத்திற்கு ஆளானாலும் இறையடியார் கோபத்திற்கு
ஆளாகக் கூடாது. “ஈசனெதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த நேசரெதிர் நிற்பது அரிதாமே”என்பது பழம்பாடல். பரமசிவன் கழுத்துப் பாம்பு கருடனை சவுக்கியமா என்று கேட்கலாம். சிவனடியாரைக் கேட்க முடியுமா? அதட்டுகிறார் திருநாவுக்கரசர். அஞ்சி வருகிறது நாகம்.
ஊர்கொடுத்த பால்குடித்து உயிர்வளர்த்தாய்-பால்
உண்டசுவை மாறும்முன்னே நன்றிமறந்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய்-அவர்
பிஞ்சுமகன் நெஞ்சினுக்கே நஞ்சுகலந்தாய்

பெயருக்குத் தகுந்தாற்போல் மாறிவிடு-எங்கள்
பிள்ளையை மறுபடியும் வாழவிடு
நெஞ்சம் மாறிவிடு-பிள்ளையை வாழவிடு
கதைச்சூழலும் இங்கே வந்துவிடுகிறது.

சங்கம் அமர்ந்தொரு முத்தமிழ் பாடிய
சங்கரன் மீதினில் ஆணை
சங்கப் புலவர்கள் நாவினில் அடங்கிய
செந்தமிழ் மீதினில் ஆணை
மங்கலக் குங்குமம் மஞ்சள் நிறைந்த
சங்கரி மீதினில் ஆணை
மாதொரு பாகன் சூடிய நாகப் பாம்பே
உன்மேல் ஆணை

கயிலாயத்திற்கு “திருமலை”என்றுபெயர். திருத்தொண்டர் புராணத்தில்
“திருமலைச் சருக்கம்’ என்றொரு பகுதியே உண்டு. அந்தப் பெயரை மிகப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்துகிறார் கவிஞர்:

தேவன் மீதில் ஆணை-அவன் திருவடி மீதும் ஆணை
திருமலை மீதும் ஆணை -என் திருநாவின்மேல் ஆணை
பண்மேல் ஆணை-சொல்மேல் ஆணை
என்மேல் ஆணை-உன்மேல் ஆணை

தெய்வீக இலக்கியங்களை அவற்றின் ஆழம் மாறாமல் பாமரர்களுக்கும்
பாடல்கள் வழியே சென்று சேர்க்க அவர்போல் யாருண்டு நமக்கு??

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *