31.07.2010 அன்று, சேலம் அருகிலுள்ள ஆத்தூரில் நவில்தொறும் குறள்நயம் என்னுந் தலைப்பில் கருத்தரங்கம் நிகழ்ந்தது.அதில்,”பயில்தொறும் புதுமைகள்”என்னுந் தலைப்பில் உரைநிகழ்த்தினேன். சில காலங்களாகவே திருக்குறளில் தோன்றிய புதிய சிந்தனைகள் சிலவற்றை அந்த மேடையில் பகிர்ந்து கொண்டேன். அந்தப் பகிர்வின் பதிவுகள் இவை:
“பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்”
மரபு ரீதியாய் இதற்கு சொல்லப்படும் பொருள், என்ன தெரியுமா? “பொருட்படுத்தும் அளவு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் கூட, பொருள் சேர்ந்துவிட்டால் பொருட்படுத்தத் தக்கவர்கள் ஆகி விடுவார்கள். எனவே அத்தகைய பொருட்செல்வத்தை விடவும் பெரிய பொருள் எதுவுமில்லை.” உண்மையிலேயே திருவள்ளுவர் இந்தப் பொருளில்தான் எழுதியிருப்பாரா? முட்டாள்களிடம் கூடத்தான் பணம் சேருகிறது என்று பகடி பேசியவர் அவர். “பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள”என்றவருக்கு இப்படியொரு சிந்தனை தோன்றுமா என்ன?
இதே குறளை வேறு வகையில் சிந்திக்கலாம். ஒரு மனிதனை எல்லோரும் அலட்சியம் செய்தார்கள். அந்த அளவுக்கு அவனும் அற்பனாகவே இருந்தான். ஆனால், திடீரென்று அவனுக்குப் பெரும்பணம் சேர்ந்து விடுகிறது. உடனே அவனை, உள்ளூர்க் கோயிலில் அறங்காவலர் ஆக்குகிறார்கள். பல விழாக்களுக்கு அழைக்கிறார்கள். ஏசிய உலகமே ஏற்றுகிறது. பழித்த சமூகமே போற்றுகிறது. இந்த நிலைமாற்றம் ஆரோக்கியமானதுதானா, அவன் பொருட்படுத்தத் தக்கவன்தானா என்கிற குழப்பம் நல்லவர்களிடம் ஏற்படுகிறது. திருவள்ளுவர் அதற்குத் தீர்ப்புச் சொல்கிறார். “இந்தப் பணம் இருக்கிறதே, இதுவரை பொருட்படுத்தப் படாதவர்களை பொருட்படுத்தத் தக்கவர்களாகச் செய்யும்”, என்று தொடங்குகிறார். “பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்”என்கிறார். அடுத்து அவர் ஒரு கேள்வி கேட்கிறார். பணம் வந்ததால் இந்த மனிதனுக்கு அறிவு கூடிவிட்டதா? அற்பத்தனம் நீங்கி விட்டதா? என்று கேட்க, ஊர்க்காரர்கள் உதட்டை பிதுக்குகிறார்கள். “அந்த இழிகுணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று ஒப்புக் கொள்கிறார்கள்.
திருவள்ளுவர் சொல்கிறார், “இந்த இழிகுணங்களால் அவன் அற்பனென்று மதிக்கப்பட்டான். இப்போது அவனிடம் பணம் இருக்கிறது. இதற்குமுன் அவன் ஏழை அற்பனாக இருந்தான். இப்போது பணக்கார அற்பனாக இருக்கிறான். புதிதாக வந்துள்ள பொருட்செல்வத்தை கழித்துவிட்டுப் பார்த்தால் அவனிடம் பொருட்படுத்தத் தக்க விஷயம் எதுவும் இல்லை. “பொருளல்லது இல்லை பொருள்”. சராசரி மனிதர்கள். அற்பனிடம் பணம் சேர்ந்தால் அவனைக் கொண்டாடுவார்கள். புகழ்வார்கள்.அறிவாளிகள், இப்போதும் பணத்தைத் தவிர அவனிடம் வேறேதும் விஷயமில்லை என்பதை உணர்வார்கள்.என்பதுதான் இதன் பொருளாக இருக்க முடியும்.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள் .
————————————————-
துன்பம் வருவதும் ஒருவகையில் நன்மைக்குத்தான் என்பது திருவள்ளுவரின் கருத்து. உறவென்று சொல்லி அருகில் இருப்பவர்களின் உண்மையான குணத்தை அளப்பதற்கான அளவுகோலே மனிதர்க்ளுக்கு வருகிற துன்பம்தான் என்கிறார் அவர். உறவு கொண்டாடி உடனிருப்பவர்களில் பலர், நம்மைச் சார்ந்திருப்பவர்கள். நாம் வேராக இருந்து அவர்களைத் தாங்க வேண்டியிருக்கிறது. அதனாலேயே அவர்களுக்குக் கிளைஞர்கள் என்று பெயர். “செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் “என்பதும் நம் தமிழிலக்கியத்தில் உள்ள விஷயம்தான். என்னதான் நெருக்கமான உறவினர்களாகட்டும், நண்பர்களாகட்டும், தமக்குத் தேவையெனில் நம்மைத் தேடி வருவார்கள். நமக்கொரு துன்பமெனில் ஓடி விடுவார்கள்.இதை ஒரு குறளில் கூறுகிறார் திருவள்ளுவர்.
கேட்டிலும் உண்டோர் உறுதி-கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
கூட இருக்கும் கிளைஞர்களை அளக்க கேடு என்னும் அளவுகோல் பயன்படுகிறது என்று சொல்ல வருகிற வள்ளுவருக்கு சிரிப்பு வருகிறது. கூட இருப்பவர்களாக இருந்தால் அப்படியே அளந்து விடலாம்.ஆனால் கேடு வந்ததாகக் கேள்விப்பட்டாலே அந்தக் கிளைஞர்கள் வெகுதூரம் ஓடிவிடுவார்களாம். அதனால்,கிளைஞரை அளப்பதோர் கோல் என்று சொல்லாமல், நீட்டி அளப்பதோர் கோல் என்கிறார். கேடு வரும்போது அவர்கள் தள்ளி நிற்கிற தொலைவுதான்,அவர்களுடன் இருக்கிற உறவின் உண்மையான தொலைவு என்கிறார் திருவள்ளுவர்.
"கேடு வரும்போது அவர்கள் தள்ளி நிற்கிற தொலைவுதான்,அவர்களுடன் இருக்கிற உறவின் உண்மையான தொலைவு என்கிறார் திருவள்ளுவர்".
எளிதான அனால் ஆழமான விளக்கம். இப்படியெல்லாம் நான் தமிழ் படித்திருந்தால் எங்காவது தமிழ் ஆசிரியராக போயிருப்பேன். என் தமிழ் ஆசிரியருக்கு நன்றி.
—