கவிஞரின் தேடல் உள்முகமாகக் குவியத் தொடங்கிய காலகட்டம் அவருடைய வாழ்வின் நிறைவு நிலையில் நிகழ்ந்தது. வாழ்வெனும் மாயப்பெருங்கனவை விலக்கி உதறி விழித்தெழுந்த நிலையில் அவருடைய மனப்பான்மை மலர்ந்தது

.

இமயம் வரைக்கும் என்பெயர் தெரியும்

குமரிக் கடலென் குணம்சொல்லி ஆடும்
அமெரிக்க வானம் என் அருமையைப் பாடும்..
ஆயினும் என்ன நண்பர்களே
அமைதியைத் தேடி அலைகின்றேன்

என்று அவர் சொன்னாலும்,தன்னையே தேடுகிற தவிப்பின் ஆரம்ப அடையாளங்களே அந்த அமைதியின்மை. அவருக்குள் இருந்த அபூர்வமான சக்தியைக் குறித்து நாம் அறிந்து கொள்வதற்கான தடயங்கள் அவருடைய
படைப்புகளிலேயே இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று. தினமணிக்கதிரில் அமரர் சாவி ஆசிரியராக இருந்த போது கவிஞருடன் தொலைபேசியில் கிராஸ்டாக்கில் வந்தாராம். அப்போதைய உரையாடலில் அவர் தொடர் எழுதக்கேட்டு அப்போது தந்த தலைப்பு அர்த்தமுள்ள இந்துமதம். ஆனால் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற பெயரை கவிஞர் ஏற்கெனவே ஒரு  கவிதையில் பயன்படுத்திய சொற்றொடர். “இந்தத் தலைப்பு தனக்கு எப்படித்  தோன்றியது ” என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்ட கவிஞர் “அடேடே!அதிலே வருதா!’என்று கவியரங்கக் கவிதை ஒன்றை நினைவு
கூர்ந்தாராம். இதை கவிஞரின் உதவியாளர் திரு.இராம.கண்ணப்பன், “அர்த்தமுள்ள அனுபவங்கள்” என்னும் தன்னுடைய நூலில் பதிவு செய்துள்ளார். கவிஞரும் இதே செய்தியை தன்னுடைய “மனவாசம்” நூலில் குறிப்பிடுகிறார்.
அவர்கள் மேற்கோள் காட்டிய கவிதையை  ஏற்கெனவே படித்திருந்ததால்
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. காரணம்,வெறுமனே அர்த்தமுள்ள இந்துமதம் என்று அவர் அந்தக் கவிதையில் சொல்லவில்லை.
காடுபொடி யாகநட மாடுசிவன் தேவியர்கள் காவல்கொள வந்த நாடு
காசிமுதல் கன்னிவரை காணுமிடம் அத்தனையும் கன்னிவிசாலாட்சிவீடு
ஆடவரில் தேவியர்கள் பாதியெனும்தத்துவமும் ஆக்கியவ ரென்று பாடு
ஆதிமுதல் அந்தம்வரை அர்த்தமுள்ள இந்துமதம் ஆசையுடன் தந்த ஏடு
அர்த்தமுள்ள இந்து மதம் என்கிற நூலை எழுதுகிற எண்ணம் ஏற்படும் முன்பே ஆதிமுதல் அந்தம்வரை அர்த்தமுள்ள இந்துமதம் ஆசையுடன் தந்த ஏடு என்று கவிஞர் எழுதியிருக்கிறார். இந்தக்கவிதை  ஐந்தாம் தொகுதியில் உள்ளது. இதன் முதல்பதிப்பு வந்தது 1972ல். அர்த்தமுள்ள இந்துமதம் வெளிவந்தது 1973ல். இந்தத் தலைப்பில் ஓர் ஏடு தன்னால் எழுதப்படும் என்று உள்ளுணர்வு தூண்ட கவிஞரின் கவிதையில் அந்த சொற்றொடர் இயல்பாக வந்து விழுந்திருக்கின்றது.
கவிஞரோ இராம.கண்ணப்பன் அவர்களோ முன்கூட்டியே இந்தப் பெயர்
வந்துள்ளதைப் பதிவு செய்துள்ளார்களே தவிர “ஆசையுடன் தந்த ஏடு”
என்ற சொற்றொடரை கவனித்ததாகத் தெரியவில்லை. இந்த வரிதான்
கவிஞரின்ஆன்மா தன்னினும் பெரிய சக்தியுடன் தொடர்பு கொண்டிருந்ததன்அடையாளம்.

புலனின்பம் அரசியல் போன்றவற்றிலிருந்து பற்று நீங்கிய நிலையில்
தன்னந் தனிமையில் தவம் புரிவோம் எனக் கதவினைச் சார்த்தும் முன்
தன் வாழ்வைத் தள்ளி நின்று பார்க்கிறார் கவிஞர். அவருள் ஆவேசித்து
எழுந்த இறைவேட்கை,கிருஷ்ணகாந்தனின் வண்ணத் திருவடிகளில்
வாக்குமூலங்களை வைக்கிறது.

வாராத கற்பனை வாராத சிந்தனை வந்தநாள் அந்தநாளே
வளமான மேனியும் வளமான எண்ணமும் வாழ்ந்தநாள் அந்தநாளே
தீராத ஆசையில் மாதர்குழாத்தில் நான் திரிந்தநாள் அந்தநாளே
சீழ்பட்ட பண்டமும் பாழ்பட்ட கறிகளும் தின்றநாள் அந்த நாளே
சேராத கூட்டத்தில் என்னை மறந்துநான் சேர்ந்தநாள் அந்த நாளே
செறிவான புத்தியைத் தவறான பாதையில் செலுத்தினேன் அந்த நாளே
பாராத பூமியைப் பார்க்கின்றேன் இப்போது பார்த்தனைக் காத்த நாதா
பதிநினதுகதைபுகல உடல்நிலையைநீகொஞ்சம் பார்த்தருள் கிருஷ்ணகாந்தா
என்று மன்றாடுகிறார். கண்ணன் மீது பக்தியில்லாத காலத்திலேயே
கண்ணதாசன் என்று புனைபெயர் சூட்டிக்கொண்டு பிறகு கண்ணனுக்கு
தாசனானவர் கவிஞர். மிக இளைய வயதிலேயே கண்ணனை உணர்ந்திருந்தால், தன் வாழ்வே மாறியிருக்கும் என்று சொல்கிற கவிதயில் நாற்பதுகளில்தான் தனக்கு கிருஷ்ணபக்தி மிகுந்தது என்பதைக் கண்ணீருடன்
ஒப்புக் கொள்கிறார் கவிஞர்.
சீரோடும் நாற்பதும் நீரோடிப் போனபின் சிந்தையில் வந்துநின்றாய்
சென்ற காலங்களை எண்ணியென் கண்ணிலே சிறுமழை வீழவைத்தாய்
காராரும் மேனியாய்!ஐம்பதில் உன்னையான் கண்டனன் காதல்நாதா;
கனிவுடையவயதிலொரு எழுபதுகொடுத்தென்னைக் காத்தருள் கிருஷ்ணகாந்தா

என்று பிரார்த்தனை செய்கிறார் கவிஞர். இந்த பக்தியோகமே முற்றி அவரைத் தனக்குள் ஆழ்ந்திருக்கச் செய்தது.
யானே யானாய் என்னுள் அடங்கிட
வானும் மண்ணும் என் வாழ்வை என்செயும்
என்று அவர் சொன்னதும் இந்த ஆன்ம பக்குவத்தால்தான்.

எது இனிது என்று கேட்டபோது “இனிது இனிது ஏகாந்தம் இனிது” என்றாள் அவ்வை. தனிமை கண்டதுண்டு-அதில் சாரமிருக்குதம்மா என்றான் மகாகவி பாரதி.இந்தத் தாக்கத்தால் கவிஞர் எழுதிய “சாரமிருக்குதம்மா’என்ற கவிதை அவரது உள்நிலைத் தேடலை உறுதிப்படுத்துகிறது.
தனிமை ஒரு தனிமை அதில் தத்துவங்கள் கோடி
இனிமை இது இனிமையென இன்னிசைகள் பாடி
பனிமலர்கள் மயில்களுடன் பந்துவிளையாடி
கனிவகைகள் உண்ணவொரு காலம் வருமோடி
பாரதி எதிர்பார்த்த அந்த ஏகாந்தம் அவனுக்குக் கிட்டாதது பற்றியும்
இரங்கிப் பாடுகிறார்.

ஆளரவம் அற்றதொரு அற்புத இடத்தை
நாள்முழுதும் தேடிமனம் நாடியலைகின்றேன்
ஊழ்வினையில் அந்தசுகம் உண்டென நினைத்தே
வாழுகிறேன் இறைவனொரு வாசல்தர வேண்டும்
காணிநிலம் வேண்டுமென பாரதி கனிந்தான்
ஏணியிலை பாவம் அவன் ஏறவழியில்லை
தோணிதனில் மாக்கடலைச் சுற்றிவரும் எண்ணம்
வீணென முடிந்துவிடில் வாழ்ந்தகதை வீணே
என்கிறார்.

வானளவு சோலை அதில் வண்ண மலர் மாலை
தேனளவு தேடிவரும் வண்டுகளின் லீலை
ஞானமுனி வோர்கள்நிலை நானடைய வேண்டும்
மோனநிலை கூடும் அதில் மோகனங்கள் பாடும்
என்று கவிஞர் எழுதினார்.

1981ன் மத்தியில் முதல்வர்.எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டபடி அமெரிக்காவில் இலக்கிய விழாவில் பங்கேற்கப் புறப்பட்டார் கவிஞர். விழா முடிந்து மருத்துவப்  பரிசோதனைக்காகப் போன இடத்தில் உடலிலுள்ள பல
கோளாறுகளும் வெளிப்படத் தொடங்கின.சிகிச்சைகள் பலன்தராமல்
அக்டோபர் மாதம் 17 ஆம்தேதி கவிஞர் மறைந்தார்.சிறுகூடற்பட்டியில்
பிறந்த அந்த கவிதைச்சூரியன் சிகாகோவில் அஸ்தமித்தது.

“அயல்நாடொன்றில் ஆளரவமற்ற சூழலில் அமைதியாக  என்னுயிர் பிரியும்” என்று முன்னர் எங்கோ எழுதியிருந்தார் கவிஞர். அந்த வாக்கும் பலித்துவிட்டது. அமெரிக்காவிலிருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்ட
கவிஞரின் உடலை முதல்வர் எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண்டார்.

“அந்த விமானத்தில் எங்கள் ராஜகுயிலின் கூடு மட்டுமே கொண்டுவரப்பட்டது” என்று அந்த நிகழ்வை எழுதினார் கவிஞர் வைரமுத்து. கவிஞரின் நண்பர் கலைஞரில் தொடங்கி பலப்பல கவிஞர்கள் இரங்கற்பாக்கள் வழியே தங்கள் இதய அஞ்சலியைச் செலுத்தினர். எத்தனையோ பேருக்கு இரங்கல் கவிதைகள் எழுதிய கவிஞர்,. “இருந்து பாடிய இரங்கற்பா”என்ற தலைப்பில் தனக்கான இரங்கற்பாவை முன்னதாகவே பாடியிருந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் மக்கள் அவரைப்பற்றி என்னென்ன சொல்வார்கள் என்று மனக்கண்ணால் கண்டு எழுதிய கவிதை அது.

கிருஷ்ணாம்பேட்டையில் கவிஞரின் உடல் எரியூட்டப்படும் முன்னால்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் அந்தக் கவிதையை இசைத்தார்.
பாரியொடும் கொடைபோகப் பார்த்தனுடன் கணைபோகப்
படர்ந்த வல்வில்
ஓரியொடும் அறம்போக உலகமறை வள்ளுவனோடு
உரையும் போக
வாரிநறும் குழல்சூடும் மனைவியொடும் சுவைபோக
மன்னன் செந்தீ 
மாரியொடும் தமிழ்போன வல்வினையை என்சொல்லி
வருந்து வேனே

தேனார்செந்தமிழமுதைத் திகட்டாமல் செய்தவன்மெய்
தீயில் வேக
போனால் போகட்டும் எனப் பொழிந்ததிரு வாய்தீயில்
புகைந்து போக
மானார்தம் முத்தமொடு மதுக்கோப்பை மாந்தியவன்
மறைந்து போக
தானே என் தமிழினிமேல் தடம்பார்த்துப் போகுமிடம்
தனிமைதானே

பாட்டெழுதிப் பொருள்செய்தான்;பரிதாபத்தால் அதனைப்

பாழும் செய்தான்
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும் கீறாமல்
கிளை முறித்தான்
நாட்டழுகை கேளாமல் நந்துயரும் காணாமல்
நமன் எனும்பேய்
சீட்டெழுதி அவனாவி திருடியதை எம்மொழியில்
செப்புவேனே

வாக்குரிமை கொண்டானை வழக்குரிமை கொண்டானை

வாத மன்றில் 
தாக்குரிமை கொண்டானை தமிழுரிமை கொண்டானை
தமிழ் விளைத்த
நாக்குரிமை கொண்டானை நமதுரிமை என்றந்த
நமனும் வாங்கிப்
போக்குரிமை கொண்டானே போயுரிமை நாம்கேட்டால்
பொருள்செய்யானோ 
இதற்குமுன் ஒரு கவிதையில் கவிஞர் ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார்.
 செத்தபின் உயிர்கள் போவது எங்கே?தெரியும் வரைநீ தெய்வத்தை நம்பு
என்று. தான் கனிந்து கனிந்து பக்தி செய்த கண்ணனிடம் கவிஞர் போனாரா, தான் பாடிய தமிழுடன் கலந்தாரா என்று தன்னுடைய மரணத்திலும்  மக்கள் குழம்புவார்களாம்.தன் உடலுக்கு மூட்டப்பட்ட நெருப்பும் கூட தன் பாடலைத்தான் பாடும் என்று கவிஞர் சொன்னது கிருஷ்ணாம்பேட்டை
மயானத்தில் உண்மையானது.சிதைநெருப்பு ஓங்கிஉயர்ந்த போது, சீர்காழியின்
தழுதழுத்த குரலில் அந்த அமர வரிகள் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்தன.

போற்றிய தன் தலைவனிடம் போகின்றேன் என்றவன்வாய்
புகன்றதில்லை
சாற்றிய தன் தமிழிடமும் சாகின்றேன் என்றவன்வாய்  
சாற்றவில்லை
கூற்றுவன்தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன் படுத்தவனைக்
குவித்துப் போட்டு
ஏற்றிய செந்தீயே..நீ எரிவதிலும் அவன்பாட்டை
எழுந்து பாடு!!

(நிறைந்தது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *