கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிய களங்களில் கவியரங்கமும் ஒன்று. கவியரங்கம் என்னும் வடிவத்தை மக்கள் மத்தியில் கொண்டு  சென்றவர்களில் கவிஞரும்  கலைஞரும்  குறிப்பிடத்தக்கவர்கள். கவிஞர் காங்கிரஸ் இயக்கத்திற்குச் சென்ற பிறகு அங்கும் இந்த  வடிவத்தை  பிரபலப்படுத்தினார்.  கவியரங்குகளில் கவிஞரால் பாடப்பெற்று பல ஊர்கள்  பாடல் பெற்ற தலங்கள் ஆயின. தொன்மையான  சிறப்புகள்  கொண்ட  மதுரையைப்  பாடுகிற போதெல்லாம் கவிஞருக்குள் உற்சாகம்  பொங்கிப்  பிரவாகமெடுத்தது. அது  புதிய  கற்பனைகளைக்  கொண்டு  சேர்த்தது. நக்கீரனை மதுரையில் சிவபெருமான் நெற்றிக்கண்ணால் எரித்தது  பற்றி  திருவிளையாடல்  புராணம் பேசுகிறது. ஏன் சிவபெருமான் எரித்தார் என்பதற்கு கவிஞர், பரஞ்சோதி முனிவரும் சொல்லாத காரணமொன்றைச் சொல்கிறார்.

‘மங்கையர்தம் கூந்தலுக்கு வாசமுண்டோ

மணமென்பது இயற்கையிலே வருவதுண்டோ
 தங்கமலர்க் கண்ணாரைத் தழுவும்போது
 தாய்ப்பாலின் வாசந்தான் வருமல்லாது
 பொங்கிவரும் பூமணத்தை நுகர்ந்ததுண்டோ
 பொய்யென்று நக்கீரப் புலவன் கூற
 தங்கட்சி தோற்றதெனத் தலைகுனிந்த
தமிழ்ச்சொக்கன் திருக்கோயில் தழைத்த நாடு’
தோல்வி வருத்தத்தால் சிவபெருமான் தலைகுனிந்த போது நெற்றிக்கண்ணின் நெருப்பு நக்கீரர் மேல் பட்டு விட்டதால் அது ஒரு விபத்து மட்டுமே என்பதுகவிஞரின் சுவையான கற்பனை. மதுரையில் நடைபெற்ற கவியரங்கில் அவையடக்கம் பாடுகிறபோது கூட மதுரைக்காரர்கள் காதலின் மகத்துவத்தைப் பாடுகிறார். காதலியை முத்தமிடும் போது காதலர்கள் மறக்காமல், முன்னே விழும் கூந்தல்மலர்களைப் பின்னுக்கு ஒதுக்கி விடுவார்களாம்.

பூ-வாடுமென்று புறமொதுக்கி முத்தமிடும்
மூவாத முல்லை முறுவலினார் காதலிலே
பாவாட விடுகின்ற பாண்டியனார் பொன்னாட்டில்
நாவாடத் துணிகின்ற நாயேனை மன்னிப்பீர்  என்கிறார் கவிஞர்.

அவையடக்கம் கூட ஒரு மரபு கருதித்தான்.
அவையடக்கம் சொன்னேன் -ஆனால் எனக்கிந்த அவை அடக்கம் என்று உடனே ஒரே போடாகப் போட்டு விடுவார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்குநாட்டுக்கு வந்தபோது யாரோ அவருக்கு எரிச்சலூட்டியிருக்கிறார்கள்.
ஊர்களோ பட்டி தொட்டி,உண்பதோ கம்பஞ்சோறு,
பேர்களோ பொம்மன் திம்மன் பெண்களோ பொம்மி திம்மி
காருலாம் கொங்கு நாட்டைக் கனவிலும் நினைக்கொணாதே
என்று ஏசிவிட்டுப் போய்விட்டார்.அந்தப் பழியைக் கவிஞர்தான் துடைத்தார்.

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வலையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளையாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவராக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ்மூதாட்டி
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்
சுவையெல்லாம் பணிவெல்லாம் கோவையில்தான்

ஏனுங்க!என்னவுங்க!ஆமாமுங்க!
இருக்குங்க !சரியிங்க!பாக்க வாங்க!
மானுங்க!வேணுங்களா!வாங்கிக்கோங்க!
மலைப்பழமும் இருக்குங்க !எடுத்துக்கோங்க!
தேனுங்க!கையெடுங்க!சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்தமுங்க!
ஏனுங்க எழுந்தீங்க உக்காருங்க
ஏபையா பாயசம் எடுத்துப் போடு

அப்பப்பா கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும் வயிறும் வேண்டும்
தப்பப்பா கோவைக்கு வரக்கூடாது
சாப்பாட்டினாலேயே சாகடிப்பார்
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்

பழங்குடியினர் தலைவன் கோவன் பெயரால் கோவை கோவன்புத்தூர் என்று பெயர் பெற்று கோயம்புத்தூரானது.ஆனால்சேரநாட்டு இளங்கோ துறவு பூண்டுநாட்டின் எல்லையில் ஊரமைத்த புதியஊரே கோவை என்றும் இளங்கோவன் புத்தூரே கோவன்புத்தூர் என்றும் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார் கவிஞர்.

அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம்புத்தூ ராயிற்று
இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று

இதற்கு ஆதாரமே கிடையாதே,தவறாயிற்றே என்று யாராவது சொன்னாலும்
கவிஞர் கவலைப்படுவதாயில்லை .
என்கருத்தை யான்சொல்வேன்;தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக என்று தாண்டிப் போய்விட்டார்.
கவிஞரால் பாடப்பெற்ற ஊர்களில் புதுச்சேரியும் ஒன்று.

கம்பன் கழகம் அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது.
மதுச்சேரி என்றே மாகவிகள் நினைத்திருந்த
புதுச்சேரி வாசல் புலவர்களின் தலைவாசல்
மதித்தேறி வந்த மாகவிகள் தம்மையெலாம்
அணைத்தோர்கள் வாழும் அழகுநகர் புதுச்சேரி!
பாரதியும் இங்கேதான் பாடித் திரிந்தானாம்
பாரதிதாசன் இங்கே பாண்டியனாய் வாழ்ந்தானாம்

 என்றெல்லாம் பாண்டியின் பெருமைகளைக் கவிஞர் பதிவு செய்தார்.

 இந்தியா விடுதலை பெற்று 25 ஆண்டுகள் ஆனபோது கலைஞர் தலைமையில் வெள்ளிவிழா கவியரங்கம் நடந்தது.ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு  தியாகியைப்  பற்றி கவிதை வாசித்தார்கள்.கவிஞருக்குத் தரப்பட்ட
தலைப்பு,”பெயர் தெரியாத தியாகிகள்”.அவருடைய மிக முக்கியமான கவிதைகளில் இதுவும் ஒன்று.

“ஊரறியோம்!பேரறியோம்!உறங்கிவிட்ட கதையறிவோம்
 சீரறிவோம்!திறமறிவோம்!தியாகத்தின் சிறப்பறிவோம்!
ஆங்காங்கே மாண்டவர்கள் ஆயிரம்பேர் என்பதனால்
 அத்தனைபேர் வரலாறும் அறிவதற்கு வசதியில்லை!
 தூங்காமல் தூங்கிவிட்ட சுதந்திரப் பூங்கன்றுகளைத்
 தாங்காமல் தாங்கிவிட்ட தாயகத்து மண்ணறியும்!
என்று தொடங்கும் கவிதையில்,சுதந்திர இந்தியாவை ஒரு மாளிகையாக
உருவகிக்கிறார் கவிஞர்.பெயர் தெரிந்த தலைவர்களும்,தியாகிகளும் அதன்
மாடமாய்,நிலைவாசலாய் தூணாய் ஒளிவீசுகிறார்கள்.ஆனால் பெயர்
தெரியாத தியாகிகள்?

“இன்றிங்கே வானுயர எழுந்திருக்கும் மாளிகைக்கு
 தன்னெலும்பைத் தந்தவர்கள் சதைரத்தம் கொடுத்தவர்கள்
அஸ்திவாரங்கள் என அடியினிலே தூங்குகிறார்!

மாளிகைக்கு மையிடுவோம்;மாணிக்கக் கதவிடுவோம்;
ஆங்காங்கே ஓவியங்கள் அழகழகாய்த் தீட்டிவைப்போம்;
கண்ணாடி பதித்திருப்போம்;கலைவிளக்கும் ஏற்றிவைப்போம்
முன்னாலே முகப்பெடுத்து முத்துப்போல் பந்தலிட்டுக்
கண்ணாலே பார்த்தாலே கவி பிறக்குமாறு செய்வோம்
அத்தனையும் மாளிகைக்கே;அலங்காரம் மாளிகைக்கே;
அஸ்திவாரங்களுக்கு அலங்காரம் யார்புரிவார்?

தாங்குகின்ற பூமியிது தாங்கியதே நம்மையென்று
தங்கப் பாவாடை கட்டித் தளதளக்கப் பார்த்தோமா?
மண்தானே மண்ணென்று மாறி மிதித்திருப்போம்.
அப்படித்தான் அரசியலின் அடிப்படையாய் நின்றவரும்
செப்பரிய பேர்கூடத் தெரியாமல் தூங்குகிறார்;
தாயார் அழுதிருப்பார்;தம்பியர் துடித்திருப்பார்
வாயார முத்தமிட்ட மனையாளும் மாய்ந்திருப்பாள்;
நாடே அழவேண்டும் நல்லவர்கள் செத்ததற்கு
யாரே அழுதார்கள் அஸ்திவாரங்களுக்கு !

உணர்ச்சிமயமான இந்தக் கவிதையில் விடுதலை வீரர்களின் வரலாற்றைப்
பாடமாக வைக்காமல் வெள்ளையர் பற்றியே வரலாறுகள் இருப்பதைக் கவிஞர் இடித்துரைக்கிறார்.

“மண்ணாண்ட க்ளைவ்முதல் மவுண்ட்பாட்டன் பிரபுவரை
 படிக்கத்தான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம்” என்றவர் ,
“ஊரெங்கும் தேடுங்கள்;உழைத்த கதை கேளுங்கள்
 யாரென்று பாருங்கள்;அவர்பெயரைக் கூறுங்கள்
நானவரைப் பற்றி நாலுவரி எழுதுகிறேன்
வானவரை வந்து வாழ்த்துரைக்கச் சொல்லுகிறேன் என்றோர் உறுதிமொழியும் வழங்கினார்.

நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழாவில்,கவி.கா.மு.ஷெரீஃப் தலைமையில்
நவரசக் கவியரங்கம் நடந்தது.கவிஞருக்குத் தரப்பட்ட தலைப்பு,’அழுகை’.

பிறப்பிலும் அழுதேன் ;வந்து பிறந்தபின் அழுதேன்;வாழ்க்கைச்
சிறப்பிலும் அழுதேன்;ஒன்றிச் சேர்ந்தவர் சிலரால் சுற்று
மறைப்பிலும் அழுதேன்;உள்ளே மனத்திலும் அழுதேன்;ஊரார்
இறப்பிலே அழுவதெல்லாம் இன்றுவரை அழுதுவிட்டேன்
என்று தொடங்கும் அமர கவிதையை அந்த அரங்கில் கவிஞர் படைத்தார்.
சீசரைப் பெற்ற தாயும் சிறப்புறப் பெற்றாள்-அன்று
நாசரைப் பெற்ற தாயும் நலம்பெறப் பெற்றாள்-காம
ராசரைப் பெற்ற தாயும் நாட்டிற்கே பெற்றாள்-என்னை
ஆசையாய்ப் பெற்ற தாயோ அழுவதற்கென்றே பெற்றாள் 

கண்வழி சொரியும் உப்பு கடவுளால் வருவதல்ல

மண்வழி வரலாம் பெற்ற மகன்வழி வரலாம் சேர்ந்த
பெண்வழி வரலாம் செய்த பிழைவழி வரலாம் ஆனால்
நண்பர்கள் வழியிலேதான் நான்கண்ட கண்ணீர் உப்பு

தொட்டபின் பாம்பு என்றும் சுட்டபின் நெருப்பு என்றும்

பட்டபின் உணர்வதே என் பழக்கமென்றான பின்பு
கெட்டவன் அழுகைதானே கெடுவதை நிறுத்த வேண்டும்
பட்டபின் தேறல்தானே பட்டினத்தார்கள் வாழ்வு

கண்ணீரைத் தொட்டுக் கவிஞர் எழுதியஇந்த வரிகள் காலத்தின் வெய்யிலிலும்
உலராத உன்னதம் கொண்டவை .

இன்னொரு நண்பரின் பிறந்தநாள் கவியரங்குகளிலும் கவிஞர் பாடினார். கலைஞர் என் காதலி என்று பாடிய கவிதை, கலைஞர் பிறந்தநாள் கவியரங்கக் கவிதைகள் பலவற்றிலும் சிறந்தது.

கன்னியின் பெயரைக் கேட்டேன் கருணையின் நிதியம் என்றாள்
மன்னிய உறவைக் கேட்டேன் மந்திரி குமாரி என்றாள்
பன்னிநான் கேட்டபோது பராசக்தி வடிவம் என்றாள்
சென்னைதான் ஊரா என்றேன் திருவாரூர் நகரமென்றாள்
தந்திரம் அறிவாள் மெல்ல சாகசம் புரிவாள் மின்னும்
அந்திவான் மின்னல்போல அடிக்கடி சிரிப்பாள் நானும்
பந்தயம் போட்டுப் பார்த்து பலமுறை தோற்றேன் என்ன
மந்திரம் போட்டாளோஎன் மனதையே சிறையாய்க் கொண்டாள்

என்று பாடினார்காலம் மாறியது.தமிழக அரசியல் காட்சிகளை அரங்கமும் அந்தரங்கமும் என்று எழுதிய சில நாட்களிலேயே எம்.ஜி.அர்.ஆட்சியில்
அரசவைக் கவிஞரானார் கவிஞர்.

மன்னர் இவரொருநாள் மலையாளம் சென்றிருந்தார்
அங்கும் தமிழில்தான் அழகான மொழியுரைத்தார்
கேரளத்தில் பேசென்று கேட்டார்கள் தோழரெல்லாம்
ஓரளவும் பேசேன் நான் உயிர்படைத்த நாள்முதலாய்
உண்ணும் உணவும் உலவுகிற வீதிகளும்
எண்ணும் பொருளும் ஏற்றதோர் தொழில்நலமும்
செந்தமிழால் வந்த திருவென்றே பெற்றவன்நன்
அந்த மொழியின்றி அடுத்தமொழி பேசுவதோ
என்று பதிலுரைத்தார்;இவர்பெருமை யார்க்கு வரும்!
பொன்மனத்துச் செல்வர் புரட்சித் தலைவரிவர்
தமிழரில்லை என்றால் தமிழுக்கே களங்கம் வரும்  
 என்று எம்.ஜி.ஆரை,கவிஞர் பாடிய கவியரங்கக் கவிதையின் தலைப்பு
“தமிழோடிருப்பவர்கள்”.

மக்கள் தருகின்றார் மகத்தான ஆதரவு
தக்கதொரு ஆதரவால் தமிழ்நாட்டில் நல்லாட்சி
ஆயிரமாய்ப் பகைவரெல்லாம் ஆட்டிவைக்கப் பார்த்தாலும்
 ஆயுட்காலம் முழுதும் அமைச்சரவை மாறாது
என்று எம்.ஜி.ஆருக்கு கவிஞர் மொழிந்த வாழ்த்து,அப்படியே பலித்தது.

(தொடரும்)

Comments

  1. நீரெல்லாஞ் சேற்றுநாற்ற
    நிலமெலாங் கல்லுமுள்ளும்
    ஊரெலாம் பட்டிதொட்டி
    யுண்பதோ கம்பஞ்சோறு
    பேரெலாம் பொம்மன் திம்மன்
    பெண்களோ நாயும்பேயும்
    காருலாங் கொங்குநாட்டைக்
    கனவிலு நினைக்கொணாதே.

    இது கம்பனின் தனிப்பாடல் எனச் சொல்லப்படுகிறது. உங்கள் கருத்தென்ன?

    நீரெல்லாம் சேற்று நாற்றம் = எப்போதும் உழவு

    நிலமெல்லாம் கல்லுமுள்ளு = நிலம் மலைப்பாங்கும் வேலியிடப்பட்டதும்

    ஊரெல்லாம் பட்டிதொட்டி = குறிஞ்சி நிலத்தூர்கள் மிகுதி

    உண்பதோ கம்பஞ்சோறு = உடல்நலத்துக்கேற்ற கம்பஞ்சோற்று உணவு, சமையல் திறம்

    பேரெலாம் பொம்மன் திம்மன் = ஓசைநயமான பெயர்கள் எல்லார்க்கும்

    பெண்களோ நாயும்பேயும் = நன்றியுணர்வு மிக்கவர்கள், மறக்க மாட்டார்கள், அன்பில் மாற்றமிருக்காது, இறந்தாலும் நம்மைப் பிரிய மனமின்றி அரூபமாய் உடனிருப்பார்கள்.

    காருலாங் கொங்குநாடு = மேகங்கள் விரும்பித் திரியும் இந்நாட்டை

    கனவிலும் நினைக்கொணாதே = கனவில் நினைத்துக்கொண்டிராதே. நேரில் சென்று வாழ்ந்து வளங்கொழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *