அந்தியிருளால் கருகும் உலகு கண்டேன்
அவ்வாறே வான்கண்டேன் திசைகள் கண்டேன்
என்றார் பாவேந்தர். படரும் இருளில் உலகு கருகுகிறது என்ற கற்பனை பற்றி இரவுலாவிகள் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லை. கையில் ஒரு பழைய தாளை வைத்துக் கொண்டு, எரியும் மெழுகுவர்த்தியில் உரசினால்பரபர
வென்று தீ பரவும்போதே தாள்கள் கரியாகி உதிரும். பெற்றோரோ மற்றோரோ எரித்த காதல் கடிதங்களை தண்ணீரில் கரைத்து விழுங்கி சரித்திரம் படைத்த
காதலர்களை மரோசரித்ராவில் பார்த்திருக்கிறோம். காகிதம் கருகுகிற வேகத்தில் எங்கும் இருள் படர்ந்த பிறகுவெற்றிக் களிப்பில் இருள் சிரிப்பது போல் தோன்றுகிறது பாவேந்தருக்கு.
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்ததுண்டோ
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்
என்று பாடுகிறார். முழுநிலவு, வானத்தின் பெருஞ்சிரிப்பு என்று கொண்டால், பிறைநிலவு என்னவாக இருக்கும்? இதை நளவெண்பாஎழுதிய புகழேந்திப் புலவரிடம்தான் கேட்க வேண்டும்.காதலுற்ற இளம்பெண்ணின் உயிரைக் குடிக்கும் உத்வேகம் அந்திப் பொழுதுக்கிருக்கிறது. அந்த அந்தியின் முறுவல் போல் பிறைநிலவு வானத்தில் தோன்றியது என்கிறார் புகழேந்திப் புலவர்.அதனாலேயே தமயந்தியின் முலைகள்மேல் அந்த முறுவல் அனலை அள்ளிக் கொட்டுகிறதாம்.எரிக்கும் சிரிப்பு அந்திக்கு.
பைந்தொடியாள் ஆவி பருகுவான் நிற்கின்ற
அந்தி முறுவலித்த தாமென்ன-வந்ததால்
மையார்வேற் கண்ணாள் வனமுலைமேல் ஆரழலைப்
பெய்வான் அமைந்த பிறை.
இது புகழேந்திப் புலவரின் கற்பனை.
காதலுற்ற பெண்கள் நிலவு சுடுகிறது என்று சொல்வது காலங்காலமாய் நிகழ்வதுதான். தலைவி, நிலவு சுடுகிறது என்று சொன்ன மாத்திரத்தில் அவளை மஞ்சத்தில் சேர்த்து சந்தனத்தைப் பூச தோழிகள் தயாராக இருப்பார்கள்.
ஆனால் தமயந்திக்கு வாய்த்த தோழிகள் கொஞ்சம் கருத்துச் சுதந்திரம் கொண்டவர்கள். விண்மீன்கள் சூழ்ந்திருக்கும் நிலவை அவர்கள் பார்த்து அதன் அழகை அனுபவிக்கிறார்கள். தமயந்திக்குக் கோபம் வருகிறது. “பெண்களே! நிலவின் சூடுதாங்காமல் வானம் கொப்பளித்திருக்கிறது. அதைப்போய் விபரமில்லாமல்
நட்சத்திரங்கள் என்று சொல்கிறீர்களே!” என்று கோபிக்கிறாள்.
கொப்புளங் கொண்ட குளிர்வானை-இப்பொழுதும்
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து.
நட்சத்திரத்தை ஆகாயக் கொப்புளங்கள் என்று சொல்லும் உத்தி வேண்டுமானால் புதிதாக் இருக்கலாம். ஆனால் அதையே சமூகக் கருத்துக்குப் பயன்படுத்துவதன் மூலம் புரட்சிக்கவிஞராகிறார் பாவேந்தர்.
மண்மீதில் உழைப்பாரெல்லாம் வறியராம்-உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பைப் பாய்ச்சும் புலையர் செல்வராம்-இதைத்தன்
கண்மீதில பகலில் எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப் பின்
விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி.
பொதுவுடைமைக்கு நேரும் பங்கத்தைப் பகலில் பார்த்த வானம் கோபத்தில் கொப்பளித்து நிற்கிறது அந்திவானம் என்கிறார் அவர். அதனால்தான் நிலவுக்கு எத்தனையோ உவமைகளையும் உருவகங்களையும் சொல்கிற பாவேந்தர்
உனைக்காணும் போதினிலே என்னுள்ளத்தில்
ஊறிவரும் உணர்சியினை எழுதுதற்கு
நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவதில்லை
நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்து
தினைத் துணையும் பயனின்ன்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால்,பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் வண்ணந்தானோ
என்கிறார். பசித்தவன் கண்களுக்கு வெண்ணிலவு, பானைச்சோறாக,பொரித்த அப்பளமாக,தோசையாக , அப்பமாகத் தெரிவதும் இயல்புதானே..