ஒரு மனிதன் தன்னையே ஆய்வு செய்கிறபோது கிடைக்கிற தெளிவு ஆயிரமாயிரம் அறநூல்களை வாசிப்பதால் வருகிற தெளிவைக்காட்டிலும் தெளிந்தது. உடல்நலனை ஆய்வு செய்ய மனிதனின் இரத்தமும் கருவிகளும் பயன்படுகின்றன. இந்த எச்சங்களாலும் ஒருவனைத் தக்கான், தகவிலன் என்று வரையறை செய்ய இயலும். அதேபோல மனிதனின் செயல்களே அவனைஅளப்பதற்கான கருவிகள். உணர்ச்சியின் கைப்பொம்மையாய் உலவுவதும், அறிவின் துணைகொண்டு ஆளுவதுமான இரண்டு வழிமுறைகளில் மனிதன் எதைத் தேர்வு செய்கிறான் என்பதை அவன் ஆய்வு செய்ய மறக்கும்போதுதான் அவனைப் பற்றி அடுத்தவர்கள் அதிகம் பேசுகிறார்கள்.
கவிஞர் கண்ணதாசன், தன்னை ஆய்வு  செய்து  கொள்வதில்  தயவு  தாட்சண்யமில்லாதவர். அப்படி ஆய்வு செய்து அவர் வெளியிட்ட அறிக்கைகளில் முக்கியமானவை என்று நான் கருதுபவை  இரண்டு..

நானிடறி வீழ்ந்த இடம்  நாலாயிரம் அதிலும்    நான்போட்ட முட்கள் பதியும்

நடைபாதை வணிகனெனெ   நான்கூவி விற்றபொருள்    நல்லபொருள் இல்லை அதிகம்

“இடறி விழும் இடங்களில் எல்லாம் முட்கள் தைக்கின்றன.அவை ஒரு காலத்தில் நானே போட்டவை”.இந்தத் தெளிவு வருகிறபோது யாரையும் குறைசொல்லத் தோன்றாது. அதேபோல,தான் கடைவிரித்துக் கூவி விற்றவற்றில் நல்லபொருட்கள் அதிகமில்லை என்று கவிஞர் சொல்கிறார்.அதற்கான காரணங்களை,இந்தக் கவிதையின் தொடக்கத்தில் சொல்கிறார்.

மானிடரைப் பாடிஅவர்  மாறியபின் ஏசுவதென்   வாடிக்கையான பதிகம்

மலையளவு தூக்கிஉடன்   வலிக்கும்வரை  தாக்குவதில் மனிதரில்   நான் தெய்வ மிருகம்

இக்கவிதைக்கு சுவையானதொரு பின்னணி உண்டு. முரண்படக்கூடிய மனிதர்களைப் பாடுவதலேயே கவிஞர் கண்ணதாசன் கவிதைகளில் முரண்பாடுகள் தோன்றுவதாகவும், எனவே மனிதர்களைப் பாடுவதைக் குறைத்துக் கொண்டால் கவிதைகளில் முரண்பாடு குறையுமென்றும், கவிஞரை மேடையில் வைத்துக் கொண்டு ஒரு மேடையில் சிலம்புச் செல்வர்.ம.பொ.சி.சொன்னாராம்.அந்த வாரமே இந்தக்கவிதையை எழுதினாராம் கவிஞர்.திரு.தமிழருவி மணியன் அவர்கள் இதை மேடைகளில் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அதற்கு அடையாளமாக,இந்தக் கவிதையில்

செப்பரிய தமிழ்ஞானச்    சிவஞானம் சொன்னமொழி   சிந்தையிடை வைத்துவிட்டேன்

 தேன்வாழும் மலர்கொண்டு   திருமாலை கட்டியதைத்  தெருக்கல்லில் சார்த்த மாட்டேன்
 வைப்பதொரு பூவேனும் பொன்னேனும் மனங்கொண்டு மறைசக்தி அடியில் வைப்பேன்
 வானளவு வாழ்ந்தாலும்  மலையளவு கொடுத்தாலும்  மனிதரைப் பாடமாட்டேன் என்கிறார் கவிஞர்.

சொன்னாரே தவிர, அவரால் அப்படி நீண்ட நாட்கள் இருக்க  முடியவில்லை. மனிதர்களைப்  பாடினார். மனசாட்சி  கேள்விகேட்ட  போது ,”மனிதரைத் தான்பாட  மாட்டேனேயல்லாமல்  புனிதரைப்  பாடுவேன்” என்று சமாதானம் சொல்லிக் கொண்டார்   .

ஆனாலும், தான் செய்தது தவறு என்கிற எண்ணம் அவரை உறுத்திக்  கொண்டேயிருந்தது .
  

ஊர்நெடுக என்பாட்டை உளமுருகப் பாடுகையில் ஓர்துயரம் என்னுள்வருமே

 உதவாத பாடல்பல உணராதார் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும்மனமே
என்னுந் தன்னிரக்கத்தை அவரால் தவிர்க்கவே முடியவில்லை.

ஆனால் இதன் விளைவாக அவருக்கு ஏற்பட்ட பக்குவம் அளவில்லாதது. வாழ்வில் ஒன்று தேவைப்படும்போது வேறொன்று வரும், அதை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடவேண்டுமே தவிர மலைத்துப்போய் உட்கார்ந்தால் மனச்சோர்வுதான் மிஞ்சும் என்பது அவர் கண்ட அனுபவம்.
  

பசித்த வேளையில் பாழும் கஞ்சியும்

  பசியிலாப் போழ்தில் பாலும் தேனும்
  கொடுத்த தேவனைக் கோபிக்கலாமா?
   குறைந்த என்பசியைக் குறைசொல்லலாமா?

என்பது அவர் முன்வைத்த சமாதானம். அதேநேரம் வாழ்க்கை என்னும் மாபெரும் விடுகதைக்கு இந்தப் பக்குவத்தால்   பதில் கண்டுவிட்டதாகவும் அவர் கருதவில்லை.

 குறையென் மீதோ குற்றம் யாதோ
  குலைத்து நிமிர்த்தும் கொற்றவன் யாரோ என்று உருட்டப்பட்ட பகடையின் உள்ளப்பாங்கோடுதான் உலகவாழ்க்கையை அவர் எதிர்கொண்டார்.

பலன்கள் பற்றிய பதைப்பைப் பெரிதும் வெளிப்படுத்தாமல்,பணிகளைத் தொடர்வது என்கிற கர்மயோக மனநிலை அவருக்குக் கைகூடியது.வாழ்க்கை என்றல் என்னவென்ற கேள்வியை, தன்னிடமிருந்தே தொடங்கியதால் அவருக்கு இந்தநிலை பிடிபட்டது. பலரும் நடக்கிற சம்பவங்களை மட்டுமே வைத்து வாழ்வை எதிர்கொள்ளும்போது பதட்டம் மிஞ்சுகிறது.அனால் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் தன்னுடைய பங்களிப்பும் இருக்கிற என்பதை உணரும்போது மனம் சமநிலை கொள்கிறது. அந்தச் சமநிலையே, நடப்பது நடக்கட்டும் என்கிற சரணாகதி நிலையையும் ஏற்படுத்துகிறது.

நீரோ நெருப்போ நிகழ்வன யாவையும்
ஈசன் பொறுப்பென இயக்கிய நடையை 
இன்னும் தொடரக் கால்வலுவுண்டு
எங்கே எப்படி என்ன நிகழுமோ என்கிறார் கவிஞர்.

அதற்காக வாழ்வாசை அற்றுப்போன நிலையில் அவரில்லை. பிரியங்களும் பந்தங்களும் ஒருபுறம், பட்டுணர்ந்த ஞானம் ஒருபுறம் என்று இரண்டுக்கும் நடுவே தானாடிய ஊஞ்சலை உள்ளூர ரசித்திருக்கிறார்.

முக்காற் பயணம் முடித்த கிழவனும்

முதலடி வைக்கும் முதிரா இளைஞனும்
நடுவழி நிற்கும் நானும்போவது
ஆசை என்னும் அழகிய ரதத்தில் என்னும்போது, வாழ்க்கைப் பயணத்திற்கான வாகனம் ஆசையே என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.

இந்த ஊஞ்சலின் இருமுனைகளுக்கும் மாறிமாறி உந்தித்தள்ளி ஊஞ்சலாடியதில்தான் அவரது படைப்பியக்கம் விசைகொண்டது.

இந்தப் புரிதல் தந்த தெளிவு, ஒரு காலகட்டத்தில் எதையுமே பதட்டமின்றி ஏற்கும் பக்குவமாய் மலர்ந்தது. இது காலகாலங்களுக்கும் அவருக்குள்ளே நிலைத்திருந்ததா என்றால்..தெரியாது. ஆனால் கவிதை வரிகளாய் அவை நிலைபெற்றன.

மனிதனின் கவலைகள், நோய்கள்,தேடல்கள், தவிப்புகள் அனைத்தையுமே
சமநோக்கோடு பார்த்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய அபூர்வமான வரிகள்
இவை.

காக்கை குருவியைப்போல் கவலையின்றி நீயிருந்தால்
யாக்கை கொடுத்தவனை யார்நினைப்பார் இவ்வுலகில்
சட்டியிலே வேகின்ற சத்தெல்லாம் சரக்கானால்
மட்டின்றிப் படித்துவந்த மருத்துவர்க்கு வேலையென்ன
கடலருகே வீற்றிருந்தும் கடுந்தாகம் வரும்பொழுதே
கடவுளெனும் ஒருவனது கைசரக்கு நினைவுவரும்
இன்னதுதான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்க்கணக்கு
இறைவனிடம் உள்ளதடா எப்போதும் உன்வழக்கு
எல்லாம் அவன்செயலே என்பதற்கு என்னபொருள்
உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவே என்றுபொருள்
கோடைநாளில் மேற்கொண்ட சாலைவழிப்பயணத்தில் வழியில் தென்பட்ட
காற்றோட்டமான கோயில் மண்டப நிழல்போல் இதமான வரிகள் இவை.

(தொடரும்…)

Comments

  1. ”நாங்கள் எழுதிய புத்தகம்
    நானே சொன்ன தத்துவம்
    இங்கேயந்தப் புத்தகம்
    எங்கே அந்தத் தத்துவம்……

    ஒரு பக்கம் பார்த்தால் கற்பனை
    மறு பக்கம் பார்த்தால் அற்புதம்
    அதை முற்றும் பார்க்கும் முன்னரே
    ஏன் மூடச் சொன்னாய் தெய்வமே…”

    “… ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வப் பெண்ணாக…”
    கடவுள் இரக்கமின்றித்தான் மூடிவிட்டான்..கண்ணதாசனை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *