கல்லையும் கனிவிக்கும் கடைவிழி பதிந்ததால்
கவிபாடிச் சபையேறினேன்
கள்ளென்ற போதையும் முள்ளென்ற வாதையும்
காணாமல் ஆளாகினேன்
நில்லென்று சொல்கையில் நின்றதால் குழிவிழல்
நிகழாமல் கடந்தேகினேன்
நிகழ்பவை யாதென்று நினைத்திடும் முன்னரே
நன்மைகள் நிதங்காண்கிறேன்
அல்லென்ற நிறத்தினாள் அம்பிகை கரத்தினால்
அள்ளினாள் உயிர்வாழ்கிறேன்
அன்னையள் யாருக்கும் முன்னையள் அருளினால்
அச்சத்தின் பிடிநீங்கினேன்
சொல்லொன்று விதைத்ததால் சூட்சுமம் கொடுத்ததால்
சுழன்றாலும் நிமிர்கிறேனே
சுடர்வீசும் விளக்கோடு கதைபேசும் ஜோதியே
சுபவாமி அபிராமியே
எத்தனை வலைகளோ எத்தனை தடைகளோ
எப்படித் தாண்டினேனோ
எத்தர்கள் பிடிவிட்டு சித்தர்கள் அடிதொட்டு
எவ்விதம் ஓங்கினேனோ
எத்தனை சபைகளோ எத்தனை களங்களோ
எப்படி ஏறினேனோ
எதிர்ப்பிலா வார்த்தையும் விதிர்ப்பிலா விதந்தனில்
யார்சொல்லிச் சொல்கிறேனோ
அத்தனை இடத்திலும் அற்புத விழுத்துணை
அம்பிகை நீயல்லவோ
அத்தனை-அமுதீச முத்தனை மயக்கிடும்
அழகாளும் மயிலல்லவோ
எத்தனை சொன்னாலும் இன்னமும் இன்னமும்
இனிப்பதுன் பெயரல்லவோ
எத்திசை போயினும் என்னுடன் வருகின்ற
எழிலேஎன் அபிராமியே
மண்வந்த நாள்தொட்டு மடியினில் ஏந்தினாய்
மலர்த்தாளின் இதங்காட்டினாய்
மறந்திட்ட போதிலும் மனதுக்குள் நின்றெந்தன்
மயக்கத்தில் முகங்காட்டினாய்
கண்வந்த பயனுந்தன் கோயிலைக் கண்டதென
காதுக்குள் நீகூறினாய்
கடவூரில் நிற்பதாய் கோயிலில் நடப்பதாய்
கனவிலும் உணர்வூட்டினாய்
பண்வந்த செந்தமிழ் பயிலாமல் பயிலவும்
பைரவி அருள்கூட்டினாய்
பரம்பரைப் பெயர்தந்து பங்கய நிழல்தந்து
போகுமொரு வழிகாட்டினாய்
விண்வந்த இருளிலும் வெண்ணிலவு மின்னவே
விளையாடும் ஒளிவெள்ளமே
வினைப்புழுதி துடைக்கின்ற வண்ணப்பட்டழகியே
வித்தகி அபிராமியே