சிரிக்காதவர்கள், அல்லது சிரிப்பார்கள் என்று நாம் நினைக்காதவர்கள் சிரித்தால் வியப்பாகத்தான் இருக்கும். 90ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பேரறிஞர் ம.ரா.போ.குருசாமி அவர்களிடம் திருவள்ளுவரின் நகைச்சுவை பற்றிக் கேட்டபோது, ‘இருக்கு! ஆனா போலீஸ்காரர் சிரிச்ச மாதிரி இருக்கு!’ என்றார்.
நகைச்சுவை என்பது சூழல்களால் தீர்மானிக்கப்படும் விஷயம்தான்.பல தலைமையாசிரியர்கள் சிரிப்பதில்லை என்பது, பொதுவான நம்பிக்கை. மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களையும் நிர்வாகம் செய்ய வேண்டியிருப்பதால் கூட இருக்கலாம். ஆனால் தலைமைப்பீடங்களில் இருப்பவர்கள் பலரும் நகைச்சுவையாகப் பேச முயல்வார்கள். அதில் துளிக்கூட நகைச்சுவை அம்சமே இருப்பதில்லை.ஆனால் உடனிருப்போர் சிரித்து உருளுவார்கள். அதற்கும் சேர்த்துத்தான் சம்பளம், சலுகை எல்லாம்.

எனக்குத் தெரிந்த தொழிலதிபர் ஒருவர் என்னிடம் சில நகைச்சுவைத் துணுக்குகளைச் சொன்னார். நான் அரைப்புன்னகை செய்ததில் என்ன புரிந்து கொண்டாரோ, “அதாவதுங்க..நாங்கல்லாம் பிசினஸ்லே இருக்கோமுங்க! எப்பவும் வேலையிருக்கும், அதனாலெ சிரிக்கறதெல்லாம் முடியாது. அதெல்லாம் உங்களைப் போல உள்ளவங்களுக்குத்தான்” என்றார். இதன்மூலம் என்னை எந்தப் பட்டியலில் வைத்திருந்தார் என்று புரிந்தது.

தமிழ்த் திரையுலகில் நடிப்பால் சரிதம்படைத்தபிரபல நடிகை ஒருவர், தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரைக் காண வரும் பிரமுகர் பற்றி, “எங்க டைரக்டர் தும்மினா கூட அவரு சிரிப்பாரு’ என்றாராம். அந்த இயக்குநர் தும்மினால் இந்த நடிகைக்கு மனசெல்லாம் வலிக்கும்.அந்தநேரம் பார்த்து சிரித்தால்
இவருக்குக் கோபம்தானே வரும்!!

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுடன் அயல்நாடு சென்று திரும்பிய அனுபவங்களை சுஜாதா ஒருமுறை எழுதினார்.”அயல்நாட்டு இந்தியர்களில் முக்கியப் பிரமுகர்கள் ஒவ்வொருவராக பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிரதமர் பாரபட்சமின்றி எந்தப் படத்திற்கும் சிரிக்காமல் இருந்தார்”என்று குறிப்பிட்டிருப்பார்.

சிரிப்பை , சிரிப்பதற்காகத்தானே  பயன்படுத்துவார்கள். சிவபெருமான் எரிப்பதற்காகப் பயன்படுத்தினார். அவருக்கு “நகை ஏவிய ஈசர்” என்ற பட்டத்தை அருணகிரிநாதர் வழங்குகிறார். ஏவுதல் என்பது ஆயுதங்கள் ஏவுவதையும் படைக்கலங்கள் ஏவுவதையும் பெரும்பாலும் குறிக்கும். ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுக்களில்,திருக்கடையூருக்கு, “படை ஏவிய திருக்கடையூர்’என்ற பெயர் காணப்படுகிறது.

சிரிப்பு அவருக்குப் படைக்கலம் ஆகிறது.எதிரிகளுக்குப் படைக்கலம் ஆகிற அதே சிரிப்பு, அடியவர்களுக்கோ அடைக்கலம் ஆகிறது. தில்லைக்குள் வருகிறார் திருநாவுக்கரசர். அலைந்து திரிந்து ஆலயம் சேர்கிறார். தூரத்திலிருந்து பதிகம் பாடியபடி அம்பலத்தை நெருங்குகிறார் திருநாவுக்கரசர். யார் அங்கே வருவது என்று புருவத்தைக் குனித்துப் பார்க்கிறார் சிவபெருமான். திருநாவுக்கரசர் தானா என்று குனித்துப் பார்க்கிறார். நம்முடைய காலமென்றால் வருகை அட்டையை உள்ளே தந்து அனுப்பலாம். திருநாவுக்கரசருக்கு வருகை அட்டையே அவரது வளமான தமிழ்தான். “குனித்த புருவமும்” என்று குரல் கொடுக்கிறார். “ஆஹா! திருநாவுக்கரசர்  வந்துவிட்டார்” என்று சிவபெருமானுக்கு ஆனந்தச்சிரிப்பு  குமிழியிட்டு வருகிறது.

குனித்த புருவமும்,கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்
என்று பாடுகிறார். அம்பலத்தை நெருங்க நெருங்க, அம்பலவாணனின்
அழகொளிர் மேனி நன்றாகத் தெரிகிறது.வெய்யிலில் வந்தவர்கள்
நிழலுக்குள் நுழைகிற போது முதலில் கண்களுக்குத் தெரிவது எது?
ஒளிவீசுகிற பொருட்கள்தான்

பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
முதலில் நன்குதெரிகின்றன.இப்போது அம்பலத்திற்கு அருகேயே
வந்துவிட்டார் திருநாவுக்கரசர்.

இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணக்கிடைக்கிறது திருநாவுக்கரசருக்கு. இறைவன் மீதான அன்பு பெருக,வீடுபேறு கூட வேண்டாம்.இதே தமிழ்நாட்டில் பிறந்து இந்தத் திருவுருவை தரிசிக்கக்  கிடைத்தால் போதும் என்கிறார் திருநாவுக்கரசர். அடியவர்களின் அன்புக்கு இலக்கணம் சொல்கிற சேக்கிழார்,

கூடும் அன்பால் கும்பிடலேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார் என்கிறார்.அந்த இலக்கணத்தின்
இலக்கியமே திருநாவுக்கரசர்தான்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே
இந்தப்பாடல் தளபதி படத்தில் இடம்பெற்றபோது “வாலி பின்னீட்டாரு”
என்று சிலர் பேசிக் கொண்டதாகக் கேள்வி .

வெளிப்படும் சிரிப்பை ஒழுங்குபடுத்தி குமிழ்சிரிப்பாக சிரித்த சிவபெருமான், விழுந்து  விழுந்து  சிரித்ததையும்  விவரித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.

சிவபெருமானுக்கு இடப்பாகத்தில் உமையம்மை வீற்றிருக்கிறாள். ஏதோ
பேசியபடி எதேச்சையாகத் திரும்பியவள் சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு அந்த நேரம் பார்த்து அசைய, சற்றே திடுக்கிட்டாள்.

உமையம்மை திரும்பித் திடுக்கிட்ட வேகம் பார்த்து மயில்தான் தன்னைக் கொத்த வருகிறதோ என்று அஞ்சி பாம்பும் பயந்து சற்றே விலகியதாம்.

கிடந்த பாம்பு அருகுகண்டு அரிவை பேதுற
கிடந்த பாம்பு அவளையோர் மயில் என்று ஐயுற
இதற்கிடையில்,மயில் சற்று வேகமாக விலகியது கண்டு சிவபெருமான்
தலையில் இருக்கும் நிலவும் பதறிவிட்டதாம்.

தன்னை பாம்பு விழுங்க வருவதாய் எண்ணிக் கலங்கிவிட்டது.விண்வெளியில்

இருந்தாலும் ஓடித் தப்பித்துக் கொள்ளலாம்.சிவபெருமானிடம் அடைக்கலம்
புகுந்து கால்களில் விழுந்தோம்.தூக்கித் தலையில் வைத்துக் கொண்டார்.
கழுத்திலேயே பாம்பு கிடப்பதை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்ற
கலக்கம், நிலவுக்கு.

கிடந்த நீர்சடைமிசை பிறையும் ஏங்கவே
தன்னுடனேயே இருந்தும்கூட இவர்களெல்லாம் எப்படி பயந்து தவிக்கிறார்கள் என்பதைப் பார்த்த சிவபெருமானுக்கு சிரிப்புத் தாங்கவில்லை.இந்த மனிதர்கள் போலத்தானே இவர்களும் எல்லாவற்றுக்கும் அஞ்சுகிறார்கள் என்று நினைக்க நினைக்க சிவபெருமான் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.திருவதிகை என்ற தலத்தில்  கெடில நதிக்கரையில் சிவபெருமான் இப்படிச் சிரிக்கிற சத்தம் கேட்டு ஓடிவந்து பார்க்கிறார் திருநாவுக்கரசர். சிவபெருமான் விழுந்து விழுந்து சிரித்தார் என்பதையே தன் பாடலில் பதிவும் செய்கிறார்.
கிடந்து தான் நகுதலை கெடில வாணரே.
நகுதல் என்ற சொல் கேலிச்சிரிப்பையே குறிக்கும்.இதற்கு சான்றுகள் உண்டு.
அத்தனை காலம் பிரிந்திருந்த கண்ணகியிடம் திரும்பும் கோவலன், அவளைப்
பிரிந்த வருத்தம் பற்றியே பேசவில்லை .மலைபோன்ற செல்வத்தைத் தொலைத்தது எனக்கு வெட்கம் தருகிறது என்கிறான்.
“குலம்படு வான்பொருள் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுட் தரும் எனக்கு” என்று சொல்கிறான்.

கண்ணகி கேலியாகச்சிரித்துவிட்டு,”என் கால் சிலம்புகள் உள்ளன.கொண்டு
செல்லுங்கள்”என்கிறாள்.
“நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி
சிலம்புள கொண்மின்” என்கிறாள்.சிலம்பு என்ற சொல்லுக்கு மலை என்றும்பொருள் உண்டு.நீதொலைத்த மலைபோன்ற செல்வம்,என் தந்தை போட்டகால்சிலம்புகளுக்குக் காணாது என்று சொல்கிறாள் போலும்.
தன்னுடனேயே இருக்கும் உமையும்,அரவும், நிலவும் அஞ்சுதல் கண்டு
சிவபெருமானுக்கும் கேலிச்ச்சிரிப்புதான் வருகிறது.இது குமிழ் சிரிப்பாக
இல்லை.பொங்கிப் பொங்கி வருகிறது.பொத்துக் கொண்டு வருகிறது.

கிடந்த பாம்பு அருகுகண்டு அரிவை பேதுற
கிடந்த பாம்பு அவளையோர் மயிலென்று ஐயுற
கிடந்த நீர்ச்சடைமிசை பிறையும் ஏங்கவே
கிடந்து தான் நகுதலை கெடில வாணரே 

சிரிக்கத் தெரிந்தவராக்கும் சிவபெருமான்!!

Comments

  1. திகட்டாத தமிழமுது… சிந்தாமல் சிதறாமல் புகட்டும் திறமிருக்கிறது தங்களுக்கு… 'வாலி கலக்கிட்டாரு' -குமிழ் சிரிப்பு எங்களுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *